×

திருமால் ஆலயங்களில் திருக்கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை தீபம் என்பது சைவர்களுக்கு மட்டும் உரித்தான பண் டிகை அல்ல. வைணவத்திற்கும் கார்த்திகை தீபம் உரித்தானது. முருகன் ஆலயங்களிலும் சிறப்பானது.விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகை தீபப் பெருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடுவர். இறைவனை ஜோதிவடிவாகவே கண்டவர்கள் ஆழ்வார்கள். விளக்கு என்பது தன்னையும் காட்டும். மற்ற பொருள்களையும் காட்டும். அதைப்போலவே இறைவன் தன்னையும் காட்டுவான். நம்மையும் காட்டுவான்.

ஆழ்வார்களும் திருவிளக்கும்
விளக்கு வைத்து ஒளி  வழியில்
இறைவனைக்  காண்பது என்பது ஒரு வகை.
அந்த ஒளியாகவே  இறைவனைக்  
காண்பது என்பது ஒரு வகை.

இரண்டுமே வைணவத்தில் ஆழ்வார்கள் நெறியில் உண்டு. நம்மாழ்வார் திருமலையப்பனை “ஜோதி” என்று போற்றுகின்றார்.“நீசனேன்  நிறை  ஒன்றுமில்லேன்   என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதி” என்கிறார்.

அதைப்போலவே திருமங்கையாழ்வார் திருக்குறுந்தாண்டகம் பாசுரத்தில்,தொண்டெல்லாம் பரவி நின்னைத் தொழுதடி பணியு மாறுகண்டு,தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியா யெந்தாய்,அண்டமா யெண்டிசைக்கும் “ஆதியாய் நீதியான,பண்டமாம் பரம சோதி!” நின்னையே பரவுவேனே.  

என்று பகவானின் ஒளி வடிவைப் போற்றுகிறார். இராமனுக்கு  “ஆதித்ய திவாகரன்” என்றும் கண்ணனுக்கு அச்சுத திவாகரன் என்றும் பெயருண்டு.  அச்சுத பானு என்றும்  சொல்லுவார்கள்.
திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகம் தொடங்குகின்ற பொழுதே இப்படித்தான் தொடங்குகிறார்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
“விளக்கொளி”யாய் முளைத்தெழுந்த
திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம்
ஐந்தாய்ப்

புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்புரையும் திருவடியென் தலைமேலவே.  
“விளக்கு ஒளியாய்  முளைத்தெழுந்த” என்ற வரியை கவனிக்க வேண்டும்.
இன்னுமொரு  பாசுரத்திலே இறைவனை
“ஓருருவம் பொன்னுருவம் ஒன்று  செந்தீ” என்று பாடுகின்றார்.

மூன்று தீபங்கள்

விளக்கேற்றி இறைவனை காண்பது என்பது வைணவத்தில் புறச் செயல் மட்டுமல்ல;அகச் செயலும் அதுவே. இதைத்தான் முதலாழ்வார்கள் காட்டுகின்றார்கள். அவர்கள் ஏற்றிய விளக்கும் “மொழி விளக்கு” என்று சொல்வார்கள்.நாலாயிரப் பிரபந்தத்தின் தொடக்கம் ஒரு மழைநாளில் திருக்கோவிலூரில் ஒரு இடைகழியில் மூன்று விளக்குகள் ஏற்றி துவக்கப்பட்டது.
முதல் விளக்கு புற இருள் நீக்கிய விளக்கு.

இரண்டாவது விளக்கு அக இருள்
நீக்கிய  விளக்கு.
மூன்றாவது விளக்கு இறைவனே
தோன்றிய விளக்கு.

பரம்பொருளின் ஒளி வெள்ளத்தை இவர்கள் கண்டுகளித்தார்கள். இந்தக் காட்சியே மூன்று பாடலாக விரிகிறது.

இதுதான் நல்லாயிரத்தின் துவக்கப் பாடல்களான முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி ஆகிய மூன்று பிரபந்தங்கள்.விளக்கின் மூன்று தத்துவங்கள்இந்த மூன்று பாடல்களையும் கவனித்தால் வேறொரு தத்துவமும் விளங்கும்.அதாவது மூன்று முக்கிய வைணவத் தத்துவங்கள் விளங்கும்.

1.சித் (உயிர்கள்)
2.அசித்(உலகம்)
3.ஈஸ்வரன் (படைத்தவன்)
இதனை சிதசிதீஸ்வர தத்துவம் என்பார்கள்.

முதல் விளக்கில் அசித் தத்துவமான உலகம் காட்டப்பட்டது.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யான்அடிக்கே குட்டினேன்
சொல்மாலைஇடராழி நீக்குகவே என்று.
இரண்டாவது  விளக்கில் சித் தத்துவமான அகம் (ஜீவ) காட்டப்பட்டது.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.

மூன்றாவது   விளக்கில் ஈஸ்வர  தத்துவமான இறை காட்சி காட்டப் பட்டது.

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும்  கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றும் போது இந்த மூன்று தத்துவங்களையும் உணர்கிறோம்.

பாஞ்சராத்ர, வைகானச தீபம்
வைணவ  வழிபாட்டுக்கு சிறப்பான இரண்டு ஆகமங்கள் உண்டு.
ஒன்று பாஞ்சராத்திரம்.
இன்னொன்று வைகானசம்.
இந்த இரண்டிலுமே கார்த்திகை தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்கின்ற குறிப்பு விரிவாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.

அன்று வீடுகளில் தீபம் ஏற்றவேண்டும். பெருமாளுக்கும் தீபத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது .அதனால் விளையும் பலன்களும் அதில் விரிவாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.ஆகம விதிகளில் பௌர்ணமியுடன் கிருத்திகை தொடர்புடைய நேரத்தில் பகவானுக்கு தீபம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கார்த்திகை மாதத்தில் பக்தியுடன் விஷ்ணு சந்நதியில் விளக்கு ஏற்றினால், ஒருவனுக்கு ஏற்படும் புண்ணியத்தின் அளவு சொல்லவே முடியாது என்று சௌனக மகரிஷி
கூறுகிறார்.

கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியில் ரிஷப லக்னத்தில் விளக்கை ஏற்ற வேண்டும். அப்படி ஏற்றினால்  நாட்டில் தானிய அபிவிருத்தி அமோகமாக இருக்கும். நாட்டு மக்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் என்றெல்லாம் வைணவ ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கார்த்திகை மாதத்தின் முதல் 10 நாட்களில் பௌர்ணமி வந்தால், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ரிஷப லக்னம் வந்துவிடும். கார்த்திகை மாதத்தின் மத்தியிலோ கடைசியிலோ கார்த்திகை பௌர்ணமி வந்தால் சூரியன் மறைந்த பிறகுதான் ரிஷப லக்னம் வரும். கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியில் இருப்பார். அவருக்கு நேர் எதிர் ராசியில் சந்திரன் வரும் பொழுது பௌர்ணமி ஏற்படும் என்பதால் ரிஷப லக்னத்தில் விளக்குகள் ஏற்ற வேண்டும் என்று சொல்லுகின்றார்கள்.

திரு அண்ணாமலையும் திருத்தண்காவும்

சைவத்தில் திருவண்ணாமலையில் ஜோதி ஸ்வரூபமாக இறைவன் எழுந்தான் என்பது போலவே, வைணவத்தில் இறைவன் விளக்கொளி பெருமாளாக  அவதரித்தான் என்றும் ஒரு தல புராணம் உண்டு. அதற்கான சந்நதியும் காஞ்சிபுரத்தில் உண்டு. அங்கே உள்ள இறைவனுக்கு தீபப் பிரகாசர் என்று பெயர். காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் சந்நதி இது. பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. தர்ப்பை வளர்ந்த பகுதியாக இருந்த காட்டில் திருமால் காட்சி தந்ததால் இப் பகுதிக்கு தூப்புல் எனவும் திருத்தண்கா எனவும் பெயர். வைணவத்தில் மிகச்சிறந்த ஆச்சாரியர்களில் ஒருவரான  வேதாந்த தேசிகரின்  அவதாரத்தலம் இது. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களால் இத்தலத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

யாகத்தைத்  தடுத்த கலைமகள்

ஒரு காலத்தில் படைப்புக் கடவுளான பிரம்மதேவர், மகாவிஷ்ணுவை குறித்து மிகப் பெரிய யாகத்தை காஞ்சிபுரத்தில் செய்தார். அப்பொழுது அவருக்கும் அவருடைய துணைவியான சரஸ்வதி தேவிக்கும் மனத்தாங்கல் இருந்தது. யாகம் செய்யும்போது, துணையோடு செய்ய வேண்டும் என்கின்ற முறை உண்டு. பிரம்மதேவன் இன்னொரு துணைவியான காயத்ரி தேவியை உடன் வைத்துக்கொண்டு யாகத்தை துவக்கிவிட்டார். இதைத்  தெரிந்து கொண்ட கலைமகள் மிகவும் கோபம் கொண்டு யாகத்தை நடத்த விடாமல் தடை செய்ய நினைத்தாள்.

உடனே ஒரு பெருவெள்ளமாக பெருக்கெடுத்து யாக பூமியில் புகுந்து தடுப்பதற்காக ஆவேசமாக வந்தாள்.இதைக்கண்டு அஞ்சிய பிரம்மதேவன், தம்மையும் யாகத்தையும் காப்பாற்ற வேண்டி, மகாவிஷ்ணுவிடம் சரணடைய, மகாவிஷ்ணு ஒரு அணையாக வெள்ளம் பரவாமல் தடுத்து  யாகத்தைக்  காப்பாற்றினார்.

தீபப் பிரகாசர்

ஆயினும், கோபம் அடங்காத சரஸ்வதிதேவி, அக்னி வடிவத்தில் ஒரு அரக்கனை ஏவி, யாக பூமியை அழிக்கும்படி கட்டளையிட, அந்த அசுரனும் ஆவேசத்துடன் யாக பூமியை நோக்கி வந்தான்.
ஜோதி வடிவாக ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு பகவான் மகாவிஷ்ணு தோன்றி அந்த அக்னி அசுரனை ஒரு தீபமாக ஆக்கி , யாக பூமி முழுவதும் வெளிச்சம் வரும்படி பிரகாசிக்கச் செய்தார்.

அந்தப் பிரகாசத்தில் யாகம் செம்மையாக நடந்தேறியது, இப்படி, தீபச் சுடராக பகவான் தோன்றியதால் அவருக்கு தீபப் பிரகாசர் என்கிற திருநாமம். தமிழிலே விளக்கொளி பெருமாள் என்று
சொல்லுவார்கள். விளக்கொளி பெருமாள் தேவி பூதேவி சமேதராக மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.மரகதவல்லி தாயாருக்கு தனி சந்நதி உண்டு. ஆண்டாள், கருடாழ்வார், பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், ஆளவந்தார் ஆகியோருக்கும் தனித்தனி சந்நதிகள் உண்டு. இத்தலத்தின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானத்திற்கு கர விமானம்.
கார்த்திகை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து விளக்குகள் ஏற்றி பெருமாளை வழிபட்டு செல்கின்றார்கள்.

திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

பெருமாளின் அவதார தினமான ரேவதி நட்சத்திரத்தில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் இந்தக்  கோயிலுக்கு வந்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுகின்றனர்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயில். திருமங்கையாழ்வார், ‘முளைக்கதிரை’ என்று துவங்கும் தனது பாசுரத்தில், குடந்தை ஆரா அமுதனையும், ரங்கம் ரங்க நாதரையும், திரு தண்கா விளக்கொளி பெருமாளையும், திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளையும், திருமலை திருவேங்கடமுடையானைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பார். அதில் விளக்கொளி பெருமாளைப் பற்றி சொல்லும்போது, ‘விளக்கு ஒளியை, மரகதத்தை திருதண்காவில்’ என்று சொல்லி யிருப்பார். இதில் ‘மரகதத்தை’ என்று அவர் சொல்வது விளக்கொளி பெருமாளுடன் உடனுறையும் மரகதவல்லித் தாயாரைத்தான் என்பார்கள்.அந்த இனிமையான பாசுரம் இது.

முளைக்கதிரை குறுங்குடியுள் முகிலை
மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய
அந்தணனைஅந்தணர்தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை

திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன்
வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.
பெருமாளை திருமங்கை ஆழ்வார் ஜோதியாகவே பாடுகிறார்.

திருவரங்கத்தில் தீபம்

எல்லா பெருமாள் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் விசேஷம். அதிலும் திருவரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெறும். கார்த்திகை தீபத் திருநாள் நிகழ்வின்போது திருச்சி ரங்கம் கோயில் கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும்.அப்போது நம் பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருள்வார்.

இந்த வைபவத்தையொட்டி, 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் மஞ்சள், சந்தனம் , மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனித நீர் தெளிக்கப்பட்டு முகூர்த்த கால் கோயில் நடப்படும்.இந்த பந்தக் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்துக்கும், 20 அடி உயரத்துக்கும்
சொக்கப்பனை அமைப்பார்கள்.

தீபம் அன்று நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத் திலிருந்து புறப்படும் முன் கோவில் தங்க கொடிமரம் அருகே உத்தம நம்பி சுவாமிகள் இடை விளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறும். இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, மரியாதை செய்யப்படும். அதன்பின் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்வார். அங்கு கோபுரத்திற்கு முன்னால் 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து, சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு எதிரே காத்திருக்க, இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படும்.காணப் பரவசமான இந்நிகழ்வு அதி அற்புதமாக இருக்கும். இதை பார்க்க நம் உள்ளம் உருகும்.பாவம்  கழியும்.

நம்பெருமாள் சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர், நந்தவனம் தோப்பு வழியாக, தாயார் சன்னதிக்கு செல்வார்.அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு செல்வார். அங்கு நம்பெருமாள் முன் முகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்படும். அதை தொடர்ந்து திருக்கைத்தல சேவை நடக்கும். பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு மூலஸ்தானம் சென்றடைவார்.

திருமலையில் கார்த்திகை தீபம்

திருமலையில் கார்த்திகை தீப உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். கார்த்திகை மாதப் பௌர்ணமியை ஒட்டி, மாலை 6 மணிக்கு கோயில் முழுவதும் 1008 மண் விளக்குகள் ஏற்றப்படும். அதற்காக அவர்கள் மண்பானையை இரண்டாக உடைத்து மேல்பாகத்தை கீழே வளையமாக வைத்துக்கொண்டு கீழ் பாகத்தை ஒரு அகல்  போல் பசு நெய்யால் நிரப்பி தீபம் ஏற்றுவர். இந்த தீபம் ஏழுமலையான் கோயில், குலசேகரன் படி, துவாரபாலகர்கள், கருடாழ்வார் சந்நதி, வரதராஜர் சுவாமி சந்நதி, தங்க கிணறு, யோக நரசிம்மர் சந்நதி, பேடி ஆஞ்சநேயர் கோயில், வராக சுவாமி கோயில் போன்ற இடங்களில் ஏற்றப்படும். பின்னர் ஏழுமலையான் கோயில் எதிரில் சொக்கப்பனை எரிக்கப்படும்.

தில்லைச் சித்திரகூடம் சந்நதியில் கார்த்திகை தீபம்
தில்லைச் சித்திரகூடம் சந்நதியில் கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று காலையில் பெருமாள் தாயார் சந்நதிகளில் விசேஷமான திருமஞ்சனம் நடக்கும். மாலையில் பெரிய அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு பெருமாள் சந்நதியில் புண்ணியாகவாசனம் நடந்து தீப பிரதிஷ்டை நடைபெறும். அதன்பிறகு பெருமாளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு தீபங்களின் புறப்பாடு நடைபெறும்.புறப்பாடுமுடிவடைந்து, தீபங்கள் ராஜகோபுரங்களில்  வைக்கப்படும்.

பிறகு மேளதாளத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட தீபங்கள் தாயார் சந்நதியில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு பிறகு தாயார் விமானம் மற்றும் மடைப்பள்ளி நாச்சியாருக்கு அந்த தீபங்கள் சமர்ப்பிக்கப்படும்.பெருமாள் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்துதல் என்கின்ற நிகழ்ச்சி கார்த்திகை தீபத்தின் போது நடைபெறும். தில்லைத் திருச்சித்திர கூடத்தில் சித்திர
கூடத்துள்ளான் என்கின்ற உற்சவர் பௌர்ணமி புறப்பாடாகி கிழக்கு வாசல் வழியாக வெளிப்பிராகாரத்தில் எழுந்தருள்வார். அங்கு தென்கிழக்கில் பெருமாள் சந்நதி தாயார் சந்நதிக்கு எதிராக இரண்டு சொக்கப்பனைகள்  கட்டப்பட்டிருக்கும்.

அதன் முன்புறம் பெருமாள் எழுந்தருளுவார். அர்ச்சகர் புண்யாகவாசனம் செய்வார். பெருமாளுடன் இரண்டு பெரிய அகல் விளக்கு தீபம் கொண்டு வரப்படும் .
சொக்கப்பனை புனித நீரால் தூய்மைப் படுத்திய பிறகு இரண்டு அகல் தீபங்களை பெருமாளுக்கு காட்டுவார்கள். அதன் பிறகு அதை இரண்டு சொக்கப்பனைகளுக்கு உள்ளே வைத்து விடுவார்கள்.\

பெருமாளுக்கு சமர்ப்பித்த கற்பூர ஆரத்தியை இரண்டு சொக்கப்பனைகளில் தனித்தனியாகப் போட்டுவிட்டு, தாச நம்பி என்பவர் கையில் உள்ள தீப்பந்தத்தால் பனைகள் ஒளிவிடும் படியாக அதை கொளுத்துவார்.சொக்கப்பனைகள் இரண்டும் முழுமையாக ஒளிவிட்டு பிரகாசித்து முடித்தவுடன் அவற்றின் சேஷத்தை வெள்ளித் தட்டில் எடுத்து வந்து பெருமாளுக்கு சமர்ப்பிப்பார்கள்.
அதை மற்றவர்களுக்கும் விநியோகம் செய்வார்கள். பிறகு பெருமாள் தெற்கு, மேற்கு, வடக்கு வெளிப் பிரகாரம் வழியாக சந்நதிக்கு எழுந்தருளி திருவந்திக்காப்பு நடைபெறும்.
இப்படி பலப்பல வைணவ ஆலயங் களிலும் கோலாகலமாக கார்த்திகை தீபம் கொண்டாடப்படும்.

முனைவர் ராம்

Tags : Tirumal ,Thirumal ,
× RELATED அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்