×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

325. அபாம் நிதயே நமஹ (Apaam Nidhaye namaha)

(திருநாமங்கள் 323 முதல் 333 வரை - ஆமை வடிவத்துடன் திருமால் எடுத்த கூர்ம அவதாரத்தின் பெருமைகள்)அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம் விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உ வே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.ஒருமுறை கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம் ஒரு சீடர், “சுவாமி! நமக்குள் இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நம்மை இறைவன் தாங்குகிறான் என்றும் சொல்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?” என்று கேட்டார்.

கருணாகராச்சாரியார் சுவாமிகள், “இதைப் புரிந்துகொள்வதில் உனக்கென்ன கஷ்டம்?” என்று கேட்டார்.அதற்கு அந்தச் சீடர், “இல்லை சுவாமி! வெளியே இருக்கும் பொருள் தானே உள்ளே இருக்கும் பொருளைத் தாங்க முடியும்? ஒரு பெட்டிக்குள் நகையை வைத்தால், பெட்டி தானே நகையைத் தாங்குகிறது? ஒரு பைக்குள்ளே புத்தகத்தை வைத்தால், பைதானே புத்தகத்தைத் தாங்குகிறது? நமக்குள் இறைவன் இருக்கிறான் என்றால், நாம் இறைவனைத் தாங்குகிறோம் என்றுதானே அர்த்தம்? இறைவன் நம்மைத் தாங்குவதாக எப்படிக் கொள்ள முடியும்? அல்லது, இறைவன் தான் நம்மைத் தாங்குகிறான் என்றால், நமக்குள் இறைவன் இருக்கிறான் என்பது பொருந்தாதே!” என்று கேட்டார்.

தமக்கே உரிய புன்னகையோடு அதற்கு விடை அளிக்கத் தொடங்கினார் கருணாகராச்சாரியார் சுவாமிகள். சீடரைப் பார்த்து, “உனக்கு மிதிவண்டி ஓட்டத் தெரியுமா?” என்று கேட்டார். “ஓட்டுவேனே!” என்றார் சீடர். “மிதிவண்டி ஓட்டும் போது, ஓட்டுநர் மிதிவண்டியைத் தாங்குகிறாரா அல்லது மிதிவண்டி ஓட்டுநரைத் தாங்குகிறதா?” என்று கேட்டார் கருணாகராச்சாரியார் சுவாமிகள்.“மிதிவண்டிதான் ஓட்டுநரைத் தாங்குகிறது!” என்று சொல்லப் போன சீடர் சற்றே யோசித்தார். “ஓட்டுநர் சமநிலையில் இல்லாவிட்டால் மிதிவண்டி விழுந்து விடுவதைப் பார்க்கிறோம். மிதிவண்டி எந்த நிலையில் இருந்தாலும், ஓட்டுநர் நினைத்தால் கால் ஊன்றி மிதிவண்டியைத் தாங்கிப் பிடித்து விடலாம்!” என இவற்றை எல்லாம் சிந்தித்த சீடர், “ஓட்டுநர்தான் மிதிவண்டியைத் தாங்குகிறார்!” என்றார்.

அப்போது கருணாகராச்சாரியார் சுவாமிகள், “மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஓட்டுநர் மேலே இருப்பதாகவும், அவரைத் தாங்கும் ஆதாரமாக மிதிவண்டி கீழே இருப்பதாகவும் நமக்குத் தோன்றினாலும், உண்மையில் மேலே இருக்கும் ஓட்டுநர் தானே கீழே உள்ள மிதிவண்டியையும் சேர்த்துத் தாங்குகிறார்? அது போலத் தான் நமக்குள்ளே இருக்கும் இறைவன் ஓட்டுநரைப் போல. நாம் மிதிவண்டியைப் போல. மேலோட்டமாகப் பார்த்தால், மிதிவண்டியான நாம் ஓட்டுநரான இறைவனைத் தாங்குவது போலத் தோன்றும். உண்மையில், ஓட்டுநரான இறைவன்தான் மிதிவண்டியான நம்மைச் சமநிலையில் வைத்து அழைத்துச் செல்கிறான்.

இதற்குச் சிறந்த உதாரணம்தான் திருமால் எடுத்த கூர்மாவதாரம். ஆமை வடிவில் பாற்கடலின் உள்ளே இருந்துகொண்டு மந்தர மலையைத் திருமால் முதுகில் தாங்கினார் அல்லவா? ஆமையான பெருமாளைக் கடல் தாங்கியதா? அல்லது அந்தப் பெருமாள் கடலைத் தாங்கினாரா? பொதுவாக, கடலில் உள்ள ஆமைகளைக் கடல்தான் தாங்கி இருக்கும். ஆனால், இங்கோ அந்தக் கடலையே ஆமை வடிவில் உள்ள கூர்ம மூர்த்தி தான் தாங்கி நிலைநிறுத்தி வைத்திருந்தார்!” என்று விளக்கினார்.

தண்ணீருக்கு வடமொழியில் ‘அப்’ என்று பெயர். ‘நிதி:’ என்றால் ஆதாரமாக இருந்து தாங்குபவர் என்று பொருள். தண்ணீர் நிறைந்த கடலை (திருப்பாற்கடலை) ஆமை வடிவில் உள்ளிருந்து தாங்கியபடியால், கூர்ம மூர்த்திக்கு ‘அபாம் நிதி:’ என்று பெயர். ‘அபாம் நிதி:’ என்றால் கடலுக்கு ஆதாரமாக இருந்து தாங்கியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 325-வது திருநாமம்.“அபாம் நிதயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை என்றும் திருமால் தாங்கிப்பிடித்துக் காப்பாற்றுவார் என்பதில் ஐயமில்லை.

326. அதிஷ்டானாய நமஹ (Adhishtaanaaya namaha)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இணையற்ற வடமொழிக் கவிச்சக்கரவர்த்தி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகள், தன் தந்தை வாங்கியிருந்த கடன்களை எல்லாம் அவரது ஒரே மகன் என்ற முறையில் தானே அடைத்துவிட்டார். அதன் விளைவாக, வீடு, நிலங்கள், சொத்து அனைத்தையும் விற்றுவிட்ட படியால், மிகுந்த வறுமையில் அவர் குடும்பம் வாடிவந்தது. வேத பாடசாலையில் காவிய பாடம் போதிப்பது, சில சொற்பொழிவுகள் ஆற்றுவது என
இப்படி வரக்கூடிய சொற்ப வருமானத்தைக் கொண்டு பெரிய குடும்பத்தைப் பார்த்து வந்தார் அவர்.

இந்நிலையில் ஒருநாள் ஸ்ரீநிதி சுவாமிகள் தனது வேட்டியைத் துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது வேட்டி கிழிந்த நிலையில் இருப்பதைக் கண்டார். “புதிய வேட்டி வாங்குவதற்குப் பொருள் வேண்டுமே! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் போன்ற அடிப்படைத் தேவைகளாவது நமக்குக் கிடைக்கும்படி இறைவன் அருள்புரிய மாட்டானோ?” என்ற ஏக்கத்துடன் அப்படியே அமர்ந்தார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

அப்போது பக்கத்து வீட்டு வானொலியில் ஒரு செய்தி கேட்டது. “இந்த ஆண்டு திருப்பதி உண்டியலில் அளவு கடந்த காணிக்கை குவிந்துள்ளது!” என்பதே அந்தச் செய்தி. அதைக் கேட்ட ஸ்ரீநிதி சுவாமிகள், ஒருநொடி மனதால் திருமலையப்பனை நினைத்து, “மலையப்பா! உன் உண்டியலில் செல்வம் நிறைந்து வழிகிறது. உன் பக்தன் நான் வேட்டிகூட கிடைக்காமல் வாடுகிறேனே!” என்று சொன்னார்.

அப்படி அவர் சொன்னதுதான் தாமதம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு ஒரு கடிதம் வந்தது. “பத்து நாட்கள் திருமலையில் வந்து நீங்கள் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். அதற்குச் சம்மானமாக நாங்கள் ரூ.600 உங்களுக்கு வழங்க உள்ளோம்!” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது.அதைப் படித்தவுடன் ஸ்ரீநிதி சுவாமிகள் திருமலையப்பனின் கருணையை எண்ணிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார். “இறைவா! உன் உண்டியலில் பணம் வழிகிறது, உன் பக்தன் துன்பப்படுகிறேன் என்று அவசரப்பட்டுச் சொல்லி விட்டேன்.

ஆனால் நீயோ எனக்கு எப்பேர்ப்பட்ட உதவியைச் செய்திருக்கிறாய்?” என்று பரவசத்துடன் கூறிய அவர், பத்து நாட்கள் திருப்பதிக்குச் சென்று சொற்பொழிவு ஆற்றினார். திருமலையில் பெருமாளைத் தரிசிக்கச் செல்லும் போது, பொன்னால் ஆன ஆனந்த நிலைய விமானத்தில் திகழும் வேங்கடேசனைப் பார்த்தார். (இந்தப் பொன்மயமான விமான வேங்கடேசப் பெருமாளை நாமும் திருமலை பிரதக்ஷிணம் வரும்போது தரிசிக்கலாம்.) அந்தப் பெருமாளைக் குறித்து ஒரு ஸ்லோகம் இயற்றினார்.

“கார்த்தஸ்வராஸ்தி ஜனதேதி தயாரஸார்த்ர:
த்ரஷ்டும் ததச்ச பரிரக்ஷிதும் ஏஷ நாத:
கார்த்தஸ்வராக்ருதி: உபேத்ய விமான பூமிம்
ஸ்ரீஸ்வாமி தீர்த்த திசி தத்த முகோ விபாதி”

“அன்று ஒரு குளக்கரையில், கஜேந்திரன் என்ற யானை ஆபத்து என்று உன்னை அழைத்தது. அதன் அழுகுரலைக் கேட்டு உடனே ஓடிப் போய் நீ அதைக் காப்பாற்றினாய். அது போல் இங்குள்ள சுவாமி புஷ்கரிணி குளக்கரையில் யாரேனும் ஆபத்து என்று அழுகுரல் கொடுத்தால், உடனே ஓடிப்போய் அவர்களையும் காப்பாற்றத் தயாராகப் பொன்மயமான வடிவுடன் விமான வேங்கடேசனாகக் காட்சி தருகிறாய் போலும்!

எனது அழுகுரலையும் அதனால்தான் உடனே கேட்டு எனக்கு இத்தகைய அருளைப் புரிந்திருக்கிறாய்!” பத்து நாள் சொற்பொழிவு முடிந்தவாறே, திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ரூ.600 சம்மானமும், புதிய வேஷ்டியும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது. திருமலையப்பனின் கருணையை எண்ணி உருகி வீடு திரும்பினார் ஸ்ரீநிதி சுவாமிகள்.

வீடு திரும்பிய பின், தனது மனைவியிடம் நடந்தவற்றைச் சொன்ன ஸ்ரீநிதி சுவாமிகள், “நான் அடிக்கடி சொல்வேன் அல்லவா, ‘இது என் குடும்பம் அல்ல, ஸ்ரீமந்நாராயணனின் குடும்பம்! அவன் குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்!’ என்று? இப்போது அவன் நிரூபித்துவிட்டான்! கூர்மாவதாரம் செய்த போது, எப்படி தேவர்கள் சுமக்க வேண்டிய பாரமான மந்தரமலை என்னும் மத்தை அவன் சுமந்து, தேவர்களுக்கு அமுதைப் பெற்றுக் கொடுத்தானோ, அதுபோல் பக்தர்களின் பாரத்தையும் அவன் சுமந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் அமுதைச் சுரந்து காக்கிறான்!” என்று சொல்லி, திருமலையப்பன் அருளிய சம்மானத்தைக் காட்டினார். ‘அதிஷ்டானம்’ என்றால் தாங்கி நிற்பவர் என்று பொருள். கூர்ம அவதாரத்தில் மந்தர மலையாகிய மத்தைத் தன் முதுகில் தாங்கி நின்றதால், கூர்ம மூர்த்திக்கு ‘அதிஷ்டானம்’ என்று பெயர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 326-வது திருநாமம். “அதிஷ்டானாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பாரத்தைத் திருமால் சுமந்து அவர்கள் பாரமின்றி மகிழ்ச்சியாக வாழ அருள்புரிவார்.

327. அப்ரமத்தாய நமஹ (Apramathaaya namaha)

“என்ன இந்திரா! வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறாயா?” என்று ஒரு குரல். அசுரர்களை வென்ற மகிழ்ச்சியில் தேவர்களுடன் இணைந்து கொண்டாடிக் கொண்டிருந்த இந்திரன் திரும்பிப் பார்த்தான். தேவ லோகத்துக்கு வந்த அகஸ்திய முனிவரின் குரல் தான் அது என்று புரிந்து கொண்ட இந்திரன், “வாரும் அகஸ்தியரே! அமுதத்தைப் பருகியதால் நாங்கள் அசுரர்களை வீழ்த்தி விட்டோம்!” என்று பதில் சொன்னான். அதைக் கேட்ட அகஸ்தியர், “இந்திரா! எந்த அமுதத்தால் நீ வெற்றி பெற்றாய்?” என்று கேட்டார்.

“பாற்கடலைக் கடைந்தபோது, அதிலிருந்து எடுக்கப்பட்ட அமுதைப் பருகினோம். அதனால் வென்றோம்!” என்றான் இந்திரன். “இல்லை இந்திரா! பாற்கடலில் இருந்து எடுக்கப்பட்ட உப்புச்சாறான அமுதால் நீங்கள் வெல்லவில்லை! பாற்கடலை உங்களுக்காக கடைந்து கொடுத்தாரே ஆராவமுதமான திருமால்! அந்தத் திருமால் என்னும் ஆராவமுதால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்றார். “எதை வைத்துச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் இந்திரன்.

“இந்திரா! நீங்கள் துர்வாசரின் சாபத்தால் அசுரர்களிடம் தோற்று வலிமையிழந்து நின்றீர்கள். நீங்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால், பாற்கடலைக் கடைய வேண்டும் என்று ஆலோசனை கொடுத்தவர் திருமால். அந்தப் பாற்கடலை நீங்கள் மட்டும் தனியாகக் கடைய முடியாது என்பதால் அசுரர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுங்கள் என்று ராஜதந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தவர் திருமால். மந்தர மலையாகிய மத்தைக் கருட வாகனத்தில் கொண்டு வந்து பாற்கடலின் மத்தியில் நிலைநிறுத்தியவர் திருமால். அந்த மத்து அழுந்திய போது, ஆமை வடிவில் கூர்மாவதாரம் செய்து அதைத் தன் முதுகில் தாங்கிப் பிடித்து, நீங்கள் பாற்கடல் கடைய உறுதுணையாக இருந்தவர் திருமால்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து களைப்படைந்து இருந்த நிலையில், உங்களுக்கெல்லாம் உள்ளிருந்து சக்தியைக் கொடுத்துக் கடைய வைத்தவர் திருமால். சில காலம் கழித்து நீங்கள் கடைய முடியாமல் தவித்த போது, பாற்கடலைக் கடைந்து கொடுத்தவர் அதே திருமால். பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வந்த போது, அதைப் பரமசிவனிடம் வழங்கி உலகைக் காக்குமாறு ஆலோசனை தந்தவர் திருமால். தன்வந்தரியாக அவதாரம் செய்து அமுதக் கலசத்தைக் கையில் ஏந்தி வந்தவர் திருமால்.

அது அசுரர்களுக்குக் கிடைக்காதபடி மோகினி அவதாரம் செய்து அசுரர்களை மயக்கி, தேவர்களான உங்களுக்கு மட்டும் அமுதைப் பெற்றுக் கொடுத்தவர் திருமால். நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்களை நன்கு கடாட்சிக்கும்படித் தன் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியிடம் சொன்னவர் திருமால்.

சற்று யோசித்துப் பாருங்கள்! உங்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் எப்படி எல்லாம் கவனத்துடன் திருமால் செயல் பட்டிருக்கிறார்! ஆலோசனை, ராஜதந்திரம், மத்தைக் கொண்டு வருதல், மத்தைச் சுமத்தல், சக்தி கொடுத்தல், விஷத்தை முறித்தல், அமுதைக் கொணர்தல், அசுரர்களை மயக்குதல், வெற்றியை அருளுதல் என ஒவ்வொரு நிலையிலும், உங்களை விட அவர்தான் அதிகக் கவனம் செலுத்தி உங்களை இந்த நிலையில் இன்று வைத்திருக்கிறார். இப்படித் திருமகளோடு இணைந்து திருமால் புரிந்த அருளால் தான் நீங்கள் வென்றீர்கள்!” என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றார் அகஸ்தியர்.

“அடடா! நாம் அமுதைக் குடித்த மகிழ்ச்சியிலும், வெற்றி பெற்ற பெருமிதத்திலும், நம்மைக் கவனித்துக் கவனித்துக் காத்த திருமாலை மறந்துவிட்டோமே!” என்று கருதிய தேவர்கள், அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,
கும்பகோணம் ஸ்ரீசார்ங்க
பாணிப் பெருமாள் திருக்கோவில்
கருவறையை அடைந்து,
“த்ரிம்சத் த்ரிகோடி வஸு ருத்ர திவாகராதி
தேவாதி தேவகண ஸந்தத ஸேவ்யமானம்
அம்போஜ ஸம்பவ சதுர்முக கீயமானம்
வந்தே சயானம் இஹ போகினி
சார்ங்கபாணிம்”

என்று சார்ங்கபாணிப் பெருமாளின் தியான ஸ்லோகம் சொல்வது போல், அந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் சூழ்ந்திருந்து அப்பெருமாளை வழிபட்டு, அமுதைப் பெற்றுத் தந்த ஆராவமுதுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.இப்படித் தேவர்களைக் காக்கும் போது ஒவ்வொரு நிலையிலும் கூர்ம மூர்த்தி எத்தனை எத்தனை முயற்சிகள் எடுத்து, எவ்வளவு கவனமாகக் காத்திருக்கிறார் என்பதை இவ்வரலாற்றின் மூலம் அறிய முடிகிறதல்லவா?
‘ப்ரமத்த:’ என்றால் கவனம் இல்லாதவர் என்று பொருள். ‘அப்ரமத்த:’ என்றால் கவனம் மிக்கவர் என்று பொருள். மிகவும் கவனத்துடன் அடியார்களைக் காப்பதால், கூர்ம மூர்த்திக்கு ‘அப்ரமத்த:’ என்று பெயர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 327-வது திருநாமம்.

“அப்ரமத்தாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் கவனக் குறைவு நீங்கி, அவர்கள் தங்கள் தொழில்
களில் நல்ல கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெறும்படித் திருமால் அருள்புரிவார்.

328. ப்ரதிஷ்டிதாய நமஹ (Prathishtithaaya namaha)

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் காவிரிக் கரையில் உள்ள ஸ்ரீசங்கர மடத்தில் முகாம் இட்டிருந்த சமயம். காவிரிக்கு அக்கரையில் இருந்த ஒரு பக்தர் தினமும் பெரியவரின் பூஜைக்காகப் பூக்கள்கொண்டு வந்து சமர்ப்பிப்பது வழக்கம். ஆனால் பூ கொடுக்கும் பக்தர், “நாம் கொண்டு வந்து பூக்களைக் கொடுப்பதால் தான் இந்த மடத்தில் பூஜையே நடக்கிறது!” என்று மனதில் எண்ணிக் கொண்டு அந்தக் கர்வத்தோடு பூ கொடுப்பதைக் கவனித்தார் காஞ்சி பெரியவர். மறுநாள் அந்த பக்தர் பூ கொண்டு வந்த போது அவரை அழைத்த பெரியவர், “நீ காவிரிக்கு அக்கரையில் இருந்துதானே பூ கொண்டு வருகிறாய்? வரும் வழியில் காவிரி நதியைக் கடந்து வருகிறாய் அல்லவா? ஒரு புண்ணிய நதியைக் கடந்தால், அந்த நதியில் இறங்கி ஆசமனம் பண்ணிவிட்டுத் தான் கடக்க வேண்டும்.

அல்லது நதியில் ஒரு காசு போட வேண்டும். இவற்றில் எதையாவது நீ செய்தாயா?” என்று கேட்டார். அந்த பக்தர், “ஓ! எனக்குத் தெரியாத சாஸ்திரா? தினமும் நான் காவிரியில் ஆசமனம் செய்து விட்டுத்தான் காவிரியைக் கடந்து வருகிறேன்!” என்று பதில் அளித்தார். பெரியவர், “அப்படியா? ரொம்ப சந்தோஷம்! ஆசமனம் செய்யும் போது, பூவைக் கையில் வைத்துக் கொண்டே செய்ய முடியாதே! எச்சில் பட்டுவிடுமே! பூக்களை என்ன செய்வாய்?” என்று கேட்டார். “பூக்களைப் படித்துறையில் வைத்துவிட்டு ஆசமனம் செய்வேன்!” என்று சொன்னார் பக்தர்.

“மனிதர்களின் கால் படும் தரையில் இறைவனின் பூவை வைக்கலாமா?” என்று கேட்டார் பெரியவர். “நான் படியை ஊதிச் சுத்தம் செய்து விட்டு அதன்பின் தான் பூவை வைப்பேன்!” என்றார் பக்தர். “அப்படியானால் இது எச்சில் பூ! இதைப் பூஜைக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி, பூக்களைத் திரும்பக் கொடுத்துவிட்டார்.

கர்வத்துடன் வந்த பக்தரின் முகம் வாடியதைக் கண்ட பெரியவர்,“இதோ பார்! காவிரி என்பது புண்ணிய நதி! புண்ணிய நதியின் படித்துறை தூய்மையானது. எனவே அங்கு பூவை வைத்தாலும் தோஷம் இல்லை. நீ வாயால் ஊதிப் படித்துறையைச் சுத்தம் செய்வதாக எண்ணுவது தான் தவறு!” என்று விளக்கம் அளித்தார். கர்வம் நீங்கிய அந்த பக்தர் வேறு பூக்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த அளவில், அதைப் பெற்றுக்கொண்ட காஞ்சி பெரியவர், அவரிடம் ஒரு கதை சொன்னார்.

“ஓர் ஊரில் ஒரு பாடகர் பெருமாள் கோவிலில் இனிய பாடல்கள் பாடி வந்தார். தன்னைப் போல் பாடுவதற்கு உலகில் வேறு யாரும் இல்லை என்ற கர்வம் அவரிடம் இருந்தது. அவர் மெய்ம்மறந்து பெருமாளைப் பற்றிப் பாடும் போது, சில நேரங்களில் பெருமாள் நாட்டியமே ஆடுவார். இந்நிலையில் ஒருநாள் அந்தப் பாடகர் பெருமாளிடம், ‘எனக்கு முக்தி கொடு!’ என்று வேண்டினார். அதற்குப் பெருமாள், ‘நீ ஆணவத்தை விட்டுவிட்டு என்னிடம் சரணாகதி செய்தால் தான் முக்தி அளிப்பேன். இத்தனை ஆணவத்தோடு இருப்பவனுக்கு முக்தி தரமாட்டேன்!’ என்று சொல்லி விட்டார்.
‘நான் இத்தனை நாள் உனக்காகப் பாடினேனே!’ என்றார் பாடகர்.

‘அதற்குத்தான் நான் நடனம் ஆடிக் காட்டிவிட்டேனே! அந்தக் கணக்கும் இந்தக் கணக்கும் சரியாகிவிட்டது!’ என்று பதில் சொல்லி விட்டார் பெருமாள். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? நாம் புதிதாகப் பூக்கள் கொடுத்தோ, பாட்டு பாடியோ, பூஜை செய்தோ இறைவனுக்குப் பெருமை உண்டாக  வேண்டிய தேவையே இல்லை. இறைவன் என்றென்றும் எல்லையில்லாத மேன்மையோடுதான் இருக்கிறார். பக்தர்களான நமது கடமை இறைவனுக்குத் தொண்டாற்றுதல் என்பதால் நாம் தொண்டுகள் புரிகிறோமே ஒழிய, இவற்றால் அவருக்குப் புதிய பெருமைகள் வரப்போவதில்லை. இறைவனின் கூர்மாவதார வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம்.

மந்தர மலையையே தன் முதுகில் கூர்ம மூர்த்தி தாங்கினாரே! அந்தக் கூர்ம மூர்த்தியை யார் தாங்கினார்கள்? இன்னொருவர் அவரைத் தாங்க வேண்டிய தேவை இல்லாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருக்கிறார் திருமால்! இதைப் புரிந்துகொள்!” என்று அறிவுரை கூறி அந்த பக்தரை அனுப்பி வைத்தார். மந்தர மலையைத் தாங்கிய கூர்ம மூர்த்தி, தன்னைத் தாங்க இன்னொருவர் தேவைப்படாதபடி, தன்னில் தானே நிலைபெற்றிருந்த படியால்,
‘ப்ரதிஷ்டித:’ என்றழைக்கப்படுகிறார்.

‘ப்ரதிஷ்டித:’ என்றால் நிலைநிற்பவர் என்று பொருள். இங்கே ‘ப்ரதிஷ்டித:’ என்பதற்குத் தன்நிறைவுடன் தன்னில் தானே நிலைநிற்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 328-வது திருநாமம்.“ப்ரதிஷ்டிதாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!