×

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் முறைகேடாக கொட்டப்படும் தனியார் கழிவுகள்: மாநகராட்சிக்கு நஷ்டம்

பெரம்பூர்: சென்னையில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் சில இடங்களில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள குப்பைக் கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கு மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. இதில் கொடுங்கையூர் குப்பை கிடங்கு 346 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து காணப்படுகிறது. இதில் 9 மண்டலங்களிலிருந்து எடுக்கப்படும் குப்பைகள் இந்த பகுதியில் கொட்டப்படுகின்றன. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் குப்பைகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கு வெளிப்பகுதியில் கொட்டப்பட்டன. அதன் பிறகு மக்கள் தொகை அதிகரித்த பின்பு குப்பைகளை வெளியே கொட்டுவதால் பல பிரச்னைகள் ஏற்பட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் கொடுங்கையூர் பகுதியை சுற்றி காற்று மாசுபட்டு மக்கள் வாழ தகுதியான இடம் இல்லை என தனியார் அமைப்பு சான்றிதழும் வழங்கியது.  அதன் விளைவாக தற்போது குப்பைகள் உட்புறமாக கொண்டு சென்று கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் தற்போது கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டிடக்கழிவுகளில் இருந்து ஹாலோ பிளாக் கற்கள் செய்யப்படுகின்றன. ஜல்லிகள் செய்யப்படுகின்றன. மர கழிவுகளில் இருந்து காகிதங்கள் செய்ய பயன்படுத்தப்படும் கூழ் செய்யப்படுகின்றன.  இவ்வாறு குப்பை கிடங்கில் இருந்து மாநகராட்சிக்கு வருமானம் தேடித் தரும் வேலைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து செய்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குப்பையில் இருந்து எவ்வாறு காசு பார்க்கலாம் என்ற ரீதியில் சிலர் ஈடுபட்டு மாநகராட்சிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வீடுகள் மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தெரு குப்பைகள் இவை அனைத்தும் மாநகராட்சி ஊழியர்களால் பெறப்பட்டு அவை ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பின்னர் லாரி மூலம் குப்பை கிடங்கிற்கு எடுத்து வந்து கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகள் மட்டுமல்லாமல் பெரிய பெரிய தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் பெறப்படும் குப்பைகளை குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் ஒப்பந்ததாரர்களை வைத்து தனியார் நிறுவனம் மூலம் குப்பைகளை கொண்டு வந்து அதனை குப்பை கிடங்கில் கொட்டும் முறை இருந்து வருகிறது. இதற்காக மாநகராட்சிக்கு இவர்கள் குப்பையை எடை போட்டு பணம் செலுத்த வேண்டும். அதாவது ஒரு டன் குப்பையை உள்ளே கொட்டுவதற்கு ரூ.2300 வரை கட்டணமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இந்த பணம் முழுவதும் மாநகராட்சிக்கு சென்று சேரும். ஆனால் தனியார் முப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து அதனை தனியார் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட குப்பையாக கணக்கு காட்டாமல் அங்குள்ள ஊழியர்கள் அதனை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு உள்ளே சென்று கொட்டுவதற்கு அனுமதிக்கின்றனர். இதன் மூலம் மாநகராட்சிக்கு வர வேண்டிய பணம் வராமல் தடைபடுகிறது. மேலும் இதற்காக ஒரு லாரிக்கு அங்குள்ள ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை லஞ்சம் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2300 ரூபாய் வரவேண்டிய இடத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு குப்பை கிடங்கில் பணிபுரியும் சில ஊழியர்கள் தனியார் நிறுவன குப்பைகளை கொட்ட அனுமதிப்பதால் மாநகராட்சிக்கு வரவேண்டிய பணம் வராமல் போகிறது. மேலும் ஒரு நாளைக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் இதுபோன்று எத்தனை லாரிகள் கொண்டு வந்து கொட்டுகின்றன என்று கணக்கு பார்த்தால் மாநகராட்சிக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுவதாகவும் சிலர் கூறுகின்றனர்….

The post கொடுங்கையூர் குப்பை கிடங்கில் முறைகேடாக கொட்டப்படும் தனியார் கழிவுகள்: மாநகராட்சிக்கு நஷ்டம் appeared first on Dinakaran.

Tags : Kodungayur ,Perampur ,Chennai ,Cordungayur ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்