×

கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; கணவன் கைது மனைவிக்கு வலை

திருப்போரூர்: கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த, வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்து, அவரது மனைவியை தேடி வருகின்றனர். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், தாம்பரம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையாளர் ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி மது விலக்கு ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கேளம்பாக்கம் மற்றும் படூர் பகுதிகளில் கஞ்சா போதைப்பொருள் பழக்கம் உடைய நபர்களை பிடித்து அவர்களுக்கு யார் சப்ளை செய்கிறார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கட்டிட தொழிலாளர்கள் என்ற போர்வையில் அக்சயா பிரிதா மற்றும் அவனது மனைவி ஜமுனா ஆகியோர் ஒரிசாவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து 5 கிராம், 10 கிராம் பொட்டலங்களாக கட்டி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, போலீசார் அவரது அலைபேசி எண்ணிற்கு கஞ்சா கேட்பது போல் நடித்து வரவழைத்தனர். பின்னர், கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்த அவனை பிடித்து அவன் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டனர். அவனது வீட்டில் இருந்து 2 கிலோ 100 கிராம் காஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், கஞ்சா வியாபாரி அக்சயா பிரிதா மற்றும் கஞ்சாவையும் கேளம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரிடம் அக்சயா பிரிதா சிக்கியது தெரிந்ததும், அவனது மனைவி ஜமுனா தலைமறைவானார். அந்த பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தாம்பரம் ஆணையர் அலுவலகத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களிடம் இருந்து 95 கிலோ கஞ்சா, 25 கிராம் கொக்கைன், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 142 கிராம் மெத்தமைட்டன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்டாம்ப் வடிவிலான போதை மாத்திரைகள், 632 போதை மருந்துகள், 53 கிலோ குட்கா, 4 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …

The post கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை; கணவன் கைது மனைவிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Tirupporur ,Kelombakkam ,
× RELATED ஓஎம்ஆர் தையூர் பகுதியில் பாதுகாப்பான...