×

வைணவ ஆலயங்களில் சரஸ்வதி பூஜையும் விஜய தசமியும்

சில உற்சவங்கள் சைவ ஆலயங்களில் மட்டும் நடக்கும். சில உற்சவங்கள் அம்பாள் ஆலயங்களில் மட்டும் நடக்கும். சில உற்சவங்கள் முருகன் ஆலயங்களில் மட்டும் நடக்கும். ஆனால், புரட்டாசி நவராத்திரி உற்சவம் பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் விசேஷமாக நடக்கும். வைணவ ஆலயங் களில் நவராத்திரி விழா மற்றும் விஜயதசமி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்று அனந்தாக்கிய சம்ஹிதையில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

“மகாநவமி உற்சவம்” என்று இந்த உற்சவ முறை விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.புரட்டாசி (பாத்ரபத மாதம்) மாதத்தில் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் இவ்வுற்சவத்தை பிரம்ம உற்சவம் போலவே கொண்டாட வேண்டும் என்று வைணவ ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த உற்சவம் மகாலட்சுமியின் உற்சவமாக, அவள் அருளை எல்லா ஜீவன்களும் பெற வேண்டும்.
அஷ்டலஷ்மி ஐஸ்வர்யம் நாட்டில் கொழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

திருவரங்கத்தில் நவராத்திரி

வைணவ தலைமைக் கோயிலான  திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு இது பிரத்தியேகமான உற்சவம். பெரிய பிராட்டியான ரங்கநாயகித் தாயார் காப்பு கட்டி (ரக்ஷாபந்தனம்), தோளுக்கினியானில்
புறப்பாடு கண்டருளுவார். 8 நாட்கள் தினந்தோறும் (தினம் ஒரு திருமகள்) நாலுகால் மண்டபத்தில் விசேஷமான ஆராதனை வைபவங்கள் தாயாருக்கு நடைபெறும்.
சரஸ்வதி பூஜை அன்று கருவூல நாச்சியார், நாயகர் அறை நாச்சியார், சுக்கிரவார நாச்சியார், அரவிந்த நாச்சியார், ஹயக்ரீவர், சரஸ்வதி, செங்கமல நாச்சியார், குருகூர் நாச்சியார் ஆகிய எட்டு நாச்சியாருக்கும் திருவாராதனம் நடைபெறும். ஸ்ரீரங்க நாச்சியாருக்கு நம்பெருமாளிடம் இருந்து மாலை வரும்.
அஷ்டலட்சுமி ஸ்தானத்தில் இந்த எட்டு நாச்சியார்களுக்கும் பூஜை நடைபெறும்.

ஒன்பது நாட்களும் தாயார் புறப்பாடு நடக்கும். கொலு மண்டபத்தில் உற்சவ வைபவங்கள் நடைபெறும். காட்டழகிய சிங்கர் கோயிலில், விஜயதசமி அன்று அம்பு போடும் விழா நடைபெறும். ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜகோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடைய வளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் உள்ளது. நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுது படிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி, பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆன பிறகு, வேட்டை உற்சவம் தொடங்குகிறது.

தில்லைத் திருச்சித்திரகூடத்தில் நவராத்திரி

தில்லைத் திருச்சித்திர கூடத்தில்  (சிதம்பரம்) மகாளய அமாவாசையன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இரவு பிரகார புறப்பாடு உண்டு. பிரதமை முதல் நவமி திதி வரை தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடக்கும். விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகன புறப்பாடு நடத்துவார். தினந்தோறும் தாயாருக்கு சிறப்பு அலங்காரமும், மாலை கண்ணாடி அறை சேவையும் நடைபெறும்.
சரஸ்வதி பூஜை அன்று பெருமாள், மூலவர் உற்சவர்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். தாயார் சந்நதியில் தினசரி லட்சார்ச்சனை நடத்தி, சரஸ்வதி பூஜை அன்று பூர்த்தியாகும். அன்று மாலை
மாற்றல் நிகழ்ச்சியும் உண்டு. விஜயதசமியன்று காலை சித்ரகூடத்துள்ளான் (உற்சவமூர்த்தி) படிச்சட்டத்தில் புறப்பட்டு, தாயார் சந்நதிக்கு எழுந்தருளி அருள்தருவார்.

அங்கு “உற்சவ திருமஞ்சனம்” நடை பெறும். பிறகு, குதிரை வாகனத்தில் அலங்காரம் செய்யப்படுவார். நாலு மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி சிதம்பரத்தில் உள்ள எடத்தெருவுக்கு எழுந்தருளி சேவை சாதிப்பார். அங்கே ஒரு வன்னிமரம் இருக்கும். அதற்கு புண்யாகவாசனம் நடத்தி புனித நீர் தெளிக்கும் சடங்கு  செய்வார்கள். பெருமாள் அம்பால் அந்த வன்னி மரத்தை அடிப்பார். அதற்குப் பிறகு கற்பூர ஆரத்தி நடக்கும். பெருமாள் சந்நதிக்கு புறப்பட்டு வருவார். அங்கு திருவந்திக்காப்பு நடத்தப்படும்.

மற்ற ஆலயங்களில் நவராத்திரி

திருவயிந்தை என்று சொல்லப்படும் திருவயிந்தபுரத்தில் (கடலூருக்கு அருகேயுள்ளது) அம்புஜவல்லி ஸமேத ஸ்ரீதேவநாத பெருமாள் சந்நதியில் நவராத்திரி உற்சவம் சிறப்பாகக்  கொண்டாடப்படும். நவராத்திரி உற்சவத்தோடு சேர்ந்து ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு பத்து உற்சவமும் நடக்கும். சரஸ்வதி பூஜை அன்று நவராத்திரி உற்சவ சாற்றுமுறை நடத்தி அடுத்த நாள் விஜயதசமியில் பெருமாள் குதிரை வாகன புறப்பாடு கண்டு அருள்வார்.அன்று சுவாமி தேசிகனுக்குக்கும்  தீர்த்தவாரி நடைபெறும்.

திருமலையில் இம்முறை நவராத்திரியும், திருவோணமும் பிரமோற்ஸவ நாட்களுக்குள் வருவதால் நவராத்திரி விழாவானது, நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. தினம் கொலு, திருமஞ்சனம், ஊஞ்சல்
சேவை, வாகன சேவை என்று கோலாகலமாக நடைபெறும்.

காஞ்சிபுரத்தில் நவராத்திரிபிரம்மோற்சவம்ஒவ்வொரு நாளும் தாயாருக்கு விசேஷ அலங்காரங்களோடு நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும்.  சரஸ்வதி பூஜை அன்று பெருந்தேவித் தாயார் சன்னதிக்கு முன் அமைந்துள்ள எழில்மிகு மண்டபத்தில் ஏக ஆசனத்தில் பெருமாளும் பிராட்டியும் அலங்காரத் திருமஞ்சனம் கண்டருளுவர். இது வருடத்தில் ஒரே ஒருமுறை நடைபெறுகின்ற விசேஷமாகும்.

அப்பொழுது திவ்ய தம்பதிகளுக்கு உபநிஷத், திருமஞ்சன கட்டியங்கள், புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம், நீராட்ட பாசுரங்கள் முதலியவைகளின் பாராயணங்கள் நடைபெறும். பிராட்டி திருமஞ்சனம் ஆனவுடன், நறுமணமிக்க வண்ண மலர் மாலைகளும் தங்க நவரத்ன ஆபரணங்களும் சூடி (செல்வத்துக்கு அதிபதி யல்லவா திருமகள்) புறப்பாடு கண்டு அருள்வார். அதற்குப்பிறகு மண்டப முகப்பில் ஊஞ்சல் வைபவம் நடைபெறும்.

பெருந்தேவி தாயார் நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் ஜடை, சரம் ராக்கடி அலங்காரங்களுடன் சர்வாபரண பூஷிதையாக ஜொலிப்பார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தோடு காட்சி தருவார். விஜய தசமியன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறும். விஜயதசமி அன்று வன்னிமரத்தை பூஜிக்க வேண்டும். அன்று வன்னி மரத்தில் அம்பு போட வேண்டும் என்று ஆகமங்கள் கூறுவதால், காஞ்சிப் பேரருளாளன், மாலை குதிரை வாகனத்தில் மாட வீதி புறப்பாடு கண்டருளி, வன்னி மரத்தில் அம்பு போடுவார்.

திருவல்லிக்கேணி, திருவள்ளூர் எனப் பிரசித்தி பெற்ற அத்தனை திவ்ய தேசங்களிலும் தாயார் சந்நதியில் நவராத்திரி உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
இப்படியாக நவராத்திரி உற்சவம் வைணவக் கோயில்களில் தாயார் சிறப்பு உற்சவமாக நடைபெறும். இந்த நவராத்திரி உற்சவம் நடத்துவோரும், கண்டுகளிப்போரும், இம்மையிலும் மறுமையிலும் மிகப் பெரிய நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடைவார்கள் என்று ஆகமங்களில்  சொல்லப்பட்டுள்ளது.

Tags : Saraswati Puja ,Vijaya Dasami ,Vaishnava ,
× RELATED ஆழ்வார்கள் கண்ட கருட சேவை