×

கிரகங்களும் வாஸ்து சாஸ்திரமும்

மழை, வெயில் இவற்றிலிருந்து விடுபட வைப்பது வீடு. வெளியுலகிலிருந்து விடுதலை அளிப்பது வீடு.  ஒன்பது கிரகங்கள் அண்ட வெளியை சுற்றினாலும் அவற்றின் கதிர்வீச்சை நாம் எதிர்கொள்வதென்பது வீட்டில் இருந்தபடிதான். அதனால்தான் அதையும் ஒரு கிரகமாக நினைத்து கிரகப் பிரவேசம் செய்கிறோம்.
வாழ்நாள் முழுவதும் வாடகை தந்தே காலம் கழிப்பவர் உண்டு. பிறந்ததிலிருந்து அரண்மனையில் வாழ்வோரும் உண்டு. கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்தாலும், பல அடுக்கு வீடுகள் கட்டித் தந்தாலும் தனக்கென்று ஒரு வீடு அமையவில்லையே என்று தவிக்கும் பில்டர்ஸும் இங்குண்டு.

இதற்குக் காரணம் பூமியையும், செங்கல்லையும் ஆளும் செவ்வாய் சரியில்லாததால்தான். செவ்வாய்க்கு மட்டுமே வீட்டு மனை விஷயத்தில் பங்குண்டு என்று நினைக்காதீர்கள். அஸ்திவாரக் கல்லை ராகுவும், அதிலிருந்து எழுப்பப்படும் இரும்பு கம்பித் தூணை சனியும், மணலை சந்திரனும், சிமெண்ட்டை சுக்கிரனும், தலைவாசலை குருவும், வீட்டின் தெய்வீகத்தை கேதுவும், வீட்டின் உள் பிரகாசத்தை சூரியனுமே நிர்ணயிக்கின்றனர். ‘‘எல்லாம் சரியான நேரத்துக்கு வருதுங்க. ஆனா, இந்த மணல் சப்ளை மட்டும் ஏன் லேட்டாகுதுன்னு தெரியலை.

நான் எத்தனையோ வீடு கட்டியிருக்கேன் இப்படி லேட்டானதே இல்லை’’ என்று பில்டர் சொன்னால் வீடு கட்டுவோரின் ஜாதகத்தில் சந்திரன் கொஞ்சம் தேய்ந்திருக்கிறார் என்று அர்த்தம். இதுபோல நவகிரகங்களும் சேர்ந்து வீட்டின் மீது ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எத்தனை ஹோமம் செய்தாலும் சரிதான், நம் கிரகத்தில் நவகிரக ஹோமத்தை செய்யாமல் அந்தணர்கள் செல்வதில்லை. எல்லா கிரகங்களின் நேர்மறையான கதிர்வீச்சும் வீட்டிற்கு வேண்டும் என்கிற பிரார்த்தனைதான் அது. ஒருவருக்கு நல்ல வீடு அமைய வேண்டுமெனில் ஒன்பது கிரகங்களின் உறுதுணையும் அவசியமாகிறது.

பொதுவாக கட்டிடக்காரகனாக சுக்கிரனைச் சொல்லலாம். சுக்கிரன்தான் சுகபோகங்களுக்கு அதிபதி என்று ஜாதக அலங்காரம் சொல்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தோ, ஆட்சி பெற்றிருந்தாலோ இந்திரலோகம் போன்ற வீடு அமையும் என சுக்கிரநாடி சொல்கிறது. வீடு கட்டுவதற்கு முன்பு அடிப்
படையாக பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம். அஷ்ட திக்குகள் என்கிற எட்டு திசைகளை மையமாக வைத்து பார்க்கப்படுவதுதான் வாஸ்து. ஒரு மனை உங்கள் பெயரில் இருக்கலாம். ஆனால்,  அதை ஆட்சி செய்வது எட்டு திசைகள்தான் என்பதை மறக்காதீர்கள்.

இந்த அடிப்படை கருத்தில் எழுந்ததுதான் வாஸ்து. இந்த எட்டு திசைகளில் ஈசான்யம் என்று சொல்லக் கூடிய வடகிழக்கு திசைதான் வீட்டின் உயிர் மூச்சாக விளங்குகிறது. வடகிழக்கிலிருந்து தவழ்ந்து வரும் காற்று அங்கு ஆரோக்யத்தை முதலில் குடியமர்த்தும். தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைந்து கிழக்கு நோக்கி சமைத்தால் அன்னத்திற்கு எப்போதும் பஞ்சம் இருக்காது. அன்னபூரணி அங்கு எப்போதும் குடி கொள்வாள். வடமேற்கு திசையை வாயுமூலை என்பார். இதை வருவோர் போவோரை வரவேற்று உட்காரவைத்து உபசரிக்கும் மூலையாகும். தென்மேற்கு மூலை என்பது திறம்பட சம்பாதித்ததை தேக்கி வைக்கும் மூலையாகும். இவ்வாறு இல்லத்திற்கும் திசைக்கும் தொடர்புண்டு.

Tags : Planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்