×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!


366. ரோஹிதாய நமஹ (Rohithaaya manaha)

(திருநாமங்கள் 362 முதல் 385 வரை - திருமகளின் கேள்வனாக இருக்கும் தன்மை)திருவிண்ணகரம் எனப்படும் உப்பிலியப்பன் கோவில் 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்றாகும். அங்கே தவம் புரிந்த மார்க்கண்டேய முனிவருக்கு மகளாகப் பூமிதேவி அவதரித்தாள். திருமால் அந்தத் திருத்தலத்தில் வந்து அவதரித்துப் பூமிதேவியை மணந்து கொண்டார். அப்போது இளம்பெண்ணாக இருந்த பூமிதேவிக்கு உணவில் சரியான அளவு உப்பு போட்டுச் சமைக்கத் தெரியாது என்று மார்க்கண்டேயர் சொன்னதால், “இனி இத்தலத்தில் உப்பில்லாத பண்டங்களையே நான் அமுது செய்வேன்!” என்று சபதம் செய்தார் திருமால். அதனால் உப்பிலியப்பன் (உப்பில்லாத பண்டங்களை அமுது செய்யும் பெருமாள்) என்றே பெயர்பெற்றார்.

அந்த உப்பிலியப்பனுக்கு நிவாசன் என்று மற்றொரு பெயரும் உண்டு. திருமாலுக்கு தேவி, பூதேவி என இரு முக்கிய தேவிகள் உண்டு. அவர்களுள் பூதேவியைத் தானே உப்பிலியப்பன் மணந்து கொண்டிருக்கிறார்? அப்படியானால் அவர் பூநிவாசன் என்று தானே அழைக்கப்பட வேண்டும்? ஏன் நிவாசன் என்று அழைக்கப்படுகிறார்? அதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளதாக ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்ற நூலில் தெரிவிக்கிறார்.

சீதா கல்யாணத்தின் போது, சீதைக்கு அலங்காரம் செய்த பெண்கள் அத்தனை பேரும் சீதையின் அழகைக் கண்டு மயங்கியதாகக் கம்பன் பாடுகிறான்.
இன்னொரு பெண்ணின் அழகு என்பது ஓரளவுக்கு உட்பட்டு இருந்தால் தான், மற்ற பெண்கள் பொறாமைப் பட வாய்ப்புண்டு. ஆனால் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகாலட்சுமியின் அழகைப் பார்த்தவாறே, அந்த பெண்களுக்குப் பொறாமை வரவில்லையாம். மாறாக மயக்கம் தான் ஏற்பட்டதாம். இதோ கம்பனின் பாடல்:

“கஞ்சத்துக் களிக்கும் இன்தேன்சொல் கவர்ந்துணும் வண்டுபோல
அஞ்சொற்கள் கிள்ளைக்கெல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தஞ்சொற்கள் குழறித் தந்தம் தகைதடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனமென்பதொன்றே அன்றோ”

வண்டுகள் மலர்களில் இருந்து தேனைப் பருகுவது போல், அலங்காரம் செய்ய வந்த பெண்கள் சீதை என்னும் மலரில் உள்ள அழகென்னும் தேனைப் பருகத் தொடங்கினார்கள். இப்படிப் பெண்களும் மயங்குவது சாத்தியமா என்றால், கம்பன் அதற்கும் பதில் சொல்கிறான். ஆணோ பெண்ணோ உடல்தான் வேறு, மனம் என்பது எல்லோர்க்கும் ஒன்று தானே! இந்த அழகைப் பார்த்தால் எம்மனமும் மயங்கத்தான் செய்யும் என்கிறான். இது உயர்ந்த கலைக்கண்ணோட்டத்தோடு கண்டு ரசிக்க வேண்டிய கவிநயம் பொருந்திய பாடலாகும்.

அதுபோலத் தான் உப்பிலியப்பன் கோவிலில் அவதரித்த பூமிதேவியும் பேரழகியாகத் திகழ்கிறாள். அவளது அழகைக் கண்டு மகாலட்சுமியே மயங்கினாளாம். தனது சகோதரியான பூதேவியை ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று தேவி (மகாலட்சுமி) விரும்பினாள். அதற்கு என்ன வழி என்று சிந்தித்தாள் தேவி. உப்பிலியப்பனின் திருமார்பில் தேவி அமர்ந்து கொண்டால், உப்பிலியப்பன் எப்போது பூதேவியை அணைத்துக் கொண்டாலும், மார்பிலுள்ள தேவியும் அப்படியே அவரோடு சேர்ந்து பூதேவியை அணைத்துக் கொள்ளலாம் அல்லவா? அதனால் தேவி உப்பிலியப்பனின் திருமார்பில் அமர்ந்தாள். இப்படி தேவியைத் திருமார்பில் கொண்டதால், நிவாசன் என்று உப்பிலியப்பன் பெயர் பெற்றார்.
இக்கருத்தைச் சொல்லும் விதமாக வில்லூர் நிதி சுவாமிகள்

அருளிய சிருங்கார ரசம் நிறைந்த ஸ்லோகம்:
“மாத: ந கேவலம் அஸௌ உரஸி த்வதீயே
பேஜே ரதிம் கடின பீட குசாபிராமே
ஏஷா ரமாபி ரமணோரஸி வாஸம் ஏதி
தத் தாத்ருச த்வத் உரஸ: பரிரம்பணேச்சு:”

(இறைவனுக்கும் இறைவிக்கும் நடக்கும் இந்த தெய்வீக சிருங்காரச் சுவையை நம் உலகியல் சிருங்காரத்தோடு பொருத்திப் பார்ப்பது தவறாகும். நம் மனதைத் தூய்மையாக்கி, பக்தியை வளர்த்து, உலகியல் பற்றுகளைப் போக்கவல்ல சிருங்காரம் இது.)உப்பிலியப்பன் உற்சவ மூர்த்தியின் திருமார்பில் பொன்நிறம் கொண்ட தேவி வந்து அமர்ந்த படியால், அவளது பொன்நிற ஒளியின் பிரதிபலிப்பு பட்டு, அதனால் பொன்போல் சிவந்தார் உற்சவர். பொதுவாகத் திருமால் கருநீல வண்ணம் கொண்டவர் தான். ஆனால் அன்னையின் ஒளியின் பிரதிபலிப்புப் பட்டுப் பொன்போல் மிளிரத் தொடங்கினார். அதனால் தான் உப்பிலியப்பன் கோவில் உற்சவர் ‘பொன்னப்பன்’ என்றே பெயர் பெற்றார். நம்மாழ்வாரும்,

“பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன்மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்”
என்று பாடுகிறார்.

இவ்வாறு திருமார்பில் உள்ள மகாலட்சுமியின் பொன்நிற ஒளிபட்டு, பொன்போல் சிவந்து விளங்குவதால், ‘ரோஹித:’ என்று திருமால் அழைக்கப் படுகிறார். ‘ரோஹித:’ என்றால் சிவந்திருப்பவர் என்று பொருள். இக்காலத்தில் ரோஹித் என்று சூட்டப்படும் பெயர்களெல்லாம் இதன் திரிபே ஆகும். ‘ரோஹித:’ என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 366-வது திருநாமம்.“ரோஹிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பொன்போன்ற மனத்துடன் பொன்மனச் செம்மல்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

367. மார்காய நமஹ (Margaaya namaha)
1971-ம் வருடம். அடியேனின் குருவான டாக்டர் .உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி பொறியியல் படிப்பு முடித்திருந்த சமயம். மத்திய அரசில் பொறியாளர் பதவிக்கான தேர்வு அப்போது நடைபெற்றது. அந்தத் தேர்வை எழுதிய கருணாகராச்சாரியார், தேர்வு முடிவுக்காகக் காத்திருந்தார்.அப்போது பாரத தேசத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வந்து விட்டது. அதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் மேலும் கால தாமதம் ஏற்பட்டது. தேர்வு முடிவு வராமல் மத்திய அரசு வேலை கிடைப்பது தாமதம் ஆக, குடும்பத்தின் வறுமைச் சூழல் மேலும் மோசமாகிக் கொண்டே போனது.

இன்றைய சட்டீஸ்கார் மாநிலத்தில் உள்ள பிலாயில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நேர்முகத் தேர்வுக்குச் சென்றார் கருணாகராச்சாரியார். ஆனால் அவர் குடுமி வைத்துக் கொண்டு திருமண் அணிந்திருப்பதைக் காரணம் காட்டிய அந்த நிறுவனத்தினர், அவற்றை அகற்றி விட்டு வந்தால் பணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினர். பெரியோர்களின் வழக்கத்தை மீறிப் பணியில் சேர்வதை விரும்பாமல் அங்கிருந்து புறப்பட்டார் கருணாகராச்சாரியார்.

சென்னைக்குத் திரும்பும் வழியில் ஐதராபாத்துக்கு அருகில் உள்ள சிலுக்கூர் விஸா பாலாஜி கோவிலுக்குச் சென்றார் கருணாகராச்சாரியார். அப்போது அங்கே கிருஷ்ண ஜயந்தி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. விஸா பாலாஜி பெருமாளுக்கு முன்னே நின்ற கருணாகராச்சாரியார், “இறைவா! எனது எதிர்காலமே கேள்விக் குறியாகி விட்டது! என் தந்தையின் ஆணைப்படி குடுமியும் திருமண்ணும் தரித்தால் எனக்கு வேலை கிடைக்காதா? நீ தான் எனக்கு நல்வழி காட்ட வேண்டும்!” என்று வேண்டி, கதறி அழுது அப்படியே தரையில் அமர்ந்துவிட்டார்.
அப்போது அவரைத் தேற்றிய அர்ச்சகர், “பெருமாளுக்கு ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய். எல்லாம் சரியாகி விடும்!” என்று சொல்லி, அப்போதே ஒரு விஷ்ணு ஸஹஸ்ரநாம அர்ச்சனையைச் செய்தார். அதன்பின் கோவிலிலேயே அமர்ந்து மத் பாகவத புராண பாராயணமும் செய்தார் கருணாகராச்சாரியார் சுவாமிகள்.

பாராயணம் முடிந்தபின் அர்ச்சகர், “கருணாகரா! கவலைப் படாதே! அடியார்களால் பலவிதமான பலன்களுக்காகப் பெருமாள் நாடப்படுகிறார். அந்தந்தப் பலன்களை அவரவர்க்குத் தரவும் செய்கிறார். திரௌபதி புடவை கேட்டாள், கண்ணன் கொடுத்தான். பாண்டவர்கள் ராஜ்ஜியம் கேட்டார்கள், கண்ணன் கொடுத்தான். விபீஷணன் கைங்கர்யத்தைக் கேட்டான், ராமன் கொடுத்தான். காகாசுரன் உயிர்பிச்சை கேட்டான், ராமன் கொடுத்தான். பிரகலாதன் பக்தியைக் கேட்டான், நரசிம்மன் கொடுத்தான். இந்திரன் தேவலோகப் பதவியைக் கேட்டான், வாமனன் கொடுத்தான். நீயும் நாடினால், உனக்குத் தேவையான வேலையை அவன் கொடுக்க மாட்டானா?” என்று சொல்லித் தேற்றினார்.

அதனால் மனவலிமை பெற்ற கருணாகராச்சாரியார் மறுநாள் காலை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நடந்த ஒரு நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். விஸா பாலாஜியின் அருளால் அங்கே அவருக்கு வேலை கிடைத்து விட்டது. வேலை கிடைத்ததோடு மட்டுமின்றி, ஐதராபாத்திலேயே தங்கி, மாலை வேளைகளில் விஸா பாலாஜி பெருமாளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தையும் அப்பெருமாள் அருளிவிட்டார்.

இவை மட்டுமா? விரைவில் போர் முடிந்தது. நிலுவையில் இருந்த மத்திய அரசுப் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அதே ஐதராபாத்தில் ஜியோலஜிக்கல் ஸர்வே ஆஃப் இந்தியாவில் கருணாகராச்சாரியார் சுவாமிகளுக்கு மத்திய அரசுப் பொறியாளர் பணி கிடைத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் ஐதராபாத்தில் தங்கி இருந்து தனக்குப் பேரருள் புரிந்த விஸா பாலாஜிக்குப் பல கைங்கர்யங்கள் செய்து வந்தார் கருணாகராச்சாரியார்.

இப்படி அடியார்கள் என்ன வரத்தை வேண்டி வந்தாலும், அவற்றைக் குறைவில்லாமல் அருளி விடுகிறார் திருமால். தாங்கள் வேண்டும் வரங்களைப் பெறுவதற்காக அடியார்களால் நாடப்படுவதால் திருமால் ‘மார்க:’ என்று அழைக்கப்படுகிறார். ‘மார்க:’ என்றால் நாடப்படுபவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 367-வது திருநாமம்.“மார்காய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நாடிய பொருள்கள் கைகூடும்.

368. ஹேதவே நமஹ (Hethave namaha)

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார். காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.
ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன். நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி, உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!” என்றார்.

“நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது. எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும். நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள். எனவே நான் தோல்வி
அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும் நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!” என்று விடையளித்தார்.

வாதம் தொடங்கியது. மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம் பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது. யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர். பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில், யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை. “நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.

தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.
மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார். அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே, யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார். “சுவாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார்.

அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது. நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன். ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!” என்று கூறினார். அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன். அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர். இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன். காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!” என்று கூறினார்.

தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி, அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,
எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.

அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால். ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம். ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம். அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும் குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள்புரிவார்.

369. தாமோதராய நமஹ (Dhaamodharaaya namaha)

மத் அகோபில மடத்தின் 42-வது பீடாதிபதியான மத் இஞ்சிமேட்டு அழகிய சிங்கரிடம் வந்த ஒரு சீடர், “ஆழ்வார் ஏன் தவறாகப் பாடி விட்டார்?” என்று கேட்டார். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார் அழகிய சிங்கர். “ஆம்! நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் முதல் பத்து, மூன்றாம் பதிகத்தின் முதல் பாடல்,

“பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம்
அரும்பெறல் அடிகள்
மத்துறு கடைவெண்ணெய் களவினில்
உரவிடை ஆப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே?”

இப்பாடலில் கண்ணன் உரவிடை உரலோடு ஆப்புண்டான் என்று ஆழ்வார் பாடி இருக்கிறார். உரம் என்றால் மார்பு. யசோதை கண்ணனின் மார்பில் கயிற்றைச் சுற்றி உரலோடு கட்டிப் போட்டதாகத் தானே இதற்குப் பொருள் வரும்? ஆனால் உண்மையில் யசோதை கண்ணனின் இடுப்பில் தானே கயிற்றைச் சுற்றினாள்? ஏன் ஆழ்வார் தவறாகப் பாடினார்?” என்று கேட்டார் சீடர்.“தெரியவில்லை! பார்த்துத் தான் சொல்ல வேண்டும்!” என்று பதில் அளித்தார் அழகிய சிங்கர். அந்தச் சீடரும் மடத்திலிருந்து தன் வீடு நோக்கிப் புறப்பட்டார். அப்போது அந்தச் சீடரின் நண்பர் ஒருவர், “நீங்கள் குருவிடம் கேள்வி கேட்ட முறை சரியில்லை.

அதனால் தான் அவர் தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார். ஆசாரியர்களிடம் நாம் ஐயங்களை விண்ணப்பிக்கும் போது பணிவோடு விண்ணப்பிக்க வேண்டும் அல்லவா? திருமாலாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார் எங்காவது தவறாகப் பாடுவாரா? ஒரு விஷயம் நமக்குப் புரியவில்லை என்பதாலேயே அதைத் தவறு எனலாமா? நீங்கள் கேட்ட கேள்வியைச் சற்றே பணிவோடு குருவிடம் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்.

சீடர் மீண்டும் அழகிய சிங்கரிடம் வந்து, அவரை விழுந்து நமஸ்கரித்து, “சுவாமி! அடியேனை மன்னித்தருள வேண்டும். உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதன் காரணம் அடியேனின் சிற்றறிவுக்குப் புரியவில்லை. தேவரீர் கருணையோடு விளக்கம் கூறி அருள வேண்டும்!” என்று கோரினார்.அப்போது இஞ்சிமேட்டு அழகிய சிங்கர், “யசோதை கண்ணனின் இடுப்பில் தான் கயிற்றைச் சுற்றி அவனை உரலோடு கட்டினாள். ஆனால் உரவிடை ஆப்புண்டு என்று ஆழ்வார் பாடியதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. உதரம் என்றால் வயிறு. உதரவிடை என்பது இடைக்குறையாக உரவிடை என்று பாடலின் அமைப்புக்காக மாறி இருக்கிறது.

2. உரம் என்றே வைத்துக் கொண்டால், மார்போடு கட்டுண்டான் என்று பொருள்படும். அதிலும் ஒரு ரகசியம் உள்ளது. திருமால் பக்தர்களுக்குக் கட்டுப்படும் போது, தான் மட்டும் தனியாகக் கட்டுப்படுவதில்லை. தன் மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுப் படுகிறான். கண்ணனின் திருமார்பில் எப்போதும் இருக்கிறாள் அல்லவா மகாலட்சுமி? யசோதை கண்ணனைக் கட்டிய போது மகாலட்சுமி என்ன செய்து கொண்டிருந்தாள்? அவளும் கண்ணனோடு சேர்ந்து அந்த உரலுடன் கட்டுண்டு கிடந்தாள்.

இப்படிப் பெருமாளும் தாயாரும் இணைந்து பக்தர்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பதை நமக்கு உணர்த்தவே, உரவிடை ஆப்புண்டு - மார்புடன் கட்டுண்டான் - மார்பில் உள்ள மகாலட்சுமியோடு சேர்ந்து கட்டுண்டான் என்று ஆழ்வார் பாடியுள்ளார்!” என விளக்கினார்.இந்த விளக்கத்தைக் கேட்டவாறே, பரவசம் அடைந்த அந்த சீடர்,  கண்ணனின் கருணையையும் குருவின் ஞானத்தையும் எண்ணி வியந்து, அழகிய சிங்கரின் திருவடிகளில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டு, அறிவுரை சொன்ன நண்பருக்கும் நன்றி தெரிவித்து விட்டு மடத்தில் இருந்து புறப்பட்டார்.
தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு. வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்டதால் கண்ணன் ‘தாமோதரன்’ என்று அழைக்கப்படுகிறான். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 369-வது திருநாமமாக அமைந்துள்ளது.“தாமோதராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பக்திக்கும் கண்ணன் கட்டுப்படுவான்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்


Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!