×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

345. சதாவர்த்தாய நமஹ (Shatha-Aavarthaaya namaha)

(திருநாமங்கள் 334 முதல் 345 வரை - பரமாத்மாவான வாசுதேவனின் பெருமைகள்)

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி? அதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் மூன்றாம் பத்து பத்தாம் திருமொழியின் எட்டாவது பாசுரத்தில் தெரிவிக்கிறார்:“அல்லலில் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்எல்லையில் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும்செய்எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யான் ஓர் துக்கம் இலனே!”

திருமாலின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டால், துக்கமே இல்லாத ஆனந்தம் உண்டாகும் என்பதே இப்பாடலின் சாரமாகும்.அல்லல் இல் இன்பம் அளவிறந்து - துக்கம் என்பது சிறிதும் இல்லாத எல்லையற்ற ஆனந்தத்துடன் வைகுண்டத்தில் திகழ்கிறார் திருமால். அவரது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை, அதில் துக்கத்தின் கலப்பும் இல்லை.

எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் - அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கத்தையும் தனியாகப் பார்த்தாலும் அழகு நன்கு வெளிப்படுகிறது, திருமேனியை மொத்தமாகப் பார்த்தாலும் அழகு திகழ்கிறது. அந்த அழகின் ஒளியானது வைகுண்ட லோகம் முழுவதும் பரவி வெள்ளம் போலே பெருக்கெடுத்து ஓடுகிறது.

அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் - தாமரை மலரின் வாசனையே ஒரு வடிவம் கொண்டது போல் திகழ்கின்ற மகாலட்சுமியுடன் ஆனந்தமாக இணைந்து களித்து மேலும் மகிழ்பவர். அதாவது, தனக்கே உரித்தான இயற்கையான பரமானந்தம் அளவிறந்து இருக்க, அதற்கும் மேலான பரமானந்தமாக மகாலட்சுமியுடன் சிருங்காரக் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்கிறார் திருமால்.

எல்லையில் ஞானத்தன் - மகாலட்சுமியோடு இப்படி உறவாடுவதற்குத் தேவையான பேரறிவைக் கொண்டவர் திருமால். அவரது ஞானத்துக்கு
எல்லையே இல்லை.ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் - அந்த ஞானத்தைக் கொண்டே அனைத்துச் செயல்களையும் செய்ய வல்லவர் திருமால். அதாவது, மனிதர்களான நாம் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றால் நம் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தியே செய்ய முடியும். ஆனால் இந்த உலகை இயக்குதல் உட்பட அனைத்தையும் திருமால் தனது எண்ணத்தாலேயே செய்து முடித்து விடுகிறார்.

எல்லையில் மாயனை - எல்லையில்லாத வியக்கத்தக்க செய்கைகளைக் கொண்டவர் திருமால்.கண்ணனை - அந்த லீலைகளை நமக்குச் செய்து காட்டும் பொருட்டுக் கண்ணனாக வந்து அவர் எளிமையுடன் அவதரித்தார்.தாள் பற்றி - அந்தப் பெருமானின் திருவடிகளை வணங்கியதால்யான் ஓர் துக்கம் இலனே - எனக்கு வாழ்வில் ஒரு சிறிய துக்கம் கூட இல்லை, நான் மகிழ்ச்சியாக உள்ளேன்.

இறைவனின் ஆனந்தம், அழகு, சிருங்கார ரசம், அனைத்தும் அறியும் தன்மை, சக்தி, லீலைகள், எளிமை உள்ளிட்ட குணங்களை நாம் சிந்திக்கச் சிந்திக்க, நமது துக்கமெல்லாம் நீங்கிவிடும் என்று இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார் நம்மாழ்வார்.இவ்வாறு நமது துக்கங்களை எல்லாம் போக்கி மகிழ்விக்க வல்ல எண்ணற்ற மேன்மைகளைத் திருமால் தன்னகத்தே கொண்டிருக்கிறார். பெரிய வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்து வைத்தால், அதில் அலைகள் சுழித்துச் சுழித்துப் பெருகும் அல்லவா? அதுபோலத் தான் திருமாலின் எல்லையற்ற மேன்மைகளும் பெருவெள்ளத்தில் எழும் அலைகள் போல் சுழித்துச் சுழித்துப் பெருகுகின்றன.

‘ஆவர்த்த:’ என்றால் சுழல் என்று பொருள். ‘சத’ என்றால் நூறு. நூற்றுக் கணக்கான சுழல்களாய்ச் சுழித்துச் சுழித்துப் பெருகும் மேன்மைகளை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘சதாவர்த்த:’ (சத + ஆவர்த்த: = சதாவர்த்த:) என்றழைக்கப்படுகிறார். ‘சதாவர்த்த:’ என்றால் நூற்றுக்கணக்கான சுழற்சிகளை உடையவர், அதாவது சுழித்துப் பெருகும் நூற்றுக்கணக்கான மேன்மைகளைக் கொண்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 345-வது திருநாமம்.“ஸதாவர்த்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வில் இன்பச் சுழல்கள் பெருகும்படித் திருமால் அருள்புரிவார்.

346. பத்மினே நமஹ (Padhmine namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை - வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
தமிழகத்தில் வாழ்ந்த ஒரு கணவனும் மனைவியும் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றார்கள். சுற்றுலா வந்த இடத்தில் மனைவிக்குக் குருவாயூரப்பனைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் கணவனிடம் தெரிவித்தாள் அப்பெண். ஆனால் கணவனோ, “ஆனந்தமாகச் சுற்றுலா வந்த வேளையில், கோவில், பூஜை, வழிபாடு இவற்றைச் செய்ய எனக்கு மனமில்லை!” என்று மறுத்தார். ஆனாலும் மனைவி கட்டாயப் படுத்தியதால்
குருவாயூர் கோவிலுக்கு வந்தார்.

கோவிலுக்கு வந்த போதும், “சுற்றுலாவுக்காக ஆசையாக வந்த என்னை இப்படிக் கோவிலில் கொண்டு வந்து வரிசையில் நிறுத்தி விட்டாயே!” என்று மனைவியைப் பார்த்துப் புலம்பிக் கொண்டே இருந்தார். மனைவியோ, “கண்கண்ட தெய்வமாய் இருக்கும் குருவாயூரப்பனைத் தரிசிப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்? அதை உணராமல் இப்படிப் பேசுகிறாரே!” என்று மனதுக்குள் வருந்தினாள். “குருவாயூரப்பா! நீயே நல்வழி காட்டு!” என்று வேண்டிக் கொண்டே குருவாயூரப்பன் சந்நிதியை நோக்கிச் சென்றாள்.

வரிசை மெல்ல மெல்ல நகர்ந்தவாறே, குருவாயூரப்பனுக்கு முன்னே வந்து அந்த தம்பதியர் நின்றார்கள். இறைபக்தி நிறைந்த அப்பெண் குருவாயூரப்பனின் அழகில் ஈடுபட்டு வணங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால் கோவிலுக்கு வருவதற்கே விருப்பம் இல்லாமல் இருந்த அவளது கணவர் குருவாயூரப்பனின் வடிவழகைக் கண்ட மாத்திரத்தில், மனதுக்குள் இனம் புரியாத ஓர் ஆனந்தத்தை அநுபவித்தார்.

காயாம்பூவைப் போன்ற அழகிய ஓர் ஒளி. அதன் நடுவிலே ஒரு குழந்தையின் வடிவம். அதில் பேரின்பத்தின் சுவை ததும்புகிறது. சுருண்ட தலைமுடி பிறைச்சந்திரனை ஒத்த நெற்றியில் விழ, இரு விழிகளும் அருட்கடலாய்ப் பொங்கி வந்து மனதைக் குளிர்விக்க, இரு கன்னங்களும் இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடி போல ஒளிவீச, மெல்லிய புன்னகை சிவந்த உதடுகளுக்கு மேலும் அழகூட்டக் கண்கண்ட தெய்வமாய்க் காட்சி தரும் குருவாயூரப்பனின் அழகு அந்த நபரின் மனதை முழுமையாகக் கொள்ளை கொண்டு விட்டது.

உடனே, “இறைவா! நான் விருப்பமே இல்லாமல் தான் இந்தக் கோவிலுக்கு வந்தேன். ஆனால் இப்போது உன்னைத் தரிசித்தவாறே எனது எண்ணம் மாறி விட்டது. உன்னைத் தரிசித்ததால் தான் நான் பிறவிப் பயனையே பெற்றவன் ஆனேன். உன்னைக் காணாத கண் கண் அல்ல!” என்று மனம் விட்டுக் கூறினார்.சந்நிதியில் இருந்து வெளியே வந்ததும் அந்தப் பெண் தன் கணவரிடம், “பார்த்தீர்களா? அது தான் குருவாயூரப்பனின் மகிமை. விருப்பமே இல்லாமல் கோவிலுக்கு வந்த உங்கள் மனதையும் ஈர்த்து விட்டான் பாருங்கள்!” என்றாள். “ஆமாம்! இனி ஒவ்வொரு வருடமும் ஒருமுறையாவது இந்தக் கோவிலுக்கு வந்து குருவாயூரப்பனைத் தரிசித்தே தீருவேன்!” என்று அங்கேயே உறுதி பூண்டார் அவளது கணவர்.

பக்தியே இல்லாமல் கோவிலுக்கு வந்தவர் குருவாயூரப்பனைத் தரிசித்தவுடன் பெரும் பக்தராகி விட்டாரே! அது எப்படிச் சாத்தியம்? வேறொன்றுமில்லை. குருவாயூரப்பன் தன் அழகினால் அவரது மனதை நன்கு கட்டிப் போட்டு விட்டான். இறைவனின் அழகு, குணங்கள் ஆகியவற்றை நாம் நன்றாக அநுபவிக்கத் தொடங்கி விட்டால், நம் மனம் மற்ற அற்ப விஷயங்களில் இருந்து விலகி, முழுமையாக இறை விஷயத்தில் ஈடுபடத் தொடங்கி விடுகிறது. அதுதான் இங்கே நடந்தது.

இக்கருத்தை ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள் குருவாயூரப்பனைக் குறித்து எழுதிய மணிமங்கல ஸ்தவத்தில் அழகாகப் பாடியுள்ளார்:
“நாலஸ்ய மூலம் சரணாங்குலிப்யாம் பத்மம் ப்ரஸூனம் கர பங்கஜேன க்ருண்ஹன் க்ருஹீதம் ஹ்ருதயாம்புஜம் நு மதீயம் ஆவேதயஸீதி மன்யே”
“குருவாயூரப்பா! உன் வலது கீழ்க் கரத்தில் நீ ஏன் தாமரை ஏந்தி இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். உன்னிடம் வரும் அடியார்களின் உள்ளமாகிய தாமரையை உன் கரத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விடுகிறாய். நீ பிடித்துக் கொண்டவாறே அவர்களின் உள்ளத் தாமரை உன்னிடமேயே நிலைபெற்று விடுகிறது. அதன்பின் அவர்களின் மனம் மற்ற விஷயங்களை நாடுவதில்லை.

அடியார்களின் உள்ளத் தாமரையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொள்வதை உணர்த்தவே கையில் தாமரையை ஏந்தியபடி நீ காட்சி தருகிறாய்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.‘பத்மம்’ என்றால் தாமரை. ‘பத்மீ’ என்றால் தாமரையை ஏந்தி இருப்பவன். அடியார்களின் உள்ளங்களாகிய தாமரையைக் கவர்பவன் என்பதற்கு அடையாளமாகத் தாமரையைத் திருக்கையில் ஏந்தி இருப்பதால், திருமால் ‘பத்மீ’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 346-வது திருநாமம்.“பத்மினே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனங்களைத் திருமால் கவர்ந்து செல்வார்.

347. பத்ம நிபேக்ஷணாய நமஹ (Padhma Nibhekshanaaya namaha)

(திருநாமங்கள் 346 முதல் 351 வரை - வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)திருவஹீந்திரபுரத்தில் கோவில் கொண்டிருக்கும் தெய்வநாயகப் பெருமாளைக் குறித்து ஐம்பது ஸ்லோகங்கள் அடங்கிய தேவநாயக பஞ்சாசத் என்ற துதியை இயற்றினார் வேதாந்த தேசிகன். அதில் 16-வது ஸ்லோகம் முதல் 45-வது ஸ்லோகம் வரை உள்ள முப்பது ஸ்லோகங்களாலே தெய்வநாயகப் பெருமாளின் திருமுடியிலிருந்து திருவடி வரை உள்ள ஒவ்வொரு அவயவத்தையும் ஆழ்ந்து அநுபவித்து வர்ணித்துள்ளார் தேசிகன். அதில் 24 மற்றும் 25-வது ஸ்லோகங்களில் தெய்வநாயகப் பெருமாளின் கண்ணழகை இரண்டு உவமைகளைக் கொண்டு வர்ணிக்கிறார் தேசிகன்.

“ஆலக்ஷ்ய ஸத்த்வம் அதிவேல தயோத்தரங்கம்
அப்யர்த்தினாம் அபிமத ப்ரதிபாதனார்ஹம்
ஸ்நிக்தாயதம் ப்ரதிம சாலி ஸுபர்வ நாத
துக்தாம்புதே: அநுகரோதி விலோசனம் தே”
என்ற 24-வது ஸ்லோகத்தில், பாற்கடலோடு திருமாலின் கண்களை ஒப்பிடுகிறார் தேசிகன்.

திருப்பாற்கடல்தெய்வநாயகனின் திருக்கண்கள் எப்போதும் அலைகள் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கின்றனகருணை அலை அலையாகக் கரை புரண்டு ஓடி வருகின்றது ஐராவதம், காமதேனு, சந்திரன், அமுதம் என அவரவர் விரும்பிய பொருட்களை எல்லாம் தந்ததுஅடியார்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் அக்கண்கள் அருளி விடுகிறது அகன்று இருக்கிறதுஅடியார்களுக்கு நிறைய அருள்புரிய வேண்டுமென்ற
ஆர்வத்தினாலே அகன்று விரிந்து காதுவரை நீண்டுள்ளது பார்ப்பதற்கு அழகாக உள்ளதுபார்ப்பதற்கு அழகாக உள்ளது கடல்பிராணிகளுக்கு (சத்த்வம்) இருப்பிடமாகிறது சத்துவ குணத்துக்கு (சத்த்வம்) இருப்பிடமாக உள்ளது அடுத்தபடியாக,

“விச்வ அபிரக்ஷண விஹார க்ருத க்ஷணை: தே
வைமானிக அதிப விடம்பித முக்த பத்மை:
ஆமோத வாஹிபி: அநாமய வாக்ய கர்ப்பை:
ஆர்த்ரீ பவாமி அம்ருத வர்ஷ நிபை: அபாங்கை:”
என்ற 25-வது ஸ்லோகத்தில், உலகைக் காக்க வல்ல திருமாலின் அருட்பார்வை மலர்கின்ற தாமரைப் பூவை ஒத்திருக்கின்றது என்று ஒப்பிடுகிறார் தேசிகன்.

மலரும் தாமரைதெய்வநாயகனின் அருட்பார்வை.ஆமோதம் (நறுமணம்) நிறைந்திருக்கிறதுஆமோதம் (மகிழ்ச்சி) நிறைந்திருக்கிறது.
நம்மிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்நம்மைப் பார்த்து நலமா என்று விசாரித்து, நம்முடன் அக்கண்கள்
பேசுகின்றன.தேனைப் பொழிகிறது அமுத மயமான அருளைப் பொழிகிறது.அதில் நனைந்தால் வெப்பம் தணிந்து உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படுகிறதுஅதில் நனைந்தால், பிறவிப் பிணியிலுள்ள வெப்பங்கள் விலகி, ஆத்மாவுக்குக் குளிர்ச்சி உண்டாகிறது.

‘பத்ம’ என்றால் தாமரை. ‘நிப’ என்றால் போன்ற. ‘ஈக்ஷண’ என்றால் பார்வை. ‘பத்மநிபேக்ஷண:’ என்றால் தாமரை மலர்வது போன்ற பார்வையை உடையவர் என்று பொருள். தாமரை மொட்டு எப்படி அழகாக, நளினமாக, மென்மையாக, குளிர்ச்சியோடு மகிழ்ச்சியும் அளித்தபடி மலருமோ, அதுபோல் இறைவன் கண்ணை மூடித் திறப்பது என்பதும் அழகாக, நளினமாக, மென்மையாக இருக்கும்; நமது துயரங்களை எல்லாம் போக்கி மிகுந்த ஆனந்தத்தைத் தரும். அதனால் தான் திருமால் ‘பத்மநிபேக்ஷண: - தாமரை மலர்வது போன்ற திருக்கண் பார்வையை உடையவர்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 347-வது திருநாமம்.“பத்மநிபேக்ஷணாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தன் திருக்கண்களால் கடாட்சித்துக் குளிர்விப்பார்.

348. பத்மநாபாய நமஹ (Padhmanaabhaaya namaha)
(திருநாமங்கள் 346 முதல் 351 வரை - வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனுடைய திருமேனி அழகின் வர்ணனை)திருமங்கை ஆழ்வாருக்குத் திருமாலிடம் இருக்கும் காதல் உச்சத்தைத் தொட்ட அளவிலே, பரகால நாயகி என்னும் பெண்தன்மையை அடைந்தார் திருமங்கை ஆழ்வார். அந்தப் பரகால நாயகி அவ்வப்போது தலைவனாகிய திருமாலைச் சந்தித்து அவனோடு உறவாடுகிறாள். இக்காதலைப் பற்றிக் கேள்விப்படுகிறாள் நாயகியின் தாய். “பெண்ணே! இது நம் குடும்ப மானத்துக்கு ஏற்ற செயல் அல்ல! நீ இப்படி ரகசியமாகக் காதல் கொள்வது நம் கௌரவத்துக்கே இழுக்கு!” என்று சொல்லித் தலைவனைச் சந்திக்க விடாமல் பரகால நாயகியைத் தடுத்து விடுகிறாள் தாய்.

பரகால நாயகி தன்னைச் சந்திக்க வராதபடியால், அவளுக்கு என்ன ஆயிற்று என்று அறிய விரும்புகிறார் தலைவனாகிய திருமால். பரகால நாயகி ஊருக்கு வெளியே உள்ள பூந்தோப்பில் பூக்கொய்யச் சென்றிருக்கிறாள் என்ற செய்தியைத் திருமால் கேள்விப் படுகிறார். வேட்டைக்காரனாக வடிவம் பூண்டு, இடக்கையில் வில்லும் வலக்கையில் அம்பும் முதுகிலே அம்பறாத் தூணியும் தாங்கியபடி அந்தப் பூந்தோப்புக்குள் நுழைகிறார்.

தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். ஆனந்தமாக இருக்கிறார்கள். அதன்பின் தலைவனாகிய திருமால், “என் ஊரான திருவரங்கத்துக்குப் போகிறேன்!” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறார். அதன்பின் அவளது தோழி வந்து தலைவியைச் சந்தித்து, “தலைவன் வந்தானா? அவன் எப்படி இருந்தான்? அவனைப் பற்றி எனக்குச் சொல்!” என்று கேட்கிறாள். அதற்குப் பரகால நாயகி விடையளிக்கிறாள்:

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர்க் குழை இருபாடு இலங்கி ஆட
எய்வண்ண வெஞ்சிலையே துணையாய் இங்கே
இருவராய் வந்தார் என்முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரை வாய்க்கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே
அவ்வண்ணத்து அவர்நிலைமை கண்டும் தோழீ
அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே!”

“தோழியே! கரிய, வாசம்மிக்க, அலகலகாய் இருக்கும் குழல் கற்றைகள் பின்னே அலைந்திட, இரு காதுகளிலும் மகரக் குண்டலங்கள் அசைந்திட, தெய்வத் தன்மை மனிதத் தன்மை இரண்டும் தோற்றிட, கையில் வில் ஏந்திக் கொண்டு தலைவன் என் முன்னே வந்து நின்றார். அவரது திருமேனியின் ஒவ்வொரு அங்கமும் தாமரையை ஒத்திருக்கும். அவரது திருக்கரங்கள், திருவாய், திருக்கண்கள், திருவடிகள் அனைத்துமே தாமரை போன்றவை.

கைவண்ணம் தாமரை- முதலில் தாமரை போன்ற கரங்களால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.வாய்க் கமலம் போலும் - தாமரை போன்ற திருவாயினாலே இன்மொழிகள் பேசினார்.கண் இணையும் அரவிந்தம் - தாமரை போன்ற திருக்கண்களாலேயே பேசித் தனது காதலை என்னிடம் தெரிவித்தார்.அடியும் அஃதே - அந்தக் கண்ணழகுக்குத் தோற்ற நான் அவரது தாமரை போன்ற திருவடிகளில் விழுந்து அவற்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டேன்.

இத்தகைய இறைவன் என்முன்னே வந்து நின்று உறவாடியவாறே, அவரது பெருமையை எண்ணி அஞ்சி நான் சற்றே விலகி நின்று விட்டேன்!” என்று நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள் பரகால நாயகி.இத்தகைய அற்புதமான அகத்துறை பக்திப் பாசுரத்தில் வரும் “கைவண்ணம் தாமரை, வாய்க்கமலம் போலும், கண்ணிணையும் அரவிந்தம், அடியும் அஃதே” என்ற தொடரில், தாமரை, கமலம், அரவிந்தம் அனைத்துமே தாமரை மலரைக் குறிக்கும் வார்த்தைகளே. அதாவது, திருமாலின் ஒவ்வொரு அங்கமுமே தாமரை போலே இருக்கிறது என்பதே இதன் கருத்தாகும். தாமரையில் நாம் காணக்
கூடிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் போன்ற நற்பண்புகள் அனைத்தும் மேலும் சிறப்பாக இறைவனின் அங்கங்களில்  
உள்ளன என்பது தாத்பரியம்.

அந்த வகையில், திருமாலின் உந்தியும் (கொப்பூழும்) தாமரை போலவே இருக்கிறது. அதாவது தாமரைக்கே உரிய குளிர்ச்சி, அழகு, மென்மை, நறுமணம் ஆகிய அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெற்றிருக்கிறது. தாமரை போன்ற உந்தியை உடையவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘பத்மநாப:’ என்றழைக்கப்படுகிறார். ‘பத்ம’ என்றால் தாமரை, ‘நாபீ’ என்றால் உந்தி, ‘பத்மநாப:’ என்றால் தாமரை போன்ற உந்தியை
உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 348-வது திருநாமம்.

(முக்கியக் குறிப்பு: 48-வது மற்றும் 198-வது திருநாமங்களாகவும் இதே ‘பத்மநாப:’ என்ற திருநாமம் வருகிறது. அவ்விரு இடங்களிலும், உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தவர், உந்தியிலே தாமரையை உடையவர் என்ற ரீதியில் பொருள் உரைக்கப்பட்டது. இங்கே 348-வது திருநாமமாக வரும் ‘பத்மநாப:’ என்பது பரவாசுதேவனைக் குறிப்பதால், அதற்குப் பொருத்தமாகத் தாமரை போன்ற உந்தியை உடையவர் என்று உரையாசிரியர்கள் பொருள் உரைத்துள்ளார்கள்)“பத்மநாபாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் உடல் பருமன், அதிக உடல் எடை போன்றவை இல்லாமல் அளவான, ஆரோக்கியமான உடல் அமைப்புடன் திகழத் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!