×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

329. ஸ்கந்தாய நமஹ (Skandhaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)பதின்மூன்றாம் நூற்றாண்டில் அந்நியப் படையெடுப்பு நடந்தபோது, திருவரங்கம் நம்பெருமாளுக்கும் அறநூல்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது. அந்நிலையில், பிள்ளை லோகாச்சாரியார் என்னும் வைணவ குரு, திருவரங்கம் உற்சவர் நம்பெருமாளைத் திருவரங்கத்தில் இருந்து பாதுகாத்து, வேறு பாதுகாப்பான இடத்துக்கு எழுந்தருளப் பண்ணிச் சென்றார்.

அதே சமயம், அந்தப் பெருமானின் பெருமைகளைக் கூறும் அறநூல்களையும் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேதாந்த தேசிகன் என்ற வைணவ குரு, ராமாநுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிய விளக்க உரைகளின் தொகுப்பான சுருதப் பிரகாசிகையைப் பாதுகாத்து எடுத்துக்கொண்டு காவிரிக்கரை வழியாக மேற்கு நோக்கிப் பயணித்தார். இன்றைய கர்நாடக மாநிலத்தில் உள்ள
சத்தியாகாலம் என்னும் ஊரை அடைந்தார்.

சத்தியாகாலத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வழிபட்டுக் கொண்டு அங்கேயே சில காலம் தங்கி இருந்தார் தேசிகன். தினந்தோறும் சத்தியாகாலத்தில் காவிரிக்கரையில் நின்றபடி பழைய நிலை திரும்பாதா என்று ஏங்கித் திருவரங்கம் நோக்கிப் பார்ப்பாராம் தேசிகன். அதன் அடையாளமாகவே இன்றும் சத்தியாகாலம் கோயிலில் வேதாந்த தேசிகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். (மற்ற எல்லாக் கோயில்களிலும் தேசிகன் அமர்ந்த நிலையில் தான் இருப்பார்.)

இந்நிலையில், ஒருநாள் சத்தியாகாலம் காவிரிக்கரையில் உள்ள ஞான அசுவத்தம் என்னும் அரச மரத்தடியில் அமர்ந்தார் தேசிகன். திருவரங்கத்தில் உள்ள பீதியெல்லாம் விலகி, சுபிட்சம் பெருக வேண்டும் என்று அரங்கனைப் பிரார்த்தித்து, அபீதி ஸ்தவம் என்ற துதியை இயற்றினார் தேசிகன். அதில்,
“ஸகைடப தமோரவி: மதுபராக
ஜஞ்ஜாமருத்
ஹிரண்யகிரி தாரண: த்ருடித காலநேமி த்ரும:
கிம் அத்ர பஹுனா பஜத் பவ பயோதி முஷ்டிந்தய:
த்ரிவிக்ரம பவத் க்ரம: க்ஷிபது மங்க்ஷு ரங்க த்விஷ:”

“கைடபன் என்ற அசுரன் உண்டாக்கிய இருளைச் சூரியனாய் வந்து போக்கினாய். பெருங்காற்றான ஹயக்ரீவனாக வந்து மது என்ற அசுரனைத் தூசு போல் பறக்கச் செய்தாய். இரணியன் என்னும் மலையை நரசிங்கனாக வந்து இரண்டாகப் பிளந்தாய். காலநேமி என்ற அசுரனைச் செடியைக் கிள்ளி எறிவது போல் வீழ்த்தினாய். இவ்வளவு ஏன்? பிறவிப் பெருங்கடலையே ஒரே மூச்சில் உறிஞ்சிக் குடிக்க வல்லவன் நீ! உலகளந்த உத்தமனே! திருவரங்கத்தைப் பிடித்துள்ள தீய சக்திகளை நீதான் போக்கி, அபயம் தந்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்தார் தேசிகன்.

அன்று இரவு தேசிகனுக்கு ஒரு கனவு வந்தது. அதில்  ஒருவர் தோன்றி, “நான் உங்களுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறேன்!” என்று சொன்னார். ஆனால் தேசிகன் அக்கனவைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மறுநாள் காலை காவிரியில் இருந்து ஓர் ஆமை தேசிகனைத் துரத்திக்கொண்டே வந்தது. தேசிகன் அதைப் பொருட்படுத்தாமல் வந்துவிட்டார்.

அடுத்த நாள் இரவு அவரது கனவில் திருமால் தோன்றினார். தேசிகனைப் பார்த்து, “உனக்குத் தொண்டு செய்ய ஒரு தொண்டனை நான்தான் ஆமை வடிவில் அனுப்பி வைத்தேன். அவனை அசனமாக்கி அந்தக் கூர்மாசனத்தின் மேல் நீ அமர்வாயாக! ஏன் ஆமை வடிவில் அவனை அனுப்பினேன் தெரியுமா? முன்பு அசுரர்களிடம் தேவர்கள் தோற்று, அசுர ராஜ்ஜியம் தலைதூக்கிய நிலையில், நான் ஆமையாக அவதாரம் செய்து, பாற்கடலைக் கடைய வைத்து தேவர்களுக்கு அமுதைக் கொடுத்து, அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தேன் அல்லவா? அதுபோல் படையெடுத்து வந்த அந்நிய சக்திகளை விரட்டி, திருவரங்கத்தில் நல்ல நிலைமை திரும்புவதற்கும் நான் அருள்புரிவேன்! அதன் நினைவாகவே ஆமை வடிவில் இத்தொண்டனை உன்னிடம் அனுப்பி வைத்துள்ளேன்!” என்று கூறினார்.

திருமாலின் கூற்றால் மனம் உவந்த தேசிகன், அடுத்த நாள் காலை காவிரிக் கரையில் உள்ள அரச மரத்தடிக்குச் சென்றார். அங்கே ஆமை வடிவில் ஒரு கல் பீடம் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து வந்த தேசிகன், தனது அநுஷ்டானங்களை அதில் அமர்ந்தபடி செய்யத் தொடங்கினார். கூர்ம மூர்த்தியின் திருவருளால், திருவரங்கத்தில் இருந்த தீயசக்திகள் அனைத்தும் விலகி நல்ல நிலைமை திரும்பியது. சத்தியாகாலத்தில் இன்றளவும் தேசிகன் சந்நதியில் அந்தக் கூர்மாசனம் இருப்பதைக் காணலாம்.

‘ஸ்கந்தயதி’ என்ற சொல்லுக்கு வடமொழியில் வற்றச்செய்தல், காய்ந்துபோகும்படிச் செய்தல், அழித்தல் போன்ற பொருள்கள் சொல்வதுண்டு. அதன் அடிப்படையில், இவ்விடத்தில் ‘ஸ்கந்த:’ என்பதற்கு அழிப்பவன் என்று பொருள். திருவரங்கத்தைத் தாக்கித் துன்புறுத்திவந்த படைகளைப் போக்கி, அடியார்களுக்கு நன்மை அளித்தாற்போல், அசுர சக்திகளை அழித்து நல்லோர்களுக்கு நன்மை அளிப்பதால் கூர்ம மூர்த்தி ‘ஸ்கந்த:’ என்று அழைக்கப்
படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 329-வது திருநாமம்.

“ஸ்கந்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் ஏற்படும் எல்லாத் தடங்கல்களும் அழியும்
படிக் கூர்மமூர்த்தி அருள்புரிவார்.

330. ஸ்கந்ததராய நமஹ

(Skandhadharaaya namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)    சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய மூன்று அசுரர்கள் தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அவர்களுள் சூரபத்மன், சிவனின் புதல்வனைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக்கூடாது என்று பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். அவனால் மிகவும் துன்புற்ற தேவர்கள், சிவபெருமானிடம் வந்து முறையிட்டார்கள்.

தேவர்களைக் காக்க விழைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அந்த ஆறு தீப்பொறி
களையும் அக்னிதேவன் கொண்டுபோய்க் கங்கையில் சேர்த்தார். கங்கையில் இருந்து சரவணப் பொய்கையைச் சென்றடைந்த அந்த ஆறு பொறிகளும் அங்கிருந்து ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். பின் பார்வதிதேவி அறுவரையும் ஆசையோடு தழுவ, அவை இணைந்து ஒரே குழந்தையாக, ஆறுமுகனான முருகனாக உருவெடுத்தன.

அனைத்துத் தேவர்களும் முருகனிடம் வந்து சூரபத்மனை வதம் செய்து தருமாறு வேண்டினார்கள். அப்போது முருகன், “சூரபத்மனை வதைக்க வேண்டுமென்றால், அதற்குச் சிறப்பான ஆயுதம் ஒன்று நமக்குத் தேவை. முன்பு தேவர்கள் அனைவரும் பாற்கடலைக் கடைந்தபோது, திருமால் தானே கூர்மாவதாரம் செய்து, நமக்கு உறுதுணையாக இருந்து, அருள்புரிந்து, அமுதம் கிடைக்கும்படிச் செய்தார்! ஆகையால், இப்போது சூரபத்மனை வீழ்த்துவதற்குரிய ஆயுதத்தைக் கூர்மாவதாரம் செய்த  திருமாலிடமே கேட்டுப் பெறுகிறேன்!” என்றார் முருகன்.

இவ்வாறு சொல்லிவிட்டுத் திருவேங்கட மலையில் உள்ள குமாரதாரிகா என்ற பொய்கையின் கரையில் தவம் புரிந்தார் முருகன். அவருக்குத் திருமலையப்பன் காட்சி தந்து, சூரபத்மனை வெல்வதற்குரிய ஆயுதமான வேலை அளித்தார். இவ்வரலாறு வடமொழியில் உள்ள ஸ்கந்த புராணத்தின் இரண்டாம் கண்டம், முதல் அத்தியாயம், அறுபத்து ஐந்தாவது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

“குமாரதாரிகா நாம ஸரஸீ லோக-பாவனீ
யத்ர ஆஸ்தே பார்வதீஸூனு: கார்த்திகேய: அக்னி-ஸம்பவ:
தேவஸேனா-ஸமாயுக்த: ஸ்ரீநிவாஸ-அர்ச்சக: அமலே”திருமால் கொடுத்த வேலைத் தன் தாயான பார்வதி தேவியின் கையில் கொடுத்து வாங்கிச் சென்று போரிட வேண்டும் என்று கருதிய முருகப் பெருமான், தை மாதம் பூச நட்சத்திரத்தன்று பார்வதி தேவியிடம் வேலைக் கொடுத்து, அவள் கையால் அதைப் பெற்றுக்கொண்டு, தேவர்களின் படைத்தளபதியாகப் பொறுப்பேற்று சூரபத்மனை வதம் செய்வதற்காகப் புறப்பட்டார்.

கடலுக்கு நடுவிலுள்ள சூரபத்மனின் இருப்பிடமான வீரமகேந்திரபுரத்தை அடைந்த முருகன், முதலில் தாரகாசுரனையும் சிங்கமுகனையும் அழித்தார். அதன்பின் சூரபத்மனுடன் ஆறு நாட்கள் போரிட்டார். மாமர வடிவம் கொண்டு சூரபத்மன் தப்பிக்கப் பார்த்த நிலையில், தனது வேலால் அம்மரத்தை இரண்டாகப் பிளந்தார் முருகன். அதில் ஒரு பாதியைத் தன் வாகனமான மயிலாகவும், மற்றொரு பாதியைத் தன் கொடிச்சின்னமான சேவலாகவும் ஆக்கினார். இவ்வாறு முருகன் சூரபத்மனை வதைத்த நாளையே கந்த சஷ்டி என்று முருக பக்தர்கள் வெகு விமரிசையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுகிறார்கள்.

முருகன் சூரபத்மனை வீழ்த்துவதற்கு உறுதுணையாக இருந்த வேலைத் தந்து, தேவர்களின் படைத்தளபதியாகத் திகழ்ந்து அவர் வெற்றி பெறுவதற்கு அருள்புரிந்ததால் திருமால் ‘ஸ்கந்ததர:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸ்கந்த:’ என்பது முருகனைக் குறிக்கும். ‘தர:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள். முருகனின் தாய்மாமனான திருமால், கூர்ம மூர்த்தியாக இருந்து அகில உலகையும் தாங்குவதோடு மட்டும் இல்லாமல், தன் மருமகனான முருகனுக்குச் சக்தி கொடுத்து அவரை ஆசையோடு தாங்குகிறார் என்பதை இது காட்டுகிறது. (திருமாலைப் பார்வதியின் சகோதரராகக் குறிப்பிடுவதால், முருகனுக்குத் தாய்மாமன் ஆகிறார்.)

பகவத் கீதை பத்தாம் அத்தியாயம் இருபத்து நான்காம் ஸ்லோகத்தில் கண்ணனே இதைத் தெரிவிக்கிறான் - ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த: - “தேவர்களின் படைத்தளபதியான ஸ்கந்தனை நான் உள்ளிருந்து தாங்குகிறேன்!” என்பது இதன் பொருள். ஆகவே ‘ஸ்கந்ததர:’ என்றால் தன் மருமகனான முருகனை ஆசையோடு உள்ளிருந்து தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 330-வது திருநாமம். வடமொழி விளக்க
வுரையில் பராசர பட்டரும் - ஷடானன விதாரணாத் - ஆறுமுகனைத் தாங்குபவர் என்றே இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
    “ஸ்கந்ததராய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் வெற்றி உண்டாகும்படித் திருமால் அருள்புரிவார்.

331. துர்யாய நமஹ (Dhuryaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)
பதினெட்டாம் நூற்றாண்டின் பின் பகுதி. ஆர்க்காடு பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஆங்கிலேயப் படைத்தளபதி  ராபர்ட் கிளைவ், குதிரைகளோடும் படைவீரர்களோடும் ஆயுதங்களோடும் காஞ்சிபுரத்தை வந்து அடைந்தார். அன்று இரவு அத்தனை பேரும் தங்குவதற்குக் காஞ்சிபுரத்தில் இடம் கிடைக்குமா என்று பார்த்தார்கள்.

காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலைக் கண்ட ராபர்ட் கிளைவ், “இன்று இரவு இந்தப் பெரிய கட்டிடத்தில் எல்லோரும் தங்கிக் கொள்ளலாம்!” என்று கூறினார். அப்போது கோயிலில் கைங்கரியம் செய்து வந்தவர்கள், “இது இறைவனுடைய கோயில்! இங்கே இப்படிப் போர்புரிய வந்த சேனைகளைத் தங்க வைப்பது முறையல்ல! மேலும் புனிதமான இந்த இடத்தில் மலஜலங்களைக் கழிப்பது போன்றவை செய்யக்கூடாது!” என்று பணிவுடன் ராபர்ட் கிளைவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் அத்தனை சேனையையும் அங்கேயே தங்க வைத்தார் ராபர்ட் கிளைவ்.

ஆனால் அடுத்த நாள் காலை அந்தச் சேனையிலிருந்த வீரர்களாலும், குதிரைகளாலும் மலமோ ஜலமோ கழிக்க முடியவில்லை. ராபர்ட் கிளைவ் உட்பட அத்தனை பேரும் வயிற்று வலியால் துடிக்கத் தொடங்கினார்கள். அப்போது தனது தவறை உணர்ந்த ராபர்ட் கிளைவ், அத்தி வரதப்பெருமான் முன்னே நின்று, “உன் பெருமை தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன்! என்னை மன்னித்தருள வேண்டும்!” என்று பிரார்த்தித்துவிட்டு, தனது சேனைகளைக் கோயிலுக்கு வெளியே கொண்டு சென்றார்.

அதன்பின் ஆர்க்காட்டுக்குச் சென்று போர்புரிந்த ராபர்ட் கிளைவ் பெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றி ராபர்ட் கிளைவின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் அத்தி வரதர் செய்த அருளே தனது வெற்றிக்குக் காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.
மீண்டும் அத்தி வரதரைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, காஞ்சிபுரத்துக்கு வந்தார் ராபர்ட் கிளைவ். அன்று வைகாசி விசாகம். வரதராஜப் பெருமாளுக்குக் கருட சேவை வைபவம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போது ராபர்ட் கிளைவின் மனத்திரையில் விசேஷ காட்சியைக் காட்டினார் வரதராஜப் பெருமாள்.

அக்காட்சியைக் கண்ட  ராபர்ட் கிளைவ், “ஆஹா! என்ன விந்தை? இறைவா! கருடன் வாகனமாக இருந்து உன்னைத் தாங்கி
னாலும், அவருக்குள்ளும் நீயே இருந்து உன்னைத் தாங்கும் சக்தியைத் தந்திருக்கிறாய்! ஸ்ரீபாதம் தாங்கிகள் கருட வாகனத்தைச் சுமந்து நின்றாலும், உண்மையில் அவர்களையும் நீயே உள்ளிருந்து தாங்குகிறாய்! ஏன்? ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக இருந்துகொண்டு, மொத்த உலகங்களையும் உன் முதுகில் நீயே தாங்குகிறாய்! இப்போது நீ காட்டிய காட்சியால் இந்த உண்மையை நான் கண்டு கொண்டேன்!” என்று கூறினார்.

மேலும், “வரதா! நான் இவ்வூருக்கு வரும் முன் நானே பெரிய தலைவன் என்ற கருவத்துடன் வந்தேன். ஆனால் இப்போது திரும்பச் செல்லும் போது நீயே எல்லோருக்கும் தலைவன் என்ற புரிதலுடன் செல்கிறேன். தலைவன் என்ற பெயரில் எனக்குக் கீழே உள்ளவர்களை நான் என் சுயநலத்துக்
காகப் பயன்படுத்திவந்தேன். ஆனால் உண்மையான தலைவனான நீயோ உனக்குக் கீழ்ப்பட்டவர்களைத் தாங்கிப் பிடித்துக் காக்கிறாய். ஆர்க்காட்டில் இருந்து நாங்கள் கொண்டு வந்த பல ஆபரணங்களுள் முக்கியமானதான இந்த மகரகண்டியை உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!” என்று கூறிச் சமர்ப்பித்தார் ராபர்ட் கிளைவ். அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் காஞ்சிபுரம் கருட சேவையின் போது இந்த மகர கண்டியை அணிந்தபடி வரதராஜப் பெருமாள் காட்சி தருகிறார்.

அப்போது வரதராஜனுக்குப் பூஜை செய்யும் அர்ச்சகர் ராபர்ட் கிளைவைப் பார்த்து, “ஓர் உண்மையான தலைவனின் இலக்கணம் என்னவென்றால், தனது தொண்டர்களைத் தாங்கிப் பிடித்துக் காப்பதே ஆகும்! அந்த வகையில் இந்த உலகுக்கெல்லாம் தலைவராய்த் திகழும் பெருமாள், பூமிக்குக் கீழே ஆமை வடிவுடன் கூர்ம மூர்த்தியாக இருந்துகொண்டு அனைவரையும் தன் முதுகில் தாங்கி வருகிறார்! அதை உமக்கு உணர்த்தவே இப்படி ஒரு லீலையைப் பெருமாள் புரிந்துள்ளார்!” என்று கூறினார்.

‘துர்ய:’ என்றால் தாங்கிப் பிடித்துக் காக்கும் தலைவர் என்று பொருள். உலகங்கள் அனைத்தையும் ஆதிசேஷன் பாதாளத்தில் இருந்து காப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் அந்த ஆதிசேஷனுக்கும் கீழே இருந்துகொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து அனைத்து உலகங்களையும் கூர்ம மூர்த்திதான் தாங்கிவருகிறார். இதன் அடையாளமாகவே அனைத்துத் திருக்கோயில்களிலும் உள்ள சேஷ வாகனத்தின் கீழே கூர்மமூர்த்தி இருப்பதைக் காணலாம். இப்படி அனைத்து உலகங்களையும் கூர்மமூர்த்தி தன் முதுகில் தாங்கிப் பிடித்துக் காப்பதால் அவருக்கு ‘துர்ய:’ என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 331-வது திருநாமம்.“துர்யாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில்
ஐயமில்லை.

332. வரதாய நமஹ (Varadhaaya namaha)
(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)“இறைவன் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?” என்று ஒருவர் வேதாந்த தேசிகனிடம் கேட்டார். அதற்கு தேசிகன், “வேதம்தான் ஆதாரம். வேதங்களைக் கொண்டுதான் இறைவனை அறிய முடியும்! ஆனால் நீ அந்த வேதங்களை ஏற்கும் அளவு பக்குவம் பெறவில்லை! உனக்குப் புரியும் படி ஆதாரம் சொல்லட்டுமா?” என்று கேட்டார். “ம்ம் சொல்லுங்கள்!” என்றார் அந்த நபர்.

தேசிகன், “பூமி, கடல், சூரியன் ஆகிய மூன்றும் இறைவன் இருக்கிறான் என்பதற்கு ஆதாரங்களாகத் திகழ்கின்றன!” என்று கூறினார்.
“இவை எப்படி இறைவன் இருப்பதற்கு ஆதாரமாகும்?” என்று கேட்டார் அந்த நபர்.அதற்கு, “பூமி சூரியனைச் சுற்றிச் சுழன்று வருகிறதே! அது எப்படிச் சரியாக முந்நூற்று அறுபத்து ஐந்தேகால் நாட்களில் ஒரு சுழற்சியை நிறைவு செய்கிறது? அந்த எண்ணிக்கை என்றுமே மாறுவதில்லையே! அதற்கு என்ன காரணம்? இந்தச் சுழற்சி சீராக இயங்குகின்றது என்றாலே, அதைச் சீராக நடத்திச்செல்லும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று தானே பொருள்? பூமியில் விதை போட்டால் முளைக்கிறதே, அதை முளைக்கச் செய்வது யார்?
உள்ளிருந்து இயக்கும் இறைவன்தானே?

அடுத்து கடலுக்கு வருவோம். கடல் அலைகள் கரையில் வந்து வந்து மோதினாலும் மீண்டும் கடலுக்குள்ளேயே செல்கின்றனவே! அவற்றைச் சீராக இயக்குவது யார்? ஆழிப்பேரலை உள்ளிட்ட அசாதாரண சூழல் வந்தாலே ஒழிய கடல்நீர் நிலத்துக்குள் வராமல் இருக்கிறதே! அதைச் சீராக இயக்கும் இறைவன் ஒருவன் இல்லாவிட்டால் இது சாத்தியமா?சூரியன் ஒவ்வொரு நாளும் காலையில் கிழக்கே உதித்து மேற்கே அஸ்தமிக்கிறதே! அதை இயக்குவது யார்? எனவே சீராக இயங்குகின்ற பூமி, கடல், சூரியன் இவற்றைக்கொண்டே இறைவன் உள்ளான் என்பது ஒருவாறு யூகிக்கலாமே!” என்றார் தேசிகன்.

“இறைவன் இவற்றை எப்படி இயக்குகிறார்?” என்று அந்த நபர் கேட்டார்.அதற்கு தேசிகன், “இவற்றுக்கெல்லாம் அதிபதிகளாக இந்திரன், வருணன், வாயு, சூரியதேவன், சந்திரன், ருத்ரன் போன்ற தேவர்களைத் திருமால் நியமித்திருக்கிறார். அவர்களுக்குத் திருமாலே உள்ளிருந்து சக்தியைக் கொடுத்து அந்தந்த பொருள்களை அவர்கள் இயக்கும்படிச் செய்கிறார்.

அதனால்தான் இறைவனைக் காண
விளக்கேற்றிய பொய்கையாழ்வார்,
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக”
என்று பூமியை அகலாக்கி, கடல்நீரை நெய்யாக்கி, சூரியனைத் தீபமாக்கினார். பூமி, கடல், சூரியன் ஆகியவை இறைவன் உள்ளான் என்று காட்டும் விளக்காக உள்ளன.

அது மட்டுமில்லை, இவற்றை இயக்கும் தேவர்கள் எப்போது திருமாலிடம் வரம் வேண்டி வந்தாலும், அப்போதெல்லாம் அவர்களுக்கு அந்தந்த வரங்களை அருளி, வலிமையையும் தந்து, அந்த தேவர்கள் மூலம் உலகின் இயக்கம் சீராக நடக்கும்படிச் செய்கிறார்.ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவர்கள் வலிமை இழந்து நின்ற போது, திருமால் ஆமை வடிவுடன் கூர்மாவதாரம் எடுத்து, மந்தரமலையை முதுகில் சுமந்து, பாற்கடலைக் கடைய வைத்து, தேவர்களுக்கு அமுதத்தைப் பெற்றுக் கொடுத்து, அதன்மூலம் அவர்கள் வலிமை பெறும்படிச் செய்தார்!” என்று விளக்கினார்.

கேள்வி கேட்டவருக்கு மெல்ல மெல்ல இறைவனிடமும் வேதங்களிடமும் நம்பிக்கை பிறக்கத் தொடங்கிற்று. வேதங்கள் மற்றும் குருவின் துணையோடு இறைவனை நோக்கி அவர் பயணிக்கத் தொடங்கினார்.‘வர:’ என்பது வரங்களைக் குறிக்கிறது. ‘த:’ என்றால் அருள்பவர். தேவர்கள் வரம் வேண்டும் என்று பிரார்த்திக்கும் போதெல்லாம் அவர்கள் வேண்டும் அந்தந்த வரங்களைத் தந்தருள்வதால், கூர்ம மூர்த்தி ‘வரத:’ (வர: + த: = வரத:) என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 332-வது திருநாமம்.“வரதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் நல்ல
வரங்களைத் திருமால் தந்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை
டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!