×

ஜானி ஜானி யெஸ் பாப்பா? ஈட்டிங் சுகர் நோ பாப்பா!

‘ஒரு கரும்பு ஜூஸ் நோ சுகர்’ எனக் கடைக்காரரே டென்ஷன் ஆகும் அளவுக்கு நம் நண்பர்கள் வட்டத்திலேயே அவ்வளவு ஆரோக்கியமாக ஆர்டர் செய்யும் பேர்வழிகளைப் பார்க்க முடியும். ஆனால் உண்மையில் நாம் சாப்பிடும் காபி, டீ, ஜூஸ் இவற்றில் மட்டும்தான் சர்க்கரை உள்ளதா?. நமக்குத் தெரிந்து ஜூஸ், காபி,டீ, இனிப்புகள் என சர்க்கரையை நாம் உதறினாலும் நமக்கே தெரியாமல் பல உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ சர்க்கரை நம் உடலுக்குள் சென்று கொண்டுதான் இருக்கின்றது என்கிறார் டாக்டர் குணசீலன் . (முதன்மை சர்க்கரை நோய் ஆலோசகர்)‘என் குழந்தைக்கு வெறும் பிஸ்கட் மட்டுமே கொடுப்பேன், சாக்லேட், ஐஸ் க்ரீம் நோ’ என்றால்கூட அந்த பிஸ்கட்டுகளிலும் அதிகளவில் சர்க்கரை இருக்கத்தான் செய்கின்றன. மேலும் துறுதுறு , ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கு சர்க்கரை மேற்கொண்டு அவர்களை உற்சாகமாக்கி, மேலும் ஹைபர் ஆக்டிவ்வாக மாற்றும் வாய்ப்புகள் உள்ளன. முதலில் சர்க்கரை அளவை தினம் தினம் கண்காணியுங்கள்.உடலில் சர்க்கரை அளவு கூடுவதும், குறைவதும் இன்சுலின் சுரப்பைப் பொருத்தது. இதற்கும் இனிப்பு உட்கொள்வதற்கும் தொடர்பில்லை. அடுத்து மாவுச்சத்து, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது தானாகவே உடல் எடை கூடும். மேலும் கொழுப்பு அதிகரித்தால் அதனாலேயே உடல் பருமனாகி அதன்பிறகு சர்க்கரை நோய், இதயநோய் என பல பிரச்னைகள் உண்டாகும். சர்க்கரை அளவு உடலில் அதிகம் இருக்கிறது என்றால் மட்டுமே இனிப்புகள் எடுப்பதில் கட்டுப்பாடுகள் தேவை. குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் சிறுவயதில் இருந்தே கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால் வளர்ந்த பின் வரும் சர்க்கரை நோய்க்கு முன்பே தடை போட்டு விடலாம். சரி நம் கண்ணுக்குத் தெரியாமல் உடலுக் குள் செல்லும் சர்க்கரையை தவிர்ப்பது எப்படி?*உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும்.

*வெளியிலிருந்து வாங்கிவரும் தின்பண்டங்கள், ஸ்வீட்ஸ், ஐஸ் க்ரீம், சாக்லேட், பிஸ்கட், ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
*பல வீடுகளில் பெற்றோர், குழந்தைகளைச் சாப்பிட வைப்பதற்காக, டி.வி. போன் போன்றவற்றைப் பயன்படுத்தக் கொடுப்பார்கள். அந்த நேரத்தில் வரும் தின்பண்ட விளம்பரங்கள், குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டி ஈர்ப்பை உண்டாக்கும். சாப்பிடும் போது டிவி, செல்போன் இவைகளை தவிர்த்துவிடுங்கள்.
*குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்கும் ஸ்நாக்ஸ்களில் பின்புறம் குறிப்பிட்டிருப்பதை படிக்க மறக்காதீர்கள். அதிலுள்ள சர்க்கரை, கலோரி அளவுகளைத் தெரிந்துக்கொண்டு அதற்கேற்ற அளவில் கொடுக்கவும்.
*பாட்டில்களில் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. அவற்றுக்கு பதில், வீட்டிலேயே பழச்சாறுகளை செய்து கொடுக்கலாம். பழமாகவே கொடுப்பது மேலும் சிறப்பு. இனிப்பு தின்பண்டங்களை விரும்பும் குழந்தைகளுக்கு, வீட்டிலேயே பலகாரம் செய்து கொடுக்கலாம்.
*பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடச் செய்யலாம்.

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

The post ஜானி ஜானி யெஸ் பாப்பா? ஈட்டிங் சுகர் நோ பாப்பா! appeared first on Dinakaran.

Tags : Johnny Johnny ,Johnny Johnny Yes ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...