×

‘ராமா’ என்றிடக் கரைந்தோடிடும் பாவமெல்லாம்!

வென்றிசேர் இலங்கையானை வென்ற
 மால்வீரன் ஓத நின்ற ராமாயணத்தின்
 நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப்
படித்தோர் தாமும் உரைத்திடக்கேட்டோர் தாமும்
நன்று இது என்றோர் தாமும் நரகமது எய்திடாரே

- இது, தான் இயற்றிய ராமாயணத்தில் கம்பன், காப்புப் படலமாக அறிவித்திருக்கும் தகவல் பாடல். ராமாயண நிகழ்ச்சிகளைப் படித்தோர், உரைத்தோர், கேட்டோர் யாவரும் நரகம் எய்த மாட்டார்.  அதாவது, இவ்வுலகிலேயே எந்தத் துன்பமுமின்றி நெடிதுநாள் வாழ்ந்து சிறப்பெய்துவர், மறுமையிலும் நரகம் செல்லமாட்டார். ஸ்ரீராம நவமி புண்ணிய காலத்தில் ராமாயணம் படிப்போம், கேட்போம், உரைப்போம், ‘நன்று இது’ என்று பாராட்டுவோம். கூடவே சில கோயில்களில் ராம தரிசனமும் செய்வோம்; மேன்மையடைவோம்.

சென்னை தனுஷ்கோடி ராமர்:

ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. புராண தொன்மை மிக்கக் கோயில் ஒன்று அங்கு இருந்தது. தான் சீதையினைக் கண்ட செய்தியை அனுமன் ராமரிடம் சொன்னது இத்தலத்தில்தான். இலங்கையில் அவர் வாலில் தீ மூட்டியதால் இலங்கை முழுவதையும் தீ மூட்டி தத்தளிக்க வைத்தார். செய்தி அறிந்த ராவணன் ககன், சாரணன் என்ற அரக்கர்களை தூதர்களாக ராமரிடம் அனுப்பினான். அனுமன் அவர்களிடம் சண்டைக்குப் போக, ராமர் தூதர்களை இம்சித்தல் தர்மம் அன்று என்று கூறினார். வந்தவர்களோ ராமரது படை பலத்தை அறியவே வந்துள்ளோம் எனக் கூறினர். தான் சாட்சாத் திருமாலின் அம்சம் என ராமர் விஸ்வரூப தரிசனம் காட்டினார். இது புராணம் கூறும் தகவல். ஆனால், 1964ல் ஏற்பட்ட மிகப்பெரிய புயலில் முற்றிலும் அழிந்து போன இவ்வாலய மூர்த்தங்கள் மூன்றாண்டுகள் திருப்புல்லாணியில் கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னர் அங்கு நடந்த திருட்டுச் சம்பவத்தின் போது மீட்கப்பட்ட ராம உற்சவ விக்ரகங்களை மைசூரில் கொண்டு வந்து வைத்தனர். பின்னர் பாஷ்யம் ஐயங்கார் என்பவர் கேட்டுக் கொண்டதன் பேரில் அதே பகுதியில் வேறோர் கோயில் அமைத்திட திட்டமிட்டனர். ஆனால், பகவான் அவர் கனவில் தோன்றி தன்னை சென்னைக்கு எடுத்துச் சென்று அங்கேயே ஸ்தாபிக்கக் கூறினார். சென்னை பம்மலில் அந்த விக்ரகங்களை வைத்து கோயில் நிர்மாணித்து 23.4.1987ல் கும்பாபிஷேகமும் நடத்தினார்கள். சிறிய ஆலயமாக இருந்தாலும் இங்கு பல உற்சவங்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. ஆலயத் தொடர்புக்கு: 044-22732008. 9790987629.

ஞாயிறு ஸ்வர்ணகோதண்டராமர்

செங்குன்றத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஞாயிறு தலம். இத்தல புஷ்பரதேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது ஸ்வர்ண கோதண்டராமர் ஆலயம். சூரியனின் தலமாக கருதப்படும் இவ்வூரில் அகத்தியர் புஷ்பரதேஸ்வரரை வழிபட்டுள்ளார். ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த அகத்தியர் வழிபட்ட திருத்தலம் இது. ராவணனைஅழிக்க எந்த உபாயமும் கைகூடாதுபோக ராமருக்கு அகத்தியர் உபதேசித்த இந்த ஸ்லோகம் சூரியனின் பெருமையை விளக்கி வெற்றி மார்க்கத்தை வழிகாட்டியதாக புராணம் கூறுகிறது. சூரிய தீர்த்தம் உள்ள இத்தலத்தில் ஸ்ரீஸ்வர்ண கோதண்டராமர் திருவருள் பாலிக்கிறார். சுயம்பு சக்கரத்தாழ்வார் மூர்த்திக்குத் தனிச் சந்நதி உள்ளது. ராமர் இத்தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளார். 2002ல் பூமியைத் தோண்டியபோது கிடைத்த பச்சை மரகதக் கல்லால் ஆன சக்கரத்தாழ்வார் அபூர்வமானவர். ராமர் பத்ராசல ராமர் போல சீதையினை இடப்புற மடியில் அமர்த்திக் கொண்டு, சங்கு-சக்கர தாரியாக தரிசனம் நல்குகிறார். ஆஞ்சநேயர், லட்சுமி நாராயணர், வரதர், ஹயக்ரீவர், சந்தான கிருஷ்ணர், லட்சுமி நரசிம்மர் ஆகிய  சந்நதிகளும் உள்ளன.

காஞ்சியில் ராம யந்திரம்

காஞ்சி கைலாசநாதர் கோயில் அருகே உபநிஷத் பிரம்ம மடம் எனும் இடத்தில் ராமர் கோயில் உள்ளது. இங்கு பெரிய ராம யந்திரத்துடன் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமர் கோயில் உள்ளது. இந்த ராம யந்திரம் நாரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ராமர் சந்நதிக்கு அருகே கருங்கல்லால் ஆன யந்திரோத்கார அனுமன் யந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். இத்தலத்தில்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் வெளிப்பட்டதாக புராணம் கூறுகிறது. இவ்விடத்தை உபநிஷத் பிரம்ம மடம் என்று கூறுகின்றனர். இந்த வளாகத்தில் திருக்குளமும், நிறைய முனிவர்கள் மற்றும் யோகிகளின் சமாதிகளும் உள்ளன.  பிரம்ம யோகினி, பிரம்மேந்திராள், ராமச்சந்திர சரஸ்வதி என்கின்ற பெயர்களால் அழைக்கப்பட்ட பிரம்மேந்திரர் 108 உபநிஷத்துகளுக்கும் தன் தந்தையின் விருப்பப்படி பாஷ்யம் எழுதியுள்ளார். சென்னை அடையாறு ஓலைச்சுவடி காப்பகத்தில் இது உள்ளது. இவர் அழைப்பின் பெயரில் சத்குரு தியாகராஜர் விஜயம் செய்ததாகத் தகவல். அவரது சீடர் வாலாஜாபேட் வெங்கட்ரமண பாகவதரின் வழியில் வந்தோர் மதுரையில் அந்த அழைப்பிதழைப் பாதுகாத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை செய்யாறு ராமர்

செய்யாறு அரசு மருத்துவமனை அருகே உள்ளது விஜயகோதண்டராமர் ஆலயம். லட்சுமணர், சீதா, அனுமன் சமேதராய் ராமர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். ஜடாயுவின் சகோதரன் சம்பாதியின் உருவம் விஜய கோதண்டராமருடன் கருவறையில் இருப்பது வேறெங்கும் காணவியலாத அதிசயம். ராமர் பாதுகையினை வணங்கிய வண்ணம் உள்ள அனுமன், ‘பாதுகா சேவக அனுமன்’ என வணங்கப்படுகிறார். ராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு உதவி புரிந்ததாக அணில், பட்சிகள், விலங்கினங்கள், வானரங்கள் மற்றும் மலைகள், சமுத்திரங்கள் போன்றவையும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. 800 மைல்களுக்கு அப்பால் உள்ள சீதையின் இருப்பிடத்தையும் இலங்கை மாநகரையும் தன் கூரிய பார்வையினால் இடம் கண்டு வானரர்களுக்குக் கூறி உதவினான் சம்பாதி. இழந்த சிறகுகளை மீண்டும் பொலிவுறப் பெற்றுத் திகழ்வான் என்று நிசாரார் என்கிற துறவி முன்பொருமுறை அருள் வழங்கினார். அவ்வாறே வானரர்களுக்குச் சீதையின் இருப்பிடத்தைச் சொன்ன மாத்திரத்திலேயே பலன் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியினை நினைவு கூறும் வகையில் இங்கே சம்பாதி ராமரின் அருகே நின்றிருக்கிறார். சம்பாதி வம்சத்தினைச் சேர்ந்த சம்பாதி கந்தாடை நரசிம்மாச்சாரியார் சுவாமிகளால் சம்பாதி குளக்கரையில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய சிங்கர்களும், மடாதிபதிகளும் மங்களாசாஸனம் செய்த தலம். குளக்கரையின் மேற்கில் ஆஞ்சநேயர் திகழ்கிறார். பரமேஸ்வர விண்ணகரம் என்னும் காஞ்சி வைகுண்டப்பெருமாள் ஆலயத்தின் அபிமானத் தலம் இது. ஆலயத் தொடர்புக்கு: 044-26631229. 9840483337.

வேலூர் பாலமதி ராமர்

வேலூரில் உள்ள ஓட்டேரியிலிருந்து திமிரி ஆற்காட்டிற்குச் செல்லும் மலைப்பாதையில் உள்ளது பாலமதி. வேலூர் பாகாயம் காவனூரை அடுத்துள்ள ஊர். வேலூரிலிருந்து 14 கி.மீ. தென் பத்ராசலம் என்றழைக்கப்படும் தலம். சில ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தில் நடந்த உண்மைச்சம்பவம் இது: இதே பகுதியில் வாழ்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு ‘பாலமதிக்கு வர்றீங்களா?’ என்று யாரோ கேட்பது போல் ஓர் பிரமை உண்டாகுமாம். அந்தத் தலம் எங்கிருக்கிறது என்று அறியாமல் தவித்த அவர் திருப்பதி தல யாத்திரையின்போது ஒருவரிடம் பாலமதி பற்றிப் பேசினாராம். தனக்கு அவ்விடம் தெரியும் என்று கூறிய நபர், அவர் ஊர் எல்லைவரை கொண்டு வந்து காட்டி விட்டுச் சென்றார். ஊர் மக்கள் மூலமாக மலை மேல் வேல் இருக்கும் செய்தியையும், அது சித்தர்கள் வாழ்ந்த பகுதி என்றும் அறிந்தார். அங்கே ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் இருந்தது. ஊரார் ராமகிருஷ்ணனை மலைமேல் அழைத்துச் சென்றபோது சித்தர் கோபால கிருஷ்ண தாசரைப் பற்றிக் கூறி அவரது படத்தையும் காட்டினார்கள். என்ன ஆச்சரியம் என்றால் பாலமதிக்கு வழிகாட்டிய அந்தப் பெரியவர் சாக்ஷாத் அந்தப் புகைப்படத்தில் இருந்தவர்தான்! ராமகிருஷ்ணசாது அந்தத் தலத்தினைப் பராமரித்து வருகிறார். பௌர்ணமி நாள் இத்தலத்தில் விசேஷம். ராமர் பாதமும் உள்ளது. அந்தத் தலத்திலேயே தங்கியிருந்து சமாதியானவர் கோபாலகிருஷ்ண சித்தர். பிற்காலத்தில் சித்தர் உருவச்சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சக்தி வாய்ந்த ஆஞ்சநேயர். அங்குள்ள பாதச்சுவடுகள் ஆஞ்சநேயருடையது என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரகடம் கோதண்டராமர்

செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒரகடம். ஒரகடம் கூட்டு ரோட்டிலிருந்து இடப்புறம் 5 கி.மீ. தொலைவு செல்லவேண்டும். 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். பராங்குசபுரம் என்ற பழைய பெயர் கொண்ட திருத்தலம். ஸ்ரீஅஹோபிலமடத்து 6வது பட்டம் இவ்வாலயத்தின் இரு புறங்களிலும் அக்ரஹாரங்களுக்கு இடமளித்து நிவந்தங்களும் அளித்தமையால் பராங்குசபுரம் என்ற பெயர் பெற்றது. பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வர வர்மன் திருப்பணி செய்துள்ளதாக ஆலய சுவரில் பதிக்கப்பட்ட கல்வெட்டு சொல்கிறது. கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயர், மூலவரோடு, உற்சவ மூர்த்திகள், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், சக்கரத்தாழ்வார், நவநீதகிருஷ்ணன், ஸ்ரீநிவாசப்பெருமாள் உற்சவர்களும் அங்கே உள்ளன. ஆகஸ்ட் 2002ல் சம்ப்ரோக்ஷணம் நடந்தது. ராமர் ரகுநந்தன் என்கின்ற திருநாமம் கொண்டவர். யோக அம்சமாக வலக்கையில் ஞானமுத்திரை, இடப்புறம் போகத்தை விளக்கும் வண்ணம் சீதாப்பிராட்டி, கால்மேல் காலிட்டு அமர்ந்த வீர கோலத்துடன் ராமர், லட்சுமணன் வில்லின்றி வணங்கிய நிலையில் உள்ளார். ரிஷ்ய ஸ்ருங்கர் ஓர் கல் தூணில் காட்சி தருகிறார். இத்தலத்தில் அவர் தவமேற்றிருந்தார் என்பதே இதற்கான காரணம். கோசலையின் பிரியமான நாமம் ரகுநந்தன் என்று கூறப்படுவதற்கு ஏற்றாற்போல் இத்தல ராமன் புத்ரபாக்கியம் தருபவர். ஒரு சொல், ஒரு இல், ஒரு வில் என்று வாழ்ந்து காட்டிய ராமர் இச்சந்நதியில் சந்தான ராமனாகவுள்ளார். உரேகடம் என்ற வைப்புத்தலமான சிவன் கோயில் அருகே மலை மேலே உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 7502053007.

ஆலத்தூர் கோதண்டராமர்

மரக்காணத்திலிருந்து சூணாம்பேடு வழியாக சென்னை செல்லும் பேருந்து மார்க்கத்தில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலத்தூர். முற்காலத்தில் பெரும் வனமாகத் திகழ்ந்த இத்தலத்தில் கெளண்டின்ய முனிவர் கடும் தவம் புரிந்தபோது திருமலையிலிருந்து இவ்வூருக்கு வேட்டை மார்க்கமாகப் பெருமாள் காட்சி கொடுத்ததாகவும் இவ்வூரின் அமைப்பு கண்டு இத்தலத்திலேயே தங்குவதாகவும் கூறினார். 5 நிலை ராஜகோபுரத்துடன் உள்ள ஆலயம். கனகவல்லித் தாயார் உடனுறை வேட்டை வேங்கடராயப் பெருமாள் சேவை சாதிக்கிறார். சனிக்கிழமைகளில் துளசி அர்ச்சனை செய்து வழிபட மன நிம்மதி, கஷ்ட நிவர்த்தி, காரியத்தடைநீக்கம், உத்யோகச் சிக்கல், நவகிரக தோஷங்கள் நீங்கப் பெறலாம். இத்தலத்தில் 6 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் 2 சோழர் காலத்தியதும், ஒன்று விஜய நகரப் பேரரசுடையதும் ஏனைய இரண்டும் பிற்காலத்தினையும் சேர்ந்தவை. ஆண்டாள் சந்நதி உருவாக்கியவர்கைளப் பற்றிய கல்வெட்டும் உள்ளது. கருடசேவை, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகைகள் விசேஷம். கனகவல்லித் தாயாரை, கோமளவல்லி நாச்சியார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆலயத் தொடர்புக்கு: 9944238917.

வேங்கடம்பேட்டை ராமர்

பண்ருட்டியை அடுத்து காடாம்புலியூரைக் கடந்ததும் இடப்புறம் சமரச சன்மார்க்க சபை கோயில் உள்ளது. அதற்கு வெகு அருகாமையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு இடப்புறம் சத்திரம். அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது வேங்கடம்பேட்டை. ராமர் அயோத்திக்குத் திரும்பிய போது தவத்தில் ஈடுபட்டிருந்த வைகானஸ மகரிஷிகளின் வேண்டுகோளிற்கிணங்க வைகுண்டத்துப் பரந்தாமனாக காட்சியளித்த தலம் இது. செஞ்சி அரசர் வெங்கடபதியின் புதல்வியான வெங்கடம்மாவிற்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் வேங்கடம்பேட்டையானது. இந்த ராமர் விக்ரகம் 200 ஆண்டுகளுக்கு முன் குளக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. வெங்கடம்மா கிருஷ்ண பக்தை என்பதால் கிருஷ்ணர் கோயிலாக அமைத்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. திரேதாயுக ராமர், துவாபரயுக கிருஷ்ணர் மற்றும் கலியுக மோகினி அவதாரம் என மூன்று யுகங்களைக் கண்ட ஆலய சிற்பங்கள் உள்ளன. இவ்வூருக்கு அருகே உள்ள வேகாக்கொல்லை கிராமத்தில்தான் பஸ்மாசுர வதம் நிகழ்ந்ததாக வரலாறு. இதற்குச் சான்றாக அந்த ஊர்

கபாலீஸ்வரர் கோயிலில் மோகினி சிற்பம் உள்ளது. பெரிய ஊஞ்சல் மண்டபத்துடன் உள்ள இவ்வாலயத்தில் வைகானஸ முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. விஜயநகரப் பேரரசால் ராஜகோபுரத் திருப்பணி கண்ட ஆலயம். மூலவராக வேணுகோபாலஸ்வாமி, ருக்மிணி-சத்யபாமா சமேதராய் சேவை சாதிக்கிறார். பெரிய திருவடி அமர்ந்த கோலத்தில் நாகாபரணத்துடன் உள்ளார். இந்தியாவில் 19 அடி நீளத்தில் பிரமாண்ட சயனகோல ராமர் உள்ள ஒரே தலம் இதுதான். திருவடியின் கீழ் சீதாபிராட்டியும் அனுமனும் சேவை சாதிக்கிறார்கள். ஆதிசேஷன் குடை நிழலில் ராமர் திகழ்கிறார். குறிப்பிட்ட நேரத்துக்குள் வராமல் போனால் தீக்குளிப்பேன் என்று அச்சுறுத்திய பரதனை, ராமனின் ஆணைப்படி காக்க விரைந்து எழும் கோலத்தில் அனுமன் காட்சி தருகிறார். முற்காலத்தில் ஆதியில் ராமர் கோயிலாக விளங்கி இப்போது வேணுகோபாலர் கோயிலாக உள்ளது. ராமேஸ்வரத்தில் சிவபூஜை நிகழ்த்தியபின் இத்தலத்தில் தங்கியபோது லட்சுமணர் ஆதிசேஷனாக மாறி ராமர் ஓய்வெடுக்க உதவினார் என்கிறது இத்தல புராணம். ஆண்டாள், செங்கமலத்தாயார் சந்நதிகளும் உள்ளன. ஆலயத் தொடர்புக்கு: 9443434024.

அதம்பார் கோதண்டராமர்

மயிலாடுதுறை-திருவாரூர் பாதையில் உள்ள பூந்தோட்டத்திற்கு அருகே உள்ளது அதம்பார். சோழர் கால பஞ்சலோக சிலை வடிவிலான திகைக்க வைக்கும் பஞ்ச ராம க்ஷேத்திரங்களுள் (தில்லை விளாகம், வடுவூர், முடிகொண்டான், அதம்பார், ஆவணம்) ஒன்று. ஐராவதம் என்கிற இந்திரனின் வெள்ளை யானை ராம்பிரானை பூஜித்ததால் வெள்ளை அதம்பார் என்கிற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. ஏக பீடத்தில் சீதா, ஆஞ்சநேய, லட்சுமண சமேதராய் ராமர் திகழ்வது சிறப்பாகும். மேலும் தல வரலாற்றினை உணர்த்தும் வகையில் லட்சுமணனுக்குப் பக்கத்தில் மானின் பஞ்சலோக சிலை சிறிய வடிவில் உள்ளது. ராவண வதம் முடிந்தவுடன் ராமர் இத்தலம் வழியாக புஷ்பக விமானத்தில் சென்றபோது, விஸ்வாமித்திரரின் வேள்விக்கு இடையூறு செய்த, ஆனால், ராமனால் வதம் செய்யப்பட்ட தாடகை வாழ்ந்த வனம் இப்போது பெருநகரமாகத் திகழ்கிறது என நினைவு கூர்ந்தாள் சீதாபிராட்டி. அனுமன் சேவை செய்ய சீதா லட்சுமண சமேதராய் இத்தலம் எழுந்தருளினார் என்று குறிச்சி புராணம் கூறுகிறது. சூர்ப்பணகையின் துர்போதனையால் ராவணன், தாடகையின் மகன் மாரீசனை தங்கமானாக வடிவம் கொண்டு பஞ்சவடியில் உலாவச் செய்தான். மானைப் பிடித்து விளையாட சீதை ராமரிடம் வேண்டுகோள் விடுக்க அதனைப் பின் தொடர்ந்தார் ராமர். அதனைப் பிடிக்க முடியாமல், ராமர் வில்லில் நாண் ஏற்றி இத்தலத்தில் ‘தம்(அதனை) ஹந்தும்(அழிக்க) க்ருத நிச்சய(நிச்சயமாக) ஹதம் பார்’ என்று கூறியதே அதம்பார் என்றானது என்கிறது தல புராணம். வேண்டிய வரங்களையும், சகல செளபாக்கியங்களையும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் தலம். இத்தலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத கல்யாண ரங்கநாதர், ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீனிவாசர், ருக்மிணி-சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி மற்றும், நர்த்தனகிருஷ்ணர் ஆகியோர் பஞ்சலோகத் திருமேனியில் காட்சி தருகின்றனர். ஆலயத் தொடர்புக்கு: 9751065217.

பட்டீஸ்வரம் கோதண்டராமர்

கும்பகோணம்-தஞ்சாவூர் பாதையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம். ராவணனைக் கொன்றதால் வீர ஹத்தி மற்றும் பிரம்மஹத்தி தோஷமும், படையினரைக் கொன்றதால் இதர தோஷமும் பெற்ற ராமர், ராமேஸ்வரத்தில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், வேதாரண்யத்தில் வீரஹத்தி தோஷம், (வாலியினை மறைந்து நின்று கொன்ற) சாயஹத்தி தோஷம் நீங்கவும் இதர தோஷம் நீங்கவும், இங்கே கோமகமல புஷ்கரணி ஏற்படுத்தி சிவனை ராமர் பூஜித்தார். தேவர்கள் பூமாரி பெய்து முனிவர்கள் தம் மனைவியருடன் ராமரை வணங்கிய தலம். சம்பந்தருக்கு தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் ஆனி மாத முத்துப் பந்தல் உற்சவத்தின் போது இவ்வாலய கோதண்டராமசுவாமிக்கு சாத்திய பட்டு வஸ்திரம் சம்பந்தருக்கு இன்றும் சாத்தப்படுகிறது. அருகே உள்ள கோபிநாத சுவாமி திருக்கோயிலில் இரட்டை ஆஞ்சநேயர்கள் உள்ளனர். இத்தலத்தில் உள்ள கோடிதீர்த்தம் என்கிற கிணறு ராமரின் வில்லினால் உருவாக்கப்பட்டது என்கிறது புராணம். இத்தலத்தருகே ஸ்ரீநாதன்கோயில் திவ்ய தேசம், சுந்தரபெருமாள் கோயில், ஊத்துக்காடு காளிங்க நர்த்தனப் பெருமாள் கோயில் ஆகியன உள்ளன.

- திரு. கே.சாய்குமார் தொகுத்த ‘சரணடைந்தோரைக் ரட்சிக்கும் ஸ்ரீராமர் தலங்கள்’ நூலிலிருந்து. தொலைபேசி: 9382872358.

Tags : Rama ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்