×

குமரியில் ராகுல்காந்தி 3வது நாள் பாதயாத்திரை: விவசாயிகளுடன் கலந்துரையாடல்

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்து செல்லும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும் வகையில் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். காந்திமண்டபம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி தொடங்கி வைத்தார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து 2வது நாள் தொடங்கிய பயணம் மாலை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் முடிந்தது. இந்த நிலையில் 3வது நாள் நடைபயணத்தை இன்று காலை 7 மணிக்கு தொடங்கினார். தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிறகு இந்த பயணம் தொடங்கியது. அவருடன் காஷ்மீர் வரை பயணிக்கின்ற 118 பேர் மட்டுமின்றி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் நடக்க தொடங்கினர். சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் அமந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களும் ராகுல்காந்தியுடன் நடைபயணத்தில் பங்கேற்றனர். நடை பயணத்தின்போது சாலையின் இருபுறம், வீடுகள், மாடிகளிலும் நின்று பயணத்திற்கு வரவேற்பு அளித்தவர்களுக்கு கை அசைத்து நன்றி தெரிவித்தார். பார்வதிபுரம் பாலத்தின் கீழ் பகுதி வழியாக நடைபயணம் அடுத்த மையமான புலியூர்குறிச்சி முட்டிடிச்சான்பாறை ஆலயம் நோக்கி புறப்பட்டது. அங்கு மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடுகிறார். ராகுல்காந்தி மாலை 4 மணிக்கு அங்கிருந்து மீண்டும் நடைபயணத்தை தொடங்கி அழகியமண்டபம் சந்திப்பில் நிறைவு செய்கிறார். முளகுமூடு ஐசிஎஸ்இ பள்ளியில் ஓய்வெடுக்கும் ராகுல்காந்தி நாளை (10ம் தேதி) மார்த்தாண்டம் பகுதியில் ஓய்வுக்கு பிறகு மாலை அங்கிருந்து தொடங்கி குமரி மாவட்ட எல்லையான செறுவாரக்கோணத்தில் 4வது நாள் பயணத்தை நிறைவு செய்கிறார். 11ம் தேதி காலை செறுவாரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு கேரளா மாநிலம் செல்கிறார். இந்த நடை பயணத்தில் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, யாத்திரை தமிழக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயக்குமார், காங்கிரஸ் தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ், எம்.பி.க்கள் விஜய்வசந்த், திருநாவுக்கரசர், செல்லகுமார், ஜோதிமணி, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், ஊர்வசி அமிர்தராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.பி.ஆர்.பாண்டியன் பேட்டிராகுல்காந்தியுடனான சந்திப்பு பற்றி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் கூறியதாவது: மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் அடிப்படையில் இந்த பயணத்தின் கொள்கை திட்டத்தை வகுத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமை குறித்து உங்களின் கொள்கை திட்டம் தொடர்பாக ஒரு பிரகடனத்தையும் நீங்கள் வெளியிட வேண்டும். வெறும் ஒற்றுமை என்று இல்லாமல் அதில் என்னென்ன உள்ளடங்கியுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அவர் செய்வதாக உறுதி தெரிவித்துள்ளார். பயணத்தை அந்த அடிப்படையில் நாங்கள் வரவேற்கிறோம். விவசாயிகள் போராட்டத்தை மதத்தின் பெயரால் பிரிக்க முயற்சி செய்ததது ஒன்றிய அரசு. மதத்தால் விவசாயிகளை பிரிக்க பாஜ நினைக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் இந்த பயணம் வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம் என்றார்.பனை ஓலை தொப்பிசுங்கான்கடை பகுதியில் பாத யாத்திரை சென்றபோது பெண்கள் அவருக்கு பனை ஓலையாலான தொப்பியை அணிவித்தனர். கூடை நிறைய மலர்களையும், மலர் கொத்து ஒன்றையும் கொடுத்தனர். கிராம சமையல் குழுவுடன் சந்திப்புராகுல்காந்தி கடந்த ஆண்டு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த போது கோவை திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சென்றார். அப்போது ஜோதிமணி எம்.பி. ஏற்பாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் செய்தார். மண்பானை உணவகத்தில் உணவு சாப்பிட சென்ற ராகுல்காந்தி அந்த குழுவினரையும் சந்தித்து பேசினார். அந்த குழுவினர் ராகுல்காந்தி குமரி மாவட்டம் வருகை தந்தது அறிந்து இன்று காலை பார்வதிபுரம் அருகே ராகுல்காந்தியை நடை பயணத்தில் சந்தித்து உடன் நடந்து சென்றனர். 2 மணி 20 நிமிடங்கள் ராகுல்காந்தி இன்று காலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இருந்து புலியூர்குறிச்சி முட்டிடிச்சான்பாறை வரை உள்ள தூரத்தை 2 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து தனது காலை பாத யாத்திரையை நிறைவு செய்துள்ளார்….

The post குமரியில் ராகுல்காந்தி 3வது நாள் பாதயாத்திரை: விவசாயிகளுடன் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Tags : Rakulkanthi ,Kumari ,Nagarko ,Congress ,Union government ,Rahulkanthi ,Dinakaraan ,
× RELATED சேதமாகி கிடக்கும் சாலை பார்வதிபுரம்...