×

அருமையான இல்லமருளும் அக்னீஸ்வரர்

திருப்புகலூர்

திருப்புகலூருக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவர் அப்பர் சுவாமிகள். இத்தலத்தில்தான் ஆன்மிகத்தின் நிறைவு நிலையான அத்வைத அனுபவத்தை எய்தினார். ஈசனோடு ஈசனாய் தனக்கும் இறைவனுக்கும் எவ்வித பேதமுமில்லாத நிலையை அடைந்தார். தான் வேறு இறைவன் வேறு என்ற பிரிவு உடைந்து ஏகமாய் ஈசனோடு கலந்தார். அப்பர் சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்த தலம் இதுவேயாகும். எனவே, இது முக்தி க்ஷேத்திரமாகும். இங்கு அப்பர் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார்.  முருகநாயனார் இத்தலத்திலேயே அவதரித்தார். இண்டை, கொண்டை, தோடு என்று பல மாலை வகைகளை சாத்தி மகிழும் பெருந்தொண்டு செய்து வந்தார்.

சுந்தரமூர்த்தி நாயனார் சிவப்பணியின் செலவுக்கு பொன், பணம் வேண்டும் என்று  திருப்புகலூரை அடைந்தார். அங்கேயே வழிபட்டு  தங்கினார். ஆலயத்  திருப்பணிக்காக வந்திருந்த செங்கல் சிலவற்றை தலையணையாக்கிப் படுத்தார்.  விடியலில் விழித்தெழுந்து பார்த்தபோது செங்கல் அனைத்தும்,  பசும்பொன்கட்டிகளாக மாறியிருப்பது கண்டு வியந்தார். அப்போதே ஈசன் மீது  பதிகங்கள் பாடினார். அதனால்தான் ஈசனை வாஸ்து பகவானாகவும் நினைத்து  மக்கள் வழிபடுகிறார்கள் என இவ்வூர் பெரியவர்கள் கூறுகிறார்கள். சொந்த வீடு  வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஈசனை வேண்டிக்கொள்ள, விரைவிலேயே வீடு  கட்டிவிடுகிறார்களாம். இத்தலம் நாகப்பட்டினம் - திருவாரூர் பாதையில்  அமைந்துள்ளது.

சிவனடியார்கள் யார் வரினும் தம் திருமடத்துக்கு அழைத்து, சுவையான அன்னமிட்டு உபசரிப்பார். அப்பர், சுந்தரர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்றோர் வந்து தங்குவது வழக்கம். ஞான சம்பந்தப் பெருமானோடு பெருமணம் எனும் தலத்தில் சிவஜோதியில் கலந்தார். முருகநாயனார் திருமடம் இன்றும் உள்ளது. இக்கோயிலைச் சுற்றியுள்ள அகழி பார்ப்பதற்கு அழகானது. இக்கோயிலின் அற்புதம் இது. வானுயர்ந்த கோபுரங்களும், நீண்ட பிராகாரங்களும் தொன்மையின் இனிமையை பறைசாற்றுகின்றன. இத்தலத்து மூலவரின் திருநாமம் அக்னீஸ்வரர்.

இவருக்கு கோணபிரான், சரண்யபுரீஸ்வரர், புன்னாகவனநாதர் என்று பல பெயர்கள் உண்டு. அம்பாள் கருந்தாழ்குழலி எனும் பெயரோடு அருள்பாலிக்கிறாள். அம்பாள் சந்நதி, ராஜகோபுரம் தாண்டி தனியே உள்ளது. இவ்வூர் மக்கள் எப்போதும், ‘எல்லாம் கருந்தாள் அனுக்கிரகம்’ என அடிக்கடி சொல்வது வழக்கம். கருந்தாழ் குழலாள் கருணையை நம்பியே இவர்கள் வாழ்கிறார்கள். தல விநாயகராக வாதாபி கணபதி கன்னி மூலையில் அழகாக வீற்றிருக்கிறார். வில்வலன், வாதாபி இருவரும் வழிபட்டமையால் இவர் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார்.

இக்கோயிலுக்குள்ளேயே பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யதேஸ்வரர் என்று முக்காலத்தையும் உணர்த்தும் தெய்வமாக விளங்குகிறார்கள். உட்பிராகாரத்து ஈசான்ய மூலையில் நடராஜர் திருச்சபை அழகாக விளங்குகிறது. தலவிருட்சம் புன்னை மரம். இத்தலத்து திருமால், முரன் என்ற
அசுரனைக் கொன்ற பாவம் தீர இங்கு வழிபட்டு வந்தார். இறைவனும் சிவலிங்கத் திருமேனியிலிருந்து வெளிப்பட்டு அருள் செய்தார். உடனே திருமால், ‘நான் என் அம்சமான புன்னையாக இங்கிருந்து, என் நிழலில் பெருமான் அடியார்களுக்கு அருள் புரிய வேண்டும்’ என வேண்டிக்கொண்டார். அதன்படியே அவர் விருப்பம்போல் புன்னை மரமாக மாறினார். இது மிகஅதிர்வுள்ள மரம்.

மந்திரஜபத்துக்கு ஏற்ற இடம். இவ்வூர் திருவண்ணாமலைக்கு நிகரான ஒரு முக்தித் தலம். பிறவி என்பது பிரிக்கப் பிரிக்க பின்னிக்கொள்ளும் சிலந்திப்பூச்சி. இன்பமும், துன்பமும் மாறிமாறி வீசும் சுழற்காற்று. மாட்டிக்கொண்டால் மணலில் சொருகும் நீர்ச்சுழல். அதனாலேயே ஞானிகள் இதைப் பிறவிப் பெருங்கடல் என்கின்றனர்.

ஞான சொரூபனான ஈசனே எல்லாரையும் மீட்டு கரைசேர்க்கிறான். இங்குள்ள ஈசன் எல்லா ஜீவன்களுக்கும் புகலிடமாகத் திகழ்கிறான். எல்லா உயிர்களையும் கரைசேர்க்க கங்கணம் (காப்பு) கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறான். மகரிஷிகளும், ஞானிகளும் அப்படி புகலிடமாய் திகழும் ஈசன் உறையுமிடத்திற்குள் புகுந்து, புகழ்ந்து, பரவசமாகிய ஓர் அற்புத தலமே திருப்புகலூர். இந்தத் திருத்தலம் நாகை மாவட்டத்தில், நன்னிலத்திலிருந்து  கிழக்கே ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags : housewife ,
× RELATED வருகிற 28ம் தேதி ‘ஜப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா