×

காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்

யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந்திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1.இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம்,
8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.

சாதகனின் மூலாதாரத்துள் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி ஆறு ஆதாரங்களை முறைப்படி கடந்து தலைக்கு மேலுள்ள சகஸ்ராரம் எனப்படும் ஆயிரம் இதழ் தாமரையில் உறையும் இறைவனுடன் இரண்டறக் கலக்கும்படிச்செய்யும் மனம் கடந்த நிலையே யோகம் எனப்படும், இது அமிர்த யோகம், ஆனந்த யோகம், பன்ன யோகம், வஜ்ர யோகம். ஞான யோகம் என்று இவற்றின் விரிவை சிவயோக சாரம், சிவயோக மஞ்சரி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு பதஞ்சலி யோக சூத்திரம் முதலிய நூல்களில் காணலாம்.

யோக மார்க்கத்தை விளக்கும் நிலையில் சிவபெருமான் யோக தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார். சிவபெருமான் யோகாசார்யனாக வீற்றிருந்து அதைக் கற்பிக்கின்ற வேளையில் நான்கு சீடர்கள் அவற்றைப் பெறுவர். அவர்கள் மூலம் அம்மதம் பரவும். இந்த யோகாசாரியர்கள் சுவேதர் முதல் லகுலீசர் வரையிலான 155 பேர்கள் ஆவர்.

இவர்கள் தம்பெயரால் 155 சிவாலயங்களை காஞ்சிபுரத்தில் அமைத்து வழிபட்டனர் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது. இந்த ஆலயங்கள் யோகாசாரியார் தளிகள் என்றும் அவை அமைந்திருந்த பகுதி யோகஸ்தானம் என்றும் கூறப்படுகிறது. இவற்றில் இறுதி ஆசாரியானாக தோன்றிய லகுளீசர் அமைத்த சிவாலயம்லகுளீச்சரம் என்ற பெயரில் உள்ளது. காஞ்சி க்ஷேத்திரமஞ்சரி என்ற நூலில் இந்த 155 ஆசாரியர்கள் ெபயரும் வரிசையாகக் கூறப்பட்டுள்ளது.

யோகம் என்ற சொல் மனதை ஐம்புலன் களின் வழியே கிடைக்கும் போகங்களில் செலுத்தாமல் சிவபெருமானையே அன்புடன் மனதில் கொண்டு மனதை ஒடுங்கச் செய்வது என்பதாகும். இது மந்திர யோகம், ஸ்பரிசயோகம், பாவயோகம், அபாவயோகம், மகாயோகம் என்று ஐந்தாகும். இவற்றை யோக சாத்திர நூல்களில் விரிவாகக் காணலாம்.

- அருண்

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி