×

மரபை உடைத்த ராணி

பிரிட்டன் மன்னர் 6-ம் ஜார்ஜ் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோருக்கு கடந்த 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி மூத்த மகளாக எலிசபெத் 2ம் ராணி பிறந்தார். பிரிட்டனின் மகாராணியாக தனது 25வது வயதில் 1952ம் ஆண்டு பதவியேற்றார். பிரிட்டிஷ் அரசாட்சியில் 70 ஆண்டு 214 நாட்கள் ராணியாக அரியணையில் ஆட்சி செய்த அவருக்கு வயது 96. அவர், பிரிட்டனில் 15 பிரதமர்களை பணியமர்த்தியுள்ளார். உலக வரலாற்றில் சிறந்த  முடியாட்சியர்களில் ஒருவராக திகழ்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் காலமானார். இங்கிலாந்தின் 56வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை கடந்த செவ்வாய்க்கிழமை, முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தனது வாழ்நாளில் அவர் நியமித்த 15வது பிரதமர் லிஸ் ட்ரஸ். ராணி எலிசபெத்தின் உடல்  நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் அவரது உடல்  வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  ராணி மறைவை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெற உள்ளது. கடந்த 70 வருடங்களாக பிரிட்டனில் தேசிய கீதமாக இருந்து வந்த “காட் சேவ்ஸ் த குயின்’’ என்ற தேசிய கீதம் இனி மாறலாம். மன்னர் சார்லஸுக்காக இனி அது “காட்  சேவ்ஸ் த கிங்’’ என மாறலாம். சர்வதேச அளவில் அதிகாரம்  மற்றும் செல்வாக்குமிக்கவராக திகழ்ந்த ராணி எலிசபெத், முதல்முறையாக 1961ம் ஆண்டு  இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார். ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பை ஏற்று, குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். அப்போது, தமிழக முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார். அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது. சென்னையில்  காமராஜர் முன்னிலையிலேயே தனது இரண்டாவது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். காமராஜர் இங்கிலாந்து சென்றபோது, ராணியின்  அரண்மனையில் விருந்து பரிமாறப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத், காமராஜருக்கு உணவு பரிமாறினார். வழக்கமாக  எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. ஆனால், காமராஜருக்கு உணவு பரிமாறி, அந்த மரபை உடைத்தெறிந்தார். காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.  இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983ம் ஆண்டு இரண்டாவது முறையாக ராணி எலிசபெத் இந்தியா வந்தார். அப்போது அன்னை தெரசாவை சந்தித்தார். ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது மூன்றாவது முறையாக 1997ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது சென்னை வந்த  ராணி, தரமணியில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமலஹாசனின் மருதநாயகம்  படப்பிடிப்பை துவக்கிவைத்தார். சுமார் 20 நிமிடம் அந்த விழாவில் பங்கேற்றார். தமிழர்களின் கலாச்சாரத்தை உயர்வாக போற்றி மகிழ்ந்தார். இன்று மண்ணுலகை விட்டு பிரிந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.   …

The post மரபை உடைத்த ராணி appeared first on Dinakaran.

Tags : Britain ,King George VI ,Queen Elizabeth ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...