×

ஆனித் திருமஞ்சனத்தில் தில்லை தரிசனம்

சிதம்பரம் நடராஜர் ஆனித் திருமஞ்சனம் 14 - 7 - 2021

ஒருமுறை தரிசித்தாலே முக்தி தரும் தலம். இறைவன் ஆனந்த சபேசனாய் - சிவகாமி சுந்தரியோடு காட்சி தரும் தலம். பஞ்ச பூதத்தலங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தலம்.இத்தலத்தைக் குறித்துத்தான் எத்தனை எத்தனை வியக்கத்தக்க தகவல்கள்.

*மங்களம் அருளும் தம்பிரான்

வைதாரையும் வாழ வைப்பவன் சிவபிரான். மங்களம் அருளும் தம்பிரான். எதிர்மறையிலும் நேர்மறையைக் காண்பவன். யாரோ ஒருவர் எவரையோ அழைத்தால், தன்னை அழைத்தானோ என்று எண்ணி வலியச் சென்று அருள் தருபவன். ஒரு பக்தர் சிவபெருமானிடம் மனம் உருகிப் பிரார்த்தித்தார்.

‘‘பகவானே! தில்லை என்கிற திருத்தலத்தைக் காண வேண்டும் என்று தவமிருந்தேன். என்னால் இதுவரை முடிந்ததில்லை. அதன் பெருமையை காதால் கேட்டதில்லை. வாயால் பாடியதில்லை. விரதங்களும் நோற்றதில்லை. மகான்களின் திருவடி பணிந்ததில்லை. நல்லோரைப் போற்றியதில்லை!”  என்று சொல்லிக்கொண்டே போக, பகவான்
‘‘கவலைப்படாதே! உனக்கு பேறு நிச்சயம்” என்றாராம்.

பக்கத்திலிருந்த உமையம்மை ‘‘என்ன சுவாமி....அவன் எதுவும் செய்ததில்லை என்கிறார். நீங்கள் முக்தி என்கிறீர்களே!” என்று கேட்க, சிவபெருமான் சிரித்துக் கொண்டே சொன்னாராம். ‘‘தில்லை என்று ஒரு தரம் சொன்னாலே சிவபதம் தரும் நான், இத்தனை தரம் சொன்ன பின்னும் தராமல் இருப்பேனா?” பக்தன் பாடிய ‘‘இல்லை” பகவான் காதில் ‘‘தில்லை” என்று விழுந்ததாம்! உடனே நல்வாழ்வு தந்தாராம்.

* திருமூலநாதர் சுவாமி

மூலவராக - திருமூலசுவாமி சிவலிங்க உருவில் எழுந்தருளியிருந்தாலும் - மூலவராகவும் உற்சவராகவும் கயிலையிலிருந்து தில்லை மூவாயிரவர்களோடு வந்து இறங்கி காட்சி தருகிறார், ஆனந்த நடனமூர்த்தி! ஆதி மூர்த்தியான திரு மூலநாதர் கோயிலில் பழமையானது. இவரை திருநாவுக்கரசு சுவாமிகள் ‘‘பெரும்புலியூர் விரும்பினார்” என்று பாடுகின்றார். அர்த்தஜாம வழிபாடு முடிந்த பின்னர், எல்லா கோயில்களிலும் உள்ள சிவகலைகள் இந்த மூலத்தான லிங்கத்தில் ஒன்றி விடுவதால் இதற்கு மூலட்டானேஸ்வரர்  என்று பெயர்.

* தரிசனம்
மார்கழியில் திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாளில் மதியப் பொழுதில் நடைபெறும் (ஸ்ரீநடராஜர் - பகல் வேளையில்தான் தன் கணங்கள் அனைத்தோடும்
வந்திறங்கினார்) ‘‘சித்ஸபா பிரவேசம்” எனும் பொன்னம்பலம் புகும் காட்சியே ஆருத்ரா தரிசனமும், ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் இந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்களில் மிக முக்கியமானது.

*ஆறுமுறை திருமஞ்சனம்

ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம்.

* மனித உடலே ஆலயம் ; சான்று தில்லைக் கோயில்

மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சந்நதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம் பலத்தின் மேல் தங்கக் கலசங்கள் ஒன்பதும் நவசக்தி களையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப் படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ,600 தங்க ஓடுகள் மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கை. 96 ஜன்னல்களும், 96 தத்துவங்களைக் குறிக்கும். நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பது போல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.

* ஒரே இடத்தில் இரண்டு ராஜாக்கள்

“கோயில்” என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். வைணவத்தில் கோயில் என்றால் திருவரங்கத்தைக் குறிக்கும். சிதம்பரத்தில் நடராஜன். திருவரங்கத்தில் ரங்கராஜன். இவர் நடனம் ஆடுவார். அவர் பள்ளி கொண்டிருப்பார். ஆனால், திருவரங்கத்தில் முடியாதது சிதம்பரத்தில் முடியும். ஆம். ஒரே இடத்தில் நின்று கொண்டு இரண்டு ராஜாக்களையும் தரிசனம் செய்ய முடியும். ஒருவர் நடராஜா. இன்னொருவர் கோவிந்தராஜா. ஆனியில் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம். நடராஜருக்கு திருமஞ்சனம்.

* ஞாநாகாசம்

சித் + அம்பரம் =சிதம்பரம்; சித் என்பது அறிவு; அம்பரம் என்பது வெட்டவெளி. இந்த இரண்டையும் இணைத்து ஞாநாகாசம் என்னும் பொருளுடன்  சிதம்பரம் என்று வழங்கப்படுகிறது. இதற்குப் பொன்னம்பலம் என்னும் பெயரும் உண்டு. புலிப்பாணி முனிவர் இத்தலத்தில் இறைவனை பூசித்ததால் புலியூர் என்னும் பெயரும் உண்டு. ‘‘பெருமையார் புலியூர்ச் சிற்றம் பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே” என்பது பாடல். பூலோக கைலாசம் என்றும் இத்தலத்தைச்  சொல்வர்.

*  சிதம்பரம்தான் இருதயம்

ஓம் என்னும் பிரணவத்தின் வடிவமாய் நின்று நாதாந்த நடனமாடுகிறார், தில்லைக்கூத்தன். ஐந்தெழுத்தின் உருவமாக விளங்குகின்ற அவன் ஐந்தொழிலை உணர்த்துகின்றான். உலகத்தை விராட் புருடன் வடிவமாகக் கொண்டால், திருவாரூர் அதன் மூலாதாரம். திருவானைக்கா கொப்பூழ். திருவண்ணாமலை மணிபூரகம். திருக்காளத்தி கண்டம்; காசி புருவத்தின் மத்தி; சிதம்பரம் தான் இருதயம். இருதயம் இயங்காவிட்டால் எதுவும் இயங்காது. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவாகவும் அருள்பாலிக்கிறார்.

*நடனத்தின் பொருள் என்ன?

தமிழகத்தின் பற்பல கோயில்களுக்குச் சென்று கட்டுரைகளை எழுதியவர் கலைஞானமிக்க திரு.பாஸ்கரத் தொண்டைமான். தில்லைக் கூத்தனின் திருநடனத்தைப் பற்றி எழுதும் பொழுது ஒரு அழகான உதாரணத்தைச் சொல்லுவார். ஒரு மேல்நாட்டு நடன மங்கை நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தினாள். அவளுடைய அபிநயமும், கால்களின் வேகமும், விரல் அசைவு முத்திரைகளும் காண்பவர்களை மயக்கின. அதில் நிறைவாக ஆடிய ஒரு அருமையான நடனம் மிகமிக அற்புதமாக இருந்தது. ஒரு பரம ரசிகருக்கு அந்நடனம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், நடனத்தின் பொருளைப்  புரிந்துகொள்ள முடியவில்லை.

குழம்பினார். எப்படியாவது பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். நடனம் முடிந்தவுடன் ஒத்திகை அறைக்குச் சென்று நடனமாடிய பெண்மணியைச்  சந்தித்தார். நடனத்தைப்  பாராட்டினார். கடைசியில் கேட்டுவிட்டார். ‘‘அம்மணி! உங்கள் நடனம் அற்புதமாக இருந்தது. ஆனால், அதன் பொருள் எனக்குப் புரியவில்லை. அதனை கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.” அந்த நடன மங்கை அவரைப்பார்த்துச் சொன்னாளாம். ‘‘பொருளை வாயால் விளக்கிச் சொல்வதாக இருந்தால், நான் அத்தனை சிரமப்பட்டு ஏன் நடனமாடி இருக்கவேண்டும்?” இதே நிலைதான் ஆனந்தக்கூத்தன் அற்புத நடனத்தை காண்பவர்களுக்கு.

* சிவகங்கை

ஒரு தலத்தின் சிறப்பு, தலத்தின் பெருமை யாலும், மூர்த்தியின் பெருமையாலும், தீர்த்தத்தின் பெருமையாலும் விளங்கி நிற்கும். சிதம்பரத்திற்கு பத்து தீர்த்தங்கள் உள்ள பெருமை உண்டு. இவற்றுள் கோயிலுக்கு உள்ளே இருக்கக்கூடிய சிவகங்கை என்னும் தீர்த்தம் சிவ வடிவமாகவே விளங்குகின்றது. இதனை குமரகுருபரர் ‘‘தீர்த்தம் என்பது சிவகங்கையே” என்று போற்றுகின்றார்.இத்தீர்த்தத்தில் வருடப்பிறப்பு, மார்கழி திருவாதிரை, மாசி மகம், சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களில் நீராடுவது சிறப்பாகும். கிரகண காலங்களிலும் அமாவாசை முதலிய புண்ணிய தினங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் நடப்பதுண்டு.

இதன்வடிகால் அமைப்புகள், அன்றைய பொறியியல் திறனுக்கும், நீர் மேலாண்மை திறனுக்கும், சான்றாக விளங்குகின்றன. இதில் என்றும் தீர்த்தம் வற்றாது இருக்கும். அதிக மழை பெய்கின்ற போது நீர் தேங்காமல் வெளியேறுகின்ற வசதியும் உண்டு. இத்தீர்த்தத்தைச் சுற்றி அழகான மண்டபம் சுற்று பிராகாரமாக  அமைந்திருக்கும். சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூணை நட்டியுள்ளனர். அங்கிருந்து பார்த்தால் நான்கு ராஜகோபுரங்களையும், ஒருசேர தரிசனம் செய்ய முடியும்.

* சிவகாமசுந்தரி

இத்திருத்தலத்தின் இறைவியின் பெயர் சிவகாமசுந்தரி. இந்த அம்பிகைக்கு மூன்றாம் பிராகாரத்தில் சிவகங்கை திருக்குளத்தின் மேற்கே மிக அழகான பிராகாரத்துடன் கூடிய தனிக்கோயில் உண்டு. சின்னஞ்சிறு பெண்போலே, சிற்றாடை இடை உடுத்தி, சிவகங்கை குளத்தருகே சீர் துர்க்கை குடியிருப்பாள் என்ற  அழகான பாடல் இவளுடைய பெருமையைப்  பேசும். இவள் ஞான சக்தியாகத் திகழ்கிறாள். இக்கோயிலில் சித்திரகுப்தர் சந்நதி உண்டு. இது வேறு எந்த சிவாலயத்திலும் இல்லாதது.

கொடிமரம் அமைந்த மண்டபம் மிக உயரமானது. தேவியின் புராண மகிமையை விளக்கும் சித்திரங்கள் இங்கு உண்டு. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும், தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சி களும் ஓவியங்களாக இடம்பெற்றுள்ளன. சிவகாமசுந்தரி அம்மை அழகான புன்சிரிப்போடு நின்றகோலத்தில் கிழக்கு முகமாகக்  காட்சி தந்து கொண்டிருக்கிறாள் .

* நான்கு ராஜகோபுரங்கள்

சிதம்பரம் மிக அழகான ஊர். அதன் மையத்தில் கோயில். ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ஆலயம் முழுவதும் ஏராளமான சந்நதிகள் உள்ளன. நான்கு புறத்திலும் நான்கு ராஜகோபுரங்கள். இங்குள்ள 4 கோபுரங்களும் சிற்பக் களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமுனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

பெரும்பாலும் பல திருத்தலங்களில் எல்லா ராஜகோபுரங்களும்  வழியாக அமைவதில்லை. ஆனால், இங்கே நான்கு ராஜகோபுரங்களும் வழியாகவே இருக்கின்றன. தேவார திருவாசகம் பாடிய நால்வரும் நான்கு வாயில் வழியே பிரவேசித்தனர். அதைக் குறிக்கும் சுதை சிற்பம் அந்தந்த வாயிலில் உண்டு.

ஒவ்வொரு கோபுரமும் 135 அடி உயரம். 7 நிலைகள். 13 செப்பு கலசங்கள். அதைப்போலவே கோபுர வாயிலும் மிக உயரமானவை. ஒவ்வொரு ராஜ கோபுர வாயிலும் 40 அடி உயரம். இங்கு நடராஜமூர்த்தி தெற்கு நோக்கிய திருமுகத்தோடு காட்சி தருவதால் தெற்கு கோபுரத்தின் மேல் சுவாமியின்  கொடி கட்டப்பட்டு இருக்கிறது.

* தில்லை வாழ் அந்தணர்கள்

இக்கோயிலின் பூஜை முறை உரிமை உள்ளவர்கள் தில்லை வாழ் அந்தணர்கள். அவர்கள் அந்தர்வேதி யாகத்திலிருந்து தோன்றிய நடராஜ மூர்த்தியே  இப்போது இருக்கும் மாணிக்க மூர்த்தி (ரத்தினசபாபதி). தர்ம சாஸ்திரத்தில் பூஜைக்கு சம்பளம் வாங்கக் கூடாது என்று விதி இருக்கிறது.

அப்படியானால் தங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது? அக்காலத்தில் தீட்சிதர்கள் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் கதவை பூட்டும் பொழுது சொர்ண கால பைரவருடைய திருவடியில் ஒரு செப்புத்  தகட்டை வைத்துவிட்டு செல்வார்களாம். மறுநாள் காலையில் வந்து பார்க்கும் பொழுது அந்தச்  செப்புத்தகடு தங்கத் தகடாக மாறி இருக்கும். அதை எடுத்து  குடும்பச் செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.வேறு வருமானம் கூடாது. அப்படி முற்காலத்தில் ஒரு ஏற்பாடு இருந்தது.

* லிங்கங்கள்

நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரத் தலத்திலும் வழிபட்டுள்ளனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சந்நதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கைத் தீர்த்தக் கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

* பொல்லாப் பிள்ளையார்

சிதம்பரம் கோயிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே, விநாயகரை ‘மூத்த நாயனார்’ என்கிறார்கள். சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குருபூஜை இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலகண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர். இத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் பத்துத் திருப்புகழ்ப் பாடல்கள் பாடியுள்ளார்.

* கலை வடிவம் காட்டும் எழில் வடிவம்

இன்றைக்கும் உலகத்திலுள்ள பல பேருடைய வரவேற்பறைகளில் நிச்சயமாக ஒரு திருவுருவம் இருக்கும் என்றால், அது ஆடல்வல்லானின் அற்புதமான திருவுருவம்தான். கலை வேறு; தெய்வபக்தி வேறு அல்ல. இறைவன் கலை வடிவமாகவே இருக்கிறான் என்பதைக் காட்டுகின்ற எழிலார்ந்த கோலம்தான் ஆடல் பிரான் ஆடும் கோலம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கமும் நம்மால் காண முடியாது. ஆனால், அந்த இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே இடத்தில் இருப்பது போல தோன்றும் பொருள்களின் இயக்கம் எப்படியோ, அப்படியே நடராஜரின் திருவுருவம் காட்டும் நடன அசைவுகள், பிரபஞ்சத்தின் இயக்கத்தை பிரதிபலித்துக்  கொண்டிருக்கின்றன.  

* உயிர் பெற்ற யானைச் சிற்பம்  

ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்தபோது கொடி ஏறாமல் தடைப்பட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலைப் பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்தப் பாடலைப் பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப் படிகளில் வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானைச் சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் வைத்தது.

அந்த நூலுக்குத் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. முத்து தாண்டவர் தினமும் சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிபட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.இப்படிச் பல செய்திகள் இருக்கின்றன. இத்திருத்தலத்தை மனதில் எண்ணி ஆனந்த நடராஜரின் அபிஷேகத்தை என்றும்  பூஜிப்போம்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

மஹா சுதர்சன ஹோமம் ஆஷாட நவராத்திரி

வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 27.06.2021 முதல் 23.07.2021 வரை. தினமும் காலை 10 மணி பகல் 11.30 மணி வரை மஹா சுதர்சன ஹோமம். டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசியுடன் நடைபெறுகிறது. இதற்கான கட்டண ஹோம சங்கல்பத்திற்கு ரூ.6,000/ மற்றும் அபிஷேக சங்கல்பத்திற்குரூ.1000/- ஆகும்.

இந்த சுதர்சன ஹோமத்தின் பலன்கள் என்னவென்றால் பயம், கெட்ட கனவுகள், சத்ரு உபாதைகள், விரக்தி நீங்கும், மனதும் உடலும் தூய்மை அடையும். துன்பம், தோஷம், சாபங்கள் நீங்கி தன்னம்பிக்கை வளரும். தடைகள் நீங்கி வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் வெற்றிகள் கிடைக்கும்.09.07.2021 முதல் 19.07.2021 வரை ஆஷாட நவராத்திரியில் வாராஹி ஹோமம், அபிஷேகம், மற்றும் புஷ்பாஞ்சலி, தினமும் மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான சங்கல்பக் கட்டணம் ஹோமத்திற்கு ரூ.3,000/- அபிஷேகத்திற்கு
ரூ.2000/- புஷ்பாஞ்சலிக்கு  ரூ.1000/ ஆகும்.

சுவாமிநாதன்

Tags : Thillai Darshan ,Anith ,
× RELATED நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்:...