×

குலம் தழைக்க குலதெய்வ வழிபாட்டு முறைகள்

குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து. இதற்காகத்தான்  குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும். அதே போல கிரகங்களின் கோசார பலன்களும். கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது இனத்திற்கு இனம்.. ஜாதிக்குஜாதி குலத்துக்கு குலம்...மாறுபடும். ஒரே ஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் மாறுபடுகின்றன. இதனால் தான் ஆகமசாஸ்திரத்தினாலும், புரோகிதர்களாலும், ஜோதிடர்களாலும் குலதெய்வ வழிபாட்டினை வரையறுத்து கூறமுடிவதில்லை.

பல இடங்களில் குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின் நன்மைக்காக உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு. அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் தான் குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் கடனாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன.

பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.

வழிபாட்டு முறைகள்

குல தெய்வ வழிபாடுகளை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை அந்தந்த குடும்பத்தின் சம்பிரதாய பின்பற்றுதல்களுக்கு ஏற்றவாறு வருடத்திற்கொருமுறை செய்தாலே போதுமானது. காலகட்டளை இருக்கும் குலதெய்வ வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்ய வேண்டும். அந்த நாள் தவிர்த்து செய்யகூடாது. காலகட்டளை இல்லாத தெய்வங்களுக்கு சௌகர்யமான நாளில் வழிபாடு செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டில் கால கட்டளை இல்லாத குல தெய்வங்கள் குறைவு.

குலதெய்வ பூஜைகளை பொருத்தவரை சுத்த பூஜை ..உதிர பூஜை என்று இருவகைகளில் நடத்தப்படுகின்றன. சுத்த பூஜை என்றால் உயிர்பலி கொடுக்காமலும் உதிர பூஜை என்றால் உயிர்பலியுடனும் நடத்தப்படுவதாகும். எந்த பூஜையாக இருந்தாலும் அந்த முறையில் சரியாக பின்பற்றப்பட வேண்டும்.

கணித ஜோதிடத்திலோ எண்கணிதத்திலோ குலதெய்வம் கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமானது. குலதெய்வம் தெரிந்து கொள்ள வம்சகள பிரசன்னம் எனப்படும் பிராணதேவதா பிரசன்னத்தின் மூலம் சரியாக கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடிக்கும் போது வெறுமனே குலதெய்வத்தின் பெயர் மட்டுமல்லாது இருக்கும் இடம், தற்போதைய நிலை, படைக்கவேண்டிய பொருட்கள், வஸ்திரத்தின் நிறம்,வழிபாட்டிற்குறிய நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்