×

நவராத்திரியும் அதன் வைபவங்களும்

நவராத்திரி உருவான கதைவருடத்திற்கு இரண்டு முறை நாம் நவராத்திரியை கொண்டாட வேண்டும் என்று தேவி புராணம் சொல்கிறது. கோடை, குளிர் என பருவ காலம் மாறும் போது நோய்கள் அதிகமாக பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களை காக்க வேண்டும். இந்த காலங்களில் எமனுடைய கோரைப் பற்களுக்கு விருந்தாகும். இந்த காலத்திலிருந்து மீள
மக்கள் தேவியை பூஜை செய்தனர். சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்தநவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி என்றும் கூறுவர். காலப்போக்கில் சித்திரை நவராத்திரி குறைந்து விட்டது. புரட்டாசி நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

கால நாட்களில் பகல் என்பது சிவனுடைய அம்சமாகவும், இரவு என்பது அம்பாளின் அம்சமாகவும் நாம் கருதுகிறோம். பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கக்கூடிய உயிரினங்களுக்கு இரவு நேரத்தில் அம்பாள் தன் மடியில் அவர்களை தாலாட்டி உறக்கம் செய்வதாக கருதப்படுகிறது. இந்த இரவெல்லாம் விழித்து நம்மை உலகை
காக்கும் அம்பாளுக்காக 9 நாள் இரவு மட்டும் மிக பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பிரம்மாவின் அருளால் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்கள் சாகாவரம் பெற்று வந்தனர். தங்களுடைய மரணம் தங்களுக்கு சரிசமமான பெண்களால் மட்டுமே ஏற்பட வேண்டும் என்ற வரத்தை பெற்றனர். இந்த அரக்கர்கள் தேவர்களுக்கு தொந்தரவுகள் கொடுத்தும், அதர்மங்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த அரக்கர்களின் அழிவுக்காக அம்பாளிடமிருந்து கௌசிகியும், காளிகா என்ற காலதாத்திரியும் உருவாக்கினர். காளிகாவுக்கு உறுதுணையாக முப்பெரும் தேவியின் அம்சமான அஷ்டமாதர்களும் அஷ்டாத்திரிகளாக உருவாகினர்.

பிரம்ம சக்தி வடிவமான பிராம்மணி அன்ன வாகனத்தில் அட்சரமாலையுடன் கமண்டலத்துடன் விஷ்ணு சக்தி வடிவமான வைஷ்ணவி கருடவாகனத்தில் சங்கு, சக்கரம், கதை, தாமரைப்பூவுடன், சிவனின் சக்தி வடிவமான மகேஸ்வரி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வர முத்திரையுடனும், கார்த்திகேய சக்தி என்ற கருமாரி மயூரவாகனத்தில் வேலுடனும், இந்திர சக்தி என்ற மகேந்திர ஐராவதத்தில் வஜ்ர ஆயுதத்துடனும், வாராஹி என்ற சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும், பைரவர் சக்தி என்று சொல்லக்கூடிய சாமுண்டி எம வாகனத்தில் கத்தியை உடையவளாகவும், நரசிம்ம சக்தி என்று சொல்லக் கூடிய நரசிம்ஹ உரிய நகத்தை ஆயுதமாகத் கொண்டு தாமரைப் படத்தில் உருவானார்கள். இவர்கள் காளிகா என்கிற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர்.

இந்த தேவதைகள்தான் அரக்கர்களான சும்பன் மற்றும் நிசும்பனை வதம் செய்தனர். இந்த அரக்கர்களின் கொடுமையில் இருந்து மீண்ட தேவர்கள்  ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் கௌசிகி என்கிற அம்பிகையையும் நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதி பாடினர். இப்படித்தான் நவராத்திரி உருவான கதையாகும்.படைத்தல், காத்தல், அழித்தல் என அனைத்திற்கும் காரணமாக இருப்பவள் சக்தியேயாகும். வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும், சுகங்களும், நல்ல ஆயுளையும் தருபவள் இந்த சக்தியே ஆகும்.

இந்த உலகத்தை திசை, எடுத்து செல்லும் மும்மூர்த்திகளும் வணங்கும் ஆதிபரம்பொருளே சக்தியே ஆகும். நாம் நாள்தோறும் சக்தியை வணங்கினாலும் புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய நவராத்திரிகளில்  வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.புரட்டாசி மாதத்தில் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி நாட்களாகும். இந்த ஒன்பது சர்வ சக்தி அடங்கிய அம்பாளை, துர்கா பரமேஸ்வரியை முதல் மூன்று நாட் களாகவும், மகாலட்சுமியை அடுத்த மூன்று நாட்களாகவும், சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களாக வழிபடுதல் வேண்டும்.

அம்பாளை நாம் பல வடிவங்களாக வழிபடலாம். செல்வத்திற்கு லட்சுமியாகவும், கல்விக்கு சரஸ்வதியாகவும், வீரத்திற்கு துர்க்கையாகவும் வழிபடலாம். இந்த நாட்களில் இல்லத்தில் கொலுக்கள் வைத்து அந்தப்படியில் தேவியை நடு நாயகியாக வைத்து மற்றதை  எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள். இதற்கு பொருள் என்ன வென்றால் அம்பாள் தான் இந்த உலகத்தை இயக்குகிறாள் என்றும் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும், சிவனின் மற்ற வடிவமான ருத்திரன், சதாசிவனும், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, மனோன்மணி, மகேஸ்வரி ஆகிய சக்திகளும் உள்ளனர். நாம் சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வணங்குவதாக கருதப்படுகிறது.

நவராத்திரியில் கன்னி பூஜைகள்

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் கன்னியர்களை வைத்து வழிபடுதல் வேண்டும். மூன்று வயது முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட கன்னியர்களை வைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு கன்னியருக்கு பெயர் வைத்து நாம் வழிபட்டால் நல்ல பலன்களை அடையலாம்.

பெயர்- பலன்கள்

1.குமாரி- செல்வச் செழிப்பு உருவாக, வறுமை நீங்குதல்
2.திரிமூர்த்தி- தன, தானியம் தர்மச் சிந்தனை, உருவாகும்.
3.கல்யாணி- கல்வியில் வெற்றி, அரசு வேலை.
4.ரோகிணி- நோய் விலகும்.
5.காளி- பகை விலகும்.
6.சண்டிகை- செல்வம் வளரும்.
7.சாம்பவி- வெற்றி, ராஜ யோகம் அடைதல்.
8.துர்க்கை- செய்ய முடியாத செயல்களை செய்து முடித்தல்.
9. சுபத்திரை- மன நிம்மதியும், லட்சியமும், மங்களமும் உண்டாகும்.

மேற்கூறிய பெயர்களை சொல்லி ரஸ்து,  யுக்தம் என்ற சொற்கள் முதலாக கொண்ட மந்திரங்களை சொல்லி வணங்க வேண்டும்.
நவராத்திரியில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மை கொலு வைப்பது ஏன்?

கொலுவை பற்றி நம்முடைய பதினெண் புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.முன்னொரு காலத்தில் தன்னுடைய எதிரிகளை வெற்றி அடைவதற்காக சுரதா என்கிற அரசன் தன்னுடைய குருவான சுமதாவின் ஆலோசனையை கேட்கிறான். அவருடைய குரு அறிவுரைப்படி சுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கிறான். அதைக் காளியாக அலங்காரம் செய்து தெய்வத்தின் மீது மிகுந்த பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்ட வேண்டும் என்கிறார்.

அம்பிகை அரசனுடைய வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கன்களையும், பகைவர்களையும் கொன்று, ஒரு புது யுகத்தை உருவாக்குகிறார். புராணத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மை வடிவத்தில் என்னை பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்பவர்களுக்கு சகல நன்மைகளையும், செல்வத்தையும் அளிப்பதாக அம்பாள் கூறுகிறாள். இதனால் நவராத்திரி கொலு படிகளில் மண்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கும் மரபு ஏற்பட்டது என்பதாகும்.

கொலுபடிகள் எவ்வாறு வைக்க வேண்டும்?

நவராத்திரி கொலு படிகளும் பொம்மைகளும் தயாராக நாம் வாங்கி இல்லத்தில் வைத்திருப்போம். ஆனால் அதில் கலச ஸ்தாபனம் செய்யவும், கொலு படிகளை சீராக அமைக்கவும். நல்ல நேரம் பார்த்து செய்தல் வேண்டும். இல்லத்தில் கொலு வைப்பவர்கள் முன்பெல்லாம் மரச்சட்டங்கள் மூலம் படி அமைத்து செய்வார்கள். இப்பொழுது நம்முடைய நவநாகரீக காலத்திற்கு ஏற்ப இரும்பு, மற்றும் தடிமனான பிளாஸ்டிக் பைப் மூலம் Ready made ஆக கொலு படிகள் கடைகளில் கிடைக்கின்றன. இந்த கொலு படிகள் ஒற்றை வரிசையான 3, 5, 7, 9 என்ற வரிசையில் தான் கொலு படி வைக்க வேண்டும். இந்த படிகளில் சாமி சிலைகளையும் கண்கவரும் அழகான பொம்மைகளையும் வைக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என வழிமுறைகள் உண்டோ அவற்றுக்கான பொம்மையின் அழகாக நாம் கொலுவில் வைக்கலாம்.

இந்த நவராத்திரியில் நாம் நல்ல எண்ணங்களுடன் விரதம் இருந்து வழிப்பட்டால் நாம் சகல நன்மைகளை அடையலாம். புத்திர பாக்கியம், சொந்த வீடு, செல்வம், கல்வி, திருமணத் தடை விலகல், வேலை வாய்ப்பு, பதவியில் முன்னேற்றம், வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் போன்ற அனைத்தும் நாம் அடையலாம்.

விஜய தசமி அன்று  நாம் ஒரு செயலைத் தொடங்கினால் அந்த செயல் வெற்றிகரமாக அமையும். புதிய பயிற்சி, புதிய கல்வி, புதிய தொழில் போன்றவற்றை விஜயதசமி அன்று தொடங்க  வேண்டும்.நவராத்திரி கொலு வைப்பதில் வழிமுறைகள் உள்ளது. மனிதன் தன் வாழ்நாளில் எப்படியாவது எல்லாவிதத்திலும் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கிறான். தன்னுடைய இறுதி நாட்களில் இறைவனிடம் கலந்து விட வேண்டும் என்று எண்ணுகிறான். இதுவே மனித படைப்பின் அடிப்படையாகும். இந்த எண்ணங்களை விளக்கும் பொருட்டே  நவராத்திரிகள் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை வைத்து வழிபடுகிறோம்.

1.படி-     உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி
2.படி-     சங்கு, நத்தை.
3.படி-     எறும்பு, கரையான்
4.படி-     வண்டு, நண்டு
5.படி-     நான்கு கால்கள் உடைய விலங்குகள்
6.படி-     மனிதன் உருவம் கொண்ட பொம்மைகள்
7.படி-     மகரிஷிகள்
8.படி-     தேவர்கள், பஞ்சபூத தெய்வங்கள், நவக்கிரகங்கள், அஷ்டபரிபாலகர்கள்
9.படி-     பிரம்மன், விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, ஆகியோருடன் ஆதிபராசக்தி நடு நாயகியாக இருக்க வேண்டும்.

இந்த படிகளின் தத்துவம் மனிதன் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கடைசியில் தெய்வத்தை சரண் அடைய வேண்டும் என்பதேயாகும்.முழு முதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெற்று இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான பொம்மைகளையும் நாம் கொலுவில் வைத்து அழகு படுத்தலாம். போன வருடம் வாங்கிய பொம்மைகளையும், மற்றும் புதிய பொம்மைகளையும் வாங்கி வைக்கலாம்.

நவராத்திரி கொண்டாடும் நாட்களில் தினமும் பூஜை செய்ய வேண்டும். அப்போது சுமங்கலிப் பெண்களை இல்லத்திற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரியில் திருமணம் ஆகாத பெண்கள் பூஜை செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும் என்று
நம்பப்படுகிறது.

வைஷ்ணவ நவராத்திரி நவராத்திரி பண்டிகை யொட்டி வைணவர்கள் பெருமாளுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. பெருமாளின் மார்பிலேயே திருமகள் குடி கொண்டு இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் கிடையாது.

நாள் அலங்காரம்

1. வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன்
2. காளிங்க நர்த்தனர்
3. வேணு கோபாலன்
4. வைகுண்ட நாதன்
5. நாச்சியார் கோலம்
6. சாரங்க பாணி
7. ராஜ கோபாலன்
8. ரங்கநாதன்
9. ராமர் பட்டாபிஷேகம்

ஆன்மிக பலன் வாசகர்கள் வரும் நவராத்திரியை புரட்டாசி மாதம் 21 முதல் 29 முடிய (07-10-2021 முதல் 15-10-2021) சிறப்பாக அவரவர்கள் இல்லத்தில் பூஜை செய்து அம்பாளின் அருளை பெறுவோம் என்று நம்புகிறோம்.

குடந்தை நடேசன்

Tags : Navratri ,
× RELATED மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்