×

இறைச்சி கழிவுகளால் சீரழியும் நொய்யல் ஆறு: சுகாதாரத்துறை கண்காணிப்பு வளையம் இறுகுமா?

திருப்பூர்:  திருப்பூர் நொய்யல் ஆற்றில் கோழி, இறைச்சிக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால் மாசு ஏற்பட்டு, மாநகரின் சுகாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது. இதையடுத்து, இறைச்சி கடைகளை கண்காணிப்பு வளையத்தை இறுக்கி, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூரில் கோழி மற்றும் இறைச்சிக்கடைகள் ஏராளமாக உள்ளன. இதில் சில இறைச்சி கடைகள், கோழிக்கடைகளின் கழிவுகள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்படுவதில்லை. மாறாக, பனியன் மாநகரின் மத்தியில் ஓடும் நொய்யல் ஆற்றில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. தினசரி சேகரமாகும் கழிவுகளை வாகனங்களில் மூட்டையாக கட்டி கொண்டு வந்து ஆற்றில் வீசிவிட்டு கடைக்காரர்கள் சென்று விடுகின்றனர். குறிப்பாக அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட பாலம் பகுதியில் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. நகருக்குள் இருக்கும் இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆடு, மாடு உள்ளிட்டவை நகராட்சி வதைக்கூடங்களில் அறுக்கப்பட்டு, சீல் பெற வேண்டும். அவற்றையே விற்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து முறையான கண்காணிப்பு இல்லாததால், கடைகளிலேயே அறுக்கப்பட்டு, கழிவுகள் முறைகேடாக நொய்யல் ஆறு, ஓடைகள், பொது இடங்கள், ரோடுகளில் கொட்டப்படுகின்றன. இதனால், நீர் நிலைகள் மாசடைவதோடு, கடும் துர்நாற்றம், தொற்றுநோய் பரவுதல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மாநகரின் சுகாதாரமும் கடும் கேள்விக்குறியாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் நகரின் மத்தியில் ஓடும் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு, சாக்கடை கழிவுகள் கலப்பதோடு, கட்டிட கழிவு, மீன், இறைச்சி கழிவு குப்பைகளும் கொட்டப்பட்டு நீரும், நிலமும் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இரவு நேரங்களில், ஆங்காங்கே திருட்டுத்தனமாக செப்டிக் டேங்க் கழிவுகளும் கொட்டப்பட்டு ஆறு நாசப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே, திருப்பூ நகரில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், மின் மயானம் அருகே மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க மங்கலம் அடுத்த நொய்யல் கரையோரத்தில் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள், மூட்டை, மூட்டையாக வீசப்பட்டுள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களின் சுகாதாரம் அடியோடு பாதிக்கப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இறைச்சி கடைக்காரர்களும் சமூக அக்கறையின்றி, மூட்டை மூட்டையாக கட்டி கழிவுகளை நொய்யல் ஆற்றில் கொட்டி செல்கின்றனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு, சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ஆகவே, ஆற்றில் கழிவு கொட்டும் வாகனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது போலீசில் புகார் செய்வதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அபாயகரமான பொருட்களை நீர் நிலைகளில் கொட்டுவதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நொய்யலை காப்பாற்றும் வகையிலும், நீர், நிலம் மாசடைவதை தடுக்கவும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் மாநகர மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு….

The post இறைச்சி கழிவுகளால் சீரழியும் நொய்யல் ஆறு: சுகாதாரத்துறை கண்காணிப்பு வளையம் இறுகுமா? appeared first on Dinakaran.

Tags : Noyyal River ,Tirupur ,Noyal river ,Dinakaran ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...