×

மிதுன ராசி பணியாளர் பண்புகள்

மிதுன ராசி அல்லது மிதுன லக்கினம் அல்லது ஜூன் மாதம் அதற்கு ஒரு வாரம் முன்னும் பின்னும் பிறந்தவர்களுக்கும் புதன் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கும்  இத்தகைய பண்புகள் இருப்பதைக் காணலாம். மிதுன ராசி ஆண், பெண், குழந்தை முதலாளி ஆகியன முடிந்த நிலையில் இக்கட்டுரை மிதுன ராசி பணியாளர் பற்றி விளக்குகிறது.

மிதுன ராசிப் பணிகள்  

மிதுன ராசி ஆண், பெண் பணியாளர் இருவருமே கற்பனைத்திறன் மிக்கவர்கள். அதற்கேற்ற பணிகளில் அமர்ந்தால் அவர்களின் தொழில் திறமை பளிச்சிடும். கணக்கு வழக்கில் கெட்டிக்காரர்கள். வங்கி, வக்கீல் விற்பனையாளர் போன்ற பணிகளை செய்யலாம். குரல் வளம் மற்றும் எழுத்துத்திறமை உடையவர்கள். சில பாடகர் ஆவர். சிலர் கணக்குப் பிள்ளை ஆவர். எதுவாக இருந்தாலும் அத்தொழிலில் சிறப்பாகச் செயல்படுவர். டாக்குமென்ட் ரைட்டர், எழுத்தர், சினிமா  கதாசிரியர், நாவல் சிறுகதை எழுதுவோர், கவிஞர், வசனகர்த்தா [ஸ்க்ரிப்ட் ரைட்டர்], மேடைப் பேச்சாளர், சமயப் பிரச்சாரம் செய்வோர் போன்றவர்கள் மிதுன ராசிக்காரர்களாக அல்லது புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பதைக் காணலாம்.

பேசியே பொருளை நம் தலையில் கட்டிவிடும் எம்.எல்.எம். (multi level marketing) விற்பனையாளர்கள் போல பேசி ஆளை மயக்கும் பெண்களும், ஆண்களும் இந்த ராசிக்காரர்களாக இருக்கக் கூடும். இவர்கள் கணக்கில் புலி, கற்பனையில் ஆகாய சஞ்சாரி, பலமொழி தெரிந்தவர்கள் பல வித்தை கற்றவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்த தசாவதானிகள். இடத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளக் கூடிய [adaptable in nature] மனத்திட்பம் உடையோர். எந்த மாநிலத்திலும் நாட்டிலும் வீட்டிலும் போய் இருந்து வாழ்ந்து மேன்மையடைவர்.

பணியாற்றும் பண்பு

மிதுன ராசிக்காரர்கள் ஒரு நிமிடம் கூட அதிகமாக வேலை செய்ய மாட்டார்கள் ஓவர் டைம் செய்வதில் விருப்பம் இல்லாதவர்கள். இன்று ஓவர் டைம் செய்யவேண்டிய சூழ்நிலை இருப்பதை அறிந்தால் அரைமணிநேரம் முன்னதாக வயிற்றுவலி என்று சொல்லி பெர்மிஷன் வாங்கிக்கொண்டு சென்று விடுவர். பணிநேரத்தில் முணுமுணுக் காமல் சுறுசுறுப்பாக சிரித்துக் கொண்டே வேலையை அழகாக செய்து முடித்து விடுவார்கள். தங்கள் வேலையை மட்டுமே செய்வர். அடுத்தவர் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது கிடையாது. வேலை முக்கியம் உணவு மற்றும் ஓய்வு முக்கியமல்ல என்று வேலை செய்ய இவர்கள் மேஷ ராசியினர் கிடையாது. அடுத்தவர்களுக்காகவே ஆயுள் முடிய உழைக்க இவர்கள் கும்ப ராசியினர் கிடையாது.

வேலை நேரத்தில் வேலையைச் சிறப்பாக செய்துவிட்டு பிறகு ஸ்டைலாக உடைமாற்றிக்கொண்டு நண்பர்களைப் பார்க்கவும் அரட்டை அடிக்கவும் ஜாலியாகப் பொழுதுபோக்கவும் கிளம்பி விடுவார்கள். இசை, எழுத்து, கம்ப்யூட்டர், கதை விவாதம் என்று அந்த நேரத்தையும் உருப்படியாக பயன்படுத்துவர். ஆனால், அது ஜாலியான நேரமாகவும் அவர்களுக்கு இருக்கும். இரண்டு முன்று வேலைகள் செய்து வருமானம் பார்ப்பார்கள். அதனால் இவர்களை ஒரே நிறுவனத்தில் வைத்து ஒரே முதலாளியிடம் கொத் தடிமையாக வேலை வாங்க முடியாது.

ஆலோசனைப் பிரியர்

மிதுன ராசியினர் எந்த வேளையிலும் மனச் சலனம் மனக் குழப்பம் அடைவது கிடையாது. புத்தியைக் கொண்டே பிரச்னைகளை சமாளிப்பார் என்பதால் மேனேஜர் வேலைக்கு ஏற்றவர்கள். நல்ல ஆலோசனை வழங்குவார்கள். கவுன்சலிங்கில் தேர்ந்தவர்கள். மாமியார் மருமகள் சண்டை முதல் கட்சியின் கோஷ்டிப் பூசல், சமயப் பூசல் என எதுவாக இருந்தாலும் பேசிச் சமாதானம் செய்து விடுவார்கள். ஊர் பஞ்சாயத்தெல்லாம் ஒரே நிமிடத்தில் தீர்த்து வைப்பார்கள். அலுவலகத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் இவர்களிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனை சொல்லும்போது இரு தரப்பு பிரச்னைகளையும் பரிவோடு கேட்டு ஆலோசனை வழங்கினாலும் உள்ளுக்குள் அவர்களின் முட்டாள்தனத்தை எண்ணி சிரித்துக் கொள்வார்கள். சில வேளைகளில் தங்கள் நண்பர்களிடம் இவர்களின் ஊரையும் பேரையும் சொல்லாமல் இந்தப் பிரச்னையை சொல்லிச் சிரிப்பார்கள்.

பிரச்னையோடு வருகிறவர்களிடம் கரிசனையோடு பேசி ஆறுதல் சொல்வார்கள். அதேசமயம் ‘இப்படி முட்டாளாக இருப்பானா’ என்ற எண்ணமும் இவர்களின் உள் மனதில் தோன்றும். காரணம் இவர்கள் இரட்டை குணமுடைய ராசிக்காரர்கள். இயல்பாகவே வெளியேபரிவும் உள்ளே நக்கலும் இருக்கும். புத்திகாரகனாகிய புதனின் ஆதிக்கத்தில் இருப்போர் என்பதால் ஞானச் செருக்கு இவர்களிடம் உண்டு. வினைத் திட்பமும் உண்டு. டென்ஷன் ஆகாமல் இருப்பதால் பிரச்னைகள் வரும்போது யாராவது ஏளனமாக நையாண்டியாக இவர்களைப் பேசிவிட்டாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மனதில் போட்டுக்கொள்வார்கள்.

சவாலான பணிகள்

மிதுன ராசிக்காரர் டைப்பிஸ்டாக இருந்தால் படுவேகமாக டைப் செய்வார். எந்தத் தொழிலில் இருந்தாலும் அதில் முத்திரை பதிப்பார். அங்கிருந்து அவர் விரைவில் வெளியேறிவிடுவார். ஆனால், அப்படி அவர் வெளியேறிய பிறகும் ‘ஆஹா அவர் மாதிரி முடியாதுப்பா சான்சே இல்லை’ என்று அவரைப் பற்றி தினமும் பேசும்படியாக விரைவாக வேலைகளைச் செய்திருப்பார். மிதுன ராசிகாரர்களிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும் ‘இது சிரமம்’ என்று புலம்ப மாட்டார்கள். அது அவர்களின் வேலைத்திறமைக்கு இழுக்கு என்பதால் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வார்கள். மேலும், இவர்கள் எல்லோரும் செய்யும் சாதாரண சராசரி வேலைகளைச் செய்ய விரும்புவதில்லை. சவாலான பணிகளை
வெற்றிகரமாக முடிக்கவே விரும்புவர்.

அதனைச் செய்து பாராட்டைப் பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவர். மற்றவர்கள் முன்பு ‘காலரைத் தூக்கி விட்டுக்’ கொள்வார்கள். பிறகு நண்பர்களிடம் கொஞ்சம் கூட்டி குறைத்து சொல்லி அதனைக் கொண்டாடுவதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் உண்டு. முதலாளிகளிடம் மிதுன ராசிக்காரர் தமது ஏழ்மையை அல்லது வறுமையைச் சொல்லி சம்பள உயர்வோ அட்வான்சோ கேட்க மாட்டார்கள். தங்களின் குறைகளை அல்லது வீக்னசை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் திறமையைக் காட்டி சம்பள உயர்வு பெற்றுவிடுவார்கள். அல்லது வேலை நேரத்தில் வெளியே செல்லும் வாய்ப்பைப் பெற்று அந்த நேரத்தில் சில உதிரி வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பார்கள்.

மிதுன ராசி பெண்பணியாளர்கள்

மிதுன ராசிப் பெண்களை செகரட்டரியாக கிடைக்க பெற்றவர்கள் பாக்கியவான்கள். அன்பான அமைதி யான முகத்துடன் புன்சிரிப்புடன் நீட்டாக டிரஸ் செய்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வர். சிடுசிடுவென்று முகத்தை வைத்துக்கொள்ள மாட்டார்கள். அடிக்கடி உடம்பைப் படுத்துது என்று நோய் காரணம் சொல்லி புலம்ப மாட்டார்கள் மாமியார், நாத்தனார் பிரச்னை என்று சொல்லி சலித்துக்கொள்ள மாட்டார்கள். மகாராணிபோல மிடுக்காக அதே சமயம் முதலாளி முன்பும் அவரை பார்க்க வருகிறவர்கள் முன்பும்  பணிவாகவும் நடந்து கொள்வார்கள். அலுவலக விஷயங்களையோ முதலாளியின் தனிப்பட்ட விஷயங்களையோ வெளியில் பேச மாட்டார்கள். அக்கறை காட்டவும் மாட்டார்கள். தமது எல்லைக்குள் மதிப்பாக நடந்து கொள்வார்கள். மிதுன ராசிப் பெண்களில் படிக்காதவர்களும் பணம் ஈட்டுவர். அவர்களால் வீட்டில் சும்மா இருக்க முடியாது அடுத்த வீட்டுப் பெண்களுடன் வெட்டிக் கதை பேசவும் இவர்களுக்குப் பிடிக்காது. மிதுன ராசி பெண்களை மனைவியாக பெற்றவர்களும் பாக்கியவான்களே.

இவர்கள் ஹவுஸ் ஓய்ஃப் என்றாலும் MONEY MAKERS தான். எனவே  ஊறுகாய் சமையல் பொடி வாங்கியோ தயாரித்தோ பாக்கெட் போட்டு பார்ட் டைமாக விற்பனை செய்வார்கள்; டியுஷன் எடுப்பார்கள்; பாட்டு கற்றுக் கொடுப்பார்கள்; கற்பனை சக்தி அதிகம் என்பதால் ஜாக்கெட் எம்பிராய்டரியில் கெட்டிக்காரர்கள். தையல் வேலை செய்வார்கள். சிலர் மற்றவர்களுக்கு ரேஷன் பொருள் வாங்கி கொடுப்பார்கள். தோசை மாவு விற்பார்கள். வீட்டில் இருந்தபடியே இளையராஜா விஸ்வநாதன் பாட்டு கேட்டுக்கொண்டே உடம்பு நோகாமல் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து காசு பார்ப்பார்கள். சிலர் சமையல் செய்து கொடுப்பார்கள். இளம்பெண்கள் கல்லூரியில் ஷிஃட்டில் படித்துக்கொண்டே சேல்ஸ் GIRLS வேலை பார்ப்பார்கள். ஆடிட்டர் ஆபிசில் கணக்கு எழுதுவார்கள். ஒரு சிறு தவறு வராதபடி சரியாகச் செய்வார்கள்.

உலாவிகள்

மிதுன ராசிக்காரர்கள் காலில் சக்கரம் கட்டியவர்கள் எனலாம். ஒன்று உடலளவில் பல ஊர்களுக்கு செல்லும் பணியை மேற்கொள்வர் அல்லது ஒரே இடத்தில் இருந்து கணக்கு எழுதும் பணியென்றால் மனதளவில் கற்பனை வானில் சிறகடித்துப் பறப்பார்கள். பல தொழில் செய்பவர்கள் அல்லது பல திறமையையும் ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் பயன்படுத்துவோர் என்பதால் அடிக்கடி சோர்ந்து விடுவர். ஆங்காங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு பணிகளைத் தொடர்ந்து செய்வார்கள்.  இவர்கள் உடல் உழைப்புக்கு ஏற்றவர்கள் கிடையாது. இசைப்பாட்டு மற்றும் இசைக்கருவிகள் இசைப்பதில் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவர்கள். பயணத்தில் விருப்பம் உடையவர்கள். ஆனால் சொகுசு பயணம்தான். மலை ஏறுவார்கள் அதுவும் கூட ஜாலியான ஆட்களுடன்தான் செல்வார்கள். விற்பனை மேலாளர்களாக பல ஊர்களுக்குப்போய் மகிழ்ச்சியுடன் திரும்பி வருவர். பயணத்தில் சந்திக்கும் ஆட்களுடன் நட்பு பாராட்டுவர்.

கிரகச் சேர்க்கை

புதனுடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால் [இது பலருடைய ஜாதகத்தில் இருக்கும். இதற்கு சுபர் பார்வை அல்லது சேர்க்கை இருக்க வேண்டும்] வாய்ப்பாட்டு இசைக்கருவி, நுண் கலைகளில் கணினிப் பணிகளில் சிறப்பாக செயல் படுவர். புதனும் வியாழனும் சேர்ந்திருந்தால் கவிதை கதை எழுதுவர். புதனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் பல மொழிகளில் தேர்ச்சி பெற்று மொழிபெயர்ப்பாளர் ஆவர். புதன் வலுவாக இருக்கும் சிலருக்கு ஜோதிடம் சிறப்பாக வரும். பலன் பலித்தல் என்பதற்கு இன்னும் சில கிரக அமைப்புகள் வேண்டும். புதன் ஜாதகம் எழுத உதவும். இதனால் சில ஜோதிடர்கள் இவர்களிடம் கொடுத்து ஜாதகம் எழுதி வாங்கிக்கொண்டு பலன் மட்டும் அவர்கள் சொல்வதுண்டு. ஜாதகம் என்பது ஒரு கணிதம்தானே.

வெரைட்டி விரும்பிகள்

மிதுன ராசிக்காரர்  வாழ்க்கையில் வெரைட்டி வெரைட்டியாக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்; அதை நடைமுறைப்படுத்தவும் செய்வார்கள். ஒரே நிறுவனத்தில் ஐம்பது ஆண்டுகள் குப்பை கொட்ட இவர்கள் விரும்புவதில்லை. அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் ஒன்று, அவர் அங்கேயே மிக அதிகளவில் ப்ரோமோஷன் வாங்கி சம்பள உயர்வு பெற்று தன் பதவி மற்றும் சகைகளை ஆண்டு அனுபவிக்கிறார் என்பதே உண்மை. அல்லது அவர் வேறு பல வேலைகளை வெளியே வந்து செய்து மன நிறைவு பெறுகிறார் எனலாம். சிலர் தொடர்ந்து செய்யும் வங்கிப்பணி அரசுப்பணி காரணமாக மன அழுத்தம் வராமலிருக்க கதாகாலட்சேபம் செய்வர். இசைக்குழு வைத்திருப்போர்  நாடகக்குழு வைத்து நாடகம் நடத்துவர். டென்னிஸ் கிளப்புக்குபோய் பொழுதைக் களிப்பர். அவருக்கு டென்னிஸ் விளையாடுவதில் ஆர்வம் இருக்காது. ஆனால், பல விஷயங்களை பேசி விமர்சனம் செய்வதற்காக அங்கு போவார்கள். ரோட்டரி சங்கங்கள் மூலமாக மக்களை சந்திப்பதில் பல்வேறு தொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் [சொகுசாக இருந்தபடி] ஆர்வம் காட்டுவர்.  

நேர்மை உண்டு

மிதுன ராசிக்காரர் வேலைபார்க்கும் இடத்தில் யாரையும் ஏமாற்றுவது கிடையாது. முதலாளிக்கு தன்னாலான இலாபத்தை பெற்றுத் தருவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நல்லபல யோசனைகளை உத்திகளைச் சொல்லிக்கொடுத்து முதலாளிக்கு நல்ல இலாபம் பெற்றுத் தருவர். அதே வேளையில் தனது நிலையையும் சிறப்பாக உயர்த்திக் கொள்வார். ஆனால், அங்கேயே இருந்து கடைசிவரை தனது விசுவாசத்தைக் காட்ட வேண்டும் என்று நினைக்க மாட்டார். பறவைபோல பறந்து விடுவார். நாளைக்கு வேலைக்கு வரமாட்டார் என்பதை இன்று மாலை வரை யாரிடமும் சொல்லாமல் போய்விடுவார். காலையில் ஒரு மெயில் வரும் அவர் அடுத்த நிறுவனத்தில் சேர்ந்து விட்டார் என்ற தகவலுடன். எனவே ராஜவிசுவாசம் முதலாளி விசுவாசம் என்பதை இவரிடம் எதிர்பார்க்க முடியாது. அதற்காக யாருடனும் விவாதத்திலும் ஈடுபட மாட்டார். அவர் நியாயம் ‘வாங்கிய சம்பளத்துக்கு நேர்மையாக வேலை செய்தேன் நல்ல வாய்ப்பு வேறு வந்தது கிளம்பிவிட்டேன்,. நீ என்னை விட திறமையானவன் குறைந்த சம்பளத்துக்கு வந்தால் என்னை அனுப்பிவிட்டு அவனுக்கு வேலை கொடுப்பாய் தானே’ என்ற மேலாண்மைத் தத்துவத்தை எடுத்துரைப்பார்.

பயனுள்ள பணியாளர்

மிதுன ராசி பணியாளரை பணிக்கு அமர்த்தினால் முதலாளிக்கு நல்ல இலாபம் கிடைக்கும் ; நல்லபேர் கிடைக்கும். மன அமைதி உண்டு. பிரச்னை வராது. இவர் வந்துவிட்டார் இனி நம் நிறுவனத்தை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வார் என்று ஈசி சேரில் படுத்து பாட்டு கேட்கலாகாது. எந்த நேரத்திலும் பட்சி பறந்து விடலாம். எனவே அவரிடம் இருந்து முதலாளியும் மற்ற பணியாளரும் வேலைகளை பழகிக்கொள்ள வேண்டும். அவர் இங்கு பணி செய்யும் போதே வெளியே இன்னும் சில கம்பெனிகளுக்கு பணி செய்வார். எதில் அதிக இலாபம் வருதோ அதற்கு மாறிக் கொள்ளலாம். பெரும்பாலும் மிதுன ராசிக்காரர்கள் தனியாக தொழில் செய்வதில்லை. காரணம் அதில் உள்ள ரிஸ்க் அவர்களுக்கு ஒத்து வராது. ரிஸ்க் இல்லாத வேலைகளையே அவர்கள் விரும்புவார்கள். சவாலான பணி. பயணம். விற்பனை இலக்கு, சாதனை ஆகியவற்றை விரும்புவர். மொத்தத்தில் மிதுன ராசி பணியாளர் முதலாளிக்கு ஒரு விலை மதிக்க முடியாத பெரிய சொத்து.

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி