×

கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்; தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர், ஒப்பந்ததாரர் மீது புகார்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 22வது வார்டுக்கு உட்பட்ட சின்னசேக்காடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குளிப்பது, துணி துவைப்பது போன்ற நீரை தெருவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாயில் விடுகின்றனர். கழிவுநீரை தங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள செப்டிங் டேங்கில் தேக்கி, லாரி மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். இங்குள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் தேங்காமல் இருக்க ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர்கள் மூலம் மழைநீர் கால்வாயை தூர்வாரி சீரமைப்பது வழக்கம். ஆனால், கடந்த பல மாதங்களாக இங்குள்ள சுமார் 42 மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதோடு, தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது.குறிப்பாக ராஜீ தெருவில் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்னர். இந்த பகுதியில் பள்ளி இருப்பதால் மாணவ, மாணவியர் இந்த சகதி தெருவிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் கொசு தொல்லைகள் அதிகமாகி அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கால்வாய்களை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் ஒரே நேரத்தில் பல வார்டுகளில் கான்ட்ராக்ட் எடுத்துள்ளதால் இந்த வார்டில் தூர்வாரும் பணியை சரியாக மேற்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளார். பல தெருக்களில் கால்வாய்களை தூர்வாரப்படாமல் மாதக்கணக்கில் கிடப்பில் வைத்துள்ளார். அதனால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்….

The post கால்வாய் பராமரிப்பில் அலட்சியம்; தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர், ஒப்பந்ததாரர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Tiruvotiyur ,Chinnasekkadu ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூரில் தேர்தல் பிரசார...