×

இந்த வார விசேஷங்கள்

27.11.2021 - சனிக்கிழமை
காலபைரவாஷ்டமி

மாதம்தோறும் அஷ்டமி திதி வரும். தேய்பிறை அஷ்டமி திதி என்பது மிகவும் சிறப்பானது. கால பைரவருக்கும் சிவபெருமானுக்கும் உகந்த நாள். ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி திதிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமிக்கு ருத்ராஷ்டமி  அல்லது காலபைரவாஷ்டமி என்று பெயர். பைரவருக்கு ஜென்ம அஷ்டமி.  தேவர்கள் அனைவரும் சிவபெருமானை பூஜிக்கக்கூடிய நாள்.
சிவபெருமானின் சன்னதிகளில் ஈசானிய பகுதியில் பைரவர் சன்னதிகள் அமைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பைரவர் நம்முடைய மனதில் உள்ள அச்சம், துன்பம் முதலியவற்றை நீக்கி அருள்பவர். நம்முடைய எதிரிடையான சிந்தனைகளையும் (negative thoughts) எதிரிகளையும் அடக்கி நேர் சிந்தனையைத்  தருபவர். நவக்கிரக தோஷங்களை விரட்டுபவர். அஷ்டமி தினத்தில், பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்வது சிறப்பானது. பைரவ காயத்திரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் பலவிதமான நன்மைகளை அடையலாம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     கார்த்திகை தேய்பிறை அஷ்டமி அன்று காலையில் சிவபெருமானையும், மாலையில் சூரிய அஸ்தமனத்தில் பைரவரையும் தரிசனம் செய்து வழிபட பலவிதமான நன்மைகள் ஏற்படும். குறிப்பாக கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பலன்கள் குறித்து பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ருத்ராஷ்டமி விரதம் செல்வத்தைத் தரும். அறியாமல் செய்த பாவங்களைப் போக்கும். பைரவர் சன்னதிக்குச் செல்லும் பொழுது ஒரு தாமரைப் பூவை எடுத்துச் செல்லுங்கள் அல்லது வில்வ மாலையை அல்லது சந்தன மாலையை எடுத்துச்  செல்லுங்கள். பைரவருக்கு பிடித்த நிவேதனங்களான  சர்க்கரைப்  பொங்கல், தயிர் சாதம், தேன், அவல் பாயாசம் மற்றும் பழ வகைகள் சமர்ப்பியுங்கள்.கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் அன்றைக்கு விரதமிருந்து பூஜையறையில் இந்த நிவேதனத்தைச்  செய்து படைப்பதன் மூலமாக பைரவரின் அருளைப் பெறலாம்.

29.11.2021 - திங்கட்கிழமை
மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை

மெய்ப்பொருள் நாயனார் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர். திருக்கோவிலூரை  தலைநகராகக் கொண்டு   அரசாண்ட குறுநில மன்னர்.  மலையமான் குலத்தில் உதித்தவர். வழிவழியாக சிவபெருமானிடம் அன்பும் பக்தியும்  கொண்டவர். இவர் காலத்தில் ஒவ்வொரு சிவாலயத் திலும் தவறாமல் சிவ பூஜைகள் விரிவாக நடந்து வந்தன. சிவனடியார்களை ‘மெய்ப்பொருள்’ என்று  சிந்தனையில் வைத்து,எல்லா சிவனடியார்களையும் மிகச் சிறப்பாக வரவேற்று, பாதபூஜை செய்து, பரிசுகள் அளித்து மகிழ்வதை வடிக்கையாகக் கொண்டவர். இவரை போரில் வெல்ல முடியாத எதிரி நாட்டு மன்னன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்ப்பொருள் நாயனாரோடு மோதி போர் நிகழ்த்தி தோல்வி அடைந்து ஓடினான். இனஇவரை நேரடியாக வெல்ல முடியாது, வஞ்சனையால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று எண்ணிய முத்தநாதன், சிவனடியார் போல் வேடம் புனைந்து, கையில் கொலை வாளை  மறைத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனாரை காண்பதற்காக வந்தான்.

நெற்றியில் திருநீறு. வாயில் சிவநாமம். ஆனால், நெஞ்சில் வன்மம். கொலை வெறி.
தன் கொலைத் திட்டத்தோடு முத்த
நாதன், மெய்ப்பொருள் நாயனாரை
தனிமையில் சந்தித்தான்.
மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள்
முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன
மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்- (பெ.பு-473)
அப்பொழுது மெய்ப்பொருள் நாயனார் களைப்போடு உறங்கிக் கொண்டி ருந்தார். சிவனடியார் வந்து விட்டார் என்ற செய்தி தெரிந்தவுடன் தம்மு டைய களைப்பையும் மறந்து, சிவனடியாரை வரவேற்க வேண்டும் என்று துணிந்து ஓடோடி வந்தார்.

அப்பொழுது முத்தநாதன் கையில் ஒரு புத்தகப் பை இருந்தது. முத்த நாதன் சொன்னான். ‘‘இது ஒரு அற்புதமான நூல். இதனை உபதேசிக்க நாம் வந்தோம்’’ என்று சொன்னவுடன், ‘‘அதற்கென்ன இப்பொழுது சிவனடியார்கள் அமைந்த ஒரு சபையைக் கூட்டுவோம்’’ என்று சொல்ல,“ இல்லை, இல்லை. இது தனிமையில் சொல்ல வேண்டிய ரகசியப்  பொருள்” என்று சொன்னவுடன் எல்லோரையும் தம்முடைய இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு,” இனி உபதேசிக்கலாம்” என்று சொல்ல, பொய் வேடம் புனைந்த முத்தநாதன், புத்தகத்தை பிரிப்பது போல பிரித்து, அதில் மறைத்து வைத்திருந்த கொலை வாளால்  மெய்ப்பொருள் நாயனாரை வெட்டிச் சாய்த்தான்.

ரத்தவெள்ளத்தில் விழும் பொழுது சத்தம் கேட்டு தத்தன் என்ற மெய்க் காவலர் ஓடிவந்து முத்தநாதனை வெட்டுவதற்கு வாளை ஓங்க, உயிர் போகும் தருவாயில் இக்காட்சியைக் கண்ட மெய்ப்பொருள் நாயனார், “தத்தா, அவர்  நம்மவர்” என்று சொல்லித்  தடுத்தார். அதுமட்டுமல்ல வேறு யாராலும் அவருக்கு இடையூறு நேரக்கூடாது என்று நினைத்துக்கொண்டு, “தத்தா, இவரை எந்த தீங்கும் இன்றி ஊர் எல்லையில் விட்டு வரவேண்டும்” என்று பணித்தார்.தத்தன் அவனை அழைத்துச் செல்லும்பொழுது, அவன் செய்த  கொடும் செயலை அறிந்த ஊர் மக்கள், முத்தநாதனை கொல்லத்  துணிய, அனைவரையும் தடுத்து, “இது அரசாணை. இவனுக்கு எந்த தீங்கும் செய்யக் கூடாது” என்று சொல்லி ஊர் எல்லையில் விட்டு வந்தான்.அவன் ஊர் எல்லையில் பாதுகாப்பாக சென்று சேர்ந்து விட்டான் என்று  செய்தி சொன்ன பிறகுதான் தன்னுடைய உயிரை அந்த சிவப்பரம் பொருளிடம் ஒப்படைத்தார் மெய்ப்பொருள் நாயனார். திருத்தொண்டர் தொகையில் இவருடைய சிறப்புகளை “வெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக்கு அடியேன்” என்று பாடுகின்றார் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் நட்சத்திரம் கார்த்திகை மாதத்தில் உத்திரம்.


30.11.2021 - செவ்வாய்க்கிழமை ஏகாதசி

இது கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி. மிகுந்த புண்ணியத்தை அளிக்கக் கூடிய கார்த்திகை மாதத்தில், தினந்தோறும் உதய காலத்தில் நீராடி, நியமத்துடன் விரதமிருந்து, திருமாலை துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்பவர்கள், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவதாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் மாலை நேரத்தில் பகவான்
விஷ்ணுவை சாதி பூக்களாலும் துளசி தளங்களால் அர்ச்சனை செய்யவேண்டும். விஷ்ணு காயத்திரி, வைஷ்ணவ சூக்தங்கள் சொல்லி புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும். 1008 ,108, 28 தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். தேனையும், கடலையையும், உளுந்தையும், கார்த்திகை மாதத்தில் உண்ணக் கூடாது. இப்படி எல்லாம் விருத்த ஹரிதா ஸ்மிருதி நமக்குச் சொல்கின்றது. இந்த மாதத்தில் வருகின்ற ஏகாதசி

விரதம் பல மடங்கு புண்ணிய பலனைத் தரக் கூடியது.ஏகாதசி  விரதம் என்பது நம் ஒவ்வொரு வரையும் பகவானுக்கு அருகில் கொண்டு சென்று சேர்ப்பது. திருமால்  அருளைப் பெற்றுத் தருவது.
ஒரு காலத்தில் முசுகுந்தன் என்கின்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஏகாதசி விரதத்தை மிகக் கடுமையாக நியமத்தோடு கடைபிடிப்பவன். அவனுடைய தேசத்தில் கடை பிடிக்காதவர்கள் ஒருவர் கூட இல்லை. மனிதர்கள் மட்டுமல்லாமல் அந்த தேசத்தில் உள்ளே யானை, குதிரை போன்ற விலங்குகள் கூட ஏகாதசியில் உணவு உட்கொள்வதில்லை. முசுகுந்தனின் மகளை மணந்தவன் சோபன் என்பவன். அவன் ஒருமுறை முசுகுந்தனைப்   பார்க்க வந்தான்.அன்று  ஏகாதசி நாளாக இருந்ததால் எந்த உணவும் கிடைக்கவில்லை. அவன் ஒரு நாள் கூட விடாமல் உண்டு பழக்கப்பட்டவன். இந்த ஏகாதசி விரதம் என்பது அவனுக்குப் புதுசு என்பதால் அவனால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஆனால், அந்த நாட்டில் அன்றைக்கு எல்லோரும் உபவாசம் என்பதால் எங்கும் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை.

அவன் மிகுந்த பலவீனமாக இருந்ததால் உபவாசத்தை தாங்க முடியாமல் இறந்து விட்டான். அவருடைய சடலத்தை கிரியைகளுக்கு பிறகு குளத்தில் கரைக்க,உடன் புண்ணிய தேகம் அடைந்து தேவாபுரம் என்ற புண்ணிய ஊரில் அரசன் ஆக ஆனான். அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த உலகம் அவனுக்கு ஏகாதசி விரதத்தால் கிடைத்தது. ஏகாதசி விரதம் அன்று விஷ்ணு ஸ்ஹஸ்ரநாம பாராயணம் அல்லது ராம ஜபம் செய்பவர்கள் மிகச் சிறந்த புண்ணிய பலனை அடைவார்கள். அவர்களுக்கு எத்தகைய கிரக தோஷங்களும் நீங்கிவிடும். ஏகாதசி முடிந்தவுடன் துவாதசியன்று பாரணை செய்ய வேண்டும். அன்றைய தினம் பாகவதம் போன்ற நூல்களில் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு ஸ்லோகத்தை வாசித்தாலும் கேட்டாலும் 100 பசுக்களை தானம் செய்த புண்ணியம் கிடைக்கும்.
அன்றைய தினம் பகவானுக்கு தாழம்பூ சமர்ப்பித்தல் மிகவும் நல்லது.

2.12.2021 - வியாழக்கிழமை
பிரதோஷம்

பாற்கடல் கடைந்த பொழுது திரண்டு வந்த விஷத்தை சிவபெருமான் உண்டு இந்த உலகத்தை காப்பாற்றி நீலகண்டன் என்ற பெயரை பெற்ற காலம்தான் பிரதோஷம். இந்தப் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவபெருமானை பூஜிப்பவர்கள் விஷம் போன்ற துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள். பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவனையும் நந்தியையும் தரிசனம் செய்வதன் மூலமாக சகல பாவங்களும் விலகி நன்மை உண்டாகும். பிரதோஷ நாளில், முன்னோர்களை முன்னிட்டு மாலை நேரத்திலே எமதீபம் வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவது சிறப்பானதாகும். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி காலதேவனும் மகிழ்ச்சி அடைவான்.  ஜாதகத்தில் இருக்கக்கூடிய அஷ்டம தோஷங்களான விபத்துக்கள் திடீர் மரணம் முதலிய ஆபத்துக்கள் சம்பவிக்காது. நோய் நொடியின்றி நீண்ட வாழ்க்கையை வாழலாம்.  தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்