×

சிவவழிபாட்டில் பூதங்கள்

சிவபூஜா பத்ததி நூல்களில் சிவவழிபாட்டின் அங்கமாக பூதர்கள் வழிபாடு நடத்த வேண்டுமென்று கூறப்படுகிறது. தினசரி பூஜைகளில் அஷ்டபூதங்கள் எனப்படும் எண் பூதங்கள் பூசிக்கப்பட்டு அவர்களுக்கு பலி அளிக்கப்படுகிறது. இவர்கள் சிவாசனத்தில் இடம் பெற்றுள்ளது.

சிவபெருமானின் ஆணைப்படி வெண்மை நிறம் கொண்டு சம்பவர்த்தன் கிழக்கிலும், பொன் நிறம் கொண்ட உன் மத்தன் தென்கிழக்கிலும், கருநிறமுள்ள குண்டோதரன் தெற்கிலும், செந்தீயைப் போன்ற தீர்க்ககாயன் கன்னி மூலையிலும், பச்சை வண்ண ஹிரஸ்வபாதன் மேற்கிலும், புகை வடிவான சிங்கரூபன் வடமேற்கிலும், செந்நிறமுள்ள கஜமுகன் வடக்கிலும், நீலநிறமான பிரியமுகன் வடகிழக்கிலும் இருந்து உலகினைக் காப்பதாக ஸ்ரீகாரணமாகமம் கூறுகிறது. இவர்களை அஷ்டபூதர்கள் என்று அமைக்கிறோம்.

ஸ்ரீபலி அளிக்கும்போது, பலிபீடத்தின் குமுதப்பட்டிகையை பூதங்களின் வடிவமாகப் போற்றுகின்றனர். ஸ்ரீபலி மந்திரத்தில் பலிபீடத்தின் இரண்டாம் ஆவரணத்தில் ஈசானத்தில் பூதர்களை அழைத்து பலி சமர்ப்பிக்கின்றனர்.நடுவிலுள்ள கர்ணிகையில் ஆமோதன், பிரமோதன், ப்ரமுகன், துர்முகன், விக்னஹந்தரன், அவிக்னன் ஆகிய அறுவரை வழிபடுவர். இந்த அறுவரும் பூத நாயகர்கள் என்று அழைக்க பூதர்களுக்கு புருஷ வடிவில் செய்யப்பட்ட மாவுப் பொருட்களால் பலி சமர்ப்பிக்க வேண்டுமென்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன.

சுயம்புலிங்கங்களைப் பூசிக்கும் வேளை கிழக்கில் உன்மத்தனும், அக்னி திக்கில் சதுர்வத்திரனும், தெற்கில் குண்டோதரனும், நிருதி திக் பூதங்களாக விளங்குகின்றனர். இவர்கள் வாளும் கேடயமும் தரித்தவர்கள். பாம்புகளைப் பூணூலாகவும் மாலையாகவும் அணிந்திருப்பவர்கள். நவரத்தின மயமான ஆபரணங்களைத் தரித்திருப்பவர்கள். மேலும், பஞ்சாவரண பூஜையின் போது ஐந்தாம் ஆவரணத்தில் தசாயுதங்கள் எனப்படும் பத்து ஆயுதங்களைப் பூசிக்கும் வேலையில் அவற்றைத் தாங்கியுள்ள மகா பூதர்களையும் பூசிக்கின்றனர். ஆயுதங்களை வைக்குமிடம் பூத பூடம் என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீவிமானத்திலும், ராஜ கோபுரங்களிலும் கண்டம் என்னும் பகுதியில் நான்கு திசைகளிலும் அமர்ந்துள்ள நான்கு பூதர்களும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளைத் தமது சங்க நாதத்தால் உண்டாக்குகின்றனர் என்று கூறுவர். பஞ்சான பீடத்தில் நான்கு யுகங்களையும் குறிக்கும் வகையில் நான்கு பூதர்களின் வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் கால பூதங்களாவர். இவ்வாறு பலவிதமான பூதர்கள் வழிபாட்டில் உள்ளனர்.

- மோகனா

Tags : Shiva ,
× RELATED முருகப் பெருமான் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் தலங்கள்