×

ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் : பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை :  நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 18ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை மீண்டும் இயக்கப்பட உள்ளது. நெல்லை – தாம்பரம் மற்றும் நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் தென்காசி மார்க்கமாக கடந்த கோடைகாலத்தில் இயக்கப்பட்டன. நல்ல கூட்டம் காரணமாக அந்த ரயில்கள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நெல்லை – மேட்டுப்பாளையம் ரயில் கடந்த வாரம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், நெல்லை – தாம்பரம் ரயில் இயக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே பயணிகள் நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயிலையும் தொடர்ந்து நீட்டிப்பு செய்ய வேண்டும் என ரயில்வே அதிகாரிகளுக்கு மனு அனுப்பினர். இதை தொடர்ந்து நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 18ம் தேதி தொடங்கி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.அதன்படி 06004 நெல்லை – தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் வரும் 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் சென்னை புறப்பட்டு செல்லும். வரும் ஜனவரி 29ம் தேதி வரை இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 20 சேவைகள் பயணிகளுக்கு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திங்கள் காலை 9.20 மணிக்கு சென்னை தாம்பரம் சென்று சேரும்.  

06003 தாம்பரம் – நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் திங்கட்கிழமை தோறும் இரவு 10.20 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு நெல்லைக்கு செவ்வாய்க்கிழமை தோறும் காலை 10.40 மணிக்கு வந்து சேரும். இந்த ரயில் வரும் 19ம் தேதி முதல் வரும் ஜனவரி 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 சேவைகள் இந்த ரயில் மூலம் பயணிகளுக்கு கிடைக்க உள்ளது. இந்த வாராந்திர சிறப்பு ரயில்கள் இரு மார்க்கங்களிலும் சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

The post ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம் : பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Nederalam ,Nelli ,Dinakaran ,
× RELATED தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்...