×

திருச்சானூர் பத்மாவதி

* வைகுண்டத்தில் நாராயணனின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள்.

* பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று கலியுகம் முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார் ஸ்ரீநிவாசன்.

* மகாலட்சுமி, திருமலையில் திருவேங்கடவனின் திருமார்பில் குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ்த் திருப்பதியில், திருச்சானூரில் எழுந்தருளுமாறும் வரம் பெற்றதாக வரலாறு.

* பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் கிட்ட, அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்குக் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

* வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜப் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ்த் திருப்பதியில் தரிசிக்கலாம்.

* பத்மாவதி-ஸ்ரீநிவாசன் திருமண வைபவத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ்த் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே, இன்றும் திருப்பதியில் கனகாம்பர மலரையும், கருவேப்பிலையையும் எதற்கும் சேர்ப்பதில்லை.

* தாயார் அலர்மேல்மங்கை என்றும் வணங்கப்படுகிறார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருட்காட்சியளிக்கிறாள்.

* தல தீர்த்தம், பத்ம ஸரோவர் ஆகும். பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத்தீர்த்தத்தில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

* தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கைத் தாயாருடன் ஏகாந்தமாக இருந்து விட்டு பின் விடிவதற்குள் திருமலைக்குச் செல்வதாக ஐதீகம்.

* திருமலை வேங்கடவனை  தரிசிக்கும் முன், முதலில் கீழ்த் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள், பிறகு அலர்மேல்மங்கைத் தாயார், அதற்குப்பின் திருமலை புஷ்கரணிக் கரையில் உள்ள வராகமூர்த்தி, அதன் பின்னரே வேங்கடவன் தரிசனம் என்பதுதான் இங்கு வழிபடு மரபு என்பார்கள்.

* பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால், திருச்சானூர், சுகபுரி எனப்படுகிறது.

* பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார்.

* திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள். அதில், ‘உன்னுடன் அந்தர்யாமியாக உள்ள அலர்மேல்மங்கைக்கும் நல்வரவு’ என்று ஒரு சொற்றொடர் உண்டு. திருமலை நாயகனோடு ஒன்றிய நிலையில் அலர்மேல்மங்கை இருக்கிறாள் என்பது
இதனால் தெளிவாகிறது.

* அலர்மேல்மங்கையின் தங்கத்தேர், வெள்ளித்தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

* கார்த்திகை மாதப் பஞ்சமி தீர்த்த ஸ்நானத்தின் போது, திருமலையிலிருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை, தங்க செயின், மஞ்சள், குங்குமம், அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

* கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனிச் சிறப்புடையது.

* திருச்சானூருக்கு அருகில் உள்ள  கல்யாண வனத்தில் பத்மாவதித் தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரக் கல்லை இன்றும் காணலாம்.

* கல்யாண விருந்து தயாரானவுடன் ஸ்ரீநிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை  அஹோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி  வைத்து நிவேதித்தார்களாம்.

* ‘வைகரீ ரூபாய அலர்மேல்மங்காய நமஹ’ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் துயிலெழுகையில் இந்த மந்திரத்தை கூறினால் அன்று முழுதும் பத்மாவதி தேவியின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

கீழ்த் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருச்சானூர் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது.

Tags : Thiruchanur ,
× RELATED திருச்சானூரில் கார்த்திகை...