×

நாகதோஷம் போக்கி சந்தோஷம் பெருக்கும் தலங்கள்

ஸ்ரீகாளஹஸ்தி

500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் திருப்பதிக்கருகே  அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பே ருந்து வசதி உண்டு. சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றானது. இத்தலம் வாயுத் தலம் ஆகும். இறைவனுக்கு தன் கண்ணையே பறித்தளித்த வேடரான கண்ணப்ப நாயனாரால் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.

வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோயிலைப் போற்றுகின்றன.  இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகலி என்ற ஆறு ஓடுகிறது. திருப்பதியிலிருந்தும் சென்னையில் இருந்தும் பேருந்துகள் உண்டு. தோஷ பரிகாரம் என்று கேட்டால் அங்குள்ள அர்ச்சகர்கள் வழிகாட்டி செய்து தருகிறார்கள்.

திருநாகேஸ்வரம்

தமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் சிறந்த பரிகார தலமாக உள்ளது. நாக அரசனாகிய ராகு பூஜித்த காரணத்தால் இத்தலத்துக்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. இங்கு நாகநாதசுவாமி, பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். கோயில் வெளிப்பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ ராகு பகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இருதேவியருடன் எழுந்தருளியுள்ளார். சுசீல முனிவரின் குழந்தையை ராகு தீண்டியதால் ராகுவுக்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நீங்க மகாசிவராத்திரி தினத்தில் ராகு, திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கும் நாகநாதசுவாமியை வழிபட்டார்.

இதன்மூலம் சாபம் நீங்கியது. ‘சிவபெருமான் அருளால் தன் சாபம் நீங்கிய ராகு இத்தலத்தில் சிவனை வணங்கி தன்னை பரிகார வழிபாடு செய்
பவருக்கு தன்னால் ஏற்படும் அனைத்து தோஷங்களையும் நீக்குகிறார். காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் நீங்க ராகு பகவானுக்குப்   பாலாபிஷேகம் செய்கின்றனர். இத்தலத்தில் ராகுவின் மேனியில்  பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி 6 மணி வரை பரிகார பூஜைகள் செய்ய கூட்டம் கூடுகிறது. திருமணம் நடைபெற வேண்டி திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள வன்னி மரத்தில் பலர் தாலி கட்டுகின்றனர். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி தொட்டில் கட்டி வணங்குகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைக்கிறது.

சூரியனார் கோயில்

சூரியனார் கோயில் தலம் கும்பகோணத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. இத்தலம் கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. திருப்பனந்தாள் மற்றும் கீழ் அணைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது. இக்கோயில் நான்கு பிராகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு உள்ள புஷ்கரணியில் நீராடி கோள் தீர்த்த விநாயகரை வணங்கி, பின் நவகிரக நாயகர்களை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடவும்.

அர்ச்சனை செய்யும் போது மறக்காமல் பெயர், ராசி மற்றும் என்ன காரணத்திற்காகப் பிரார்த்தனை என்பதை சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யவும். பணம் செலவு செய்வதைவிட மனம் செலவு செய்து வழிபடவும். தன் மீது உள்ள குறைகளைச் சொல்லி மன்னிப்புக் கேட்டு வழிபடவும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யவும்.

திருமங்கலக்குடி

திருமங்கலக்குடி பிராணநாதேசுவரர் கோயில், தமிழ்நாட்டில் தஞ்சாவூர்  மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகள் மூலம் இக்கோவிலுக்குச் செல்லலாம். ஆடுதுறையிலிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவிலும் கும்பகோணத்திலிருந்து சுமார் 13 கிமீ தொலை
விலும் அமைந்துள்ளது. காளி, சூரியன், பிரம்மன், அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். வழக்கமாக லிங்கத்தின் பாணம் ஆவுடையார் (பீடம்) உயரத்தை விட சிறியதாக இருக்கும்.

ஆனால் இக்கோயிலில் சிவலிங்கத்தின் பாணம் ஆவுடையாரை விட உயரமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு.அம்மன் பெயர் மங்களாம்பிகை (அ) மங்களநாயகி. அம்மன் தனிச் சந்நதியில் தெற்கு நோக்கி வலது கையில் தாலிக்கொடியுடன் காட்சி தருகிறார். பிராகாரத்தில் சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. நவகிரகங்கள் சிவனை வழிபட்ட தலமென்பதால் நவகிரகங்களுக்கு இங்கு சந்நதி இல்லை. இக்கோயிலில் வழிபட்ட பின்னரே இங்கிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள சூரியன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது முறைப்படுத்தப்பட்டுள்ளது.  

இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் மிகச்சிறந்த தலமாகும். இது ராகு ஈசனை வழிபட்ட தலம் என்கிறார்கள். முதலில் தேவிப்பட்டணத்தில் உள்ள  நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான கிரக தோஷங்களும் நீங்கும்.இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர்.

அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சந்நதியின் முதல் கிழக்கு பிராகாரத்தில் உள்ள சிறிய சந்நதியில் இருக்கிறது. அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது.

அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சந்நதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது.

இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது ‘சேதுபீடம்' ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிராகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிராகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிராகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும்.

திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் (தென் காளஹஸ்தி)

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் புண்ணிய நதியான சுரபி நதி முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில். மதுரை நாயக்கர் அரசில்  பிச்சை பிள்ளை என்பவர் கணக்குப் பிள்ளையாக இருந்தார். இவர் காளஹஸ்தியில் எழுந்தருளியிருக்கும் காளத்தீஸ்வரரின் தீவிர பக்தர். ஆண்டுக்கு ஒரு முறை மகாசிவராத்திரி அன்று அங்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பல காலம் இப்படி காளஹஸ்தி சென்று வந்த பிச்சையால் வயது ஆன பிறகு நீண்ட பயணம் செய்தும் காளத்தி செல்ல முடியவில்லை என வருந்தினார். உண்ணா நோம்பு இருந்தார். இறைவன் கனவில் தோன்றி காட்டூரில் அமைந்துள்ள வில்வ வனத்தின் வெள்ளை அரளி பூத்திருக்கும் மரத்தடியில் என்னை நீ கண்டு தரிசிக்கலாம் என்றார். அடுத்த நாள் பிச்சைபிள்ளை அரளி பூத்திருந்த மரத்தடியில் பார்த்தபோது இறைவன் லிங்க வடிவில் காட்சி தந்தார். அங்கேயே  வேத மந்திரம் முழங்க திருக்கோவில் அமைத்தார். இன்று இக்கோயில் சீரும் சிறப்புமாக விளங்குகிறது.

ராகு, கேது தலமான இங்கு ஞாயிறு தோறும் ராகு காலத்தில் சர்ப்பதோஷ நிவர்த்தி, சாந்தி பூஜை நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் காளஹஸ்திக்கு நிகரான ஸ்தலமாகக் கருதப்படுவதால் இது தென் காளஹஸ்தி எனப் போற்றப்படுகிறது. இங்கு வந்து வழிபடுவோருக்கு ஜாதகத்தில் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், ராகு திசை,கேது திசை, ராகு புத்தி, கேது புத்தி, களத்திரதோஷம், புத்ர தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்கின்றனர்.

திருப்பாம்புரம்

இத்தலத்தில் ஓருருவாகி ஈசனைநெஞ்சில் இருத்தி ராகுவும், கேதுவும் அருள் பெற்றார்கள் என்பது புராண வரலாறு. ஆகையால் இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள் மற்றும் ராகு-கேதுவை வணங்குபவர்களுக்கு பாபங்கள் நீங்கப் பெறுகின்றன; நினைத்த காரியம் கை கூடுகிறது. ராகுவும், கேதுவும் கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சந்நதியில் எழுந்தருளியுள்ளார்கள். ராகு கால வேளையில் இச்சந்நதியில் அபிஷேக அர்ச்சனை செய்வோர் தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறுகின்றனர்.

உலகைத் தாங்கும் ஆதிசேஷன் சுமையால் உடல் நலிவுற்று வருந்தியபோது ஈசனின் ஆணைப்படி மகா சிவராத்திரியின் முதல் காலத்தில் திருக்குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலத்தில் திருநாகேச்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நாலாம் காலத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு விமோசனம் பெற்றதாக புராணம் சொல்கிறது. அதனால் திருப்பாம்புரத்தில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை என்பது ஐதீகம். இன்றும் இவ்வூர் சுவாமி சந்நதி கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாக சொல்லப்படுகின்றது. அவ்வப்போது சுவாமியின் திருமேனியில் மாலைபோல் சட்டையை உறித்து பாம்பு சென்று விடுவதே இதற்குச் சான்று.

சிவாச்சாரியார்கள் கருவறையில் நுழையும்போதே ‘நாகராஜா, நாகேச்வரா’ என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் வருவார்களாம். திருவாரூர் மாவட்டம் குடவாசல்-பேரளம் வழியில் இருக்கிறது திருப்பாம்புரம். ராகு பாதிப்பு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்குகிறது.  ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.

நாகர்கோவில்

நாக வழிபாட்டிற்காக கோயில்கள் பல இருந்தாலும் நாகத்தின் பெயரையே கொண்ட நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயில் தனிச்சிறப்பு கொண்டது என்றே சொல்லலாம். நாகர்கோவில் ஊர்ப் பெயரும் நாகராஜா கோயிலை வைத்து ஏற்பட்டதே. மூலவர் நாகராஜா. இங்கு சிவன், திருமால். பாலமுருகனுக்கு தனித்தனி சந்நதிகள் உண்டு. நாகராஜா, அனந்தகிருஷ்ணர் சந்நதிகளுக்கு இடையே அங்கியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. நாகராஜா கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அக்கூரையில் எப்போதுமே பாம்பு காவல் புரிகிறது என்றும் வருடந்தோறும் ஆடி மாதம் கூரை புதிதாக வேயப்படும்போது ஒரு பாம்பு வெளிவருவது வழக்கம் என்றும் சொல்கிறார்கள். மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன. நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது.  

இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விசேஷமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகள் நடக்கும்.நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையம், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் நாகராஜா கோயில் அமைந்துள்ளது.

பேரையூர்

இந்த அருந்தலத்தை பேரேஸ்வரம் என்றும் செண்பகவனம் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்கமாக விரித்த நாகமோடு நாகநாதர் எனும் திருப்பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார். அனைத்து நாக சக்திகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் கம்பீரத்தோடு வீற்றிருக்கிறார். யோகம் வளர்க்கும் இந்த நாயகர் இகலோகமான நம் வாழ்க்கையில் வேண்டுவன யாவையும் கேட்காமலேயே அருள்கிறார். சிவனின் சத்திய அம்சம் எத்தனை ரகசியங்களை தமக்குள் கொண்டிருக்கிறது எனும் பிரமிப்பு நாகநாதரை தரிசிக்கும்போது உணரமுடியும். முக்கியமாக நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும்போது உடலில் நீலநிறம் காட்டுவது அதிசயத்திலும் அதிசயம்.

நாகநாதஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித்தனி கொடி மரம் இங்குள்ளது. இந்த தலத்தின் பிரதான விஷயமே நாத ஒலி எழும் சுனைதான். சுற்றிலும் நாகர்கள் படமெடுத்து காக்க என்றும் வற்றாத சுனைக்குள் நாகநாதரே அருவமாக வீற்றிருக்கிறார். என்றும் வற்றாமல் இருப்பது இந்த நாகச் சுனையின் சிறப்பம்சமாகும். ரிஷிகளும், முனிவர்களும் வந்து சுனையில் கரையில் அமர்ந்து தவமியற்றி சென்றுள்ளனர். அதுபோன்று பாம்புப் புற்று இல்லாத தலம் இது. எவரையும் இந்த ஊரில் பாம்பு தீண்டியதில்லை. அப்படியே தீண்டினாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதில்லை என்கிறார்கள்.

கௌதமர்,  பெருழிழலை குரும்ப நாயனார், அகஸ்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர். இரட்டை விநாயகர், பொய்யாத விநாயகர், தேவ விநாயகர், தொடுவாய் விநாயகர் எனும் நாமங்களோடு ஆதிநாயகர் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். புதுக்கோட்டை-திருமயம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரத்திலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில்  வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது. இக்கோயில் மதில் சுவரிலும் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கல் விக்ரகங்கள் உள்ளன.  

கீழப்பெரும் பள்ளம்

கேதுவுக்கு தனி தோஷம் நீக்கும் தலமாக கீழப்பெரும் பள்ளம் விளங்குகிறது. ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் பழமையான  கோவில் ஆகும் இங்கு கேது பகவான் தனிச் சந்நதியில் எழுந்தருளி உள்ளார். சுவாமி: அருள்மிகு நாகநாத சுவாமி.

அம்பாள்: அருள்மிகு செளந்தரநாயகி.
மூர்த்தி: நடராசர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், பிள்ளையார், கேது, தனி அம்பாள்.
தீர்த்தம்: நாகதீர்த்தம்.
தலவிருட்சம்: மூங்கில் மரம்.

இத்தலத்தை வணங்குவதால் கேது தரும் அசுப பலன்கள் - தரித்திரம், வியாதிகள் மற்றும் பீடைகளில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.

தல வரலாறு: அசுரர்களும் தேவர்களும் சேர்ந்து பாற்கடலை வாசுகி என்ற நாகத்தைக் கொண்டு, மேரு மலையைச் சுற்றி மத்தாக உபயோகித்து அமிர்தம் பெற முயற்சி செய்தனர். ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் இழுத்தனர். கடையும்போது வாசுகியின் வாயில் இருந்து கடுமையான விஷம் வெளிவந்தது. ஆலகால விஷமான அக்கொடிய விஷத்தால் தேவர்கள் அஞ்சினர். சிவபெருமானிடம் முறையிட்டனர். ஈஸ்வரனும் அவர்களைக் காக்க, தானே அந்த விஷத்தை எடுத்து விழுங்கினார். கணவர் விஷத்தை விழுங்குவதை பார்த்த பார்வதி பயந்து போனார்.

பார்வதி தேவி எம்பெருமானின்  கண்டத்திலேயே அவ்விஷத்தை நிறுத்தி நிவர்த்தி செய்தார்.  வாசுகி, தன்னால் சிவபெருமானுக்கு ஏற்பட்ட கஷ்டத்தையும் தன்னால் சிவ அபச்செரம் நடந்து  விட்டதே என்றும் கவலை கொண்டு, மனம் வருந்தி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள்.  சிவபெருமான் வாசுகியின் தியாகத்தைப் பாராட்டினார். வாசுகி சிவபெருமானிடம், இந்தத் தலத்தில் காட்சி தந்த இடத்திற்கு  பெருமை சேர்க்க, இங்கு அதே கோலத்தில் எழுந்து அருள வேண்டும் என பிரார்த்தனை செய்ய, அவளது கோரிக்கையின் படி இங்கு நாகநாதராக அருள்பாலிக்கின்றார்.

இங்கு தனிச் சந்நதியில் பாம்புத்  தலையுடன் மனித உடலோடு கேது பகவான் சிம்ம பீடத்தில் சிவபெருமானை நோக்கி வணங்கியபடி உள்ளார். மற்ற நவகிரகங்கள் இல்லை. ஞானத்தை அள்ளி தரும் கேது இங்கு அனுகிரகம் செய்யும் அன்பராகவே வீற்றிருக்கிறார். இவருக்கு ராகு காலத்தில், எமகண்டத்தில் விசேஷ பூஜைகள்செய்யப்படுகிறது. கேதுவின் சந்நதியில் சூரிய பகவானின் சிலைகள் இரண்டு இருக்கின்றன. அத்துடன் சனீஸ்வரர் சிலையும் உண்டு. தை மாதம் முதல்  ஆனி மாதம் முடிய உள்ள உத்தராயண காலத்தில் ஒரு சூரியனுக்கும், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயண காலத்தில் மற்றொரு சூரியனுக்கும் தனிப்பட்ட விசேஷ பூஜைகள்  நடத்தப்படுகிறது.

கவுந்தப்பாடி

ஈரோட்டிலிருந்து 18-வது கிலோ மீட்டரில் கோபி-சத்யமங்கலம் பேருந்து பாதையில் உள்ளது கவுந்தப்பாடி. கவுந்தப்பாடிக்கு அருகே உள்ள மாரப்பாளையம் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு அரை கி.மீ. நடந்து சென்று, ராகு-கேது பரிகாரத் தலமாகத் திகழும் காளத்தீஸ்வரர் கோயிலைக் காணலாம். தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து  பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள். கிழக்கு நோக்கி அமைந்து அருள்பாலிக்கும் இத்தல இறைவனை தரிசித்தால் முன் ஜன்ம தீவினைகள் பறந்தோடும்.

இங்கு அம்பாள், பிரசன்ன நாயகியை ஞானப்பூங்கோதை என்றும், ஞானப் பிரசன்னாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். இறைவன் காளத்தீஸ்வரரின் கருவறைக்கு முன்னால் ‘ராகு-கேது,’கணபதி மற்றும் நால்வர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. ராகு-கேது தோஷங்களும், திருமணத் தடையும் இக்கோயிலுக்கு வந்து வணங்கும்போது நீங்கிவிடும் என்பது ஐதீகம். காளஹஸ்தியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இவ்வாலயத்தில் வீற்றிருப்பது தனிச்சிறப்பு. திருப்பதி, காளஹஸ்திக்கு அடுத்து சிவனுக்கு முன்னால் ‘வராகர்’ சிலை இருப்பது இக்கோயிலில் மட்டும்தான்.

கெருகம்பாக்கம்

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்தக் காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிக்கவேண்டியிருக்கும். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும். இக்கோயிலில் கேதுபகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம்.

இரு நாகங்கள் பின்னிப் பிணைந்திருக்க, நடுவில் ‘காளிங்க நர்த்தன கண்ணன்’ போல இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகிறது. சென்னை, போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ. தொலைவு.

பாமணி

மன்னார்குடியை அடுத்த பாமணியில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு தென்பகுதியில் உள்ள சிறிய கிராமம்தான் பாமணி. ஒரு காலத்தில் திருபாதாளேச்சுரம் என்றும், பாம்பணி என்றும் அழைக்கப்பட்டது மருவி, தற்போது ‘பாமணி’ என்றாகிவிட்டது. முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதன் முறையாக போருக்கு செல்லுமுன் இக்கோயிலுக்கு வந்து நாகநாதரை தரிசனம் செய்துவிட்டு சென்றார். நாகநாத சுவாமி  ‘சர்ப்பபுரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார்.

இதனாலேயே இத்தலம் நாகதோஷ நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது. பிரம்ம தீர்த்தம், தேனு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், நிலத்வஜ தீர்த்தம் ஆகியவை கோயிலின் புனிதநீர்நிலைகளாக உள்ளன. நாகநாத சுவாமி கோயிலில் உள்ள தனஞ்செயர், ராகு-கேது தோஷப் பரிகார மூர்த்தியாக அருள்பாலித்து வருவது கோயிலுக்குக் கூடுதல் சிறப்பு.

திருவாஞ்சியம்

முக்தி தரும் தலங்களில் திருவாஞ்சியமும் ஒன்று. திருவாஞ்சியம் இறைவனை எமன் வழிபட்டு பேறுகள் பெற்றார். கோயிலின் வடபுறத்தில் குப்தகங்கை எனும் தீர்த்தக்குளம் உள்ளது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்குளத்தில் நீராடினால் கங்கை நதியில் நீராடிய பலன் கிட்டும் என்பார்கள். மோகினி அவதாரத்தின்போது மகாவிஷ்ணுவால் வெட்டப்பட்ட அசுரன் ராகுவாகவும், கேதுவாகவும் உருமாறினான். பொதுவாக பிற கோயில்களில் தனித்தனி மூர்த்தியாக இவர்கள் காட்சியளிக்கிறார்கள்.

திருவாஞ்சியத்தில் மட்டும், அபூர்வமான ஒரே மூர்த்தியாக இணைந்து அருள்புரிகிறார்கள். இந்த அமைப்பு ‘சண்டராகு’ என்று சொல்லப்படுகிறது. தம் இருவரால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை இருவரும் ஒருவராகத் தீர்த்து ஆறுதல்படுத்தி வைக்கிறார்கள்! திருவாரூர்- மயிலாடுதுறை வழியில் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவாஞ்சியம்.

குன்றத்தூர்

நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர். யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங் களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை
நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது. ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது.

சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாக கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார். இத்தலத்தை
வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர்.

Tags : Nagatosham ,Boki Happiness ,
× RELATED நாகதோஷம் போக்கும் நாகநாதர்