×

ஜப்பானில் சரஸ்வதி பென்சாயின் தென்

இந்தியாவில் ரிக் வேத காலம் தொட்டு சரஸ்வதி மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தார். வீணா வாகினி, புஸ்தக தாரிணி என்று அழைக்கப்பட்டாள். சிந்தாமணி என்னும் வரம் தரும் மணி வைத்திருந்த தனால் சரஸ்வதியை சிந்தாதேவி என்று அழைத்தனர். அவள் விரும்பிய வரங்களை அருள்வாள் என்று மக்கள் நம்பினர். சரஸ்வதி ரிக் வேத காலத்தில் நீர் தேவதையாக அறியப்பட்டாள். பின்னர், அவள் வாக்குக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

இதே மாற்றம் ஜப்பானிலும் பௌத்த சரஸ்வதியான  பென்சாயின் தென்னிடமும் காணப்பட்டது. அங்கு சரஸ்வதி ஓர் இசைக் கருவியுடன் காட்சி அளிக்கிறாள். இங்கு கூத்தனூரில் இருக்கும்  வீணையுடன் கூடிய சரஸ்வதி பௌத்த சரஸ்வதியின் மிச்ச சொச்சம் ஆகும். பௌத்த சமயத்தில் வெற்றிக்குரிய தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும், தெய்வமாகவும், கலைகளுக்கு உரிய தெய்வமாகவும் அவளது செல்வாக்கு விரிவாக்கம் பெற்றது. கேரளத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சிந்தாதேவி கோயில் பல இடங்களில் அவ்வூர்த் தெய்வத்துடன் இணைந்தும் தனித்தும் பகவதி என்ற பொதுப் பெயரில் வழங்கலாயிற்று. இங்கிருந்து சீனாவுக்குச் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கும் சென்ற  பௌத்த சமயம் ஜப்பானின் பூர்வீக சமயமான ஷின் தொயிசத்துடன் இணைந்து மண்ணின் பூர்வ தெய்வங்கள் பலவற்றைத்  தன்னுடையதாக்கிக் கொண்டது.

இந்தியாவில் வாழ்ந்த பௌத்த சமயத்தினர் ஐந்து வகை சரஸ்வதிகளை வணங்கினர். அவை, மகாசரஸ்வதி, வஜ்ஜிர வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆரிய சரஸ்வதி, சரஸ்வதி. சரஸ் என்றால் தண்ணீர் என்பது பொருள். எனவே, தண்ணீருக்குரிய தெய்வமாக ஆதியில் வணங்கப்பட்ட சரஸ்வதியை சமஸ்கிருதத்தில் சுரசவதி என மாற்றி வாக்குக்குரிய தெய்வமாகப் போற்றத் தொடங்கினர். தாய்களில் சிறந்தவள்; நதிகளில் சிறந்தவள்; தெய்வங்களில் சிறந்தவள்.

சரஸ்வதி என்று ரிக் வேதம் [2;41.16] சரஸ்வதியைத் தூய்மைத் தெய்வமாக கருதிப் போற்றுகிறது. ஜப்பானிலும் இதே நம்பிக்கை  நிலவுகிறது. சீனாவில் பியான் சாயிதியான் என்றும் பர்மாவில் தீபிடக மேதாவ் என்றும் சரஸ்வதியைக் குறிப்பிடுகின்றனர். பௌத்த சமயத்தில் சரஸ்வதி முக்கிய தெய்வமாவாள். மஞ்சு என்றும் அழைக்கப்பட்டாள். இவளது நான்கு கைகளும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறித்தன.

வடவாக்கினியை குளிர்வித்த சரஸ்வதி

கேகயருக்கும் பார்கவருக்கும் கடுமையான போர் வந்த போது  உலகத்தையே அழிக்கும் சக்தி பெற்ற வடவாக்கினி என்ற அக்கினி தோன்றியது. அதன் வெம்மை தாளாமல் அனைவரும் சிவபெருமானிடம் சென்று வேண்டினர்.  அவரோ சரஸ்வதியிடம் செல்லுங்கள் என்றார். சரஸ்வதி “என் கணவர் பிரமனின் அனுமதியின்றி நான் தீயை அணைக்க முடியாது” என்றாள். பின்னர் அனைவரும் பிரமனை நாடவும் அவர் சரஸ்வதியை நதியாகப் பாய்ந்து போய் வடவாக்கினியை கடலுக்குள் இழுத்துச் சென்று அமிழ்த்துவிடும்படி கூறினார். சரஸ்வதியும் அவ்வாறே செய்தாள். இக்கதையும் சரஸ்வதி என்றால் நீருக்குரிய தெய்வம் என்பதை உறுதி செய்கிறது.

ஜப்பானில் சரஸ்வதி

ஜப்பானில் பிரம்மனை இந்திரனின் உடன் இருக்கும் தெய்வமாகக் காண்கிறோம். அங்கு சரஸ்வதியை எமனின் அக்காவாகக் கருதுகின்றனர். அவள் பென்சாயின் தென் என வழங்கப்படுகிறாள். பௌத்த சமயத்தின் செல்வாக்கு மிக்க தெய்வமாக பென்சாயின் தென் என்ற பெயரில் சரஸ்வதி போற்றப்படுகிறாள். பௌத்த சட்டங்களுக்கான காவல் தேவதையாக விளங்குகிறாள். இசை, கவிதை, கல்வி, கலை ஆகியவற்றிற்குரிய தெய்வமாக வணங்கப்படுகிறாள். காலப்போக்கில் வீரமறவர்களான சாமுராய்களின்தெய்வமாகவும் உயர்த்தப்பட்டாள்.

ஜப்பான் வரலாற்றில் சரஸ்வதி

ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் சரஸ்வதி நதி, ஏரி  போன்ற நீர் நிலைகளின் மகளாக வணங்கப்பட்டாள். நாட்டில் அதிகம் பேர் வணங்கும் தெய்வங்களில் ஒன்றாக விளங்கும் சரஸ்வதிக்கு  இங்கு பீஃபா எனப்படும் இசைக் கருவியை  மீட்டும் வடிவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் அதிர்ஷ்டம் தரும் ஏழு கடவுளருள் சரஸ்வதியும் ஒன்றாவாள். சரஸ்வதியை ‘தேவ புத்த காமி’ என்பர் அதாவது புத்தர்களின் தெய்வம். இத்தெய்வமே அதிர்ஷ்டத்தை அளிக்கும் தெய்வம் ஆவாள்.

தமிழ்நாட்டிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற அயல் நாட்டு தெய்வங்களை தென் என்றும் (தெய்வம்), அம்மண்ணின் தெய்வங்களை காமி (சிந்தோயிசம்) என்றும் அழைப்பது மரபு. ‘புத்த காமி’ என்பது பௌத்தர்கள் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய மண்ணின் தெய்வம் ஆகும். அதாவது, ஜப்பானில் வழிவழியாக வணங்கப்பட்டு வந்த ஓ இனாரி என்ற தெய்வத்தை சரஸ்வதியுடன் இணைத்து புத்த காமி என்று அழைத்தனர்.

பதினோராம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பென்சாயின் தென் என்ற சரஸ்வதியை உகா ஜின் எனப்படும் தெய்வத்தின் ஜோடியாகவும் உயர்த்தினர். ஜப்பானில் உகா  ஜின் என்பது பிரம்மன் கிடையாது. இது மனிதத் தலையும், பாம்பு உடலும் கொண்ட ஒரு தெய்வம் ஆகும். நம் நாட்டில் பதஞ்சலி இது போன்ற ஒரு உருவத்தை கொண்டவராவார் என்பதை இங்கு நினைவுபடுத்துவது நலம்.

பன்னிரண்டாம் பதிமூன்றாம் நூற்றாண்டில் பென்சாயிக் தென் தனித் தெய்வமாகப் போற்றப்பட்டாள். அப்போது சமுராய்களின் வழிபாடும் குறைந்து போயிற்று.  டாகினி தென் [தமிழில் இடாகினி பேய்] இக்காலகட்டத்தில் சரஸ்வதியுடன் இணைக்கப்பட்டு வழிபடப் பட்டாள். மூன்று தலை நாகத்தின் தலையும் மனித உடலும் பத்து கைகளும் கொண்டவளாக உருவாக்கம் பெற்ற பென்சாயிக் தென் தன்னைச் சுற்றிலும் பல டாகினி தென்களையும் இனாரி எனப்படும் வெள்ளை நரிகளையும், பதினைந்து சீடர்களையும் மற்றும் பல வெள்ளைப் பாம்புகளையும், நரிகளையும் கொண்டிருந்தாள். வேளாண் தொழிலில் விளைச்சல் பெருகவும் அதிர்ஷ்டங்கள் கூடி வரவும் ஜப்பானியர் பென்சாயிக் தென் என்ற சரஸ்வதியை வணங்கினர்.

பதினான்காம் நூற்றாண்டில்  சரஸ்வதியும், டாகினியும், விநாயகரும் என மூன்று தெய்வங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு வழிபடப்பட்டன. டாகினி தென், காங்கி தென் மற்றும் பென்சாயின் தென் ஆகிய மூன்றும் இணைந்தன.காமகோரா என்ற பேரரசு ஆட்சி செய்த காலத்தில் நிர்வாணமான உருவத்துடன் விளங்கிய பென்சாயிக் தென்னுக்கு வழிபாட்டுச் சமயச்  சடங்குகளின் போது  உடை உடுத்தப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் ஏதோ [Edo] அரச பரம்பரையினர் காலத்தில் இளைஞர், கலைஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், போன்றோர் பென்சாயின் தென்னை வணங்கினர். இன்றைக்கும் ஜப்பானில் எல்லா ஊர்களிலும் முக்கிய நகரங்களிலும் பென்சாயின் தென்னுக்கு கோயில் இருப்பதைக் காணலாம்.

இந்திரன், சரஸ்வதி டாகினியின் நிலைமாற்றம்

இந்தியாவில் இருந்து பௌத்த தெய்வமான சரஸ்வதி ஜப்பானுக்குச் சென்றபோது இங்கிருந்ததுபோல அங்கும் தண்ணீரின் தெய்வமாகவே எடுத்துச் செல்லப்பட்டு அவள்  வணங்கப்பட்டாள். பின்னர் காலப்போக்கில் சமுராய்களின் தெய்வமாகி அதிஷ்டம் தரும் தெய்வமாகி பௌத்த சட்டங்களின் காவல் தெய்வமாகி கலைகளின் கடவுளாகி பன்முகத்தகுதி பெற்றவளாக உயர்த்தப்பட்டாள். ஜப்பானில் எமன் சரஸ்வதியின் தம்பியாக நன்னிலை பெற்று இன்றும் வணங்கப்படுகிறான். டாகினி இன்னும் வணங்கப்படுகிறாள். ஜப்பானில் மூவரும் தெய்வங்களாகத் தொடர்ந்து போற்றப்பட்டு வருகின்றனர்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Tags : Saraswati Bensai ,Japan ,
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...