அவ்வை சொல்ல விவாக ஓலை எழுதிய விநாயகன்

‘‘ஜோ’’ வென்று மழை அன்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்த படியே, அவ்வை பாட்டி நடந்து கொண்டிருந்தார். பாரெங்கும் தமிழ்மணம் பரப்ப கிளம்பிய அவ்வை மூதாட்டிக்கு எதுவும் அவளது சொந்த ஊர்தான். அனைவரும் அவளது உறவினர் தான். ஆகவே, தென்றல் காற்றைப் போல பல இடங்களில் வீசிப் பரவி தமிழ்மணம் பரப்பிக்கொண்டிருந்தார்.

அப்படி தமிழை பரப்ப அவ்வை மேற்கொண்ட பயணத்தில்தான், திடீர் திருப்பமாக மழை கொட்டித் தீர்த்தது. மேலே பயணிக்க முடியாததால், அவ்வை பாட்டி அருகில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் நிழலாக அமர்ந்துகொண்டாள். கொட்டும் மழை. நடு ஜாமம். மை இருட்டு. ஆனால், வயிற்றுக்கு இது எல்லாம் தெரியாதே. கூடவே பிறந்த எதிரி ஆயிற்றே இந்த பசி. அது அந்த அவ்வை பாட்டியையும் விடவில்லை. அவளது வயிற்றை அது வாட்டியது.

‘‘அம்மா! வீட்டில் யாரம்மா? பசி வயிற்றை கிள்ளுகிறது. உணவு இருந்தால் தயை கூர்ந்து தந்து உதவுங்களேன். உங்களுக்கு புண்ணியமாய் போகும்’’ என்று பசி தாங்காமல், அவ்வை பாட்டி வீட்டில் இருப்பவரிடம் உணவு கேட்டார்கள். உள்ளே யார் இருந்தார்கள் என்று தெரியாது. ஆனால், வெளியில் வந்திருப்பவர் நிச்சயம் ஈரமாக இருப்பார் என்று வீட்டில் வசிப்பவர்கள் உணர்ந்திருப்பார்கள் போலும். ஒரு தூய்மையான துணியுடன்

திண்ணைக்கு வந்து அவ்வை பாட்டியிடம் கொடுத்தார்கள்.

 ‘‘அம்மா, மழையில் ஈரம் சொட்ட சொட்ட, அமர்ந்து இருப்பீர்கள். முதலில் துடைத்துக் கொள்ளுங்கள். இதோ நொடியில் உணவு எடுத்து வருகிறேன்’’ என்று துணியை அவ்வையிடம் கொடுத்த பெண், வாஞ்சையாக மொழிந்து விட்டு உள்ளே ஓடினாள். அநேகமாக, உணவைக் கொண்டு வரத்தான் சென்றி ருப்பாள் என்று அவ்வைக்கு விளங்கியது.

ஆனால், இவ்வளவு கனிவான குணம் கொண்ட பெண் யாராக இருக்கும், என்றுதான் விளங்கவில்லை. மேலும், அவளது குரல் எங்கேயோ கேட்ட குரல் போல இருந்தது. ஆனால், அந்த இரவின் மை இருளாலும், மழை ஏற்படுத்திய இருட்டாலும், யார் அந்தப் பெண் என்பதை அவ்வையால் ஊர்ஜிதமாக அறிய முடியவில்லை.

 அந்தப் பெண் யாராக இருக்கும் என்று அவ்வை யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, சுடச்சுட உணவு பரிமாறப்பட்டது. எளிமையான உணவாக இருந்தாலும், அதில் அன்பின் சுவை அதிகமாக இருந்தது. ரசித்து உணவு உண்ட அவ்வை, மெல்ல நன்றி சொல்லியபடியே எழுந்தார்கள். அவ்வை உறங்க ஒரு இடம் ஏற்படுத்திக் கொடுத்த, அந்த இல்லத்தில் இருந்த சிறுமிகள், தாங்கள் வேறு ஒரு அறையில் உறங்கச் சென்றார்கள்.

இரவின் நடு ஜாமத்தில், அந்த சிறுமிகள் இருந்த அறையில் இருந்து ஒரு அழகிய தமிழ்ப் பாடல் ஒலி கேட்க ஆரம்பித்தது. ஆனால் அதில் சோகமே வழிந்து ஓடியது. அவ்வை தனது செவிகளை கூர்மை ஆக்கிக்கொண்டு, அந்த பாடலை கேட்க ஆரம்பித்தார்.

‘‘அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்

எந்தையும் உடையோம் எங்குன்றும்

பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்

எம் குன்றும் கொண்டார்

யாம் எந்தையும் இலமே’’

என்ற பாடலைக் கேட்ட அவ்வை மூதாட்டிக்கு, தூக்கி வாரிப்போட்டது. இருந்தாலும் தான் உணர்ந்த பாடலின் பொருள் சரிதானா?, என்று மனதில் ஒரு முறை அசை போட ஆரம்பித்தார்.

‘‘அன்றைய முழு நிலாக் காலத்தில் எங்கள் தந்தையையும் எங்களுக்கு உரிய நாட்டையும் பெற்று, ராஜகுமாரிகளாக இருந்தோம். ஆனால் இன்றோ, மூவேந்தர்களின் சூழ்ச்சியால் தந்தை பாரியையும் இழந்து, நாட்டையும் இழந்து, அல்லல் படுகிறோம். என்னே காலத்தின் விந்தை.’’ என்பது பாடலின் தேர்ந்த பொருள். இதில் வேறு எந்த உட்பொருளும் இல்லை என்பதை சந்தேகமில்லாமல் உணர்ந்த அவ்வை, சட்டென்று எழுந்தார்கள். சிறுமிகள் இருக்கும் அறைக்கு ஓடினார்கள். அவர்களை ஆதரவாக அணைத்துக் கொண்டார்கள்.

‘‘பாரியின் மகள்கள், அங்கவை, சங்கவையா நீங்கள்? ஒரு முல்லைக் கொடி கூட வாடக்கூடாது என்று தங்கத் தேரை தந்த வேந்தனின் வஞ்சிக் கொடிகளா நீங்கள்?’’ ஆதரவாக அணைத்த அவ்வையின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. பாரியின் உற்ற தோழியாக விளங்கியவர் அவ்வை பாட்டி. பலமுறை அங்கவைக்கும் சங்கவைக்கும், அவ்வை பாடம் கற்றுத் தந்திருக்கிறார்.

ஆனால், தனது மாணவிகளை, இப்படி கதி அற்றவர்களாக காண நேரும் என்று அவ்வை பாட்டி கனவிலும் நினைக்கவில்லை. இதயமே நின்றுவிடும் போல இருந்தது பாட்டிக்கு. மெல்ல தன்னைத் தேற்றிக்கொண்டு பாரியின் மகள்களையும் தேற்றினார். தாமதிக்காமல், தான் யார் என்ற உண்மையையும் சொன்னார். பாரியின் மகள்களுக்கு அவ்வையின் தாயணைப்பு, அந்த கதியில்லாத நேரத்தில் தேவைப்பட்டது என்று சொல்லவும் வேண்டுமா?. மூவரும் மாறி மாறி அன்பைப் பொழிந்து கொண்டார்கள். தக்க சமயத்துக்காக காத்திருந்த அவ்வை, நடந்ததை பற்றி விசாரித்தார்.

பாரியின் புகழில் பொறாமைகொண்ட மூவேந்தர்கள், சூழ்ச்சியால் பாரியைக் கொன்று, அவனது நாட்டைக் கைப்பற்றி, அவனது சிறுமி

களான தங்களை அனாதையாக்கிவிட்டார்கள் என்ற உண்மையை அழுதுகொண்டே இரண்டு சிறுமிகளும், பாட்டிக்குச் சொன்னார்கள். அதைக் கேட்ட அவ்வைக்கு இரத்தம் கொதித்தது. அதிகாரம் இருந்தால், என்ன அதர்மம் வேண்டுமானாலும் செய்யலாம், என்று நினைக்கும் சேரனுக்கும் சோழனுக்கும் பாண்டியனுக்கும் ஒரு பாடம் புகட்டியே ஆக வேண்டும் என்று அவ்வை முடிவு செய்தாள்.

‘‘அதிகாரத் திமிர் பிடித்த அவர்கள்தான் அப்படி செய்தார்கள் என்றால், அறத்தை எடுத்து உரைக்கும் தமிழ் படித்த எவரும் அதை எதிர்க்கவில்லையா?’’ தனது இரத்தத்தின் கொதிப்பை வெளிகாட்டாதபடி, வினா எழுப்பினாள் அவ்வை. ‘‘ஏன் இல்லாமல் பாட்டி?’’, சங்கப் புலவர்களில் ஒருவரான கபிலர், எவ்வளவோ முயன்று நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை தடுக்கப் பார்த்தார். ஆனால், அவரது முயற்சி அனைத்தும் வீணாய்ப் போனது. சரி, பாரியைத்தான் காக்க முடியவில்லை. அவரது மகள்களான, எங்களையாவது கரை சேர்க்கலாம் என்று கபிலர் பார்த்தார்.

திருக்கோவிலூரை ஆட்சி செய்யும் மலையமானின் மக்களை, நாங்கள் காதலிப்பதை, கபிலர் அறிந்தார். எங்களை மலையமானின் மக்களோடு சேர்த்து வைக்க கபிலர் பெரும் பாடுபட்டார். ஆனால், சேர சோழ பாண்டியர்களை எதிர்த்துக்கொண்டு, எங்களை, தனது மகன்களுக்கு கட்டி வைக்க மலையமான் சம்மதிக்கவில்லை. தனது இறுதி மூச்சு இருக்கும் வரை எங்கள் காதலை சேர்த்து வைக்க, கபிலர் செய்யாத முயற்சி இல்லை. அந்த முயற்சியிலேயே அவரும் இறைவனடி சேர்ந்தார்.

‘‘இப்போது நாங்கள் ஆதரவற்று நிற்கிறோம்” கேவியபடியே அங்கவையும் சங்கவையும் தங்களது சோகக்கதையை சொல்லி முடித்தார்கள். அவர்களது சோகக்கதையை கேட்ட அவ்வைக்கு, இனி இந்த பெண்களுக்கு நல்லவழி காட்டுவதுதான், அடுத்த முக்கியமான வேலை என்று விளங்கியது.

 விடிந்தவுடன், தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு திருக்கோவிலூருக்கு கிளம்பினார். கூடவே அங்கவையையும், சங்கவையையும் அவ்வை பாட்டி அழைத்துச் சென்றார். அங்கே மலையனின் அரசவையில், மலையனிடம், அவ்வை பாட்டி கலந்து உரையாடினார் .

 அவனோடு கலந்து உரையாடியதில் அவனுக்கும், இந்த சம்பந்தத்தில் பரிபூரண சம்மதம் என்று தெள்ளத் தெளிவாக பாட்டிக்கு விளங்கியது. ஆனால், அவன் பயப்படுவது, சேர சோழ பாண்டியர்களின் சூழ்ச்சிக்கு மட்டும்தான் என்பதும், அவ்வைக்கு புரிந்தது. நிலைமையை உணர்ந்த அவ்வை, அடுத்து சொன்ன பதிலில், அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.

‘‘மலையா! நீ மூவேந்தர்களுக்குதானே பயப்படுகிறாய்? எனில், அந்த மூவேந்தர்களும் முன்னே நின்று உனது மகன்களின் திருமணத்தை நடத்திவைத்தால், திருமணத்திற்கு சம்மதிப்பாய்தானே?’’ சாதாரணமாகத்தான் சொன்னாள் அவ்வை பாட்டி. ஆனால் அதை கேட்ட அங்கிருந்தவர்கள் அனைவரும்,‘‘இது என்ன?, குதிரைக் கொம்பை பிடிக்கும் கதையாக இருக்கிறது’’ என்று அதிர்ந்தார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. அவ்வை பாட்டி சொன்ன விஷயம் அப்படிப்பட்டது அல்லவா?.

இவ்வளவு ஏன், மலையனால் கூட அவ்வை பாட்டி சொல்வதை ஜீரணிக்க முடியவில்லையே!‘‘அவர்களின் தொந்தரவு இல்லை என்றால், எனக்கு பரிபூரண சம்மதம்தான். ஆனால் நீங்கள் சொல்வது நடக்குமா? அவ்வையே’’ என்று வாயைப் பிளந்தபடி மலையன் கேட்டதில் இருந்தே அவன் எவ்வளவு ஸ்தம்பித்துப் போய் இருக்கிறான் என்று தெரிந்தது.

‘‘தெய்வத் தமிழும், தெய்வமும் நம்முடன் இருந்தால், நடக்காததும் நடக்கும் மலையனே. நடக்கப்போவதை வேடிக்கை மட்டும் பார்’’ என்று மர்மப் புன்னகை பூத்தபடியே, அவ்வை பாட்டி பதிலுரைத்தாள். அவ்வை பாட்டி, அங்கிருந்தவர்களின் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும், சட்டைசெய்யவில்லை என்பதை அவரது முகம் நன்கு காட்டிக் கொடுத்தது.

பாட்டி என்ன செய்யப் போகிறார், என்பது யாருக்கும் விளங்கவில்லை. அங்கவையும் சங்கவையும் கூட ஒன்றும் புரியாமல் நின்றிருந்தார்கள். அவர்களை தனது கடைக்கண்ணால் பார்த்து, அவ்வை பாட்டி ‘‘அச்சம் வேண்டாம்” என்று ஜாடை செய்தார். பிறகு, தனது கையில் இருந்த ஊன்றுகோலை, தோளில் சாய்த்து வைத்துக்கொண்டு, கைகளை குவித்தபடி, பாட ஆரம்பித்தார்.

‘‘ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்

கரியுரிவைக் கங்காளன் காளாப் -

பரிவுடனே

கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்

தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.’’

என்று பாடி முடித்தார், அவ்வை.

அதாவது ‘‘விநாயகப் பெருமானே, நீ, உனது ஒரு கொம்பை உடைத்து பாரதத்தை எழுதியதாக உலகம் சொல்லுகிறது. அன்று, வியாசர் சொல்லச் சொல்ல நீ பாரதம் எழுதியதுபோல, இன்று அங்கவைக்கும் சங்கவைக்கும், திருமண ஓலை எழுத வேண்டும்.

அதுவும், நான் சொல்லச் சொல்ல, நீ எழுத வேண்டும். இதை நீ செய்யாவிட்டால், நான் உன் மீது வைத்திருக்கும் பக்தியின் மீதும், நீ எனக்குத் தந்த முத்தமிழின் மீதும், ஆணையிட்டுச் சொல்கிறேன், உன்னை நான் சபிக்கவும் தயங்க மாட்டேன்!’’ என்பது பாடலின் பொருள்.

எத்தனை உரிமையோடு ஆனைமுகனை, அவ்வை பாட்டி அழைக்கிறாள் பாருங்கள். நிச்சயம் இது தமிழும், முத்தமிழ் வித்தகன் ஆனைமுகனும், தந்த துணிச்சல்தான்.

பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டவன் மகன் அல்லவா விநாயகன்? அப்பாவைப்போல பிள்ளையும், அவ்வையின் தமிழுக்காகவும், பக்திக்காகவும், திருமண ஓலை எழுத வந்தே விட்டான். இப்படி தமிழின் மீது ஆணையிட்டு, தமிழ் பாட்டி அவ்வை அழைத்த பின்னும், ஆனைமுகன் வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.  

அவ்வைகாகக் காட்சி தந்த ஆனைமுகன், அவ்வை சொல்லச் சொல்ல, அங்கவைக்கும் சங்கவைக்கும் திருமண ஓலை எழுதினான். அவ்வை சொல்லச் சொல்ல ஆனைமுகனே, திருமண ஓலை எழுதி அழைப்பு விடுத்தபின், மூவேந்தர்களும், அவர்களின் கோபமும்

எம்மாத்திரம்?.

போட்டி போட்டுகொண்டு, மூவேந்தர்களும் திருமணத்துக்கு வந்தார்கள். வரும்போது, கை நிறைய, பல சீர்வரிசைகள் கொண்டு வந்த மூவேந்தர்கள், ஜாம் ஜாம் என்று, திருமணத்தை செய்து வைத்தார்கள்.  சுந்தரருக்காக, பரவையிடமும் சங்கிலியிடமும், ஈசன் தூது போனதை நாம் அறிவோம்.

ஆனால், ஈசன் பெற்ற ஆசை மகனான விநாயகன், அவ்வைக்காகவும், தமிழுக்காகவும் தனது கை பட திருமண ஓலை எழுதி, தனது தந்தையையே மிஞ்சிவிட்டான். அவ்வை சொல்ல சொல்ல, ஆனைமுகன் எழுதிய

திருமண ஒலையின் வரிகள், இன்றும்

‘‘அவ்வையார் தனிப்பாடல் திரட்டு” என்னும்

நூலில் இருக்கிறது. சுந்தரத் தமிழுக்கு,

இறைவனும் அடிமை என்று பறை சாற்றும்

அந்தப் பாடலை, தமிழைக் காதலிக்கும்

அனைவரும், நிச்சயம் படிக்க வேண்டும்.

Related Stories:

>