×

2 ரூபாய்க்கு தரமான கோன் ஐஸ் !

பள்ளி மாணவர்கள் விரும்பும் ஐஸ்க்ரீம் கடைசென்னை கோடம்பாக்கம்  தம்பிரெட்டி சாலையில் உள்ளது. ‘வினுஸ் இக்லூ. ஐஸ்க்ரீம் கடை’.  இங்கு இரண்டு ரூபாய்க்கு கோன் ஐஸ் கிடைப்பது தான் குட்டீஸ் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தரமான பொருட்களை சேர்த்து நல்ல சுவையில் தயாரித்து தருகின்றார்கள் வினோத் என்பவர். முப்பது வருஷத்துக்கு முன்னாடி  என்  அப்பா விஜயன் இந்த ஐஸ்க்ரீம் கடையை ஆரம்பிச்சார். இன்னமும் இதே இடத்துல இயங்குது. அப்போலாம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வர மக்கள் இங்க வண்டியை நிறுத்துவாங்க, வெயிலுக்கு இதமா மக்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு போவங்க. இந்த ஏரியால பள்ளிக்கூடம் அதிகம். அதனால நிறைய ஸ்கூல் பசங்கதான் எங்க கஸ்டமர். அந்த காலத்துலயே தொடங்கியபோது முதல் ஒரு வாரத்துக்கு ஒரு ரூபாய்க்கு  கோன் ஐஸ் கொடுத்தார் எங்க அப்பா.  பின்னர்,  2 ரூபாய்க்கு கோன் ஐஸ் கொடுக்கத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் கோன் ஐஸ் விலை  குறைந்தபட்சம் 8 ரூபாய் விற்பாங்க மற்ற கடைகளில். இப்போது நான் கடையை எடுத்து நடத்த ஆரம்பித்ததும் குறைந்த விலையில்  ஐஸ்க்ரீம் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு விளம்பர யுக்தியாக சலுகை விலையில் இரண்டு ரூபாய்க்கு கோன் ஐஸ் கொடுப்போம். பின்னர், ஒருவாரம் கழித்து  10 ரூபாய் கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், கடை தொடங்கியதும் 2 ரூபாய்க்கு ஐஸ்க்ரீம் என்றதும்  ஏகப்பட்ட குழந்தைகள்  வரத் தொடங்கினர்.  இதைப் பார்த்த என் மகன்,  எல்லா குழந்தைகளும்  ஆசையோடு வந்து  வாங்கிச்  செல்கின்றனர். அதனால் தொடர்ந்து  2  ரூபாய்க்கே கோன் ஐஸ் கொடுக்கலாம் அப்பா என்றான். இப்போது 2 ரூபாய்  கோன் ஐஸை நிரந்தரமாக்கிட்டேன். இவ்வளவு கம்மியான விலைக்கு  கோன் ஐஸ் எப்படி கட்டுப்படியாகிறது என்று பலரும் கேட்கிறார்கள்.  உண்மையை சொன்னா 2 ரூபாய்க்கு விற்பதில்  எனக்கு லாபம் கிடையாது. 2 ரூபாய்க்கு  வாங்க  வருபவர்கள்  அதோடு  மட்டும் செல்வதில்லை.  இங்கே விற்கப்படும் மற்ற ஐஸ்க்ரீம்கள், பாதாம் பால்,  ரோஸ்  மில்க் போன்றவற்றையும் வாங்கிச் செல்கிறார்கள். பலரும் இரண்டு  ரூபாய்க்கு  ஐஸ்க்ரீமா  என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.  இதன் சுவை பிடித்துப்போய் தொடர்ந்து வருகிறார்கள். இங்கே பக்கத்துல பெரிய விளையாட்டு மைதானம் இருக்கு. ஞாயிற்றுக் கிழமைகளில், காலை, மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்கள் அதிகம். பலரும் டீம் டீமாக வந்து  ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்கிறார்கள். வின் பண்ண டீம்முக்கு  டிரீட் வைக்கின்றார்கள். 2 ரூபாய் கோன் ஐஸில் டீமில் உள்ள 11 பேருக்கு சேர்த்து  22  ரூபாயில்  முடிந்து விடுகிறது. இதேபோலத் தான் பள்ளிக்கூட மாணவர்களும் செட்டுசேர்ந்து வந்து சாப்பிட்டுச் செல்கின்றார்கள். இந்த ஐஸ்க்ரீம் வகைகள் அனைத்துமே எங்களது சொந்த தயாரிப்புதான். அதிலும் முழுக்கவே பாலில்தான் செய்கின்றோம். மிகவும் சுத்தமாக தூய்மையான நீரில்தான் செய்வோம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதால் சளி பிடித்துவிடாமல் இருக்க ஆரோக்கியத்தை மனதில் வைத்து ஐஸ்க்ரீம் செய்வோம்.   பொதுவாக  ஐஸ்க்ரீம் 2 வகையாக  தயாரிப்பார்கள். ஒன்று பாலில் தயாரிப்பது, மற்றொன்று  தண்ணீரில் பால் பவுடர் சேர்த்து தயாரிப்பது. சிலர்  பாலும்,  தண்ணீரும் சமஅளவில்  கலந்தும்  தயாரிக்கிறார்கள்.  ஆனால்,  நாங்கள்  முழுக்கவே  பாலில்தான் செய்கின்றோம். தண்ணீரில்  தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதுமே  சுவை வித்தியாசமாக  இருக்கும்,  அதே சமயம் சிலருக்கு சளி பிடிக்கவும் செய்யும். பாலில் செய்தால், எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு கல்யாணத்துக்குப் போகும்போது, ஒரு தட்டில்   ஐஸ்க்ரீமும், குளோப்ஜாமூனும் கொடுத்தார்கள். அதுபோல் ஆந்திராவில் ஒரு இடத்தில் பால்கோவா வித் ஐஸ்க்ரீம் கொடுத்தார்கள். இந்த ஃப்ளேவர்கள் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை இங்கே கொண்டுவந்தோம். எங்க கடை ஸ்பெஷலே ஸ்வீட் வித் ஐஸ்க்ரீம்தான். பொதுவாக  ஹனி, டேட்ஸ் வித் ஐஸ்க்ரீம். ஃப்ரூட்ஸ்  ஐஸ்க்ரீம், ஓரியோ வித் ஐஸ்க்ரீம், பால்கோவா வித் ஐஸ்க்ரீம், குலோப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம், கேக் வித் ஐஸ்க்ரீம், குலோப்ஜாமூன் கோன்,  பால்கோவா  வித் கோன், ஜெல்லி  வித் ஐஸ்க்ரீம், சாக்கோ டிப்,  நட்ஸ் வித் ஐஸ்க்ரீம், மேங்கோ ஃப்ளேவர்,  இப்படி  2  ரூபாய்க்குத் தொடங்கி, 4, 7, 8 ரூபாய் என்று 25  ரூபாய் வரை  ஐஸ்க்ரீம் பல வகைகளில் இருக்கிறது. இதைத் தவிர, பாதாம் மில்க், ரோஸ் மில்க்  போன்றவற்றையும்  அரை லிட்டர்  35 ரூபாய்க்கும், 1 லிட்டர் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்கின்றோம். எங்களுக்கு   பிரதான  தொழில்  அரிசி வியாபாரம்தான்.  ஐஸ்க்ரீம்  கடை  என்பது ஆர்வத்திலும்  தொடங்கப்பட்டதுதான்.  அதனால் இங்கு  ஐஸ்க்ரீம் அமர்ந்து  சாப்பிடும் வசதியெல்லாம் கிடையாது. நின்றபடிதான் சாப்பிட முடியும். இல்லையென்றால்  பார்சல்  வாங்கிச் செல்லலாம். குறைந்த விலை என்பதால் சிறுவர்கள் 4, 5 கோன் கூட வாங்குவது  மகிழ்ச்சியாக இருக்கும். சிறுவனிடம் பத்து ரூபாய் இருந்தால்  அவன் மேலும் 4 நண்பர்களை அழைத்துவந்து  ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிட்டு செல்லும் காட்சியை அடிக்கடி இங்கே பார்க்கலாம்.  இந்தக் கடை இயங்குவதே அவர்களுக்காக தான். சிலர், திருமணங்களுக்கு ஐஸ்க்ரீம் சப்ளை செய்ய சொல்லிக் கேட்கிறார்கள். தற்போது அதற்கான முயற்சியும் எடுத்து வருகிறோம். இந்த ஐஸ்க்ரீம்கள் எல்லாம் முழுக்க முழுக்க பாலில் தயாரிப்பதால் இதை ஒரு நாட்களுக்கு மேல் வைக்க முடியாது. அதனால் தினம் தினம் தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் 10 லிட்டர் பாலில் தயார் செய்து வந்தோம். தற்போது 120 லிட்டர் வரை தயார் செய்கிறோம். இதுவே கோடைக்காலத்தில் இரண்டு மடங்கு அதிகம்  தயார் செய்கின்றோம். இதைத் தவிர, அடுத்தகட்டமாக உழைக்கும் மக்களுக்காக இரண்டு ரூபாய்க்கு டீ கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். ஏனென்றால் ஐஸ்க்ரீமுக்கு நாங்கள் பயன்படுத்தும் பால் தான் டீக்கும்  சேர்க்க வேண்டியிருக்கும். அதனுடன்  டீத்தூள் மட்டும்தான் மேலும் தேவை.  அதனால் 2 ரூபாய்க்கு  டீ விரைவில் கிடைக்கும் என்கிறார் வினோத்.தொகுப்பு:- ஸ்ரீதேவி குமரேசன்படங்கள்: யுவராஜ்ரோஸ் மில்க் செய்வோமா…தேவையானவை:பால் – 1 லிட்டர்சர்க்கரை  – 3 – 4 தேக்கரண்டிரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டிஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவுசெய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அது முக்கால் பாகம் அளவு வரும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் அடிபிடித்துவிடக்கூடாது. அதுபோல் திக்கான பாலில், தண்ணீர் சேர்க்காமல் காய்ச்ச வேண்டும். பால்  நன்றாக  காய்ந்ததும் இறக்கி ஆற வைக்க வேண்டும். பின்னர்,  வேறு ஒரு சிறிய  பாத்திரத்தில்  3 ஸ்பூன் அளவு சர்க்கரையை போட்டு, 3 ஸ்பூன் அளவு தண்ணீரை விட்டு  சிறுதீயில் வைக்க வேண்டும். சர்க்கரை தண்ணீரில் நன்றாக கரைந்ததும், வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  பின்னர்,  மிக்ஸி ஜாரில், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரைக் கரைசல், ரோஸ் எஸன்ஸ், தேவையான அளவு ஐஸ்கட்டிகளை  போட்டு, ஒரு நிமிடம்  ஓட விட்டு இறக்கினால்  ரோஸ் மில்க்  தயார்….

The post 2 ரூபாய்க்கு தரமான கோன் ஐஸ் ! appeared first on Dinakaran.

Tags : Tampretty Road, Kodambakkam, Chennai ,Venus Igloo. Ice Cream Shop ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...