×

மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ...

கவியரசு கண்ணதாசன் கண்ணன் மீது அபாரமான பிரேம பக்தி கொண்டவர். அவர் பல பாடல்களை எழுதி இருக்கலாம். ஆனாலும் அவருடைய மனம் கவர்ந்த கிருஷ்ண கானத்திற்கு இணையாக ஒரு பாடல் தொகுப்பைச் சொல்ல முடியாது. கண்ணதாசனின் கிருஷ்ண கானத்தைக் கேட்கின்றபோது, ஆழ்வார்கள் பாசுரங்களின் தாக்கமும், ஏன் அவர்கள் சொல்லாத உவமையும்கூட, அர்த்த பாவத்தோடு ஒலிக்கும்.

அது நம் சிந்தனையில் பல அதிர்வலைகளை உண்டாக்கும். அந்தக் கருமை நிறக் கண்ணன் என்ன அருமையாக இந்தக் கவிஞரின் மனதை ஆட்கொண்டு இருக்கிறான் என்பதைத் தெரிய வைக்கும். அதைத் தெரிந்து கொண்டால் அவ்வுணர்வில் நம் மனதையும் கண்ணன் எனும் மன்னனின் காந்த புலம் கவர்ந்து இழுக்கும்.
ஆழ்வார்கள் பாசுரத்தில் ஒரு தாலாட்டுப் பாடல். தாலாட்டுப் பாடல் பாடுவதை இப்போது நாம் மறந்து விட்டோம்.

தால் ஏல் ஓ = தால் - ‘தாலு’ என்ற வடசொல் விகாரம், தாடையென்று பொருள்; ஏலே ஓ = அசைச் சொற்கள்; குழந்தைகளைத் தொட்டிலிவிட்டுப் பெண்கள்’ உளு உளு உளு ஆயீஇ!’ என்று உள்தாடையை நாவாலே ஒலித்துச் சீராட்டுதலைத் ‘தாலேலோ’ என்று வழங்குதல் மரபு. கண்ணன் சின்னக் குழந்தைதானே... அவனுக்குத் தாலாட்டு பாடாமல் இருக்க முடியுமா. கண்ணனுக்கு முதலில் தாலாட்டுப் பாடியவர், பெரியாழ்வார்.

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச்
சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!

தொட்டிலில் தூங்கும் கண்ணனுக்கு அற்புதமான தாலாட்டு. அவன் தூங்கும் தொட்டில் எத்தனை உயர்வான தொட்டில் தெரியுமா? மாணிக்கம், பொன் இவற்றால் கட்டப்பட்ட விலை உயர்ந்த தொட்டில். படைப்புக் கடவுளான நான்முகன் கொடுத்து அனுப்பிய தொட்டில். ஆயினும் கண்ணுறங்க வேண்டும் அல்லவா.

குழந்தைகள் தொட்டிலில் போட்டவுடன் தூங்காது. அழும்.
உடனே தாய் ‘‘அழாதே, அழாதே’’ என்று சொல்லி தாலாட்டு பாட்டு பாடுவாள்.
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!

சிவபிரான் மாதுளம்பூக் கோவையென்கிற அரைவடம் அனுப்பியிருக்கிறான் (அவற்றைச் சாற்றிக்கொள்) என்று சொல்லித் தாலாட்டுகிறாள். உடை என்பது வஸ்திரத்துக்கு வாசகமாயினும், இங்குத் தனி ஆகுபெயராய் இடையைக் காட்டிற்று.  தேழ்கு - அரையில் சொருகும் கத்தி. சிவன் ரிஷப வாகனனாதாலால் விடையேறு என்றும், பிரம்மனுடைய ஐந்து தலைகளிலொன்றைப் பறித்து, அக்கபாலம் கையிலொட்டிக் கொண்டதால், கபாலி என்றும், அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், ஈசத்வம், வசித்வம் என்று சொல்லப்படுகிற அஷ்ட  ஐஸ்வரியங்களையுடையனாகையாலே ஈசன் என்றும் சொல்லப்பட்டான். கனகம் என்ற வடசொல் கனம் எனக் குறைந்தது. எத்தனை அழகு இப்பாடல்களில்.
இனி அப்படியே கண்ணதாசனுக்கு வாருங்கள்...

கண்ணதாசன் தன் இஷ்ட தெய்வமான கண்ணனுக்குத் தாலாட்டு பாடுகின்றார். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அபாரமாக இருக்கும். கண்ணதாசன் எழுதியதாகத் தெரியும். நுட்பமாக பார்த்தால் கண்ணதாசனுக்கு உள்ளிருந்து கண்ணன் எழுதிக் கொண்டது புரியும். கண்ணதாசனுக்குக் கண்ணனைக் காண வேண்டுமே என்று ஆசை. அவன் அவதரித்த ஆயர்பாடிக்குச் சென்று பார்க்கிறார். அவர் போன நேரத்தில் கண்ணன் யசோதை மடியில் தூங்கிக் கொண்டிருக்கிறான். பக்கத்திலேயே ஏராளமான பசு மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பசு
மாட்டின் மடி அருகிலும், அதன் கன்றுகள் பால் குடித்து, முகம் தேய்த்து, மயங்கி, தூங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு கன்று யசோதையின் அருகில் வாஞ்சையோடு வந்து கண்ணனோடு கண்ணனாய்த் தூங்கிக் கொண்டிருக்கிறது. கண்ணதாசன் பார்க்கிறார். யசோதை மடியில் இரண்டு கன்றுகள் தூங்குகின்றனவா அல்லது இரண்டு கண்ணன்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? கண்ணனையும் கண்ணன் பக்கத்தில் கண்ணனோடு இணைந்து தூங்கும் கன்றையும் பார்க்கிறார்.

அவர் கற்பனை விரிகிறது. அதுவே
பல்லவியாய்  மலர்கிறது .
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான்
தாலேலோ’’

அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ” கண்ணன் தூங்குகின்றான். எப்படித் தூங்குகின்றான் என்று சொல்வதற்கு ஒரு உவமை வேண்டுமே. தாய்மடியில் கன்றினைப்போல் தூங்குகிறான். ஆழ்வார்களும் சொல்லாத உவமை. அற்புதமான உவமை. ஆயர்பாடி மக்களுக்கு, பசு கன்றுகள் தவிர வேறு செல்வம் எதுவும் இல்லை. குழந்தையும் கன்றுக்குட்டியும் அவர்களுக்கு ஒன்றுதான். கன்றுக் குட்டியை, குழந்தையாக நினைப்பார்கள். குழந்தையை கன்றுக்  குட்டியாக நினைப்பார்கள். இங்கே
கண்ணனை கன்றுக் குட்டியாக நினைக்கிறாள் யசோதை.

ஒருவருக்கு எது உயர்ந்த பொருளோ, அப்படி. குழந்தையையும் பாவிப்பது வழக்கம். தங்கமே... மணியே... கண்ணே... என்று அழைப்பதைப் பார்த்திருக்கலாம்..
கண்ணனுக்குக் கன்றுக் குட்டிகள் என்றாலே மிகவும் பிரியம். அவனுடைய அவதார நோக்கமே கன்றுகள் மேய்ப்பதுதான். ‘‘திவத்திலும் பசு நிரை மேய்த்தி’’ கன்றுகள் இனிது மேய்த்து உகந்த’’ என்பது ஆழ்வார்கள் பாசுரம். கண்ணன் கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். யசோதையின் மடியிலே ஒரு கன்றுக்குட்டி படுத்திருப்பதைப் போல கண்ணன் படுத்திருக்கிறான்.

அதுசரி, ஒரு குழந்தையைக் கன்று குட்டி என்று சொல்லலாமா என்று கேள்வி கேட்கலாம். ஆனால், நாம் அப்படி சொல்வதுண்டு. ஒரு குழந்தையைக்  கொஞ்சுகின்ற பொழுது ‘‘நீ என் கன்(னு)று குட்டி இல்ல” என்று சொல்வதைப் பார்த்து இருக்கலாம். மாயக் கண்ணன் தூங்குகிறான். அவன் செய்யாத மாயம் ஏதாவது இருக்கிறதா?ஆழ்வார்களுக்கு மாயன் என்கிற சொல்லிலே பெரிய ஈடுபாடு. ‘‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’’, ‘‘மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்’’, ‘‘மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே’’, ‘‘ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே’’ - இதெல்லாம் ஆழ்வார்களின் பாசுர வரிகள்.

இயல்புக்கு மாறாக இருப்பது மாயம். யாரும் செய்ய முடியாத காரியத்தைச் செய்வது மாயம். தேவாதிதேவன் ஒரு குழந்தையாகத்  தன்னை பாவித்துக்கொண்டு, ஒரு தாய் மடியிலே இருக்கிறானே, இதைவிட மாயம் என்ன இருக்க முடியும்? நம்மாழ்வார் மயங்கிய அந்த எளிமையைக் கண்டே, மாயக்கண்ணன் என்று கண்ணதாசன் மிக அழகாகச் சொல்லுகின்றார். அவன் ஏன் தூங்குகிறான் என்ற காரணத்தைச் சொல்ல வேண்டுமே.

மண்ணைச் சாப்பிட்டு விட்டானாம். அதனால் தூங்குகிறானாம்.
‘‘அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ’’
இதுவும் ஆழ்வார் பாசுர வரிதான். ‘‘உன் கண்ணன் தெரு மண்ணை வாய்நிறைய உண்டான்’’ என்று யசோதையிடம் கண்ணனைப் பற்றிப்  புகார். யசோதையிடம் சொன்னவுடனே வாயைத் திறக்கச் சொல்லு கிறாள். முதலில் அடம் பிடித்து  மறுத்தவன் வாய்திறக்க, மண் தெரியவில்லை. மண்டலங்கள் தெரிந்தன. யசோதை அதைப் பார்த்துவிட்டு மற்ற தோழிகளையும்
அழைத்துக் காட்டுகிறாள்.‘‘என்னுடைய பையன் வாயைப் பாருங்கள். இது என்ன மாயம்? இவன் என்ன பிள்ளை. இவன் வாயில் அண்ட சராசரங்கள் தெரிகிறதே!’’ என்று அச்சத்தோடு கூறுகிறாள்.

‘‘வாயுள் வையகம் கண்ட மடநல்லாள், ஆயர் புத்திரனல்ல அருந் தெய்வம்’’
என்றாள். தோழிகள், பரமாத்மாவே  இப்படி ஒரு குழந்தையாக வந்து வாய்த்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டார்கள்.
இந்த அனுபவத்தை அப்படியே கண்ணதாசன் படம் பிடித்துக்  காட்டுகிறார். அடுத்து கோபிகளிடம் அவன் செய்த லீலைகளைச் சொல்லுகின்றார். அழகான வார்த்தை பிரயோகங்கள். கண்ணன் கோபிகளிடம்  மன்னவன் போல் லீலை செய்தானாம். அப்படி ஒரு இனிமையான அனுபவம். அப்படி ஒரு லீலா வினோதம். எங்காவது பார்த்திருக்க முடியுமா?‘‘பின்னலை பின் நின்று இழுப்பான்’’ என்ற பாரதி அனுபவம், வேறு கோணத்தில் இங்கே பளிச்சிடுகிறது.

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க
மயக்கத்திலே இவனுறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

கிருஷ்ணன் என்றாலே லீலைதானே... அதுவும் கோபியர்கள்... செல்வச் சிறுமீர்காள்... பகவான் பாகவதனிடத்திலே மயங்குகிறான். பாகவதன் பகவானிடத்திலே மயங்குகிறான். ஜீவன் பரமாத்மா
விடம் மயங்குகிறது. பரமாத்மா ஜீவனிடம் மயங்குகிறது. இந்த ரஸாநுபாவத்தைப் பாடாதவர்கள் யார்?ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகிய இருவரும் உறங்கும்போது இந்த மண்டலமே உறங்குகிறது. அடுத்த சரணத்தில் காளிங்க நர்த்தனத்தை அழகாகச் சொல்லுகிறார்.

‘‘ஆடலைக்காண தில்லை அம்பலத்து இறைவனும் தன் ஆடலை விட்டு இங்கு கோகுலம் வந்தான்’’ என்று காளிங்க நர்த்தனத்தை ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் ஜதி சொல்லி வர்ணிப்பார். அஞ்சன பணத்தின்மீது ஆட வந்தவன் ஆடிவிட்ட களைப்பில்  தூங்குகிறான் என்பது கண்ணதாசன் காட்டும் காட்சி.ஆழ்வார்கள், ‘‘நீ உலகை எல்லாம் அளந்தாய்! காடுகள் எல்லாம் நடந்தாய்! இந்த உலகத்தையே தூக்கினாய்! அதனால் ஓய்வெடுக்கிறாயா?’’ என்று தான் பாடி இருக்கிறார்களே, தவிர பாம்பின் மீது நடனம் ஆடிவிட்டு கால்கள் வலிக்க தூங்கிக்கொண்டு இருக்கிறான் என்று பாடவில்லை.

ஆனால், கண்ணதாசன் அதைப் பாடுகிறார்.அது சரி, அவன் நிஜமாகத் தூங்குகிறானா? விழித்திருக்கிறானா? தூங்குவது போல் நடிக்கிறானா? ‘‘உறங்குவான் போலே செய்யும் பெருமாள்’’ என்கிறார்கள், ஆழ்வார்கள். அதை கண்ணதாசன் சொல்கிறார். அந்த மோனநிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்க விட்டார்? தாலேலோ  கிருஷ்ணாவதாரத்தில் அவன் தூங்கவே இல்லையாம். பிறந்ததிலிருந்து அவனுக்கு வந்தது ஆபத்து. அவனை தூங்கவிடாமல் செய்ததோ?
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ
அவன் மோகநிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்யாரவனைத் தூங்க விட்டார்? ஆராரோ

‘‘ஐயோ! அப்படியே தூங்கி கொண்டிருக்க முடியுமா? பதட்டம். ஒரே பாட்டில்  தாலாட்டு. அதே பாட்டில திருப்பள்ளிஎழுச்சி. இது வேறு யாரும் செய்யாத ஒரு விஷயம். ஒன்று தாலாட்டு இருக்கும். இல்லாவிட்டால் திருப்பள்ளியெழுச்சி இருக்கும். இரண்டும் ஒரே பாட்டில். ஏன் தாலாட்டு பாடிவிட்டு அவசரமாக திருப்பள்ளி
யெழுச்சி பாட வேண்டும்? இதோ அவர் பதில்....

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்கும்
போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ

கண்ணனிடத்திலே வேறு என்னவெல்லாம் பெற முடியும் அல்லது எதைப் பெற வேண்டும்  என்ற பாவத்தை அப்படியே காண்பிக்கிறார். இரண்டு விஷயங்கள்தான். தன்னையே விரும்பி தன்னைத் தவிர வேறொன்றையும் விரும்பாதவரை நான் மகாத்மா என்பேன் என்பது கண்ணன் கீதை வாக்கு.கோபியர்கள் எதையும் கேட்க வந்தவர்கள் அல்ல . யாரையும் விட உயர்ந்த பக்தி யோகம் பயின்றவர்கள். “தைல தாரை” போன்றது அவர்கள் பக்தி. ரிஷிகளுக்கும் கைவராத யோகம் இது. அதனால்தான் அவர்களை, ‘‘செல்வச் சிறுமீர்காள்’’ என்று சொல்கிறாள், ஆண்டாள்.

அவர்களுக்குக் கண்ணன் தருகின்ற எதுவுமே வேண்டியதில்லை. ஐஸ்வர்யங்கள் வேண்டியதில்லை. என்ன காரணம்?

அவனே ஐஸ்வர்யம்தான். நீங்காத செல்வம்தான். கண்ணனை அடைந்துவிட்டால் எல்லாம் கிடைத்தது போலத்தான். அவன் கிடைக்கவில்லை என்றால் என்ன இருந்தும் எதுவுமே கிடைக்காதது போலத் தான் என்று உணர்ந்தவர்கள் அவர்கள்.இந்த கிருஷ்ணபக்திதான் கண்ணதாசன். கண்ணதாசன் இப்படி ஒரு பாட்டு எழுதி இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியமில்லை. காரணம் அவர் கண்ணதாசன். கண்ணனுக்கு தாசன். தாசர்களால் இப்படித்தான் எழுத முடியும்.

பேராசிரியர் எஸ். கோகுலாச்சாரி

Tags : Mayak Kannan ,Talelo ,
× RELATED உறியடி உற்சவம் – தெய்வீக உற்சாகம்!