×

திருப்பம் தருவார் திருப்பதி பெருமாள்!

‘‘திருப்பதி சென்று திரும்பி
வந்தால், திருப்பம் நேருமடா,
உந்தன் விருப்பம் கூடுமடா’’ என்று பல ஆண்டுகளுக்கு முன்னால், கவியரசு கண்ணதாசன், தன்னுடைய சொந்த அனுபவமாக, திருப்பதி வேங்கடவனின் பெருமையை, ஒரு திரைப்படப் பாடலில் பாமரனுக்கும் புரியும் படியாகப் பாடினார்.

அது மட்டுமல்லாமல், அவர் தனக்கு மனது சரியில்லாத போது, திடீர் திடீரென்று புறப்பட்டு திருமலைக்குச் சென்று வருவார். அவருடைய அனுபவத்தை போல லட்சக்கணக்கான மக்களின் அனுபவமும் உண்டு. புரட்டாசி வந்து விட்டாலே, வேங்கடவன் மனதில் விரும்பி வந்து அமர்ந்துவிடுவான். அந்த வேங்கடவனின் எல்லையற்ற மகிமைகளை, ‘‘முத்துக்கள் முப்பது’’ எனத்  தொகுத்து வழங்குகின்றோம்.
 
ஏழு மலை ஏன் சுமக்கிறது?
நம்மாழ்வார்  
“குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே” என்று பாசுரம் பாடி இருக்கிறார். இதில் திருவிக்கிரம அவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தில் கோவர்த்தன கிரியைத் தூக்கி குடை பிடித்து ஆயர்களைக் காப்பாற்றிய வரலாறும் சொல்லி, அவன் விரும்பி வந்து நின்ற மலை என்பதால், அந்த மலையை வணங்கினாலே உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்.   அதில் கிருஷ்ணாவதாரத்தில் மலையை ஏழு நாட்கள் தன்னுடைய விரலால் அவன் சுமந்துகொண்டிருந்தான். அந்த மலைதான் இங்கே ஏழு மலைகளாக மாறி, எம்பெருமானை நன்றிக் கடனாகச் சுமந்துகொண்டிருக்கிறது என்று பல பெரியவர்களும் சொல்கிறார்கள்.

இன்னொரு கோணமும் இருக்கிறது பகவானிடம் ஒரு பழக்கம் உண்டு. நாம் ஒரு மடங்கு வைத்தால், அவன் உடனடியாக ஒன்பது மடங்கு வைப்பான். இராமாவதாரத்தில் தம்பியாக பிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வாழ்க்கையைக் கூட தியா கம் செய்து சேவை செய்த லட்சுமணனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணாவதாரத்தில் தனக்கு அண்ணனாக பலராமனை பிறக்க வைத்து, “மூத்த நம்பி” என்று பெயர் கொடுத்து, கைங்கரியம் செய்து மகிழ்ந்தான் பகவான். அதாவது “நம்முடைய செயல், அவனுடைய எதிர் செயல்” (Reaction to action) என்பதாகவே அமைந்திருப்பதை கணித்தால், தன்னைத் தாங்கிய மலையை, கிருஷ்ணாவதாரத்தில் ஏழு நாட்கள் தூக்கிக் கொண்டான் என்பதுதான் இன்னும் பொருத்தமாக இருக்கும். காரணம் கோவர்த்தனகிரியை குடையாக எடுத்தது கிருஷ்ணாவதாரத்தில். ஆனால் அதற்கு முன், வராக அவதார காலத்திலிருந்தே, திருமலை எம் பெருமானைச் சுமந்து ஆனந்தமடைந்தது.
“தன்னைத் தாங்கிய மலையைத் தான் தாங்கினான்” என்பது இன்னமும் பொருத்தமாக இருக்கும்,

திருமலைக்கு செல்ல நினைத்தால் என்ன செய்ய வேண்டும்?
திருமங்கையாழ்வார் திருவேங்கடத்தில், பாசுரம் பாடுகின்ற பொழுது வித்தி யாசமாகச் சிந்திக்கின்றார். எத்தனையோ ஆயிரக்கணக்கான மக்கள், இந்த நாட்டில் இருந்தாலும், எல்லோரும் திருமலையைச் சென்று சேவிப்பது இல்லையே!
தனக்கு மட்டும் எப்படி இந்த ஆர்வம் வந்தது என்பதை சிந்தித்த, திரு மங்கையாழ்வார் இப்படி பாசுரம் பாடுகிறார்.
கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த
கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல் துயில்கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம்மிடம் பொங்கு நீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனைத்
திருவேங்கடம் அடை நெஞ்சமே
ஒருவன் திருமலைக்கு செல்ல வேண்டும் என்று நெஞ்சார நினைத்தால் ஒழிய அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை.  
முயற்சியால் மட்டும் நடப்பது இல்லை என்று சொல்லி, இப்பதிகம் முழுக்க, தன்னுடைய நெஞ்சிற்கு அறிவுரை சொல்லுகின்றார். “நெஞ்சகமே! அங்கு செல்ல வேண்டும் என்று நினை! நெஞ்சார நினைத்தால்தான் போகலாம். உன் ஒத்துழைப்பு இன்றிப்   போக முடியாது.”  
பலர் திருமலை செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஏதோ ஒரு தடை வரும். ஆனால், அதே நேரத்தில் நினைத்த நேரத்தில் சென்று தரிசனம் செய்துவிட்டு வருகின்ற அன்பர்களும் இருக்கின்றார்கள். இந்த உளவியலை பல்லாண்டுகளுக்கு முன்னர் பாசுரத்தில் திருமங்கை ஆழ்வார் பாடி இருக்கிறார் என்பதுதான் வியப்பு.

வைகுந்தம் இதுதான்
வைகுந்தத்தில் இருந்து பெருமாள் அடுத்து திருமலைக்கு வந்தார். பிறகு தான் மற்ற பிரதேசங்களுக்குச் சென்றார். இதனை ராமானுஜ நூற்றந்தாதியின் ஒரு பாடல் தெரிவிக்கிறது.
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர்’’
இதில் ஏன் திருவரங்கம் பேசப்படவில்லை என்று ஒரு கேள்வி இருக்கிறது. அதற்கு இரண்டு விடைகள்.
1. திருவரங்கன்தான் வைகுந்தநாதன்.  அதனால் வைகுண்டத்தின் பிரதி தேசமாக அரங்கம் இருப்பதால் வைகுண்டத்தை சொல்லிய பிறகு, அரங்கத்தை தனியாகச் சொல்லவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம்.
 2. திருவரங்கநாதன்தான் திருமலையில் இருக்கிறான். திருப்பதியில் நின்று திருவரங்கத்திற்குச் சென்று சேர்ந்தான் என்பதால், (“இவனும் அவனும் ஒன்று” என்பதால்) திருவரங்கனைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று விட்டிருக்கலாம்.

அவன் அருளை எதிர்பாருங்கள்
சென்னியோங்கு தண் திருவேங்கட
முடையாய்! உலகு
தன்னைவாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி
என் திருக்குறிப்பே,
என்பது பெரியாழ்வார் பாசுரம்.
பயிர்களுக்கு உயிரானது மழை. இந்த மழை வருமா வராதா என்பதை விவசாயி அண்ணாந்து பார்த்து, மேகங்கள் திரண்டு இருக்கிறதா? திரண்ட மேகங்கள் கருத்து இருக்கிறதா? கருத்த மேகங்கள் மறுபடியும் குளிர்ச்சியுடன் இருக்கிறதா? என்று
நோக்குவான்.
அந்த விவசாயி போலவே, ஒருபக்தனும் எம்பெருமானுடைய அருளை நோக்கவேண்டும். அவனை அண்ணாந்து பார்க்க வேண்டும். அப்படி அண்ணாந்து பார்க்கக் கூடிய உயர்ந்த மலையில் இருப்பவன்
திருவேங்கடவன். பெரியாழ்வார் மழையை எதிர் பார்ப்பது போலவே ‘‘நின் அருளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பாசுரத்தில் பாடுகின்றார். இங்கே மக்களும் திருவேங்கடவனின் திருவருளை எதிர்பார்த்து அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் பக்தர்கள் தலையை தூக்கி அண்ணாந்து பார்த்து “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷம் எழுப்பி வணங்குவதை இப்பாடலொடு இணைத்து பாருங்கள்.  

உயிர்ப்  பாசுரம் கொடுத்த தலம்
நம்மாழ்வார் பகவானிடம் பற்பல இடங்களில் சரணாகதி செய்கின்றார். ஆனால் திருவேங்கடவன் திருவடிகளில் செய்த சரணாகதியானது உயிரானது.
அந்தச் சரணாகதியின் பலனைத்தான் அவர் திருவரங்கத்தில் நம்மாழ்வார் மோட்ஷமாக அடைகின்றார். வைணவத்தின் மூன்று மந்திரங்களில் “த்வயம்” என்கின்ற மந்திரம் “மந்திர ரத்னம்” என்று வழங்கப்படுவது.
அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா,
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்!  என்னை ஆள்வானே,
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.
“பிராட்டியுடன் கூடிய பெருமானே, உன் திருவடிகளை சரணம் புகுகிறேன், உன்னை விட்டால் எனக்குப் புகழ்  இல்லை” என்று, சரணாகதியின் முழுப்பொருளையும் இந்தப் பாசுரம் தெரிவிப்பதால், திருவாய்மொழியின் 1102 பாசுரங்களில் ‘‘உயிர் பாசுரம் இது’’ என்று, இந்தத் திருவேங்கடப் பாசுரத்தைச் சொல்லுவார்கள்.
நெடியானே வேங்கடவா
இளங்கோவடிகள் போற்றிய
வேங்கடவன் வடிவம்.
‘‘பகை அணங்கு ஆழியும் பால்வெண்
சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடுமால் நின்ற வண்ணம்’’
சங்க காலத்தில் இருந்தே திருமலையின் சிறப்பும், எம்பெருமான் சிறப்பும் பேசப்பட்டிருக்கிறது. அன்று இளங்கோவடிகள் அழகாக பெருமாளை “நெடுமால்” என்று அழைத்துப் போற்றுகிறார். இதே பதத்தை இளங்
கோவின் சேர வம்சத்தில் வந்த குலசேகரர்,
“நெடியானே! வேங்கடவா!” என்று
பாடுவதை கவனிக்க வேண்டும்.
திருப்பணி செய்த மன்னர்கள்
தொண்டைமான் சக்ரவர்த்தி என்னும் பேரரசன், இந்தக் கோயிலை எடுப்பித்தவன் என்று “வேங்கடாசல மாகாத்மியம்” நூல் கூறும். பல்லவர்கள், சோழர்கள், பாண்டிய மன்னர்கள், யாதவர்கள்  முதலிய அரசர் பெருமக்கள் எல்லாம் கோயிலை விரிவு
படுத்தியிருக்கிறார்கள். ஆயினும் இக்கோயில் மிகவும் பெரிய அளவில் திருப்பணி செய்யப் பெற்றது விஜயநகர மன்னர்கள் காலத்தில்தான். அவர்கள் காலத்தில் கோயிலின் செல்வம் பல்கிப் பெருகியது. சாளுவ நரசிம்மனின் பெரிய பாட்டனான சாளுவ மங்க தேவனே ஆனந்த விமானத்துக்குத் தங்கத் தகடு வேய்ந்தான். விஜயநகர விஷ்ணு பக்தரான கிருஷ்ணதேவராயனும் அச்சுத தேவராயனும் பல துறைகளில் இந்தக் கோயிலை வளப்படுத்தி இருக்கிறார்கள்.
 நீர்தான் ஆண்பிள்ளை
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்த மில்புகழ்க் காரெழில் அண்ணலே.
‘‘சிந்துபூ மகிழும் திருவேங்கடம்’’ என்று 1200 வருஷத்திற்கு முன் ஆழ்வார் பாடினார்.
“திருமலையில் எங்கு பார்த்தாலும் பூக்கள். திருமலையில் ஒரு நந்தவனம் அமைத்து, இப்படிப்பட்ட பூக்களை மாலை கட்டி எம்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும். யாராவது திருமலை சென்று இந்த
கைங்கர்யம் செய்வார் உண்டோ?” என்று ராமானுஜர் தன் சீடர்களை பார்த்துக் கேட்க, திருமலையின் குளிருக்கு அஞ்சியும்,
ராமானுஜரைப் பிரிய அஞ்சியும், பலரும் தயங்க, ஒரே ஒருவர் மட்டுமே எழுந்தார்.
‘‘இதில் நீர்தான் ஆண்பிள்ளை” என ராமானுஜர் அவரைக் கொண்டாடி திரு மலைக்கு அனுப்பி வைத்தார். அவர்தான் அனந்தாழ்வார். அவர் திருமலையில்
வெட்டிய ஏரிதான் அனந்தாழ்வார் ஏரி.

இருநூறு வகையான பூக்கள்
திருமலையில் பூக்கும் பூக்கள் எல்லாம் எம்பெருமானுக்கே. அங்கே யாரும் தலையில் பூ சூடிக்கொள்வதில்லை. அழகான பூக்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசும் திரு
மலையில் நாம் பார்க்க வேண்டிய இடம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தோட்டம்.

கோயிலின் பிரதான கட்டிடத்தை ஒட்டியுள்ள 460 ஏக்கர் பரப்பளவில் இந்த தோட்டம் அமைந்துள்ளது. தோட்டத்தில் பூக்கும் 200 வகையான பூக்கள் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். இந்த தோட்டத்தில் பல குளங்களும் உள்ளன. இந்த தோட்டத்திலிருந்து வரும் பூக்கள் ஒவ்வொரு நாளும் பெருமாளையும் கோயிலையும் அலங்கரிக்க பயன்படுத்தப்படு
கின்றன. ஒரு நாளுக்கு 500 கிலோவிற்கு மேல் அழகான பூக்கள் பூக்கக் கூடிய அற்புதமான தோட்டம் இது.

வருடம் 450 திருவிழாக்கள்
வருடத்தின் 365 நாட்களில் 450 திரு விழாக்களும்,உற்சவங்களும் நடைபெறும் திருமலை திருப்பதி திருத்தலத்துக்கு இணையான வேறு தலம் இல்லை.  திருவேங்கடவனுக்கு இணையான வேறு தெய்வம் இல்லை. ‘வேங்கடேத்ரி சமஸ்தானம் பிரம்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேஸ சமோதேவோ நபூதோந பவிஷ்யதி’ என்பது ஸ்லோகம். ‘பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பிக்கப்படும் திருமலையை சேஷாத் திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் தொகுப்பாகச் சொல்லி, பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்றொரு திருநாமம் சூட்டி மகிழ்கிறோம்.

முதலில் தாயார் பிறகு பெருமாள்
திருமலையப்பன் நெடியோனாக நின்றருளும் திருவேங்கடமும், பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருக்சுகனூரும் (திருச்சானூர் அல்லது அலர்மேல் மங்காபுரம்) இரு நகரங்களாக விளங்கினாலும், பொதுவில் திருப்பதி என்று ஒரே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. மலைக்கு மேலுள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றதை கீழ் திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். அலர்மேல்மங்கையைப் பார்த்துவிட்டு திருமலையப்பனை தரிசிப்பது சிறப்பானது. முதலில் தாயார், பிறகு பெருமாள் என்பது வைணவ வழிபாடு மரபு.

ஏன் ப்ரம்மோற்சவம்?
திருமலையப்பனுடைய திருநட்சத்திரம் புரட்டாசி திருவோணம். அதையொட்டியே பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த பிரம்மோற்சவத்தை “திருவோணப் பெருவிழா” என்று அழைப்பார்கள். இது பல ஆயிரம்  ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பிரம்மோற்சவம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு.

1. பிரம்மம் என்றால் பெரியது. இருப்பதிலேயே அதிக நாட்கள் நடக்கும் உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர்.
2. பிரம்மன் (நான்முகக் கடவுள்) முதன்முதலாக பெருமாளுக்கு நடத்திய உற்சவம். அதாவது பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர். இது பவிஷ்யோத்ர புராணத்தில் உள்ள வேங்கடாசல மகாத்மியம் 15 ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் பிரம்மனை நோக்கி, ‘‘பிரம்மனே! எனக்கு நீ கொடி யேற்று விழா தொடங்கி, தேர் உற்சவம் முடிய பல வாகனங்களுடன் பெரிய திருநாளை நடத்திவைக்க கடவாய்’’ என்று கட்டளையிட, பிரம்ம தேவன் இந்த உற்சவத்தை, தொண்டமான் சக்கரவர்த்தி மூலம் நடத்தி வைத்ததாகவும் ஒரு குறிப்பு உண்டு.
3. உலகத்துக்கும் தேவர்களுக்கும் “பரப்பிரம்மம் யார்?” என்கின்ற கேள்விக்கு “நான் பரப்பிரம்மம்” என்பதை வெளிப்படுத்து முகத்தான் (அகம் பிரம்மாஸ்மி, மாம் ஏகம்) என்று தன்னை பிரம்மமாக பெருமாள்
பிரத்யட்சமாக காட்டுகின்ற உற்சவம் என்பதால் பிரம்மோற்சவம் என்று பெயர்.  இந்த பிரம்மோற்சவ காலங்களில் எம்பெருமான் திருவீதி வலம் வருகின்ற பொழுது, காலையிலும் மாலையிலும்
ஆழ்வார்களின் அருந்தமிழைக் கேட்க வேண்டும் என்கின்ற முறையை ஏற்படுத்தி, இன்றைக்கும் அந்த அருந்தமிழை திருவேங்கட முடையான் கேட்கும்படியான உற்சவ கிரமங்களை ஏற்படுத்தித் தந்தவர்

ராமானுஜர்.
இப்படி தொட்ட தொட்ட இடமெல்லாம் திருவேங்கடமுடையான் பெருமை எல்லையற்று விரிந்துகொண்டே போகும். ஆயிரக்கணக்கான அவருடைய மகிமைகளில் முப்பது முத்துக்களைக் கோர்த்து, “திருவேங்கடமுடையான் திருவருள்” கோவிந்த மாதமான புரட்டாசி மாதம் எல்லோருக்கும் சித்திக்கும்படி வாசகர்களுக்குத் தந்திருக்கிறோம்.

Tags : Tirupati Perumal ,
× RELATED திருப்பம் தருவார் திருப்பதி பெருமாள்!