×

ஜோதிடத்தின் பார்வையில் நவராத்திரி குறித்த சுவையான விஷயங்கள்

நவராத்திரிக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்புபற்றி அறிந்தால் வியப்பாக இருக்கும். நவகிரகங்களுக்கும், நம் ஒவ்வொருவரின் செயல்களுக்கும், நம் நாட்டில் நிகழும் செயல்களுக்கும், உலகத்தில் நிகழும் செயல்களுக்கும் தொடர்பு உண்டு. அந்தத்  தொடர்பை நாம் ஊன்றி கவனித்து அறியவேண்டும்.

நவராத்திரி என்பது ஒன்பது ராத்திரி

இந்த  ஒன்பது என்றாலே ஜோதிடத்  தொடர்பும் ஆன்மிகத் தொடர்பும் நினைவுக்கு வந்துவிடும். ஒன்பதுக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்று ஆராயலாம். எண்களின் கடைசி எண் 9. அதற்குமேல் எண் இல்லை. ஒன்பதோடு ஒன்று சேர்வதால் வருவதுதான் பத்து. பத்தோடு ஒன்று சேர்ந்து வருகிறது பதினொன்று.

எனவே, உச்சபட்சமான எண் 9க்கு 9 ராத்திரிகள் வைத்தார்கள்

நவராத்திரியை  நாம் புரட்டாசியில் கொண்டாடுகிறோம். புரட்டாசி என்பது தேவர்களுக்கு இரவு  நேரம். நமது ஒரு ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். நமது ஆறுமாதம் (ஒரு அயனம்), அவர்களுக்கு ஒரு நாளின் பாதி. இரண்டு அயனங்கள் ஒரு வருடத்திற்கு வரும்.  ஒன்று உத்தராயணம். இன்னொன்று தட்சிணாயனம். உத்தராயணம் என்பது தேவர்களுக்கு பகல். தட்சிணாயனம் என்பது தேவர்களுக்கு இரவு. உத்தராயணம் என்பது தை  மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை. தட்சிணாயனம் என்பது ஆடி மாதத்திலிருந்து  மார்கழி மாதம் வரை.

புரட்டாசி மாதம் தட்சிணாயனத்தில் வருகிறது. எனவே, இது இரவு 10லிருந்து 12 மணியைக் குறிக்கும். இது ராத்திரி நேரம். தேவர்கள் ராத்திரியான புரட்டாசி மாதத்தில் செய்யும் அம்பிகை பூஜையை நாம் நவராத்திரி நாளாகக் கொண்டாடுகிறோம். புரட்டாசி என்பது கன்னி ராசி. கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம். கன்னி ராசி புதனுக்கு உரிய ராசி.

இங்கே ஒரு ஜோதிட சூட்சுமம் இருக்கிறது

தமக்குரிய வீடு அல்லாத வேறு ராசியில் ஒவ்வொரு கிரகமும் உச்சம் பெறுகிறது. உதாரணமாக சிம்ம ராசிக்கு உரிய சூரியன், மேஷ ராசியில் தான் உச்சம் பெறுகிறார். கடக  ராசிக்கு உரிய சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெறுகிறார். மகர கும்ப ராசிகளுக்கு உரிய சனி பகவான் துலா ராசியில் உச்சம் பெறுகிறார். தனுசு  மற்றும் மீன  ராசிகளுக்கு உரிய குரு கடக ராசியில் உச்சம் பெறுகிறார்.

மேஷ, விருச்சிக ராசிகளுக்கு உரிய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுகிறார். ஆனால்,  கன்னி, மிதுன ராசிகளுக்கு சொந்தமான புதன், தனக்குச் சொந்தமான கன்னி ராசியிலேயே ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெறுகின்றார். இது வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு. இது நிகழுகின்ற ராசிக்குரிய மாதம் புரட்டாசி மாதம்.

வேறு என்ன சிறப்பு?

புரட்டாசியில் கன்னி ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கின்றன. உத்திரம், அஸ்தம், சித்திரை. உத்திரம் சூரியனுக்கு உரிய நட்சத்திரம். அப்பாவைக் குறிக்கும். அஸ்த நட்சத்திர சந்திரன் அம்மாவைக் குறிக்கும். இவர்கள் இருவரும் சேரும்  நாள்தான் அமாவாசை. இதனால் புதிய சந்ததி உருவாகும். அதுதான் சந்திரனின் பிள்ளை புதன். இத்தனையும் பூமியில் நடக்கக்கூடிய பூமிகாரகன் ஆகிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரமும் அதே ராசியில்தான் இருக்கிறது. அது  மட்டும் இல்லை. செவ்வாய்க்கு உரிய எண் 9 என்பதால் நவராத்திரி ஒன்பது  நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

முப்பெரும் சக்திகள் இணைந்துதான்  உலக இயக்கம் நடைபெறுகிறது. நன்மைகளை வளர்ப்பதற்கான ஆற்றலும். தீமையை  வெல்வதற்கான ஆற்றலும் வேண்டுவதே நவராத்திரி வழிபாட்டின் அடிப்படை நோக்கம். இங்கே  உத்தரம், ஆத்ம சக்தியாகிய சூரியன். அஸ்தம், மனம் + உடல் சக்தியாகிய சந்திரன். சித்திரை, ஆற்றல் மற்றும் தைரிய சக்திக்கு உரிய செவ்வாய். இந்த மூன்று சக்திகளும் ஒன்பது பாதங்களாக இங்கே இருக்கின்றன.

ஆத்ம சக்தியாகிய  சூரியன், மனோசக்தி ஆகிய சந்திரன், செயல் சக்தி ஆகிய செவ்வாய் இந்த  மூன்றும், ஞான, வித்யா சக்தியாகிய புதன் ராசியில் இணையும் குறியீடுதான் நவராத்திரி பண்டிகை. இணையும் மாதம் புரட்டாசி மாதம். மூன்று நட்சத்திரங்களுக்கு 9 பாதங்கள் அல்லவா. 9 பாதங்களுக்கு ஒன்பது ராத்திரிகள்.   

அது என்ன ஒன்பது நாட்கள்?

ஒன்பது நாட்கள் தொடர்ந்து  செய்யும் காரியங்கள் பத்தாம் நாள் வெற்றி தரும். அதனால்தான் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடு கிறோம். மாதம் மூன்று மழை என்று சொல்வார்கள். ஆண்டாள் நாச்சியார் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து” என்று திருப்பாவையில் பாடுகின்றார்.அது தொடர்மழை அல்ல. ஒன்பது நாட்கள்  வெயில். ஒரு நாள் மழை. இப்படிப் பெய்தால்தான் மழை நீர் பூமிக்குள் இறங்கும். எல்லா உயிர்களுக்கும் பயன்படும். எனவே, ஒன்பது நாட்கள் நவராத்திரி. ஒருநாள் சிவராத்திரி.

இந்த 9:1 என்கின்ற விகிதம் தான் சரியாக இருக்கும் என்பதால் சிவராத்திரி (1), ஒருநாளும் நவராத்திரி (9)விழாவை ஒன்பது நாளும் நம்முடைய சமய மரபில் வைத்தார்கள். 9 ம் ஒன்றும் சேர்ந்தால் தானே வெற்றி. அதுதான் 10. தசமி.  விஜய தசமி. ஒன்பது என்ற எண்ணுக்கு அத்தனை சிறப்புகள் உண்டு.
9 கிரகங்கள் எனும் நவகிரகங்களோடு இணைந்துதான் அத்தனை விஷயங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அசைவுகளும் கிரகங்களின்  இயக்கத்தோடு, ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியாக இணைந்திருக்கின்றன. அதை  ஓரளவு ஊகித்துச் சொல்வது ஜோதிட சாஸ்திரம்.

அதுமட்டுமல்ல, நவகிரகங்களுக்கு நவமணிகள், நவ தானியங்கள், நவ உறவுகள், நவ உலோகங்கள், நவ சமித்துக்கள், நவ துவாரங்கள் என பல விஷயங்கள் ஒன்பது ஒன்பதுகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டதை  சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனையும் ஜோதிட சாஸ்திரத்தில் உண்டு. அந்த  வரிசைப்படிதான் நவராத்திரியும்  வருகின்றது. ஒன்பது என்ற எண்ணிற்கு இன்னொரு சிறப்பு உண்டு.

அது என்ன சிறப்பு?

ஆண்டாள் திருப்பாவையில் ஒரு அற்புதமான பாசுரம். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்கு சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து ஓங்கு பெருஞ் செந்நெல்லொடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுத்தத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தாலோர் எம்பாவாய்  அதிலே “நீங்காத செல்வம்” நிறைந்து என்று பாடுகின்றார்.

செல்வம்  கிடைப்பது பெரிதல்ல. அது நிறைவாக நிலை பெற்றிருக்க வேண்டும். ஒன்பது  என்கின்ற எண் நிலைபெற்ற எண். மாறாத எண். உதாரணத்திற்கு 9 x 1= 9. 9 x 2 பெருக்கினால் 18 வரும். ஒன்றும் எட்டும் கூட்டினால் ஒன்பது வரும். 9 x 3 பெருக்கினால் 27 வரும். 2+7 கூட்டினால் ஒன்பது வரும். 9 x 4 பெருக்கினால் 36 வரும். 3+6 கூட்டினால் ஒன்பது வரும். எனவே, இந்த ஒன்பது என்பது மாறாமல் நிலைபெற்ற எண்ணாக இருக்கும். நிலை பெற்ற,  மாறாத செல்வங்களான தைரியம், பூமி, ஆரோக்கியம் என பதினாறு செல்வங்களும்  வேண்டுபவர்கள் நவராத்திரி வழிபாடு செய்வது நல்லது.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீ ராம்

Tags : Navratri ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை