குன்றத்துக் குமரன் மருதத்து மருமகனான வரலாறு

தமிழில் மலையைக் குறிக்க 113 சொற்கள் உள்ளன. மலையில் அதன் குகைகளில் தங்கி வாழ்ந்த மனித சமுதாயம் மெல்ல மெல்ல கீழே இறங்கி நதிக் கரைகளில் தங்கி வேளாண் தொழிலை கற்றுக்கொண்டு செய்ததால் ஒரே இடத்தில் தங்கி வாழத் தொடங்கியது. ஆற்றங்கரை வாழிடம்  மருத நிலம் எனப்பட்டது. மருத நிலம் மனித நாகரிகத்தின் தொட்டில் ஆயிற்று. இது உலகெங்கும் காணப்பட்ட வரலாற்று உண்மை.

தமிழகத்தில் மருதநில நாகரிகமும் மன்னன் ஆட்சியும் அவன் நிலத்துக்கு அதிபதியாகவும் உருவெடுத்தபோது மண்ணுக்காக போர்கள் நடைபெற்று அதிக பரப்பளவில் நிலத்துக்கு அதிபதியானவன் பேரரசன் என்று புகழப் பட்ட காலத்தில் தெய்வங்களிலும் சில மாற்றங்கள் உண்டாயின. இவ்வாறு மாற்றப்பட்டவனே குன்றத்தின் தலைவனாக இருந்த இளையோனாகிய சேயோன் அல்லது குமரன் மருத நிலத்தின் தலைவன் ஆனான்..

நிலவுடைமை, குடும்பம் மற்றும் மன்னராட்சி

நிலவுடைமை தோன்றியதும் நாட்டில் சொத்துரிமை தோன்றியது. தந்தை சொத்துக்கள் தன் வாரிசுகளுக்கு வேண்டும் என்ற  எண்ணத்தில் தனக்கு பிறக்கும் குழந்தைகளை இனங்கண்டறிய தனக்கென்று பெண்களை திருமணம் என்ற சடங்கின் மூலமாக ஆண் உரிமை கொண்டான். உடைமை ஆக்கினான். இப்படித்தான் குடும்பம் தோன்றியது. தமிழகத்தில் குடும்பர் பலர் சேர்ந்து  தம்முள் வலிமை மிக்கவனை வேந்தன் என்று அழைத்தனர். வேந்து என்றால் வலிமை என்பது பொருள்.  

தமிழகத்தில் மூவேந்தர்கள்  சமுதாய அமைப்பின்படி வலிமை மிக்க குடும்பர் ஆவர். அப்போது வட நாட்டில் இருந்து இங்கு பரவிய பவுத்த சமயம் வலிமை உடைய தெய்வத்தை இந்திரிய தானம் செய்யும் ஆண் மகனை இந்திரன் என்றும் தேவேந்திரன்  என்றும் குறிப்பிட்டது. புத்தருக்கு ஞானஸ்நானம் செய்தவன் இந்த தேவேந்திரனே ஆவான். ஆக புத்தருக்கும் மேம்பட்ட உயர்வான வலிமையான தெய்வமாக இந்தத் தேவேந்திரன் போற்றப்பட்டான்.

இவன் இடி மழைக்கும் கடவுள் என்றதனால் நெல் வேளாண்மைக்கு அதிக மழையும் தண்ணீரும் எதிர்பார்த்திருந்த மருத நிலத்தவர் வேந்தன் என்ற பெயரை இந்திரன் அல்லது தேவேந்திரன் என்று   உயர்நிலைக்கு மாற்றி வணங்கி வந்தனர். இத்தகைய மாற்றத்தை மொழியியலார் உயர்நிலை ஆக்கம் அல்லது sanskritisation என்பர். பவுத்தர்கள் சமஸ்கிருத மொழியைப் பயன்படுத்தவில்லை என்றாலும் இத்தகைய மாற்றத்துக்கு சம்ஸ்கிருதாக்கம் என்று பெயர். இம்மாற்றம் காரணமாக தமிழகத்தில்  கி.பி.  பத்து பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த உரையாசிரியர்கள் வேந்தன் என்பவன்  இந்திரன்  என்று விளக்கம் அளித்தனர்.

இந்திர சேனாதிபதியான வீரன் முருகன்

மருத நில நாகரிகம் நாடெங்கும் பரவிய போது இளமைக்கும்  வீரத்துக்கும் அடையாளமாக விளங்கி வந்த முருகனை அல்லது குமரனை அந்நிலத்து மக்கள் தமது மருமகன் ஆக்கிக்கொண்டனர். முருகனை இந்திரனின் சேனாதிபதி ஆக்கி இந்திரனின் மகள் தேவயானையை முருகனுக்கு மனைவியாக்கி புதிய வரலாற்றை உருவாக்கினர்.

மருதத்திணையும் தமிழர் நாகரிகமும்

தமிழக சமய வரலாற்றில் மருத நிலம் முக்கியத்துவம் பெற்றதற்கு காரணம் அங்கு தான் தமிழர் நாகரிகம் தோன்றியதாகும். மருத நிலத்தை அடியொற்றியே சட்டங்களும் சமயமும் நீதியும் சமுக விதிமுறை களும் தோன்றின. தமிழர்களின் அகத்திணை ஒழுக்கமும் புறத்திணை ஒழுக்கமும் மருத நிலத்து வாழ்க்கையை வைத்து உருவாக்கப்பட்டன. மருத நிலத்தில் குடும்பங்கள் கூடி வாழ்ந்த காரணத்தால் ஒரு குடும்பன் வேந்தன் ஆகி இருந்தான். இவ்வாறு பல நதிக்கரையில் பல வேந்தர்கள் உருவாகினர்.

 சிலம்பாட்டம், வாள் பயிற்சி,  எருது கட்டு, வண்டி மாட்டுப் பந்தயம், மல்லுக்கட்டு [wrestling] போன்ற வீர விளையாட்டுகளில் மருத நிலத்து வேளாண் குடி ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். வேளாண் பணிகள் நடைபெறாத போது இவர்களே போர் வீரர்களாகி மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க போர் புரிந்தனர்.  

அறுவடை முடிந்த பின்னர் நெற்களங்கள்  போர்க்களங்கள் [வெண்ணிப்பறந்தலை] ஆயின. மற்ற மன்னர்கள் படையெடுத்து வந்த போதும் புறத்திணை இயல் கூறும் எழு வகை முறைகளை பின்பற்றி அறப் போர் புரிந்தனர். இப்பின்னணியில் வீரத்துக்குப் புகழ் பெற்ற வேலன் அல்லது குமரனை இவர்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். நிலத்தைப் போலவே பெண்ணையும் உடைமையாகக் கருதிய வேளாண் குடியினர் தன வீட்டுப் பெண்ணை மணமுடித்துக் கொடுத்து முருகனை தமது மருமகனாக்கிக் கொண்டனர்.

முல்லையும் குறிஞ்சியும்

குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோனை, குன்று தோறாடி வந்த அக்குமரனை இடைக்காலத்தில்  மருத நிலத்தெய்வமான இந்திரனின் மருகன் மருமகன் ஆக்கினர்.  குறிஞ்சி நிலத்தில் மனித இனத்தின் பண்பாடு காதல் வாழ்வு மூன்று மாதம் [களவியல்- தொல்காப்பியம்] மட்டுமே இருக்க வேண்டும் பின்னர் அவ்வாழ்க்கை கற்பு வாழ்க்கையாக இல்லறமாக  நல்லறம் [கற்பியல் - தொல்காப்பியம்] காக்கப்பட வேண்டும் என்று தமிழர் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.

குறிஞ்சியை விட்டுக் கீழே இறங்கினால் அடிவாரத்தில் மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ள பகுதியில் இனிய இல்லறம் நடைபெற்றது.  தலைவன் போருக்குச்  சென்றாலும் அவன் விரைவில் மழைக்காலம் வந்ததும் தலைவியுடனுறைய திரும்பி வருவான் என்று தலைவி ஆற்றி இருந்தாள். இங்கு மாயோன் கடவுளாக  வணங்கப்பட்டான். தலைவன் கோ என்று அழைக்கப்பட்டான். இது வளர்ச்சி காலகட்டம் ஆகும். ஆனால் வல்லரசு போல  ஆணாதிக்கமும் அவனது அதிகாரமும் உச்சத்தில் இருந்த இருக்கும் இடம் என்றால் அது மருதம் மட்டுமே .

மருதத்தில் ஆண் முதன்மைச் சமுதாயம்

திருமணத்தின் முலமாக மனித குலங்கள் உறவுகொள்வதும், பகை பாராட்டு வதும் நிலம் மற்றும் பெண் என்ற இரு அடிப்படைகளில் தோன்றின. மனித

நாகரிகம் வளர வளர பெண் முதன்மை சமுதாயம் மாறி ஆண் முதன்மை சமுதாயம் தோன்றி இன்று வரை நிலைபெற்றுள்ளது. இன்றைய நுகர்வு கலாசாரத்தில் பெண்கள் நுகர் பொருளாக அங்கீகாரம் பெற்றதற்கு ஒரே காரணம் ஆணாதிக்கம் உச்சத்தில் இருப்பதாகும்.

பெண்களும் குழந்தைப்  பேறும்

மருத நிலத்தில் பெண்கள் குலமகள், பொதுமகள் என்று இரு வகைப்பட்டனர். பொதுமகள் உருவாக போரும் ஒரு காரணம் ஆயிற்று. தனக்கென்று தனிக்குடும்பம் இல்லாத  பொது மகள் என்ற பிரிவினர்   காதற் பரத்தை, காமப் பரத்தை, இற் பரத்தை என்று பல வகைகளில் வாழ்ந்து வந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் சிலர் ஒருவனுடன் மட்டும் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கு குழந்தை பெறும் உரிமை வழங்கப்படவில்லை.

 

குழந்தையும் பெண்களும் இணைக்கப்படும் இடத்தில் தான் ஆணின் சொத்துரிமையும் அதற்கேற்றபடியாக வடிவமைக்கப்பட்ட சட்ட விதிகளும் தக்கதொரு  பதிலாக வருகின்றது.  குல மகள் அல்லது மனைவி எனப்படுபவள் ‘புதல்வன் தாய்’ எனப்பட்டாள். பலவகைப்பட்ட பரத்தையராக இருந்தன பொது மகளிர் போரில் பித்து வரப்பட்ட கொண்டி மகளிராக இருந்தனர். சுத்த ரத்தக் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த மருத நிலத்து ஆண்கள் வேற்று நிலத்து பெண்கள் தமக்கு குழந்தை பெற்றுத்தருவதை விரும்பவில்லை.

மரபணு மாற்றத்தினால் தம் இனத்துப் பண்புகளில் மாற்றம் ஏற்படும் என்று பொது மகளிரை குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை.  இந்நிலத்தில்  பலதார மணம் ஆணின் கவுரமாகக் கருதப்பட்ட போதிலும் போர் அடிமைகள் கொண்டு மகளிர் பணியாட்களாக மட்டுமே இருத்தி வைக்கப்பட்டனர். வேற்று நாட்டு மன்னர்  மகளைத் திருமணம் செய்து அந்நாட்டை அடிமை கொள்ளும் மன்னர்கள் அந்தப் பெண்களை தம் மண்ணுக்கு அழைத்து வருவதில்லை.

அவர்களை அவர்களின் நாட்டிலேயே தங்க வைத்து கப்பம் மட்டும் பெற்றுக் கொண்டனர். இளந்திரையன் குழந்தையாக இருந்த போதே  தொண்டைக்கொடி சுற்றப்பட்டு கடலில் அவன் தாயால் விடப்பட்ட  வரலாற்று சம்பவத்தையும்  கலிங்க நாட்டுடன் போர் செய்து அந்நாட்டின் இளவரசியை மணந்து கொண்டு போரை நிறுத்திய தமிழ் வேந்தன்  அவளை இந்நாட்டுக்கு அழைத்து வராமல் இலங்கைத் தீவில் குடி வைத்தான் என்ற கதையும்  இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.

தமிழர் பண்பாடாக மாறிய மருத நிலப் பண்பாடு

ஆற்று நீருக்கு அணைகட்டி மழை நீரை ஏரி, குளம், கண்மாய்களில் சேமித்து வைத்து ஆண்டு முழுக்க  வேளாண் பணிகளை செய்து இயற்கையின் சவாலை எதிர்கொண்டனர். இவர்கள் பயிர் அறிவியலிலும் நீர் மேலாண்மை, தேக்கணை, தடுப்பணை கட்டுவது,  நீர் வழங்கல், நீர் பராமரிப்பு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். பெண்கள் இவர்களைச் சார்ந்து வேளாண் பணிகளை செய்ததால் இரண்டாம் நிலை குடிமக்கள் ஆயினர். பெரும்பாலும் அவர்கள் குழந்தை பெறும் எந்திரங்களாக இருந்தனர். எனவே குழந்தைகளை உற்பத்தி செய்ய மூலகாரணமான ஆண் அவனது அடையாளமாக இந்திரிய தானம் அளிக்கும் கடவுளான  இந்திரனை அவர்களின் தெய்வமாகப் போற்றினர்.

மருதநில வேளாண் குடி மக்களின் நாட்டுப்புறப்பாடல்களிலும் வழிபாட்டிலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்திரனே போற்றப்படுகிறான். இந்திர வழிபாடு ஆண்மையின் அடையாளமாக இருந்ததனால் மெல்ல மெல்ல மருத நிலத்தில் இருந்து கடற்கரை பட்டினங்களுக்கும் பரவியது.  இளவேனில் காலத்தின் தொடக்கத்தில் இந்திர விழா முழு நிலா இரவுகளில் ஆண் பெண் கூடல் திருவிழாவாக [பின்னர் திருமணத் திருநாளாக] கொண்டாடப்பட்டது.

பங்குனி முழு நிலா தொடங்கி சித்திரை முழு நிலா வரை தமிழகத்தில் இந்திர விழா கொண்டாடப்பட்டதாக சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாக எடுத்தியம்புகிறது.  மருத நிலத்தின் நாகரிகமும் பண்பாடும் நாடெங்கும் பரவியதால் இவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறந்ததில் வியப்பொன்றும் இல்லை. இன்றும் தமிழர் பண்பாடு என்று போற்றப்படும் பல கூறுகள் மருத நிலத்தின் வேளாண் குடிப் பெருமக்களின் பண்பாட்டுக் கூறுகளாக பழக்க வழக்கங்களாகவே இருக்கின்றன.

(தொடரும்)

Related Stories:

>