×
Saravana Stores

காங்கயம் சுற்று வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் உழவு பணி தீவிரம்

காங்கயம் : காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உழவு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.காங்கயம், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை கட்டிலும் நடப்பாண்டில் முன்கூட்டியே மழை பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கொள்ளு, நரிப்பயறு, சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து உழவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இவற்றில் சோளம், நரிப்பயறு, கொள்ளு ஆகியவை அடுத்த போகம் விதைப்பு செய்ய விதைக்காக அறுவடை செய்தது போக, அப்படியே மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு உணவாக விடப்படுகிறது. சோளத்தட்டு அறுவடை செய்து சேமித்து வைத்து கொள்வது வழக்கம். நரிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை மேய்ச்சல் நிலங்களில் முற்றிய பின்னர் ஆடு, மாடுகளை மேய விடுவது வழக்கம். இதையடுத்து, மானாவாரி நிலங்களில் கடந்த ஒருவார காலமாகவே விதைப்பு, உழவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் விதை தானிய வியாபாரம் களை கட்டியுள்ளது. நடப்பு சீசனில் நரிப்பயறு கிலோ ரூ.120, கொள்ளு ரூ.66, லைன் மஞ்சள் சோளம் ரூ.65, பாசிப்பயறு ரூ.105, தட்டைப்பயறு ரூ.98, உளுந்து ரூ.75 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு லைன் மஞ்சள் சோளம் மற்றும் கொள்ளு ஆகியவை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தானிய மண்டிகள் தரப்பினர் கூறுகையில்,‘‘லைன் மஞ்சள் சோளம், கொள்ளு ஆகியவை அதிகளவில் அறுவடை செய்யப்படுவதில்லை. தீவனத்திற்காக விதைப்பு செய்யப்படுவதால் விளைந்தவுடன் அறுவடை செய்து வைக்கோல் போரில் விவசாயிகள் சேமித்து விடுகின்றனர். அல்லது காட்டில் நேரடியாக ஆடு, மாடுகளை தீவனத்திற்காக மேயவிட்டு விடுகின்றனர். இதனாலேயே விலை அதிகரித்துள்ளது’’ என்றனர். இதையடுத்து காங்கயம் விவசாயிகள் தரப்பில் கூறும்போது,‘‘நடப்பாண்டு பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. விதைப்பு செய்யப்பட்ட பின்னர் அடுத்த 10 நாட்களுக்கு பிறகு சீரான இடைவெளியில் பருவ மழை பெய்யுமானால் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் பெற்று விடலாம். இந்த ஆண்டு நிச்சயம் போதிய மழை பெய்யும்’’ என நம்பிக்கை தெரிவித்தனர்….

The post காங்கயம் சுற்று வட்டாரத்தில் மானாவாரி நிலங்களில் உழவு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ranawari ,Kanganam Circuit ,Kangayam ,Kangam Circuit ,Dinakaran ,
× RELATED காங்கயம் சட்ட மன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம்