×

கணவரின் ஆயுள் கூட்டும் காரடையான் நோன்பு!

கணவர் சத்தியவானின் ஆயுசு முடிந்து, எமனுடன் போராடிய சாவித்திரியின் சரிதம் தெரியும்தானே உங்களுக்கு? யமனுடன் போராடி, கணவரின் உயிரை மீட்டெடுத்தாள். மேலும் சாவித்திரியின் மாமியார், மாமனாருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைத்தது.. யம தர்மனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி தெரிவித்தாள் சாவித்திரி. அன்றைய விரதத்துடன், பூஜையுடன் நைவேத்தியம் செய்ய நினைத்தாள்.

வீட்டில் இருந்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு இனிப்பு அடையும் உப்பு அடையும் செய்தாள். கடைந்த வெண்ணெய் உருகாமல் இருந்தது. நுனி வாழை இலையில் அவற்றை வைத்து, ’ஓரடைய நோன்பும், உருக்காத வெண்ணெயும் படைக்கிறேன். ஒருக்காலும் என் கணவன் என்னைப் பிரியாமல் இருக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க வேண்டினாள். நைவேத்யம் செய்தாள். பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினாள்.

சாவித்திரியின் இந்த நோன்பை பெண்கள் பலரும் இன்றைக்கும் கடைபிடித்துவருகின்றனர். அதுவே காரடையான் நோன்பு என்று கொண்டாடப்படுகிறது.

வருகிற 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் கடைசி நாளும் பங்குனி மாதத்தின் ஆரம்ப நாளும் இணைகிற நேரமே காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.

நோன்பு நாளில், காலையில் தலைக்குக் குளித்து பூஜையறையில் அமர்ந்து, தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்வோம். மெல்லிய நோன்புக் கயிற்றில் ஒரு சில பூக்களைக்கட்டித் தயார் செய்துகொள்வோம். இல்லத்தில் உள்ள சிறுமியர் முதல் வயதான முதிர்ந்த பெண்கள் வரை அனைவருக்கும் ஒன்று என்றும் இல்லத்தில் உள்ள அம்பாள் மற்றும் தாயார் படங்களுக்கு ஒவ்வொன்று என்றுமாக எடுத்துக்கொள்வோம்.
வீட்டு வாசலிலும் பூஜையறையிலும் கோலமிடுவோம். விளக்கேற்றுவோம். அதன் மீது நுனி வாழை இலையை வைத்து, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையில், வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்களும் வைக்க வேண்டும். அதன் மீது நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அவற்றுக்கு எதிரே அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்வோம். பிறகு தாலிச்சரடையும் நோன்புச் சரடையும் கழுத்தில் கட்டிக்கொள்ளுங்கள்.

மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். மாங்கல்ய பலம் பெறும். தாலிபாக்கியத்துடன் தீர்க்கசுமங்கலியாக நீடூழி வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காரடையான் நோன்பு நேரம் : மாலை 3.30 முதல் 4.30 மணிக்குள். சரடு கட்டிக்கொள்ளும் நேரம் : மாலை 4.15.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?