×

குறைவற்ற வாழ்வருளும் கங்காஜடாதீஸ்வரர்

பக்தர்களின் குறைகளை போக்கி, பக்தவத்சலனாக, சிவபெருமான் எழுந்தருளும் இப்பூவுலகத் திருத்தலங்கள் எண்ணற்றவைகளுள் ஒன்றாக திகழ்வது கோவிந்தபுத்தூர். ஒரு காலத்தில் இவ்வூர் காடாக இருந்தது. இங்குள்ள வில்வ மரம் ஒன்றின் அடியில் இருந்த புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கத்தின் மீது தேவலோகப் பசுவான காமதேனு பாலைப் பொழிந்து வழிபட்டதால் கோசுரந்தபுற்றூர் என்றிருந்து, கோகரந்தபுற்றூர் ஆகி, தற்போது கோவிந்தபுத்தூர் என்று அழைக்கப்படுகின்றது. முகாசுர வதத்தின்போது சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சண்டை ஏற்பட்டு, அர்ஜுனன் ஈசனை வென்று, ஈசனது திருவருளால் பாசுபதாஸ்திரத்தை பெறுகின்றான். அதை இத்தலத்தில் பெற்றதால் ஆதியில் இத்தலம் விஜயமங்கலம் என்றும் விஜயமங்கை என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இதை, ‘‘கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழுதெழு விசயமங்கை” என்று சம்பந்தரும், கொள்ளிடக்கரை கோவிந்தப்புத்தூரில் வெள்விடைக்கருள் செய் விசயமங்கை என்று திருநாவுக்கரசரும் மெய்ப்பித்துள்ளனர். மேலும், அப்பர், அர்ஜுனன் இங்கு வழிபட்டதை. “பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து வேண்டு நல்வரங்கொள் விஜயமங்கை” என்றும் போற்றுகின்றார். இதன் வாயிலாக கோவிந்தபுத்தூரே தேவாரத்தலம் என்பது ஊர்ஜிதமாகிறது. மேலும், சோழர்களின் பல கல்வெட்டுகள், இத்தலமே தேவாரத் திருத்தலம் என்பதற்கு பிரதான சான்றாக திகழ்கிறது. இதை விடுத்துப் பலர் கொள்ளிடத்தின் தென்கரையிலுள்ள தலமே விஜயமங்கை என்றும் கூறிவருகின்றனர். அது தவறு என்பது கல்வெட்டு ஆய்வாளர்கள் பலரின் தீர்மானமாகும். சோழநாட்டின் காவிரி வடகரையின் 63 தேவாரப் பாடல் பெற்ற தலங்களுல் 47வது தலமாக இந்த கோவிந்தபுத்தூர் போற்றப் பெறுகின்றது. சம்பந்தர் பாடிய பாடல் கல்வெட்டாக பொறிக்கப் பெற்றிருப்பதும், அவர் பெயரால் மடம் இருந்ததும், இவ்வூர் மற்றும் இக்கோவில் அவரால் பாடப் பெற்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே இக்கோவில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், கி.பி. 929ஆம் ஆண்டு பராந்தகச் சோழனால் முழுதும் செங்கற்தளியாக மாற்றப்பட்டது. அதன்பின் கி.பி. 980ம் ஆண்டு உத்தமச் சோழனால் இக்கோயில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. உத்தமச்சோழனின் தலைமை அதிகாரியாக விளங்கிய அம்பலவன் பழுவூர் நக்கனால் இக்கோயில் முழுவதும் கற்றளியாகக் கட்டப்பெற்றது. அதோடு இவர் இக்கோயிலில் நடராஜர் மற்றும் சிவகாமியை எழுந்தருளச் செய்து ஆபரணங்களையும் அளித்துள்ளார்.பராந்தகச் சோழன் தனது தாய் வானவன் மாதேவியின் பெயரில் பிரம்மதேயக் குடியிருப்பினை [பிராமணர்கள் வாழும் பகுதி] இங்கு அமைத்துள்ளான். அதில் [வடகை பிரம்மதேயம் பெரிய ஸ்ரீ வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்து, ஸ்ரீவிஜயமங்கலத்து மகாதேவர்] விஜயமங்கலத்து மகாதேவர் ஆலயமும் இந்த கோவிந்தப்புத்தூரும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீபராந்தகச் சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்ட இடமே இன்று கோவிந்தப்புத்தூருக்கு அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் ஊராகும்.

ஊரின் தென்புறம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து 1/2  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். ஆலயத்தின் எதிரே அர்ஜுனதீர்த்தக்குளம் அல்லிமலர் பரப்பி அழகு கொஞ்சுகிறது. இரண்டு பெரும் பிரகாரங்களை கொண்டு நீள்வாக்கில்அமையப்பெற்ற ஆலயத்தின் முகப்பில் பசு சிவபெருமானுக்கு பால் சொரிந்து வழிபடும் சுதை வடிவம் காணப்படுகிறது.உள்ளே வலப்பக்கம் தனி விமானத்
துடன் கூடிய அம்பாள் சந்நதி தெற்குநோக்கியவாறு அமைந்துள்ளது. முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என அமையப்பெற்றுள்ளது. முன் மண்டபத் தூண்கள் சிங்கமுகத் தூண்களைக் கொண்டு பல்லவர் கலைத்திறனை பறைசாற்றுகின்றன.கருவறையில் நின்ற நிலையில் அழகு ததும்ப புன்னகை நாயகியாய், சர்வ மங்களங்களையும் தருபவளாய் அருள்பாலிக்கின்றாள், ஸ்ரீ மங்களாம்பிகை. அம்பாள் சந்நதிக்கு வலப்புறம் வசந்த மண்டபம் அமைந்துள்ளது. இரண்டாம் வாயிலுக்கு முன்னே நந்தியம்பெருமான் காணப்படுகின்றார். அருகே பலிபீடம் உள்ளது. இரண்டாம் வாயில் கடந்து உள்ளே செல்ல விசாலமான மகா மண்டபம். ஈசான்ய மூலையில் நவக்கிரக சந்நதி உள்ளது. அருகே சந்திரன், சூரியன், பைரவர் ஆகிய சிலாரூபங்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தில் வலதுபுறம் தென்முகம் காட்டியபடியான அம்பலவாணர் சந்நிதி உள்ளது. நேராக மகாமண்டபம். அடுத்து ஸ்தபன மண்டபம், அந்தராளம் மற்றும் கருவறை என அமைந்துள்ளது. கருவறையுள் கருணையே வடிவாய் காட்சி அளிக்கின்றார், ஸ்ரீ கங்காஜடாதீஸ்வரர். வழவழ லிங்கமாக சிறிய வடிவில் காட்சி தந்து பக்தர்களை தன் வசம் ஈர்த்து மகிழ்விக்கின்றார். உள் சுற்றினை வலம் வருகையில் திருமாளிகைப்பத்தியின் தென்புறம் சப்த மாதர்களின் அதி அற்புதமான சிற்பங்களைக் கண்டு மயங்குகின்றோம். உடன் பழைய தட்சிணாமூர்த்தி, கணபதி, துர்க்கை, பராந்தகச் சோழன் மற்றும் அவனது மனைவி உள்ளிட்ட சிலைகளை கண்ணுறுகின்றோம். நிருர்தி மூலையில் தல கணபதி கம்பீரமாக வீற்றருள்கின்றார். மேற்கில் கந்தனின் தனிச்சந்நதி உள்ளது.

வடமேற்கில் தல புராணத்தை விளக்கும் சுதைச்சிற்பங்கள் பாங்குற வடிக்கப்பட்டுள்ளது. அருகே கஜலக்ஷ்மி சந்நதியும் உள்ளது. அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட சுவாமி கருவறை விமானம் காண்போரைக் கவரும் என்பதில் ஐயமில்லை. சண்டேசர் சன்னிதி அருகே திருமஞ்சனக்கிணறு ஒன்று உள்ளது. ஒன்பது மாடங்கள் கொண்ட இவ்வாலய கர்ப்பக்கிரக அமைப்பு நவகோஷ்ட வகையினைச் சார்ந்ததாகும்.பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் காட்சி, அர்ஜுனன் தவம் புரிதல் மற்றும் அர்ஜுனனுடன் ஈசன் போரிடும் கிராதார்ஜுனக் காட்சி, வேதியர்கள் சிவலிங்கத்தை வழிபடும் காட்சி என அநேக சிற்பங்கள் கருவறையின் வெளியே மேற்குச் சுற்றில் புடைக்கப்பட்டுள்ளது. இவ்வூர்......முதலாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டில், “வடகரை இராஜேந்திர சிங்கவள நாட்டுப் பெரிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்து விசயமங்கை” என்றும், திரிபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டில், “விக்கிரமசோழன் நாட்டு இன்னம்பர் நாட்டு விசயமங்கை” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன், பரகேசரி உத்தமசோழன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவன் ஆகியோர் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்கு பெருமளவில் காணப்படுகின்றன. அதோடு இக்கல்வெட்டுகளில் விஜயமங்கலமுடைய மகாதேவர், விஜயமங்கலத்து மகாதேவர் மற்றும் விஜயமங்கலம் உடைய பரமசாமி என இறைவனது திருப்பெயர்கள் குறிப்பிடப்பெற்றுள்ளது. இவ்வூரில் ‘திருத்தொண்டத் தொகையன் திருமடம்’ ஒன்று இருந்ததை திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவரின் 32ஆம் ஆண்டு கல்வெட்டு உணர்த்துகின்றது.

தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிந்தபுத்தூர் ஆலயத்திற்கு உண்டு. திருஞானசம்பந்தர் பாடிய \”வாழ்க அந்தணர் வானவர் ஆயினும்\” என்னும் பாடல் இக்கோயிலில் கி.பி. 1248இல் எழுதப்பட்டுள்ள மூன்றாம் இராஜேந்திரச் சோழனுடைய கல்வெட்டின் தொடக்க வரிகளாக முழுப்பாடலும் எழுதப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்கள் பலவற்றிலும் பூஜையின்போது தேவாரம் ஓதப்பட்டன. அதுபோல் இந்த கோவிந்தபுத்தூர் கோயிலிலும் தேவாரப் பதிகங்கள் ஓதப்பட்டன. கி.பி. 948ல் வடிக்கப்பட்ட உத்தமச் சோழனின் கல்வெட்டு இக்கோவிலில் தேவாரத் திருப்பதிகம் விண்ணப்பம் செய்ததைப்பற்றி கூறுகின்றது. இத்திருமுறை ஓதலுக்காக இவ்வூர் சபையினரால் நெல் வழங்கப்பட்டதையும், முதலாம் இராஜேந்திரனின் கி.பி.1014ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று செய்தி சொல்கின்றது. பாண்டியர் மற்றும் விஜயநகரமன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு பரவிக் கிடக்கின்றன. இக்கோயிலில் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் ஆறு கல்வெட்டுகள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை. 1426ஆம் ஆண்டு விஜயநகர மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. இன்னம்பூரில் கி.பி. 1372ம் ஆண்டு விஜயநகர மன்னன் கம்பண்ணரின் கல்வெட்டினில் இவ்வூர் கோவிந்தபுத்தூர் என்றும் இவ்வூர் இந்நாட்டின் தலை நகரமாக விளங்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவனுக்கு உண்டான அனைத்து விசேடங்களும் சிறப்புற நடத்தப்படுகின்றன.கல்வி, தொழில் போன்ற எச்செயல் தொடங்கினாலும் அது மிகச் சிறப்பாக வளர்ச்சியடயவும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை துவங்கும் முன் இங்கு வந்து வணங்கிவிட்டுத் துவங்கினால் மிகசுபிட்சமாக நடைபெறும்.அரியலூர் மாவட்டம், தா.பழூரிலிருந்து இவ்வூரை அடையலாம்.அரியலூரில் இருந்து வி.கைகாட்டி, விக்கிரமங்கலம் வழியாகவும் கோவிந்தபுத்தூர் வரலாம்.

Tags : Gangajadatiswarar ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!