×

நாகதோஷம் போக்கும் திருத்தலம் : தேவாரப்பதிகங்களில் பாடப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்

கொங்கு மண்டலத்தின் தொன்மை மிகு, சிவத்தலங்களுள் ஒன்றாக திகழ்வது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில். திருஞான சம்பந்தரால் தேவாரப் பதிகங்களில் ‘கொடிமாடச் செங்குன்றூர்’ என்று பாடப்பெற்ற பெருமைக்குரிய தலமே, தற்போது ‘திருச்செங்கோடு’ என்று கூறப்படுகிறது. இறைவன் ‘அர்த்தநாரீஸ்வரர்’ என்ற பெயரிலும், அம்பாள் ‘பாகம்பிரியாள்’ என்ற பெயரிலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.செங்கோட்டு வேலவர் எனப்படும் முருகனுக்கு இங்கு தனி சன்னதி அமைந்துள்ளது. செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னதி அமைந்துள்ளது சிறப்பு. இறைவன் அர்த்தநாரீஸ்வரரை திருஞானசம்பந்தர் முதலாம் திருமுறையின் 107வது திருப்பதிகத்திலும், திருநீலகண்ட திருப்பதிகம் எனும் 116வது திருப்பதிகத்திலும் பாடியுள்ளார்.

இக்கோயிலின் மற்றொரு இறைவன் செங்கோட்டுவேலவரை அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம் மற்றும் கந்தரனு பூதியில் பாடியுள்ளார். அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர், சுமார் 6 அடி உயரத்தில், உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும், பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள்.

மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள். அர்த்தநாரீஸ்வரர் சன்னதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கி நாரிகணபதி சன்னதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற லிங்கத்துடன் நாகேஸ்வரர் சன்னதியும் உள்ளது.அர்த்தநாரீஸ்வரர் சன்னதியின் முன் மண்டபத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்கள் என அனைத்துப் பகுதி களும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப் பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது. நாக தோஷங்கள் நீங்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இந்த மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதை, 1200 படிகளைக் கொண்டுள்ளது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கும் சிறந்த சான்றாக உள்ளது. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது வீரர்களைத் தாங்கிய    ஒற்றைக் கற்தூண்கள் சிற்ப வேலைப் பாடுமிக்கவை. செங்கோட்டு வேலவர் சன்னதி முன்பு உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், மன்மதன், ரதி, காளியின் ஒற்றைக் கல்லினால் ஆன சிற்பங்கள் உள்ளன.
இம்மண்டபத்தின் கூரைப் பகுதியில் கல்லினாலான கவிழ்ந்த தாமரை மலர், கிளிகள், கல்சங்கிலிகள் போன்றவை வியப்பூட்டும் சிற்பங்களாக காட்சி யளிக்கிறது. ஆதிசேஷன், மகாவிஷ்ணு ஆகியோர் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். ஆதிகேசவப் பெருமாள் என்ற பெயரில் மகாவிஷ்ணு தனிக்கோயிலில் காட்சி தருகிறார். வைகாசி பிரமோற்சவத்தின்போது, இவருக்கு தனியே கொடியேற்றி 10ம் நாளில் திருக்கல்யாணமும், பின் தேரோட்டமும் நடக்கும். சிவராத்திரியன்று இரவில் இவருக்கு 4 கால பூஜை நடப்பது விசேஷம். ஏகாதசி நாட்களில் கருடசேவை சாதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED சுந்தர வேடம்