மதுரம் தெளித்த மதுரை

வரலாறும் சமயமும் இணைகின்ற ஒரு கதை அல்லது பதிவு மதுரை என்னும் துவாத சாந்தப் பெருவெளியில் நடக்கும் சிவ சக்தி ஐக்கியம். பெண் ஆதிக்கம் குறைந்து ஆணின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்டு சரிநிகர் சமானமாக காட்டப்பட்ட நிகழ்வு மீனாட்சி திருக்கல்யாணம். மதுரையில் பள்ளியறை பூஜைதான் முக்கியமானது. அந்த பூஜைக்கு சொக்கர் இருக்க வேண்டும் என்பதால் அவர் இரவில் கோயிலுக்குள் வந்துவிடுவார். சொக்கர் ராத்தங்கார் என்ற சொலவடையின் பொருளை இப்போது உணர முடியும்.

இந்த பூஜை பிரபஞ்சத்தின் சிவசக்தி ஐக்கியம் நடைபெறும் இடம் மதுரை என்பதை குறியீடாக விளக்குகிறதுமூலாதாரத்தை தொடக்கமாகக் கொண்டு தொடங்கும் பயணம் சஹஸ்ராரத்தை அடையும்போது நிறைவு பெறுகிறது. சகஸ்ராரகமலம் என்பது ஆயிரம் இதழ்களைக் கொண்டதாக குறியீட்டு விளக்கம் கொள்கிறது. இதுவே சக்கரம் ஆகவும் போற்றப்படுகிறது. மூலாதாரத்திலிருந்து எழுப்பப்படும் தேவிசகஸ்ராரத்தில் சித் சக்கர மண்டபத்தில் பூரணம் ஆகிறாள். அவ்விடத்தை அடைந்ததும் அமுதம் மழையாகப் பொழிகிறது அமுதத்தை அதன் பிரவாகத்தை அல்லது பொழிவை அவள் துணையின்றி தாங்கிக் கொள்ள இயலாது.

72000 நாடிகளிலும் பிரவேசிக்கும் இந்த அமுதப் பொழிவு அபிராமிபட்டரின் அகக் கண்களுக்கு நிலவொளி போலத் தோன்றியது. பின்பு, அவளே பிரசன்னமாகி பொழிவின் வேகத்தைத் தணிவித்தாள். அமாவாசை அன்று பவுர்ணமி என அபிராமிபட்டர் கூறியது திதியை அன்று; அம்பிகையைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார். எனவே, அமுதமழை போல் உணரச் செய்யும். அவளை அம்ருதவர்ஷினி என்பர். இதுவே தேவியின் குலாம்ருதம் ஆகும். குண்டலினி சக்தி தேவி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இத்தேவி மூலாதாரத்தில் சுருண்டு உறங்கும் பாம்பாகப் பெருமூச்சுவிட்டு கொண்டிருப்பாள். இவள் நிலையாக ஓரிடத்தில் கிடைப்பதால் ‘நிலையா’ என்றும் குறிக்கப் பெறுவாள்.

கன்னிப் பெண்ணின் பெருமூச்சு இல்லத்துக்கு இழிவைத் தரும் என்பது, குண்டலினி எழுப்பப் படாமல் இருப்பதையே குறிக்கின்றது.சமய சாரம் என்பது சமய நெறியில் அமைந்த ஒழுக்கம் அல்லது நடைமுறையில் குறிப்பிடும். சமயாசாரம் என்பது மூலாதாரத்தில் உறங்கும் சக்தியையும் மேலேற்றி உடம்பின் ஆறு ஆதாரங்களிலும் மானசீகமாகத் தியானிப்பதைக் குறிக்கும். தேவியின் பிறந்த வீடு மூலாதாரம் என்றால் புகுந்த வீடு சகஸ்ராரம் ஆகும். சீறிக் கொண்டிருந்த குண்டலினி சாந்தி தன் புகுந்த வீடான சகஸ்ராரத்தை அடைந்ததும் ‘சாந்தி’ அடைகிறாள். சமயாசாரத்தை பேரின்பம் ஆக உணர்த்துவதற்கு சிற்றின்ப உத்தி முறையினால் பெரியோர் எளியோருக்கு விளக்குகின்றனர். அதாவது குண்டலினியை (தேவியை) சுருண்டு உறங்கிக் கிடக்கும் நிலையிலிருந்து எழுப்பி சுவாதிட்டானத்தைக் கடந்து மணிபூரகத்துக்கு அழைத்து வந்து ஆடை ஆபரண அலங்காரங்கள் செய்து சிம்மாசனத்தில் இருத்தி பூஜைகள் செய்து ஆக்ஞா சக்கரத்திற்கு அழைத்து வந்து நீராடி மகிழ்ந்து சகஸ்ராரத்தில் சாந்தி செய்வதை ‘சமய ரகசியம்’ என்றனர்.

குண்டலினி சக்தியை பெண்ணாகப் படைத்த தேவியாக பாவனை செய்தது அதை ஒரு குறியீடாகக் கொண்டு விளக்கினர். மதுரை மாநகர் என்ற திருத்தலம் தேவிக்கு சாந்தி செய்வித்த துவாத சாந்தப் பெருநகரம் ஆகும். எங்கு குண்டலினி ஆகிய தேவி ஒன்று சேர்வதால் மீனாட்சியம்மன் ஆலயத்தில் பள்ளியறை உற்சவம் தினமும் மிக விசேஷமாக நடைபெறுகிறது. தமிழ் ஆச்சார ரகசியத்தை புலப்படுத்தும் சடங்கியல் முறையாகும். மனிதகுல வரலாற்றில் தாய் ஆதிக்கம் ஆட்சிமுறை முற்றுப்பெற்று ஆண் ஆதிக்க ஆட்சிமுறையைத்  தோன்றியதன் வரலாறாக திருக்கல்யாணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்யாணத்திற்குப்  பிறகு நடக்கும் பள்ளியறை உற்சவம் சமயாச்சார முறையில் சகஸ்ரார சங்கமமாகும். இப்பூசையில்  வரலாறும் சமயமும் ஒன்றிணைவதைக் காணலாம். இப்பள்ளியறை உற்சவத்தை  சமய ஆச்சார ரகசியத்தை புலப்படுத்தும் பாவனை சடங்காகக் (Imitative ritual) கொள்ளலாம்.   

மீனாட்சி திருக்கல்யாணம் என்பது பிரபஞ்சத்தின் குண்டலினி விஷயம். மதுரையில் (மதுரமாக  அமுதமாக) மாறிய நிகழ்வை குறிக்கின்றது. மதுரையில் மதுரத்தை தெளித்தார் என்று கதை கூறுவதும், இதனால் மதுரைக்கு மதுரை என்று பெயர் வந்தது என்பதும் மதுரப் பொழிவினைக் குறிப்பிடும் பரிபாஷை முறையாகும். மதுரமாக மாறிய நிகழ்ச்சி நடைபெறும் இடம் ‘துவாத சாந்தப் பெருவெளி’ எனப்பட்டது. இவரை குமரகுருபரர் தனது மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில்

‘துவாத சாந்தப் பெருவெளியில்

துரியம் கடந்த பரநாத

மூலத் தலத்து உழைத்த முழுமுதலே’

- என்று மீனாட்சி அம்மையைப்

போற்றுகிறார்.

மதுரையில் நடைபெறும் சிவசக்தி இணைப்பு இவ்வுரை தன் அருளால் நினைக்கின்றது. எனவே, மதுரை என்ற பெயர் மதுரம் என்ற அதன் அடிப்படையில் தோன்றிய காரணப் பெயராக கொள்ளலாம். மருத மரங்கள் நிறைந்திருந்த பகுதி என்பதால் மருதை என்று அழைக்கப்பட்ட இவ்வூர்  சமயாச்சாரம் காரணமாக  மதுரப்பொழிவை முன்னிறுத்தி மதுரை என மாற்றம் பெறுகிறது. இரண்டு பெயர்களுக்கும் தனித்தனி காரணங்கள் உள்ளன.

வைபவம் என்பது பழமைவாதிகளின் கற்பனையில் உதித்த கட்டுக்கதை அல்ல. அமுதப் பிரவாகம் பற்றிய ஓர் குறியீட்டு கதை அல்லது ஆன்மிகப் பதிவு. பிரபஞ்சத்தின் அமுதப் பிரவாகம் நடைபெறும் இடம் என்பதை குறிக்கும் ஆன்மீகப் பதிவு. இவ்விடத்தில் வரலாற்று நிகழ்வும் ஆன்மிக நிகழ்வும் இணைந்துள்ளதை கூர்ந்து நோக்கி உணர்ந்து கொள்ளலாம். அறிவியலில் தங்கத்தை AU என்றும் தண்ணீரை CO2 என்றும் குறிப்பிடுவர்.  அதுபோல பிரபஞ்ச ரகசியத்தை லௌகீக ரகசியமாக மாற்றி குறியீட்டு வடிவத்தில் தெய்வத் திருமணத் திருவிளையாடலாக மாற்றி அமைத்து வரலாற்றில் மறக்கப் படாமலிருக்க கதை ஆக்கியுள்ளனர்.

சிவசக்தி ஐக்கியத்தை அபிராமிபட்டர்

பின்வருமாறு போற்றுகிறார்

‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்

அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும்செல்லும்

தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே’

சொல்லும் பொருளும் என இணைந்த சிவசக்தியை அர்த்தநாரீஸ்வரராக கருதும் போக்கு விபரீதமானதோ விஞ்ஞான ஆதாரமற்ற கற்பனையோ அல்ல. குண்டலினி சகஸ்ராரத்தில் பரிபூரணம் அடைந்து அடைவதைக் குறிக்கும். இரண்டற்ற ஒரே முழுமையான நிலை. இதுவே பரிபூரண நிலை. மகாகவி காளிதாசரின் சிவசக்தி ஐக்கிய ரகசியத்தை ரகுவம்ச காவியத்தின்  

மங்கள ஸ்லோகத்தில்

‘வாக் அர்த்தாவிவ சம்ப்ருக்தென,

வாக் அர்த்த பிரதிபத்தயே,

ஜனதா! பிதரெள வந்தே

பார்வதி பரமேஸ்வரௌ’

 - என்கிறார்.

மீனாட்சி தேவி குண்டலினி தேவியாக இருக்கிறாள். மூலாதாரத்தை விட்டுப் புறப்படுவது திக்விஜயம் ஆகும். இவ்வாறு படிப்படியாகப் பொருத்திப் பார்த்து ரகசிய விளக்கத்தைத் தெளியலாம். இறைவனை நேருக்குநேர் சந்தித்து பொருதுவது சகஸ்ரதல திறப்பாகும். திருக்கல்யாணம் சாந்தி நிலை. இதுவே அமுதைப் பொழியும் நிலை.   பிரபஞ்சத்தின் அமுதம் சிந்தும் இடம் மதுரை மாநகர் என்பதற்கு காரணம் பிரபஞ்சத்தின் சிரஸாக விளங்குவது மதுரை மாநகராகும்.   

சக்தியின் ஐயும் கிலியும் சௌவும் என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் மூன்றாவது எழுத்தான சவ்வும் என்பது சிரசில்தான் தோன்றும். இந்த ‘சௌவும்’ சந்திரனைப் போன்ற வெண்மையான ஒளியைக் குறிக்கின்றது. சிரசில் தோன்றும் வெண்மையான ஒளி மதுரம் தெளித்தல் எனப்படுகிறது. இது ஒரு ஊர் அனுபவிக்கும் சந்தோஷப் பரவசம் அல்லது பேரின்பப் பரவசம் ஆகும். இந்தப் பரவச நிலையை ஒரு தனிநபர் அனுபவிக்கும் போது அவருடைய அகக் கண்களுக்குத் தெரிகின்ற சிரசிலிருந்து பொழியும் வெண்மையான ஒளி அமுதைப் பொழியும் நிலவு போலத் தோன்று

கிறது. இதைத்தான் அபிராமி பட்டர் உணருகிறார். மன்னர் வந்து கேட்ட சமயத்தில் அவர் பவுர்ணமி என்று தெரிவித்தது அவர் உணர்ந்து கொண்டு இருந்த அமுத பொழிவைத்தான். வானத்தில் தோன்றும் சந்திரனை அல்ல.

இந்து சமயப் புராணங்கள் பிரச்சார இலக்கியங்களாக மடைமாற்ற பதிவுகளாக இருப்பதைப் போலவே பிரபஞ்ச ரகசியத்தை வேறு வடிவில் விளக்குகின்ற குறியீடுகளாகவும்    விளங்குகின்றன. பிரபஞ்ச ரகசியத்தை மானுடக் கதை வடிவங்களாகவும் தம்முள் கொண்டுள்ளன. புராணக் கதைகளுக்குள் பிரபஞ்ச ரகசியம் பொதிந்துள்ள விபரத்தை இளைஞர்களுக்கு விளக்கிக் கூறினால் இந்து சமயத்தின் தத்துவக் கோட்பாடுகளை அவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலும். மூட நம்பிக்கைகளை வளர்க்கும் வெறும் கதைகளாக மட்டுமே அவற்றை எடுத்துச் சொல்வதால் அவர்களின் சிந்தனாசக்தி மழுங்கிப் போகும்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories:

>