×

குரு - புதன் - சுக்கிரன் நிகழ்த்தும் மாயாஜாலம்

தொழில், வியாபாரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு உண்டாகும் விஷயமாகும். தொழில், வியாபாரம், கான்ராக்டர், ஏஜென்சி என்று தொழில் செய்பவர்களை பார்த்து தாமும் செய்ய வேண்டும் என்று ஓர் உந்து சக்தி மனதில் தோன்றும். இந்த வகையில் கையை ஊன்றி கரணம் போட்டு, பல உருட்டல், பிரட்டல்கள் செய்து சொந்தமாக கடை, தொழிற் சாலை என்று வைத்து முன்னேறுபவர்கள் பலர். அதே நேரத்தில் தனி ஆளாக செயல்பட முடியாமல் யாரையாவது துணைக்கு சேர்த்துக் கொண்டு கூட்டாக சேர்ந்து தொழில், வியாபாரம் செய்வதே கூட்டுத் தொழிலாகும். சிலர் சுயமாக தொழில் தொடங்கி அதன் பிறகு தங்கள் நம்பிக்கைக்குரியவர்களை கூட்டாக சேர்த்துக் கொண்டு தொழில் செய்கிறார்கள்.

இந்த கூட்டுத் தொழில் அமைப்பில் இரண்டு பேர் முதல் ஐந்து அல்லது பத்து பேர் வரை பங்குதாரர்களாக சேர்ந்து செய்யும் தொழில்கள் உள்ளது. கூட்டுத் தொழில் என்றால் முதலில் லக்னமும் அதற்கு அடுத்து ஏழாமிடம். கூட்டுத் தொழில் ஸ்தானமாகும். காரணம் பத்தாம் இடத்திற்கு பத்தாம் இடம் ஏழாமிடமாகும். லக்னாதிபதி பலம் குறைந்து அல்லது நீச்சமாகி அல்லது 6,8,12ல் மறைந்து இருந்து, ஏழாம் அதிபதி பலமாக, ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம், வர்கோத்தமம் என்று பலமாக இருக்கும். ஜாதகங்கள் உடையவர்கள் கூட்டுத் தொழில் செய்து நல்ல வளர்ச்சி அடைவார்கள்.

ஏழாம் அதிபதி, பத்தாம் அதிபதி இருவரும் எந்த வகையிலாவது சம்பந்தப்பட்டு இருந்தாலும், இருவரும் தனித் தனியாக பலமாக இருந்தாலும், பரிவர்த்தனை யோகத்தில் இருந்தாலும்
கூட்டுத் தொழில்  அமையும். கூட்டுத் தொழில் என்றால் லக்னம் அதற்கு நேர் கேந்திரமான ஏழாமிடம். அத்துடன் பத்தாம் இடம், பத்தாம் அதிபதி சம்பந்தம் பெற வேண்டும். அத்துடன் இணை, துணை. இடங்களாக இரண்டாம் இடம், மூன்றாம் இடம், பதினொன்றாம் இடம் மற்றும் இந்த ஸ்தான அதிபதிகள் பார்வை, சேர்க்கை அமைந்தால் கூட்டுத் தொழில் லாபகரமாக அமையும்.

பொதுவாக சுய தொழில், கூட்டுத் தொழில் என்று ஏதுவாக இருந்தாலும் சில கிரகங்களின் அருள் அவசியம் தேவை. பெட்டிக்கடை வைத்து பெரிய தொழில் அதிபர்களாக இருப்பவர்களின் ஜாதகங்களில் இந்த கிரகங்கள் போட்டி போட்டுக் கொண்டு யோகத்தை வாரி வழங்கி உள்ளதை அனுபவ பூர்வமாக பார்க்க முடிகிறது. வியாபார கிரகம் என்றாலே புதன் தான். புதனுக்கு கணக்கன், அறிவன் எனப் பல பெயர்கள் உள்ளது. புதன் பலமாக இருந்தால் தான் பேச்சு, செயல், திட்டங்கள் சமயோசித புத்தி எல்லாம் கூடி வரும். இதற்கு அடுத்து தன காரகன் குரு, இவரின் பலம் மிகவும் அவசியமாகும்.

சுக்கிரன் என்றாலே பிரம்மாண்டம். எந்த தொழில், வியாபார விஷயமாக இருந்தாலும் உச்சத்தில் கொண்டு செல்லும் வல்லமை படைத்தவர். அடுத்து கோளாகிய சந்திரன் இவர் தான் நமக்கு தினசரி சஞ்சாரம் மூலம் ஏற்றத் தாழ்வுகளை தருபவர். மனத்திற்கும், எண்ணங்களுக்கும் அதிகாரம், ஆதிக்கம் செலுத்துபவர். மேலும் சந்திரன் பலமாக இருப்பவர்கள் எந்த தொழில் செய்தாலும் புத்திக் கூர்மை காரணமாக எதையும் சாதுர்யமாக எதிர் கொண்டு, சமாளித்து விடுவார்கள்.

ஏழாம் அதிபதி, பத்தாம் அதிபதி பலம் குறைந்து இருக்கும் ஜாதகங்களை உடையவர்களை கூட்டு சேர்க்காமல் இருப்பது அவசியமாகும். ஒருவருடன் கூட்டுச் சேருவதற்கு முன்பு அவரின் ஜாதகத்தை பார்த்து நிறை குறைகளை ஆராய்ந்து கூட்டு சேருவது நலம் தரும். பொதுவாக ஒருவர் பிறந்த ராசிக்கு ஆறாவது ராசி, எட்டாவது ராசி, பன்னிரெண்டாவது ராசிக்காரர்களை கூட்டு சேர்க்காமல் இருப்பது நல்லது. முக்கியமாக எந்த ஒரு ஜாதகருக்கும் நீச்ச தசை நடந்தால் கூட்டு சேரக் கூடாது. 6,8,12ஆம் அதிபதிகளின் தசை நடந்தாலும் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்குவதை தவிர்ப்பது உத்தமம்.

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடம், பத்தாம் அதிபதி, ஆறாம் இடம், ஆறாம் அதிபதி பலம் பெற்று இருந்து, கூடவே சனி பகவான் நல்ல அமைப்பில் யோகாம்சத்தில் இருந்தால் அவர்களுக்கு நல்ல திறமையும், பொறுப்பும், நேர்மையும் கொண்ட வேலையாட்கள் அமைவார்கள் அதன் காரணமாக பல தொழில்களில் கால் பதிக்கும் யோகம் உண்டு.பத்தாம் அதிபதியுடன் நான்காம் அதிபதி, இரண்டாம் அதிபதி சம்பந்தம் ஏற்பட்டால் குடும்ப உறவுகள், நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து தொழில் தொடங்கும் பாக்கியம் அமையும்.ஏழாம் அதிபதி, பத்தாம் அதிபதி மற்றும் புதன் இந்த சேர்க்கை, பார்வை ஒருவருக்கு இருந்தால் அவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக தொழில் தொடங்குவார்கள்.

ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலம் பெற்று, நான்கு மற்றும் பத்தாம் அதிபதிகள் தொடர்பு இருந்து, புதன் அருள் இருந்தால் தாய்வழி உறவுகள், தாய்மாமன், மாமனார் உதவியுடன் கூட்டுத் தொழில் தொடங்கும் அமைப்பு உண்டாகும். ஏழாம் அதிபதி,9,10 க்குடையவர்களுடன் சேர்ந்து இருந்து சூரியன், ராகு பலன் பெற்று இருந்தால் தந்தை தொடங்கிய தொழிலை
செய்யும் பாக்கியம் கிடைக்கும். தந்தை வழி உறவுகள், அத்தை, மாமா போன்றவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

விதி-மதி-கதி

ஜாதக கட்டத்தில் உள்ள மூன்று அம்சங்கள் மிக முக்கியமானவை அதாவது விதி, மதி, கதி என்பதாகும். அதாவது லக்னத்தில் இருந்து பத்தாம் இடம் ராசி என்று சொல்லக் கூடிய சந்திரனில் இருந்து பத்தாம் இடம். அடுத்து சூரியனில் இருந்து பத்தாம் இடம். இந்த மூன்று இடங்கள் மிக முக்கியமானவை. இந்த வீடுகளின் தன்மை, ராசி, இதற்கு அதிபதி யார்? எனப் பார்த்து தொழிலை  முடிவு செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் எந்த கிரகம் பலமாக இருக்கிறதோ அதற்கேற்ப சுய தொழிலோ கூட்டுத் தொழிலோ அல்லது வியாபாரமோ அமையும். பத்தாம் வீட்டில் கேது இருந்தால் பல தொழில்கள் செய்யும் பாக்கியம் கிடைக்கும், மருத்துவம், ரசாயனம் சம்பந்தமான தொழில்கள் அமையும்.

பத்தாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லையென்றால், நான்காம் வீட்டையும், ஏழாம் வீட்டையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும். பத்தாம் வீட்டில் சூரியன் இருந்தால் பூர்வீக தொழில் செய்யும் யோகம் உண்டு.அரசாங்க சம்பந்தமான கான்ராக்ட்கள் எடுத்து தனியாகவோ, கூட்டாகவோ செய்யும் யோகம் உண்டு. பத்தாம் வீட்டில் சந்திரன் இருந்தால் தண்ணீர் சம்பந்தமான தொழில்கள், காய்கறிகள், பூக்கள், அழுகும் தன்மையுடைய பொருட்கள், பதப்படுத்தப்பட்ட வகைகள், மீன்  இறால் வகைகள், ஏற்றுமதி இறக்குமதி, பால், வெண்ணெய், நெய், தயிர் மற்றும் குளிர்பானங்கள் போன்றவை அடங்கும்.

பத்தாம் வீட்டில் ராகு இருந்தால் கெமிக்கல், எண்ணெய் வகைகள், நாட்டு மருந்துக்கடை, மதுபான வியாபாரம், மாந்திரீகம், மின்சாரம், சினிமா சம்பந்தப்பட்ட தொழில்கள். பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் ஹோட்டல், நெருப்பு சம்பந்தமான தொழில்கள். ரியல் எஸ்டேட், செங்கல், மணல், சிமென்ட், எலக்ட்ரிக் சாதனங்கள் மூலம் ஜீவனம் அமையும். பத்தாம் வீட்டில் புதன் இருந்தால் புத்தகம், ஸ்டேஷனரி, விளம்பரம் ஏஜென்சி, நடிப்பு, பேச்சு, பத்திரிகை துறை, ஆசிரியர், கூரியர் தொழில், கம்ப்யூட்டர், பதிப்பகம் மற்றும் பல.

பத்தாம் வீட்டில் குரு இருந்தால் கொடுக்கல் வாங்கல், வட்டி தொழில், புத்தக வியாபாரம், தங்க நகை கடை, மளிகை மொத்த வியாபாரம், துணிக்கடை மற்றும் பல பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் சூப்பர் மார்க்கெட், வெள்ளி நகைக்கடை, உள்ளாடைகள், வாசனை திரவியங்கள், அழகு சாதனங்கள், பேன்சி ஸ்டோர், சினிமா மற்றும் பல பத்தாம் வீட்டில் சனி இருந்தால் எண்ணெய் வகைகள், மோட்டார் சாதனங்கள் ஹார்டுவேர் கடை, இரும்பு, ஸ்கிராப், வண்டி, கார் விற்பது, கட்டிட வேலைகள் மளிகை கடை மற்றும் பல தொழில்கள் அந்தந்த கிரக சாரத்திற்கேற்ப, கிரக சேர்க்கை, பார்வைக்கேற்ப அமையும்.

- மிதுனம் செல்வம்

Tags : Guru ,Venus ,
× RELATED வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்கு...