சஞ்சலம் தீர்க்கும் ஸ்கந்த பஞ்சமி

ஸ்கந்த பஞ்சமி விரதம்-14.7.2021

பொதுவாகவே ஒவ்வொரு திதிக்கும் ஒரு விசேஷம் உண்டு. திருதியை மகாலட்சுமிக்கு உரியது. சதுர்த்தி விநாயகருக்கு உரியது. சஷ்டி முருகனுக்கு உரியது. அஷ்டமி, கிருஷ்ணருக்கும், பைரவருக்கும், துர்க்கைக்கும் உரியது. நவமி ராமருக்கு உரியது. ஏகாதசி பெருமாளுக்கு உரியது. திரயோதசி சிவபெருமானுக்கு உரியது. (பிரதோஷம்)இதில் சில திதிகள் இரட்டையாக இருந்து சிறப்பு செய்யும். உதாரணமாக அஷ்டமியும், நவமியும் இணை திதிகளாக இருக்கும். அதைப்போலவே ஏகாதசியும் துவாதசியும் இணை திதிகளாக இருக்கும். பஞ்சமி திதியும் சஷ்டி திதியும் இணைந்திருக்கும். சஷ்டி திதி முருகனுக்கு உரியது. எனவே, அந்த சஷ்டியை முருகனின் பெயரோடு இணைத்து ‘‘ஸ்கந்த சஷ்டி’’ என்று சொல்லுவார்கள். அதைப்போலவே சாந்திரமான முறைப்படி, கடக மாசமாகிய ஆடி மாதத்தில், வளர்பிறையில் வருகின்ற பஞ்சமி திதியை ‘‘ஸ்கந்த பஞ்சமி” என்று முருகனுக்குரிய நாளாகக் கொண்டாடுகின்றனர்.

பொதுவாகவே, ஒரு நாளில் சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்குள் பஞ்சமி திதி முடிந்து, சஷ்டி திதி ஆரம்பித்துவிட்டால், பஞ்சமியிலேயே சஷ்டி விரதத்தைத்  தொடங்கி விடுவார்கள். ஆடி மாதவளர்பிறை பஞ்சமி முருகன் பெயராலேயே வழங்கப்படுவதால் மிகப்பெரிய சிறப்பு உண்டு. அன்று முருகனை எண்ணி பஞ்சமி விரதத்தையும் தொடர்ந்து சஷ்டி விரதத்தையும் மேற்கொள்பவர்

களுக்கு இகபர சுகங்களும், இல்வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் கிடைக்கும்.நக்கீரன் திருமுருகாற்றுப் படையில் அழகான பாடலைப்  பாடுகின்றார்.அஞ்சுமுகம் தோன்றில்ஆறுமுகம் தோன்றும்வெஞ்சமரில்அஞ்சல் என வேல் தோன்றும் -நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்பஞ்சமி திதியில் தொடங்கி சஷ்டி திதியிலும் முருகனை நினைந்து அவன் பெயரை உச்சரித்து திரும்பத் திரும்ப ஜபம் செய்பவர்களுக்கு அச்சமே வராது.

தவறிப்போய், அச்சம் என்று ஏதாவது வந்து விட்டால், அங்கே ஆறுமுகனான எம்பெருமானின் வேல்தோன்றி அந்த அச்சத்தைப் போக்கும். அவர்கள் ஈடுபடும் எல்லாச் செயல்களிலும் அவர்களுக்கு வெற்றியே கிடைக்கும் என்பது இப்பாடலின் கருத்தாக இருந்தாலும் கூட, அஞ்சுமுகம் என்பது பஞ்சமி திதியைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.பஞ்சமி திதி வந்துவிட்டாலே, ஆறுமுக சடாட்சர மந்திரம் நினைவுக்கு வந்துவிடும். ஆறாம் திதியாகிய சஷ்டி திதியும் நினைவுக்கு வந்துவிடும். பஞ்சமி திதியில் முடிவுதான் சஷ்டி திதி. அஞ்சு முகத்தின் முடிவுதான் ஆறுமுகம். அஞ்சுமுகம் என்பது சிவபெருமானைக்  குறிக்கும். ஆறுமுகம் என்பது சிவபெருமானின் இன்னொரு நிலையான ஆறுமுகனைக் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம். இந்த ஐந்து முகங்களின் தொடர்ச்சியாக வருகின்ற ஆறாவது முகம், அதோமுகம் என்கின்ற முருகப் பெருமான் திருமுகம். அஞ்சு அட்சரங்கள் ஆகிய பஞ்சாக்ஷரங்கள் ஓத, அது ஆறுமுகப் பெருமானின் சடாட்சரம் என்கின்ற மந்திர சித்தியில் கொண்டு  போய்விடும்.

இன்னொரு பொருள்: அஞ்சுமுகம் ஆகிய சிவபெருமானை தியான நிலையில் பூஜிப்பவர் களுக்கு ஆறு ஆதார நிலைகளும் ஏறி ஆறுமுகம் தோன்றும். இப்பாடலில் நெஞ்சில் “ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்” என்ற தொடர் அற்புதமானது. ஏதாவது ஒருவேளை (ஒருகால்) உன்னுடைய நெஞ்சில் நினைத்தாலும் கூட, எல்லா வேளையிலும் இறைவன் தோன்றுவான் என்று ஒரு மேலோட்டமான பொருளைக்  கொண்டாலும், இத்தொடர் யோக சாஸ்திரத்தில் வாசியோகத்தைக் குறிக்கிறது என்பர்.வாசியினை  “கால்’’ என்றே சித்தர் பரிபாஷையில் சொல்வர். சுழுமுனை நாடியில் (ஒரு கால்) வாசி செல்லும் யோகம் முக்கியம். முறையாக வாசியோகம் செய்பவர்களுக்கு இந்த சுழுமுனையில் வாசி  செல்ல அங்கே இருகால் தோன்றும். அதாவது முருகப் பெருமானுடைய இரண்டு தாமரைத் திருவடிகள் தோன்றும்.

இந்த சித்தியை பெற்று சீர்பட வாழ வேண்டும் என்று சொன்னால், நீங்கள் ஸ்கந்த பஞ்சமி விரதமிருந்து ஸ்கந்த சஷ்டியில் முருக விரதத்தை நீட்டிக்க வேண்டும்.

ஒரு நிமிடம் ஏன், அரை நிமிடம் நினைத்தாலும் கூடப்  போதும் முருகப்பெருமான் தோற்றம் நம் நெஞ்சிலே வந்து நிழலாடுமே... அப்படி யிருக்க, இரண்டு நாட்கள் விரதம் ஆயிற்றே... நம்மால் இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இரண்டு நாள் விரதம் தெரியுமா..?  நாற்பத்தெட்டு மணி நேரத்தில் ஏதாவது அரை நிமிடமாவது அவன் சிந்தனை வராதா என்பதற்காகத்தான் அது. எப்படி வராமல் போகும் என்று நினைக்காதீர்கள்.முருகப் பெருமானையே நினைத்து நினைத்து கரைந்துவிடும் அருணகிரிநாதப் பெருமானார் பாடுகின்ற பாட்டை நினைவில் கொண்டால் நம்பாடு என்னவென்று தெரியும்.

அந்தத் திருப்புகழ் இது.
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்

தவமுறைதி யானம் வைக்க அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த

தமியன்மிடி யால்ம யக்க  முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு

கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை

கமழுமண மார்க டப்பம் அணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய

சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீ கொடுத்து

தவிபுரிய வேணு நெய்த்த   வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க

அரியதமிழ் தான ளித்த   மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த

அழகதிரு வேர கத்தின்   முருகோனே.

 என்று பாடுகின்றார்.

“பழனிமலை அழகனே! சுவாமி மலை முருகனே! தினந்தோறும் நான் துதிப்பதற்கு அருமையான தமிழ் தந்த மயில்வீரனே! கயிலை சிவன் பெற்ற குமரனே! வீரக் கடகம் அணிந்தவனே! ரத்னாபரணம், தங்கமாலை, வெட்சிப் பூமாலை, கடம்பமாலை அணிந்தவனே! பொய்யும் குற்றமும் கொண்ட மூடன் நான். பிறப்பதே தொழிலாகக் கொண்டு பிறந்துள்ளேன். எனக்கு வேறு  ஒன்றும் வேண்டாம். உனது தாமரை போன்ற திருவடிகளை அரை நிமிஷ நேர அளவுக்காவது தவ நிலையில் வைத்திட உதவ வேண்டும்.வாழ்நாள் முழுக்க முருகனைப் பாடிய அவருக்கே அரை நிமிடம்  மனம் வசப்படவில்லை. நமக்கு. எளிதில் வசப்படுமா என்ன? அதனால்தான் இந்த விரதத்தை இரண்டு நாட்களுக்கு இருக்கச் சொல்லி இருக்கிறார்கள். 48 மணி நேரத்தில் ஏதாவது ஒரு அரை நிமிடம் முருகனை மனம் நினைக்காதா என்று... சஞ்சலப்படும் மனதடக்கி சத்திய தரிசனத்தை அந்த முருகப் பெருமான் தான் வழங்க வேண்டும். அதற்கு இந்த பஞ்சமி விரதம் உதவும்.

Related Stories: