×

ஆடியில் அம்மன் வழிபாடும் விரதங்களும்!

ஆடி மாதம் பெண்களுக்கு உகந்த மாதமாக அம்மன் கோயில்களில் பல விழாக்கள் நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மனுக்கு மட்டுமான முளைக்கொட்டு விழா நடைபெறும் அன்னை மீனாட்சி ஆடி வீதியில் தினம் வலம் வருவாள். சொக்கர் இதில் பங்கேற்பதில்லை. சங்கரன் கோயிலில் ஆடி தபஸ் நடக்கும். அம்மன் ஒற்றைக் காலில் தவம் இருந்து சிவபெருமானை சங்கர நாராயணர் வடிவில் தரிசிப்பாள்.

பெண்கள் தங்கள் வீடுகளில் இறந்துபோன கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை வழிபட்டு அன்னதானம் வஸ்திர தானம் செய்யும் மாதம் ஆடி மாதம் ஆகும். சுமங்கலிகள் கெளரி விரதம் வரலட்சுமி நோன்பு, கோகிலா விரதம், ஜெய பார்வதி விரதம், வாராகி ஏகாதசி, குஷ்ய ஏகாதசி என பல பெயர்களில் விரதம் இருந்து இறைவனை வணங்கும் மாதம் ஆடி மாதம். சகோதர நலம் காட்டும் பூரி ஜெகநாத் ரத யாத்ரா நிகழும் மாதம் இதுவாகும். பால்கி யாத்ரா என்று கண்ணனுக்கு [விதோபாவுக்கு] யாத்ரா நடைபெறும் மாதம் இது.

 அவ்வை நோன்பு

ஆடி மாதம் பெண்கள் மட்டுமே செய்யும் அவ்வை நோன்பு தென் மாவட்டங்களில் பிரசித்தி  பெற்றது. இது நள்ளிரவு தொடங்கி அம்மனின் கதை சொல்லி உப்பு போடாத மாவில் பல் உருவங்களைச் செய்து வணங்கி ஆண்களுக்குக் காட்டாமல் அவற்றைப் பெண்கள் மட்டுமே உண்பது வழக்கம். இதை அவ்வையார் நோன்பு என்றும் கூறுவர். அசந்தால் ஆடி, தப்பினால் தை, மறந்தால் மாசி என்ற பழமொழி இந்த மாதங்களில் மட்டும் இவ்வழிபாடு நடப்பதைக் குறிக்கின்றது.

 வாராகி நவராத்திரி

மாலை நேரத்தில் பெண்கள் மட்டும் கூட்டமாகச் சேர்ந்து வழிபடும் இந்த வாராகி நவராத்திரியை சிலர் குப்த ராத்திரி என்றும் வேறு சிலர் காயத்ரி ராத்திரி என்றும் வழங்குகின்றனர். இமாசலப் பிரதேசத்தில் குஹ்ய நவராத்திரி என்பர். சாகம்பரி தேவிக்கு காய்கறி, கனி வர்க்கங்கள வைத்து வணங்க வேண்டும். தினமும் நெய் விளக்கேற்றி ஒற்றை திரி தீபம் ஏற்றி வாராகிக்குரிய சிவப்பு வண்ணத்தில் செம்பருத்தி மலர்கள் படை சிவப்பு மணி மாலை அல்லது சிவப்பு நிறத்தில் ருத்ராட்சக் கொட்டை உருட்டி ஜெபம் செய்து தச மகாவித்யா என்ற பத்து தேவிகளையும் வணங்கி வர வேண்டும். இந்த விரதத்தின் போது சைவ உணவு மட்டுமே உண்டு சாத்விக வாழ்க்கை நடத்த வேண்டும். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்கு மற்றும் பறவைகளுக்கு அன்னதானம் செய்வது உத்தமம் ஆகும்.

 குப்த நவராத்திரி

வாராகி நவராத்திரியை சில குப்த நவராத்திரி என்பர். இதுவும் ஒரு சுமங்கலி பூஜை. ரிஷ்ய சிருங்கர் என்ற முனிவ ரிடம் வந்து ஒரு சுமங்கலிப் பெண் தன் கணவர் தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதால் தனக்கும் பாவம் சேர்வதாகச் சொல்லி அழுதாள். அதற்கு அம்முனிவர் நீ குப்த நவராத்திரி விரதம் இரு உன் கணவனின் பாவம் உன்னை சேராது என்றார். அவளும் அப் படியே செய்தாள். அவள் கணவனும் காலப்போக்கில் திருந்தி விட்டான். அவளும் பாவத்தில் இருந்து விடுபட்டாள். எனவே கணவனைத் திருத்த நினைப்பவர்கள் இந்த ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியை அனுஷ்டிக்கலாம். வாராகி அல்லது குப்தா நவராத்திரியின் போது நகம் வெட்டக் கூடாது; முடி வெட்டக் கூடாது, யாரிடமும் கோபப்படுதல் ஆகாது. மது, புகை, போதையை முற்றிலும் விலக்கிவிட வேண்டும். பகலில் உறங்கக் கூடாது. கலவி கூடாது. கருப்பு உடை உடுத்தக் கூடாது. வாராகி நவராத்திரி அல்லது குப்த நவராத்திரியை ஆண்கள் கடைப்பிடித்தால் அவர்களுக்கு அதிகார பதவியை வாராகி வழங்குவாள். தீய சக்திகள் அண்டாது. பில்லி சூனியம் கிட்ட வராது. திருஷ்டி அற்றுப் போகும்.  

 ஆடி செவ்வாய்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பாக நடப்பதைக் காணலாம். ஆடி செவ்வாய் நாக வழிபாட்டுக்கும் புற்று வழிபாட்டுக்கும் உகந்தது. நாகரம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன் கோயில்களில் ஆடி செவ்வாய் அன்று ஆடு சேவல் பலி கொடுத்து வழிபடுவதுமுண்டு. நாகநாதர் கோயில் போன்ற பிரதிஷ்டை பெற்ற கோயில்களில் பலி கொடுக்காமல் ஆடு மற்றும் சேவல் களைக் காணிக்கையாகக் கோயிலுக்கு கொடுக்கின்றனர். கிராமங்களில் பலியிட்டு படையல் போடுகின்றனர்.

ஆடி செவ்வாய் அன்று நடைபெறும் முதல் செவ்வாய் அன்று விழா முளைப்பாரி தொடங்கு வதாக பறை சாற்றுவர். அடுத்த செவ்வாய் அன்று விதை இடுவர் இதை முத்து போடுதல் என்பர். மறு செவ்வாய் அன்று முளைப்பாரி எடுத்துக்கொண்டு போய் நீர்நிலைகளில் ஆற்றில் குளத்தில் கண்மாயில் கரைத்துவிடுவர்.

 ஆடி பௌர்ணமி

ஆடி பௌர்ணமியுடன் தொடர்புடைய சில சிறப்பான நோன்புகள் விரதங்கள் இருக்கின்றன. கோகிலா விரதத்தை ஆடி பௌர்ணமியில் தொடங்கி ஆவணி பௌர்ணமியில் முடிவு செய்வர். இது ஒரு மாத விரதம் ஆகும். அடுத்து இவ்விரதத்தின் வைரவர், வராக மூர்த்தி, நரசிம்மன், மகிஷாசுர மர்த்தினி ஆகியோரை வணங்கி வர வேண்டும். கௌரி விரதம் என்பது மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் பெரும்பான்மையான பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். இவ்விரதம் ஆடி மாதத்தில் சுக்ல பட்ச ஏகாதசி அன்று தொடங்கி ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடி பௌர்ணமி அன்று நிறைவு பெறும்

ஜெயபாரதி விரதம் ஆடி பௌர்ணமிக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இது பெரும்பாலும் குஜராத்தில் பெண் களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் வளர்பிறையில் திரயோதசி அன்று தொடங்கி ஆறு நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு பௌர்ணமி முடிந்து மூன்றாம் நாள் நிறைவு பெறுகிறது. பௌர்ணமிக்கு முதல் மூன்று நாள் பிறகு மூன்று நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.ஆடி பௌர்ணமி அன்று ஹயக்ரீவர் அவதரித்த நாள் என்பதால் அன்று வைணவத் திருக்கோயில்களில் சிறப்பு சேவை ஆராதனைகள் உண்டு.

 ஆடி மாதத்தின் ஏகாதசி விரதங்கள்

யோகினி ஏகாதசி, ஆடி மாதப் பௌர்ணமி முடிந்து வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும் அன்று விரதம் இருந்தால் தோல் நோய் விலகும் என்பது நம்பிக்கை. சாதுர் மாஸ்ய விரதம் என்பது நான்கு மாதங்கள் நடத்தும் விரதம் ஆகும். விஸ்வகர்மா, தேவசகாயினி ஏகாதசி என்ற ஆடி மாத சுக்லபட்ச ஏகாதசியில் உறங்கப் போய்விடுவார். நான்கு மாதம் கழித்து பிரபோதினி ஏகாதசி அன்று கண் விழிப்பார். இந்த விரதம் ஆண் பெண் என எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

 ஆடி அமாவாசை

அமாவாசை என்பது நீத்தார் கடன் தீர்க்கும் நாள் அன்று இருட்டு என்பதால் அதை இறந்தோருடன் தொடர்புபடுத்தியது ஆதி மனிதனின் மனம். இன்று வரை அதில் இருந்து மனித எண்ணங்கள் மாறவில்லை அக்கருத்தும் மறையவில்லை. கதிரவன் தெற்கே திரும்பும் ஆடி மாதத்து அமாவசை, நடுவில் நிற்கும் ஐப்பசி மாதத்து அமாவாசை, வட திசை திரும்பும் தை மாதத்து அமாவாசை ஆகிய நாட்களில் இறந்தோர் இப்பூமிக்கு வருவர் என்று நம்புவதால் அன்று அவர்களுக்கு படையலிட்டு திருப்தி செய்து அனுப்புகின்றனர். கடலில் நீராடுதலும் கடற்கரையில் வைத்து நீத்தார் கடன் தீர்த்தலும் உண்டு. ஆடி அமாவாசை அன்று மலை ஏறுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலை போன்றவற்றில் பௌர்ணமியை விட அமாவாசை அன்றிரவு மலையேறுவது சிறப்பான நிகழ்வாகும்.

ஆடி அமாவாசை அன்று மகாபாரதப் போருக்கு முன்பு அரவானைப் பலி கொடுத்த நாள் என்பதால் சேலம் மாவட்டத்தினர் அரவானின் தலையைக் குறிக்கும் வகையில் ஒரு தேங்காயை எடுத்து அந்த தேங்காயின் மூன்று கண்களைத் திறந்து அதற்குள் சர்க்கரை, பொரிகடலை, தேங்காய் பூ வைத்து தீயில் முழுத் தேங்காயைச் சுட்டு இறைவனுக்கு படைத்து பின்பு உடைத்து உள்ளிருக்கும் இனிப்பைத் தின்பர்.  

 கேரளாவில் ஆடி

கேரள மாநிலத்தில் ஆடி மாதத்தை கற்கடக மாசம் என்பர். இம்மாதத்தில் ராம கதை படிப்பதை பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். எழுத்தச்சன் எழுதிய அத்யாத்ம இராமாயணத்தை வீடு
தோறும் வாசிக்கின்றனர். திருச்சூரில் உள்ள வடக்குனாதன் கோயிலில் ஆடி பூரம் நாள் அன்று யானைகள் அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும். அன்று ஆண்கள் வயிற்றில் புலி முகம் வரைந்து வருவதும் உண்டு. அன்று அங்கு நாலமபல் வழிபாடு என்று நான்கு கோயில் களுக்கு சென்று வருகின்றனர். ஆயுர்வேத சிகிச்சை தொடங்க சிறந்த மாதம் ஆடி மாதமே என்று நம்புகின்றனர். அந்த மாதம் முழுக்க உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுகின்றனர்.

 ஆடி பதினெட்டாம் பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் காவிரி பாயும் நிலப்பகுதியில் பதினெட்டாம் பெருக்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நீர்நிலைகளுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. தலைக்காவிரி இருக்கும் கர்நாடகத்தில் தென்மேற்கு மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து வரும். அந்நாளில் கரையில் பெண்கள் கூடி பூவும் மங்கலப் பொருட்களும் தீபமும் தண்ணிரில் விட்டு கங்கையம்மனை வணங்குவர். தாலி பெருக்கி போடுவதும் இந்நாளின் சிறப்பம்சம் ஆகும். காவிரி பாயும் மாவட்டங்களில் பெண்களிடம் இப்பழக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு ஆடி மாதத்தில் பெண்களும் பெண் தெய்வங்களும் சிறப்பிடம் பெறுகின்றனர். இம்மாதம் மக்கள் நலம் வளம் காண வழிவகுக்கும் மாதமாகும். இம்மாதம் முதல் நெல் வயல் களில் வேளாண் பணிகள் விரைவு பெறுகின்றன. இனி கிராமத்துப் பெண்களுக்கு ஓய்வு என்பதே இருக்காது.

Tags : Audi ,
× RELATED இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து...