×

தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது

*உபரி நீர் வெளியேற்றம்; பொதுமக்களுக்கு எச்சரிக்கைகடையம் : தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டும் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி ெகாள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. இதை தவிர்த்து 33க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் பாசனத்திற்காக கடந்த ஜூலை 25ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக ஆகஸ்ட் 3ம் தேதி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக இருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், நேற்று ராமநதி அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தபட்டுள்ளது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 110 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அந்த நீர் முழுவதுமாக உபரிநீராக அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்று மதகுகள் மூலமாக 60 கன அடி நீரும், முக்கிய மதகுகள் வழியாக 50 கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணை பாதுகாப்பு பணியில் உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் ஊழியர்கள் ஜோசப், பாக்கியநாதன். துரைசிங்கம் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தொடர் மழை காரணமாக ராமநதி அணை மீண்டும் நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Ramnadi dam ,Ramanadi Dam ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…