×

திருப்பூர் மாநகர பகுதியில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்குவதில்லை-சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் :  தமிழக அரசு சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கிராம மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் பார்க்கும் கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் ரூபாய் 5 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஏழை கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு கிடைக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய கர்ப்பிணிகள் கர்ப்பம் உறுதியான 12 வாரங்களுக்குள் கிராம, நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து, ஆர்சிஎச் அடையாள எண் அல்லது பிக்மி எண் பெற்றிருக்க வேண்டும். இப்படி பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு 3ம் மாத முடிவில் முதல்தவணை நிதியுதவி ரூ.2 ஆயிரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகமும், 7ம் மாத முடிவிலும் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இதில், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள, சத்துமாவு, இரும்பு சத்து டானிக், பேரிச்சம்பழம், குடல் புழு மாத்திரை, டீ கப், பருத்தி துண்டு, நெய், பிளாஸ்டிக் கூடை வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்குவதில்லை. இரண்டு முறை வழங்க வேண்டிய பெட்டகம், இதுவரை ஒருமுறை கூட வழங்கவில்லை என கர்ப்பிணிகள் சமூக ஆர்வலர்கள் பலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இது குறித்து கேட்டால், சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில், திருப்பூர் பழைய மார்க்கெட்டில் உள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஓராண்டாக 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தற்போது வரை, ஊட்டச்சத்து பெட்டகம், நிதியுதவிகள் வழங்கப்படவில்லை என  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்கவும், பிரசவத்தின்போது இறப்பு சதவீதத்தை குறைக்கவும் ஒன்றிய, மாநில அரசுகள் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக கர்ப்பிணிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.மேலும், கர்ப்ப காலத்திலேயே பெண்கள் உடல் நலத்துடன் இருக்கும் வகையில் சத்தான பொருட்கள் அடங்கிய சிறப்பு பெட்டகம் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே சத்துணவு பெட்டகத்தை தட்டுப்பாடின்றி வழங்கவும், அதை கர்ப்பிணிகளுக்கு முறையாக வினியோகம் செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூர் தட்டான் தோட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் கூறுகையில், ‘‘திருப்பூர் பழைய மார்க்கெட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கர்ப்பகால பரிசோதனை மேற்கொண்டு வருகிறேன். தற்போது 9ம் மாதம் ஆகிறது. இதுவரை எனக்கு மகப்பேறு நிதியுதவியும், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை. ஊட்டச்சத்து பொருட்களை அந்தந்த மாதத்தில் சரியான முறையில் சாப்பிட்டு வந்ததால்தான் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்க முடியும். காலம் கடந்து வாழங்கினால் அது பயனற்றதாகத்தான் இருக்கும். எனவே திருப்பூர் மாநகர் நல அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டு கர்ப்பிணிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து பெட்டகம், நிதியுதவிகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்….

The post திருப்பூர் மாநகர பகுதியில் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, ஊட்டச்சத்து பெட்டகம் முறையாக வழங்குவதில்லை-சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Government of Tamil Nadu ,Grama and Urban Government ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...