×

மழலை வரமருளும் சந்தான விருத்தி ஏகாதசி

ஏகாதசி விரதம் பற்றி தொடர்ந்து நாம் பல கட்டுரைகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகள். வளர்பிறை ஏகாதசி ஒன்று. தேய்பிறை ஏகாதசி ஒன்று. ஆக, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டுகளில் 25வது ஏகாதசியும் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்புகளை நாம் பல கட்டுரைகளில் பார்த்து வருகின்றோம். இந்த 24 ஏகாதசி களிலும் ஒரு மனிதன் இகத்திலும் பரத்திலும் பெறவேண்டிய அத்தனை சவுபாக்கியங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஏகாதசி விரதத்தால் கிடைக்காத நற்பலன் எதுவுமில்லை. செல்வம், கல்வி, ஆயுள், ஆரோக்கியம், இழந்ததைப் பெறுதல், பதவி என ஒரு மனிதனுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் ஏகாதசி விரதத்தால் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கின்றன. ஏகாதசி மகாத்மியத்தை பல்வேறு இதிகாச புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. மகாபாரதத்தில் பற்பல இடங்களில் ஏகாதசியின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது. கங்கையின் புனிதமான நதி இல்லை. தாயினும் சிறந்த உறவு இல்லை. காசியை விட சிறந்த தலம் இல்லை. ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை என்று ஏகாதசியின் பெருமையை
மஹரிஷிகள் சொல்கிறார்கள்.

பொதுவாக விரதம் என்றால் அன்று பட்டினி இருந்து இறைவனை வழிபட்டு பிறகு தான் சாப்பிடுவார்கள். இது எல்லா விரதத்திற்கும் பொருந்தும். ஆனால், ஒருவன் சாப்பிடவில்லை என்று சொன்னால். அவன் பட்டினியாக இருக்கிறான் என்பதை நம்முடைய மக்கள் எப்படி குறிப்பிடுவார்கள்? “என்ன, இன்று  ஏகாதசியா?”  என்பார்கள். அந்த அளவுக்கு ஏகாதசி என்றால் பட்டினி விரதமாக  இருக்க வேண்டும் என்று மக்களின் ஆழ்மனதில் பதிந்து இருக்கிறது. ஒருவரை வாழ்த்துகின்றபோது, தனம் தான்யம் பசும் பக  புத்ர லாபம் சத சம்வத்சரம் தீர்க்கம் ஆயு: என்று வாழ்த்துவார்கள்.பல்லாண்டு காலம் செல்வத்துடனும், தானிய விருத்திகளுடனும், பசுக்களுடனும், சற்புத்திரர்களுடனும் வாழவேண்டும் என்று இந்த வாழ்த்திற்குப் பொருள்.சிலருக்கு மற்ற செல்வங்கள் இருந்தாலும் புத்திர விருத்தி இருக்காது. அப்படி சந்தான விருத்தி இல்லாதவர்கள், அக்குறை தீர, இருக்கவேண்டிய ஏகாதசி விரதம் ஒன்று உண்டு. அது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசி.

பொதுவாக புத்திர பாக்கியம் கிடைக்காததற்கு என்ன காரணம்?
பூர்வ வினைகள்தான் காரணம். ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் பல்வேறு சிறப்புகளை உடையது. பஞ்சம திரிகோண ஸ்தானம் என்பார்கள். அதனை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் புத்திர விருத்தி ஸ்தானம் என்றும் குறிப்பிடுவதற்குக் காரணம், அது ஜாதகத்தின் மிகமுக்கியமான ஸ்தானம் ஆகும்.5-ஆம் இடத்துக்கு 5-ஆம் இடம் 9ஆம் இடம். அதற்கு பாக்கிய ஸ்தானம் என்று பெயர். ஒருவர் ஜாதகத்தில் 5-ஆம் இடமும் 9-ஆம் இடமும் கெட்டுவிட்டது  என்று சொன்னால், அவர்களுக்கு புத்திர குறைவு ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.அவன் இப்பிறவியில் என்னதான் புண்ணியம் செய்திருந்தாலும், பூர்வ வினைகளால் பாதிக்கப்பட்டிருப்பின், அவனுக்கு பல பாக்கியங்கள் இருந்தாலும், அதை அனுபவிக்க முடியாத நிலையும், அனுபவித்தாலும் திருப்தி இல்லாத நிலையும் ஏற்படும். எப்போதும் கவலையுடன் இருக்கக்கூடிய நிலை உண்டாகும். இக்குறை தீருவதற்கு சொல்லப்பட்ட ஏகாதசி விரதம் ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி விரதம்.
 
இந்த விரதத்தைக் குறித்து அழகான கதை ஒன்று சொல்லப் பட்டிருக்கிறது. மாகிஷ்மதி என்ற நாட்டில் மஸ்ஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். எக்குறையும் இல்லாமல் மிகச் சிறப்பாக நாட்டை பரிபாலித்து வந்தான்.அதிகமாக வரி விதிக்காமல், மக்களின் நிலையை மதித்து, அவர்கள் நலனை பிரதானமாகக் கருதி, ஆண்டு வந்ததால், அவன் மீது மக்களுக்கு அளவு கடந்த அன்பு இருந்தது. தன்னுடைய அரசனுக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வதற்கு, அந்த மக்கள் தயாராக இருந்தார்கள். மன்னனுக்கு சிறு துன்பம் வந்தாலும் கூட, இவர்கள் எல்லோரும் அதை தங்களுக்கு வந்த துன்பமாக கருதினார்கள். இப்படி அந்த மன்னன் ஆண்டு வருகின்ற பொழுது அவனுக்கு பல நலன்களும் புகழும் இருந்தாலும், பல்லாண்டுகளாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தான். அதற்காக அவன் செய்யாத பூஜைகள், பிராயச்சித்தங்கள் இல்லை. ஹோமங்களையும், யாகங்களையும் பூஜைகளையும் செய்தான். ஆனால், பலன் கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றமும் சலிப்பும் அடைந்த மன்னன் ஒருநாள் நாட்டில் உள்ள முக்கியமான அறிஞர்களையும் வேத விற்பன்னர்களையும், மக்களையும் அழைத்தான்.

‘‘நான் பல்லாண்டுகளாக எவ்விதக் குறையும் இல்லாமல், மக்கள் நலனே என் நலன் என்று கருதி ஆண்டு வருகின்றேன். கோயில் குளங்கள் என்று செய்யாத நற்பணிகள் இல்லை. எல்லா கோயில்களிலும் பூஜைகள் நடக்கின்றன. வேற்று நாட்டு மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி நடந்துகின்றேன். கால்நடைகள், மற்ற விலங்குகளுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தந்திருக்கிறேன். வனத்தில் உள்ள விலங்குகள் கூட சுதந்திரமாக இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்திருக்கிறேன். இப்படி இருந்தும் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மிகுந்த துக்கத்தோடு மக்களைக்  கேட்டான்.இதற்கு என்ன பதில் அவர்களால் கூற முடியும்? தவறு செய்ததால் உனக்கு குழந்தை செல்வம் இல்லை என்று சொல்லலாம். ஆனால், மன்னன் எந்த தவறும் செய்ததாகத் தெரியவில்லை. உடனே, மக்கள் தங்களோடு கூடிப்பேசி, இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்து, காட்டுக்குச் சென்று, அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவரைச் சந்தித்து தங்கள் குறையைத் தெரிவித்தனர்.

தங்கள் அரசனுக்காக இந்த மக்கள் படுகின்ற வேதனையை அறிந்த முனிவர், தன்னுடைய ஞானக் கண்ணால் அரசனின் வினைக் காரணத்தைத் தெரிந்து கொண்டான். ‘‘மக்களே! அரசன் மீது நீங்கள் வைத்த அன்பு அற்புதமானது. இதுவரை நான் கேள்விப்படாதது. ஆனால் உங்கள் அரசன் எத்தனை நல்லவனாக இப்பிறவியில் இருந்தாலும், பூர்வத்தில் செய்த  பாவ வினைகளிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறான். போன ஜென்மத்தில் அவன் வணிகராக இருந்தான். பணத்தைத்தவிர வேறு நோக்கம் இல்லாதவனாக இருந்தான். சுயநலமிக்க அவன் ஊர் ஊராகச் சென்று வியாபாரம் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் மதியம் அவன் ஒரு குளக்கரையை அடைந்தான். அப்பொழுது மிகுந்த தாகத்தோடு ஒரு பசுவும் கன்றும் குளத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்தன. அப்பொழுதுதான் அது வாயை நீரில் வைத்திருந்தது. உடனே, இவன் அங்கு ஓடிச்சென்று ஒரு பெரிய குச்சியால் அவைகளை அடித்து விரட்டிவிட்டுதான் நீர் அருந்தினான். அந்த பாவமானது இப்பிறவியில் அவனைப் பற்றி நிற்கிறது”

இப்படி முனிவர் சொன்ன வுடன் மக்கள் கேட்டனர்.‘‘அப்படியானால் இதற்கு என்ன பிராயச்சித்தம்? எதைச் செய்தால் குறை தீரும்?’’ என்று கேட்க, அப்போது முனிவர் சொன்னார்,
‘‘வருகின்ற ஏகாதசி ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி. இம்மாதிரி பிள்ளையில்லா குறை இருப்பவர்களுக்கு இந்த ஏகாதசி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏகாதசியை முறைப்படி விரதமிருந்து, பகவான் மகாவிஷ்ணுவை வணங்கினால், நிச்சயம் அவர்களுக்குக் குறை தீரும்’’ என்றார். உடனே, அத்தனை மக்களும் ஏகாதசி விரதத்தை மிகுந்த நம்பிக்கையோடும் தூய்மையோடும் அந்த ஆசிரமத்திலேயே முனிவர் சொன்ன முறைப்படி துவங்கினர். ஏகாதசி விரத  பலனை முறையாக அரசனுக்குத் தத்தம் செய்தார்கள். முனிவரும் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பினார். அடுத்த சில மாதங்களில் அரசனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்படிப்பட்ட ஏகாதசியை நாமும் கடைபிடித்து பின்வரும் பாசுரம் பாடி பலன் பெறுவோம்.

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய
அஞ்சனவண்ணன் தன்ைத்
தாயர் மகிழ ஒன்னார் தளரத்
தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
விரித்தன உரைக்கவல்லார்
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்
மக்களைப் பெறுவர்களே.

Tags : Santhanam Viruthi Ekadasi ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி