×

பிரமனூர் நீர்வரத்து கால்வாயில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை கட்ட வேண்டும் : திருப்புவனம் விவசாயிகள் கோரிக்கை

திருப்புவனம்  :  திருப்புவனம் அருகே உள்ள பிரமனூர், பழையனூர் கண்மாய்களுக்கு செல்லும் கால்வாயின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. எனவே இடிந்து விழுந்த கால்வாய் தடுப்புச்சுவர்களை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புவனம் அருகே தட்டான்குளம் வைகை ஆற்றின் குறுக்கே  படுகை அணை ரூ.19 கோடி மதிப்பீட்டில் நீர் வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளது. படுகை அணையிலிருந்து  ஆற்றுக்கும் கால்வாய்க்கும் இடையே 8  அடி உயரத்தில் நீண்ட சுவர்  சுமார் 3 கிமீ நீளத்திற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் ஓரமாக திருப்புவனம், தி.புதூர் வழியாக  செல்லும் கால்வாய் மூலம் பிரமனூர், பழையனூர் உள்பட 21 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.கடந்த  வாரம் தொடர்ந்து தண்ணீர் சென்று வந்த நிலையில் மதுரை கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்திற்கு அருகே திடீரென சுமார் 100 மீ நீளத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கால்வாயில் சென்ற தண்ணீர் ஆற்றுக்குள் பாய்ந்து விட்டது.  கண்மாய்களுக்கு செல்லாமல் வீணாக ஆற்றுக்குள் சென்றதால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தடுப்பணையின் ஷட்டரை அடைத்துவிட்டனர்.  இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை விரைவில் கட்ட வேண்டும். தற்காலிகமாக அணை அமைத்து  கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   இதுகுறித்து பழையனூர் கண்மாய் முன்னாள் பாசன சங்கத் தலைவர் அம்பலம் கூறுகையில், தட்டான்குளம் படுகை அணையிலிருந்து பிரமனூர், பழையனூர் கால்வாயில் உள்ள கண்மாய்களுக்கு கடந்த செப்.1ம் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த ஓரிரு தினங்களில் திருப்புவனம்  சிவ்சிவ நகர் பின்புறம் ஆற்றோரமாக உள்ள கால்வாயின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதன்காரணமாக, தண்ணீர் முழுவதும் ஆற்றில் சென்று விட்டது.இந்த தடுப்பு சுவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே   மோசமாக இருந்தது. அப்போது சாக்கு வைத்து அடைத்து தான் தண்ணீரை கண்மாய்களுக்கு கொண்டு சென்றோம். அதனை மராமத்து செய்யாமல் விட்டதால்  தற்போது தடுப்புச் சுவர் முழுவதும் இடிந்து விழுந்து விட்டது. தற்போது பழையனூர் கண்மாய் மட்டுமின்றி செல்லப்பனேந்தல், பாப்பாங்குளம், லாடனேந்தல், ஆனைக்குளம், கீழச்சொரிக்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் குறைந்தளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. கால்வாய் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் சென்றும் மேற்கண்ட கண்மாய்களுக்கு தண்ணீர்  கொண்ட  செல்ல முடியாத நிலை உள்ளது. நிரந்தரமாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கைஇதுபற்றி நீர்வள ஆதாரத் துறை அலுவலர்கள் தரப்பில்  கூறுகையில், ஏற்கனவே அந்த தடுப்புச் சுவர்  பழுதாகி இருந்தது.  உபரிநீர் முழுவதும் கால்வாயிலும் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் பழுதான இடத்தில்  சுவர் இடிந்து சாய்ந்து விட்டது. அதனால் தண்ணீர்  செல்லும் ஷட்டர் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் செல்லும் தண்ணீர் இரண்டொரு நாளில் வற்றிய பிறகு சாக்கு மூட்டைகளால் தற்காலிக அணை அமைத்து கண்மாய்களுக்கு தண்ணீர்  கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.  இடிந்த தடுப்பு சுவரை கட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன் நிரந்தமாக தடுப்புச்சுவர் கட்டப்படும் என்றனர்….

The post பிரமனூர் நீர்வரத்து கால்வாயில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை கட்ட வேண்டும் : திருப்புவனம் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bramanur ,Tiruppuvanam ,Palayanur Kanmais ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...