திருவொற்றியூர் தியாகராஜர்

* பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவிஅருளிய தலமாதலால் திருவொற்றியூர் ஆயிற்று.

* சுந்தரருக்கு மகிழ மரத்தடியில் இறைவனே காதலுக்குத் தூது சென்று சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்வித்த தலம்.

* கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு திருவருள் புரிந்த வட்டப்பாறை அம்மன், வரப்ரசாதியாய் இத்தலத்தில் தனி சந்நதி கொண்டுள்ளாள். கம்பன் கவியெழுதியபோது அவருக்கு ஒளி கிடைக்க தீப்பந்தம் ஏந்தி சேவை செய்த தேவி இவள்.

* மூலவர் படம் பக்கநாதர் எனும் புற்றிடங்கொண்டாரின்  சந்நதி ஆண்டு முழுதும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டுமே கவசமில்லாது தரிசனமளிக்கும்.

* ஈசன், ஆதிபுரீஸ்வரர் எனவும் வணங்கப் படுகிறார்.

* இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாய் 27 நட்சத்திர லிங்கங்களை பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

* பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஓருருவம் கொண்ட ஏகபாத மூர்த்தியை இத்தலத்தில் காணலாம்.

* அம்பிகை வடிவுடையம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை செய்யப்படுவது சிறப்பு.

* வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் தோன்றி நேரில் உணவளித்த தேவி இத்தல வடிவுடையம்மன்.

* தலதீர்த்தமாக பிரம்மதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தநீரை தலையில் தெளித்தாலே மிகவும் புண்ணியம் என்று நம்பப்படுகிறது.

* இத்தலத்தில் தியாகராஜர் எனும் பெயரில் நடராஜப் பெருமான் அமர்ந்த நிலையில் அஜபா நடனமாடுகிறார்.

* பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த தலம்.

 

* வரிவிலக்கு மாந்தாதான் எனும் மன்னன் தனக்கு இறப்பு நேராததால் பாவம் செய்தாவது இறக்கலாம் என எண்ணி தனது ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களுக்கு அநியாய வரி விதித்தான். ஈசன் அந்த மன்னன் அறியாமல் ஒற்றியூர் நீங்கலாக என எழுதி அம்மன்னனை ஆட்கொண்டார்.

* மாசி மகத்தன்று இத்தலத்தில் தியாகராஜரின் 18 வகை திரு நடனங்களையும் கண்டு களிக்கலாம்.

* பௌர்ணமி அன்று ஒரே நாளில் மேலூரிலுள்ள திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மூவரையும் வணங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

* இந்த வடிவுடை அம்மனைப் பற்றிய வடிவுடை மாணிக்கமாலை எனும் துதி புகழ் பெற்றது.

* உற்சவ வடிவுடையம்மன், சுக்கிரவார அம்மன் என்று போற்றப்படுகிறாள்.

* விளக்கேற்றி சிவகைங்கரியம் செய்து வந்த கலியநாயனார் ஒருமுறை விளக்கேற்ற எண்ணெய் இல்லாமல் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கத் துணிந்தபோது இத்தல ஈசன் அவரை தடுத்தாட்கொண்ட தலம் இது.

* ஆலயத்திற்கு வெளியே உள்ள மண்டபத்திற்கருகில் தனிக்கோயிலில் மிகப் பெரிய தட்சிணாமூர்த்தியை வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் திருக்கோலத்தில் தரிசிக்கலாம்.

* சென்னைக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவொற்றியூர்.

Related Stories:

More