×

தேவதானப்பட்டி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்-பெற்றோர்கள் வலியுறுத்தல்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பகுதியில் உள்ள மாணவர்களின் நலன்கருதி, பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு உட்கடை கிராமங்களில் இருந்து மாணவர்கள்  செல்ல பஸ்சை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வது பெரும் சவாலாக உள்ளது. சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை சுமார் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் பெரியகுளம்,   வடுகபட்டி,   மேல்மங்கலம்,   ஜெயமங்கலம், தேவதானப்பட்டி,    எருமலைநாயக்கன்பட்டி,   உள்ளிட்ட இடங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். இவர்களுக்கு போதுமான பஸ் வசதி கிடையாது. இந்த பகுதியில் இருந்து மாணவர்கள் சிலர் தனியாக ஆட்டோ மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். ஆனால் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்கள் அரசு பஸ்சை மட்டுமே நம்பி உள்ளனர். இவர்கள் காலையில் பள்ளிக்கு வருவது பெரும் சிரமமாக உள்ளது.  அதே  போல் பள்ளி முடித்து மாலையில் வீட்டிற்கு செல்லும் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில்  ஒரு அரசு பஸ் மட்டுமே பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் வழியாக சில்வார்பட்டி வருகிறது.  இதனால் மாணவர்கள் பஸ்சில் இடம் இல்லாமல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இதனால் பஸ்சை இயக்கும் டிரைவர், நடத்துனர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சில இடங்களில்  பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதே போன்று விபத்துக்கள் நடக்காமல் இருக்க  இந்த வழித்தடத்தில் காலையில் பள்ளிக்கு வருவதற்கும் பள்ளி முடித்து மாலையில் வீட்டிற்கு செல்லவும் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தேவதானப்பட்டி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும்-பெற்றோர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dodhanapatti ,
× RELATED தேவதானப்பட்டி வாரச்சந்தை கட்டிடத்தை...