கர்த்தர் கனிவுடன் காப்பார்

இங்கிலாந்து நாட்டில் கனம் வால்டர் மார்டின் என்ற பெயரையுடைய போதகர் ஒருவர் இருந்தார். ஒருநாள் இறைப்பணி செய்வதற்காக வெளியூர் ஒன்றிற்கு செல்ல வேண்டியிருந்தது. எதிர்பாராத விதமாக அவரது மனைவி சுகவீனமுற்றார். போதகரின் மனைவியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர், அவரது உடல் நலம் குன்றியிருப்பதாகவும், அவரை கனிவுடன் கவனித்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறினார். அவ்வேளையில் இறைப்பணிக்காக வெளியூர் செல்வதா? அல்லது வீட்டிலிருந்து மனைவியைக் கவனித்துக் கொள்வதா? என்ற யோசனையில் குழப்பத்தோடு நின்றார். அப்பொழுது, போதகர் கனம் வால்டரின் மகன், அப்பா நீங்கள் தைரியமாக கூட்டத்திற்கு செல்லுங்கள். அம்மாவை ஆண்டவர் கவனித்துக் கொள்வார் என்று கூறினான். இந்த வார்த்தை கனம் வால்டரை மட்டுமல்ல, வியாதிப்படுக்கையிலிருந்த அவரது மனைவியையும் பெலப்படுத்தியது. மனைவியிடம் விடைபெற்று இறைப்பணியை நிறைவேற்றப் புறப்பட்டார். ஆண்டவர் அவரது மனைவியை அற்புதமாகக் குணமாக்கினார். போதகர் மீண்டுமாக இல்லம் வந்தபோது கர்த்தரின் கனிவான செயலை நினைத்து, களிப்புடன்

நன்றி கூறினார்.

அவரது மனைவியும், மகனும் சொன்ன வார்த்தையின் அடிப்படையில் ஒரு பாடலை எழுதி, அதற்கு இசை அமைத்தார். ஆண்டவர் உன்னைக் கவனித்துக் கொள்வார் என்ற

அப்பாடல் புகழ் பெற்ற பாடலாயிற்று.   அன்பானோரே! இறைவனுடைய பணியை நாம் மிகுந்த ஆர்வத்துடன் நிறைவேற்றினால், நமது தேவைகளை இறைவன் பார்த்துக்

கொள்வார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து, இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் பெத்தானியா என்னும் கிராமத்தில் வாழ்ந்த லாசருவின் குடும்பத்தினர் அவருக்கு மிகவும் உதவியாயிருந்தனர். ஆண்டவர் அந்த கிராமத்தில் இறைப்பணியாற்ற வரும் வேளையிலெல்லாம் அவரை உபசரித்தனர். எதிர்பாராத விதமாக லாசரு என்னும் அவ்வாலிபன் ஒருநாள் மரித்துப் போனான். அதைக் கேள்விப்பட்ட ஆண்டவர், அவ்வூருக்கு வந்து, அவனை உயிரோடே எழுப்பி, அக்குடும்பத்தாரை மகிழப் பண்ணினார். அதுபோல, எருசலேமிலே தேவாலயம் கட்டப்படுவதற்காக, தாவீது பல பொருட்களை சேமித்துக் கொடுத்தார். நான் என்னாலே இயன்ற மட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்னையும், வெள்ளியையும், வெண்கலத்தையும், மரத்தையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும் சவதரித்தேன் (1நாளா.28:2) என்ற தேவாலய கட்டுமானப் பணிக்காக அவர் சேமித்ததைக் கூறுகிறார். அதன் பலனாகக் கடவுள் அவரது சந்ததியை ஆசீர்வதித்தார் என்று திருமறை கூறுகிறது.ஆம்! அன்பானோரே! கடவுளின் பணியை நாம் கவனித்துக் கொண்டால், கடவுள் நம்மை கவனித்துக் கொள்வார்.

இங்கே ஒரு கேள்வி நம் மனதில் எழலாம்! கடவுளின் பணி அல்லது இறைப்பணி என்றால் என்ன? இதற்கானப் பதிலை ஆண்டவர் இயேசு கிறிஸ்து, தான் நிறைவேற்ற வந்த இறைப்பணி குறித்து, அவரே கூறுகின்ற திருமறை வாக்கியம் ஒன்று தெளிவுப்படுத்துகிறது. கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார் (லூக்.4:18,19).

ஆகவே, அன்பானோரே! ஆலயக் கட்டுமானப் பணிக்காக உழைப்பது, கொடுப்பது; உள்ளம் உடைந்தோரை ஆற்றித் தேற்றுவது; உடல் நலம் குன்றியோருக்கு உடனிருந்து உதவுவது; கண்ணீரின் பாதையில் செல்வோருக்கு, கடவுளின் வார்த்தையை நற்செய்தியாக எடுத்துரைத்து அவர்களின் துயர் துடைப்பது; ஆகிய அனைத்தும் இறைப்பணியே!    

இறைவனின்  பணியில்

இறைமக்கள் நாமே

இனிதுடன் நாளும்

இணைந்திடுவோம்;

அப்பொழுது,

நிச்சயமாகவே கர்த்தர்

நம்மைக் கனிவுடன் காப்பார்.

Rt.Rev.Dr.S.E.C.தேவசகாயம்

பேராயர், தூத்துக்குடி- நாசரேத்

திருமண்டலம்.

Related Stories:

More