×

பாண்டிய நாட்டில் பூத வழிபாடு

தென் தமிழ்நாடான பாண்டிய மண்டலத்தில் பூத வழிபாடு தனிச் சிறப்புடன் இன்று கூட இருந்துவருகின்றது. குறிப்பாக மதுரையில் பூத வழிபாடு சிறப்புடன் திகழ்கிறது. சிவபெருமான் அம்பிகையை மணக்க வந்தபோது, அனேக வெள்ளம் (அளவற்ற எண்ணிக்கை) பூதர்களோடு வந்தார் என்றும், அப்பூதங்கள் பாண்டிய நாட்டின் அழகில் மயங்கி, ஆங்காங்கு கோயில்கொண்டனர் என்று கூறப்படுகிறது.

 மீனாட்சி திருமணத்தில் குண்டோதரன் மலைமலையாகச் சமைத்திருந்த உணவுகளை உண்டு, தாகத்தால் தவித்தபோது பெருமான் கங்கையை வைகை நதியாகப் பெருகி வரச் செய்தார் என்று புராணம் கூறுகின்றது. அவனுக்கு உணவிட்டது இப்போதும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உணவுண்ணும் கோலத்தில் திருமண மேடையில் பூதத்தின் பெரிய புடைப்புச் சிற்பம் உள்ளது.

பாண்டிய மன்னர்கள் பூதப்பெயர் சூடினர். சங்க கால மன்னன் ஒருவனின் பெயர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பதாகும். புலவர் பெருமக்களும் நப்பூதனார், கரும்பூதனார் என்ற பெயர்களைச் சூடியிருந்தனர். இவை பூத வழிபாடு மக்களிடையே பெற்றிருந்த செல்வாக்கைக் குறிக்கின்றன. மதுரையிலும் அதைச்சுற்றி அமைந்த கோச்சடை முதலிய ஊர்களிலும் பூதர் வழிபாடுகள் நன்முறையில் உள்ளன.சோமசுந்தரப் பெருமான் மாணிக்கவாசகர் பொருட்டு, நரிகளைக் குதிரைகளாக்கி நடத்தி வந்தபோது, பூதகணங்கள் குதிரைச் சேவகர்
களாகி குதிரைகளை நடத்தி வந்தனர் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

மதுரையில் இந்திரன் சோமந்தரப் பெருமானுக்கு அமைத்த ஸ்ரீவிமானத்தை 32 பூதகணங்கள் தாங்குவதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. சங்கப் புலவரான நக்கீரர் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் ஒரு பூதத்தால் சிறை வைக்கப்பட்டுத் துன்புற்றபோது பாடியதே திருமுருகாற்றுப்படையாகும். அதைக் கேட்ட முருகன் மகிழ்ந்து பூதத்தை வென்றடக்கி நக்கீரரையும் அவருடன் பூதத்தால் அடைக்கப்பட்டிருந்த 999 புலவர்களையும் சிறை மீட்டு அருள்பாலித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

திருப்பரங்குன்றத்திற்கு வடக்கே ஒரு குளம் உள்ளது. இது குண்டோதரன் என்ற பூதத்தால் வெட்டப்பட்டது என்பர். இதற்கருகில் கூடை தட்டிய பரம்பு என்ற சிறு குன்று உள்ளது. ஏரி உண்டாக வெட்டி மண்ணைக் கொட்டி இம்மலையை பூதம் அமைத்ததென்பர். திருப்பரங்குன்றத்தில் அண்டாபரணர் என்னும்  பூதத்தார் வழிபடப்படுகிறார். இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருஞானசம்பந்தரும் மதுரை சோமசுந்தரப் பெருமானை பூதர் நாயகன் எனப் போற்றி ‘‘பொங்கழல் ஒருவன் பூதநாயகன்’’ என்று அருளிச்செய்தார். இம்மண்டலத்திலுள்ள சிறுதெய்வ ஆலயங்கள் அனைத்திலும் சுதையால் பூதர்கள் வனப்புடன் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர்.

ஆட்சி லிங்கம் 

Tags : Bhuta ,Pandya ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...