×

தீபாவளியன்று தங்கத்தை பிரசாதமாக அருளும் மகாலட்சுமி!

இந்தியா முழுதும் எந்த ஆலயங்களுக்கு சென்றாலும் கடவுளை வழிபட வரும் அனைத்து பக்தர்களுக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள், சந்தனம், மலர்கள், துளசி, வில்வம், தீர்த்தம் போன்ற புனித பொருட்களையே பிரசாதமாக வழங்குவது இன்றும் சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களும் இந்த பிரசாதங்களை இறைவனின் மறு உருவமாக நினைத்து அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் தரித்துக் கொள்வது மட்டுமில்லாமல் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று உற்றார் உறவினர்களுக்கு வழங்குவார்கள்.

ஆனால், இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ரத்லாம் நகரில் உள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆலயத்தில் மட்டும் தீபாவளி நாளன்று தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை பிரசாதமாகக் கொடுப்பதை இன்று வரை நடைமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள். தங்கம், வெள்ளி மற்றும் ஆபரணங்களை பிரசாதமாக வழங்கும் ஆலயம் இந்தியாவிலேயே இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 52 மாவட்டங்களில் மால்வா பிராந்தியத்தில் அமைந்துள்ள ரத்லாம் மாவட்டத்தின் தலைநகரம் ரத்லாம் நகர். இங்கு சாந்தினி சௌக் என்ற பகுதி இந்தியாவில் 24 கேரட் தங்க வணிகத்திற்குப் பெயர் பெற்றது. தங்கத்திற்கு மட்டுமில்லாமல் இங்கு தயாராகும் ஓமப் பொடி மற்றும் சேனைக் கிழங்கில் தயாரிக்கப்படும் கராடு என்ற வறுவலுக்கும் இந்நகரம் மிகப் பிரபலமானது. தங்கத்திற்கும் நவரத்தினங்களுக்கும் பிரபலமாக இருக்கும் இந்நகரம் ரத்தினபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் முகலாய மன்னர் ஔரங்கசீப்புடன் போரிட்டு உயிர் நீத்த மன்னன் ரத்தன் சிங் நினைவாக ரத்லாம் என்ற பெயர் பெற்றது.

ரத்லாம் நகரின் லக்ஷ்மண் புரா பகுதியில், மானக் சௌக் என்ற இடத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆலயம் அமைந்துள்ளது. விசாலமான மண்டபத்துடன் கூடிய கருவறையில் நடுநாயகமாக மஹாலட்சுமியும், இடப்புறம் ஸ்ரீ சரஸ்வதி தேவியும், வலப்புறம் ஸ்ரீ விநாயகர் ஆகியோர் எழுந்தருளியிருக்கின்றனர். வட இந்தியப் பாணியில் அமைந்த கூம்பு போன்ற விமானத்தோடு இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசியாக கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் தீபாவளிப் பண்டிகையை கோலாகலமாக ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை கொண்டாடுகிறார்கள். அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தீபாவளிக் கொண்டாட்டங்கள் அங்கு துவங்கி விடும். துவாதசி நாள் பசுவையும் கன்றையும் வழிபடும் நந்தினி விரதம், அடுத்த நாளான தனத் திரயோதசி அல்லது தன்தேராஸ், தன்வந்த்ரி ஜயந்தி என்று வழிபடுவார்கள். தீபாவளி அன்று நரக சதுர்த்தசியாகவும், மறுநாள் கேதார கௌரி விரதம் மற்றும் மஹாலட்சுமி பூஜை நாளாகவும், அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை மற்றும் அன்னக்கூட் என்றும் ஆறாவது நாள் யமத் துவிதியை அல்லது பையா தூஜ் என்றும் கொண்டாடுகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை நாட்களில் லட்சுமி குபேர பூஜை மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. தேவலோகப் பொக்கிஷக் காப்பாளரான குபேரனையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித் தருகின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மியையும் ஒரு சேர வழிபடுவதன் மூலம் வாழ்க்கையில் வளம் பெரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீபாவளித் திருநாளுக்கு மறுநாள் வடமாநிலங்களில் ஸ்ரீ லட்சுமி பூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஒவ்வொரு வீட்டிலும் குபேரனையும், மஹாலட்சுமியையும் வழிபடுவது ஐதீகம். அன்று வியாபாரத் தலங்கள் மற்றும் அலுவலகங்களில் புது வருட வரவு செலவு கணக்குகளையும் துவக்குவார்கள்.

ரத்லாம் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ரத்லாம் ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை வணங்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாலட்சுமியை தரிசித்துவிட்டு காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு ஓராண்டில் ஏராளமாகச் சேர்ந்துவிடும் ஆபரணத் தொகுப்பிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு தீபாவளி அன்று பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கும் அரிய வழக்கம் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய தினமான திரயோதசி நாளன்று எண்ணற்ற பக்தர்கள் தாங்கள் புதிதாக வாங்கிய தங்க, வைர நகைகள், பாரம்பரிய நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுக் கட்டுகளை ஆலயத்திற்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அவற்றுக்கு உரிய ரசீது வழங்கப்பட்ட பின் அவை அனைத்தும் கருவறையில் உள்ள ஸ்ரீ மஹாலட்சுமியைச் சுற்றிலும் அழகாக அலங்கரிக்கப்பட்டு ஆராதனை செய்யப்படும். மறுநாள் தீபாவளி அன்று உரிமையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரசீதை கொடுத்து நகைகளை பெற்றுக் கொள்வார்கள். இவ்வாறு தேவியிடம் சமர்ப்பித்துப் பெற்றுக் கொண்டால் தங்கள் வாழ்க்கையில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. தீபாவளி அன்று ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயத்தில் தரப்படும் தங்கப் பிரசாதத்தைப் பெறுவதற்காகவே, இந்தியாவின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த ஆலயத்தை நாடி வருகின்றனர்.

ஆலயம் முழுதும், மண்டபம், கருவறை போன்ற இடங்களில் மலர் அலங்காரங்களுக்குப் பதில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களே தொங்கவிடப்படுகின்றன. விலை உயர்ந்த நகைகள், நவரத்தினங்கள், புதிய ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் நடுவே அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹாலட்சுமியின் அரிய காட்சியை பக்தர்கள் ஸ்ரீ லட்சுமி மற்றும் ஸ்ரீ குபேர தர்பார் என்றும் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களிடம் பெறப்பட்டு திரும்ப கொடுக்கப்படும் நகைகள் இன்று வரை திருட்டு போனதில்லை.

இவை அனைத்தையும் ஸ்ரீ மஹாலட்சுமி மண்டல் சேவா கமிட்டி அமைப்பு செய்து வருகிறது. பக்தர்கள் நகைகளையும், பணத்தையும் சமர்ப்பிக்கும் நாள் முதல் திரும்ப அளிக்கும் வரை ஆலயத்திற்குள்ளும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். ஆலய வளாகம் முழுவதும் உள்ள சிசிடிவி கருவிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அருகிலேயே காவல் நிலையம் இருப்பதால், காவல்துறை அதிகாரிகளும் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தீபாவளி நாளன்று பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும் தங்கம், நாணயம் அல்லது நகையினை வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்பது பக்தர்களிடையே காணப்படும் உறுதியான நம்பிக்கை. அவர்கள் அந்த தங்கத்தை விற்கவோ, வேறு நகையாகச் செய்யவோ மாட்டார்கள்.

ரத்லாம் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம் அமைந்துள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறக்கப்படும். தீபாவளி நாட்களில் இரவு முழுவதும் ஆலயம் திறந்து வைக்கப் படுகிறது. ஆலயத்திற்கு அருகில் பில்பாக் ஸ்ரீ விரூபாக்ஷ் மஹாதேவ் மந்திர், ஸ்ரீ காளிகா மாதா மந்திர், ஸ்ரீ கேதாரேஷ்வரர் மந்திர் போன்ற ஆலயங்கள் உள்ளன.

மகி

Tags : Mahalakshmi ,Deepavali ,
× RELATED கோயில் நுழைவாயிலில் உள்ள படியினை...